செய்யுள் 10செய்யுள் – 10


கார்மாமிசை   காலன்வரில்   கலபத்து
ஏர்மாமிசை   வந்தெதிரப்   படுவாய்
தார்மார்ப   வலாரிதலாரி   எனும்
சூர்மாமடியத்   தொடு   வேலவனே.

    
    பொழிப்புரை: “ஓ வேலவனே! எப்பொழுதும் வெற்றி மாலைகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும் திருமார்பை உடையவனே! வலன் என்ற அசுரனுக்குப் பகைவனான இந்திர லோகத்திற்கு (தலைவனான இந்திரனுக்கு) எதிரியான, மாமரமாகி நின்ற சூரபத்மன் அழியும்படி செலுத்திய வேலாயுதக் கடவுளே! (என் உயிரை எடுத்துப்போக) யமதர்ம ராஜா தன் கரிய எருமை வாகனத்தில் வருவாராயின், அழகிய தோகைகளை உடைய உனது தெய்வீக மயில் வாகனத்தில் ஏறி வந்து, எனக்குக் காட்சி தந்து அருள்வாய்!”

விளக்கவுரை

    காமமயக்கத்தில் கட்டுண்டு துன்பப்படுவதுடன் (செய்யுள்-9), சில சமயங்களில் சாதகன் தனக்கு மரணம் வரக்கூடும் என்றும் எண்ணுகிறான். சாதகனின் மனப்போராட்டம், அதனால் ஏற்படும் மன வருத்தம், அவன் இயற்றும் தவங்கள் மற்றும் சாதனைகள், ஏறிடும் வயது, போன்ற காரணங்களால், அவன் உடல் மெலிந்து வருவது இப்படி எண்ணக் காரணமாய் இருக்கலாம். இதற்கு அர்த்தம் அவன் இறப்பதற்கு பயப்படுகிறான் என்றல்ல; ஆனால், அவன் மிகவும் தீவிர சாதகனானதால், கடவுளை அடைவதற்கு முன் இறந்திட அவன் விரும்பவில்லையென்பதே இதன் பொருள். மேலும், மரணத்தை நினைவில் இருத்துவதும் சாதனையில் உதவிசெய்யும் ஒரு முக்கிய அங்கமே, அது அவனை மேலும் தீவிரமாகக் கடவுளிடம் சரண் அடையச்செய்யும். எனவே, “ஒருவேளை யமன் என் உயிரை எடுத்துப்போகத் தன் கரிய எருமை வாகனத்தில் ஏறி வருவாராயின், அழகிய தோகைகளை உடைய உனது தெய்வீக மயில் வாகனத்தில் நீ ஏறி வந்து என்னைக் காப்பாயாக,” என்று அவன் கடவுளிடம் பிரார்த்திக்கிறான்.

    வலன் என்றொரு அசுரன் இருந்தான். அவன் சிவபெருமானைக் குறித்து கடும் தவம் செய்து, அவரிடமிருந்து “தான் இறந்த பிறகு, தன் உடல் நவரத்தினங்களாக மாறவேண்டும்’ என்ற வரத்தை வேண்டிப் பெற்றான். அவ்வாறு வரம் பெற்றபின், தேவர்களின் அரசனான இந்திரனுடன் ஒரு போர் புரிந்து, அவனை தோற்கடித்தான். இந்திரன், போரில் தோற்றிருந்தாலும், அவனுடைய வீரத்தை மெச்சி தன்னிடமிருந்து ஒரு வரம் கேட்டுப்பெறுமாறு வலனிடம் கூறினான். இதைக் கேட்ட அவ்வசுரன் சிரித்து, “என்னால் போரில் தோற்கடிக்கப்பட்ட நீ என்னை வரம் வேண்டிப் பெறச் சொல்கிறாயே! வேண்டுமானால் நான் உனக்கு ஒரு வரம் தருகிறேன், கேட்டுப் பெறுவாயாக”, என்றான். இந்திரன் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல், அசுரனை “யாகத்தில் பலியிடும் ஒரு பசுவாக ஆக” வேண்டினான். அவனும் அவ்வாறு செய்ய, அவ்வசுரனை இந்திரன் அழித்தான். அவ்வாறு, வலன் இறந்தவுடன், அவன் சிவனாரிடமிருந்து பெற்ற வரத்தால், அவன் உடல் நவ (ஒன்பது) ரத்தினங்களாக மாறியது – 1. இரத்தம் – மாணிக்கம் / ரூபி, 2. பல் – முத்து, 3. மயிர் – வைடூரியம், 4. எலும்புகள் – வைரம், 5. பித்தம் – மரகதம், 6. கொழுப்பு – கோமேதகம், 7. சதை / ஊன் – பவளம், 8. கண் – நீலம், 9. கபம் – மஞ்சள் எனப்படும் புஷ்பராகம்.

    வலனை இவ்வாறு தவறான முறையைப் பிரயோகித்துக் கொன்றதாலும், மேலும் வேறு பல கொடுமைகளைச் செய்ததாலும், இந்திரன் சூரபத்மன் என்ற அசுரனால் பலவிதமாக துன்பப்படுத்தப்பட்டான். சூரபத்மன் இந்திர லோகத்தின்மேல் படையெடுத்து அதை எரித்தான். எனவே, “வலன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரனுக்கு எதிரியானவன் சூரபத்மன்” என்று சொல்லப்பட்டுள்ளது.

    சூரபத்மனும், அவன் படைவீரர்களும், வரலாறு அதுவரைக் காணாத, ஒரு பெரும் போரை கந்தக் கடவுளுடன் தொடுத்தனர். பெருமான் அவன் படை, தேர் மற்றும் அனைத்தையும் அழித்தார். சூரபத்மன் ஒரு ஆதரவுமின்றித் தனியாக நின்றான். அப்படியிருந்தும், அகந்தையே உருவமான அவனை, அவ்வகந்தை விடவில்லை. அவன் அழியவேண்டிய காலமும் வந்து சேர்ந்துவிட்டது. ஆயினும், அந்த சூரபத்மன் சிவபெருமானை நோக்கிப் பெரும் தவம் செய்து, அவருடைய பூரண ஆசியைப் பெற்றிருக்கிறான். ஆனால், அந்த சிவபெருமானே தற்போது அவனுடன் போர்புரியும் முருகப் பெருமானாக வந்திருக்கிறார் என்பதை அவன் அறிந்திலன். இருந்தும், அவன் முன்பு செய்த தவம் மற்றும் இப்போது வீரத்தோடு செய்த கடும்போரிலும் மிக்க மகிழ்ச்சியடைந்த கந்தப் பெருமான், அவன்பால் இரக்கம் கொண்டு, தனது விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டி அருளினார். விஸ்வரூப தரிசனத்தை அவன் பெற்றது ஒரு கிடைத்தற்கரிய ஆசியே; அதைப் பெற்ற அவன் அவரது தெய்வீகத் தன்மையை உணர்ந்து, அவரைப் பணிவுடன் வணங்கினான்.. ஆனால் என்ன பயன்? அவனிடமிருந்த அகந்தையின் சக்திதான் என்னே! முருகப் பெருமான் தன் விஸ்வரூப தரிசனத்தை விலக்கிய அடுத்த நிமிடத்திலேயே முருகப் பெருமான் கடவுள் என்பதை அவன் மறந்து, தன் அஸ்த்திரங்களுடன் திரும்பவும் போர் புரியத் துவங்கினான். இப்பொழுது, தனியொருவனாக ஆகியதால், தனது மாயா சக்திகளை முழுமையாகப் பிரயோகித்து, அவன் ஒன்றன்பின் ஒன்றாக வெவ்வேறு உருவங்கள் எடுத்துப் போரிட்டான். பெருமானும் ஒவ்வொன்றாக அவைகளை அழித்துக்கொண்டே வந்தார். கடைசியில், அவ்வசுரன் ஒரு ‘மா’-மரமாகத் தோன்றினான். நடுக்கடலில் நன்றாக வேரூன்றி, கிளைகளுடன் ஆகாயம் வரை வளர்ந்து, பூமியையும் ஆகாயத்தையும் பயங்கரமாகக் குலுக்கி அதிரச் செய்து, தேவர்கள் உட்பட அனைவரிடத்திலும் பேரச்சத்தை அவன் உருவாக்கினான். பூமியும், சொர்க்கமும் பொடிப்பொடியாகி விடும்போல் தோன்றியது. உடனே, கந்தப் பெருமான் தன் கூரிய வேலாயுதத்தை அம்மாமரத்தின் மீது எறிந்து அதை இரண்டாகப் பிளந்து அவ்வசுரனைக் கடலில் வீசினார். சூரபத்மனை இவ்வாறு வேல் எய்தி அழித்தவரும், தனது மார்பில் எப்பொழுதும் வெற்றிவாகைகளைத் தரித்திருப்பவருமான வேலாயுதக் கடவுளிடம், அச்சாதகன் “ஓ பெருமானே, ஒரு வேளை யமன் என் உயிரைப் பறிக்க வந்தால், நீ உன் மயில்மீது வந்து என் முன் தோன்றி என்னைக் காப்பாயாக’, என்று பிரார்த்தனை செய்கிறான்.

    மரண பயத்தைப் போக்கிக் கொள்வதற்கு இச்செய்யுள் மிகவும் உகந்த பிரார்த்தனையாகும். இறைவன்மேல் பக்தி கொண்டிராத லௌகீகவாதிகளை மட்டுமே யமன் நெருங்குவார். கரிய எருமை வாகனத்தின் மீது அமர்ந்து யமன் வரும் கோலமே பயங்கர அச்சத்தை ஏற்படுத்தும். அதே சமயம், வெற்றிவாகை சூடிய மார்புடன், அழகிய தோகைகளையுடைய மயில் மீது அமர்ந்து பவனி வரும் வசீகரமான கந்தனின் உருவமே பக்தனின் பயம் போக்கி உள்ளத்தைக் குளிரவைக்கும், அந்த ஜீவாத்மாவுக்கும் ஆறுதலளிக்கும். எனவே, இந்த பிரார்த்தனை (விடுக்கப்படுகிறது). இவர்கள் இருவருக்கிடையில் என்னே அற்புதமான பேதம்! – கார் மாமிசை காலன் (கரிய எருமை வாகனத்திலமர்ந்து வரும் அதிபயங்கர யமன்) ஒருபுறம், மறுபுறம் கலபத்து ஏர் மாமிசை கந்தன் (அழகிய தோகைகளை உடைய மயில் வாகனத்திலமர்ந்து வரும் வசீகர கந்தன்). என்னே கந்தன் மகிமை!

No comments:

Post a Comment