செய்யுள் 11



செய்யுள் – 11


கூகாஎன   என்கிளை   கூடி   அழப்
போகாவகை   மெய்ப்பொருள்   பேசியவா
நாகாசல   வேலவ   நாலுகவித்
தியாகா   சுரலோக   சிகாமணியே.

    பொழிப்புரை: “நாகாசலத்தில் (திருச்செங்கோட்டு மலை மீது) குடிகொண்டுள்ள வேலாயுதப் பெருமானே! நான்குவகைக் கவிபாடும் ஆற்றலை அளிப்பவரே! தேவலோகத்தின் சிகாமணியே! எனது சுற்றத்தார் ஒன்றுகூடி, ‘கூகா’ என்று கூச்சலிட்டு குழுமி, ஒப்பாரி வைத்து அழுமாறு நான் இறந்து போகாதிருக்கும்வண்ணம், உயரிய மெய்ப்பொருள் பற்றி அறிவுரைகள் தந்தருளிய அற்புதம்தான் என்னே!”

விளக்கவுரை

    முன்பு கொடுத்த குருவின் அறிவுரைகள் (செய்யுள்-8) அச்சாதகனுக்கு உடனடியாகத் தேறுதலை அளித்தது. ஆனாலும், புலனின்பப் பொருள்களின் வசீகரமும் (செய்யுள்–9), மரண எண்ணமும் (செய்யுள்–10) அவனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தன. அவ்வாறு மிகவும் கலக்கமடைந்த நிலையில், சாதகன் தன் குருவிடம் திரும்பவும் உதவி பெற விரைகிறான். அவனது கலங்கிய மனதின் நிலையையும், அவன் இப்போதிருக்கும் இக்கட்டான நிலையையும் நன்குணர்ந்து கொண்ட குரு, உயரிய மெய்ப்பொருள் தத்துவத்தைப் பற்றி அவனுக்குத் திரும்பவும் அறிவுறுத்துகிறார்; ஆனால், இம்முறை மேலும் ஆணித்தரமாக அவன் புத்தியில் நன்கு பதிகிறமாதிரி அறிவுறுத்துகிறார்: “நீ அழியக்கூடிய இந்த சரீரமோ இந்திரியங்களோ அல்ல. அவை உன்னை ஏமாற்றுகின்றன. நீ அந்த உண்மையான ‘நான்’ எனப்படும் ‘ஆத்மா’, அந்த ஆத்மா ஆனந்தமயமானது, அழியாதது, அழிக்கவும் முடியாதது,” என்றெல்லாம் பலவாறாக அவனுக்கு மெய்ப்பொருளைப் பற்றி எடுத்துரைக்கிறார். அவர் மேலும் அவனுக்கு உறுதி கூறினார்: “பயப்படாதே. இந்தத் துன்பங்களிலிருந்து நீ விடுபடுவது நிச்சயம், நீ இப்பிறப்பிலேயே பரம்பொருளை அடைவாய். நிரந்தரமாக ஆனந்தத்தில் மூழ்கி இருப்பாய்.” குருவின் (குருவாக வந்துள்ள பெருமானின்) இத்தகைய உறுதிமொழி அச்சாதகனுக்கு, தான் சாதாரண மனிதர்களைப் போல் இறக்கப் போவதில்லை என்றும், எனவே தன் சுற்றத்தினர் தன் சவத்தைச் சுற்றி குழுமி, அழுது, ஒப்பாரி வைத்திடும் நிலைமையும் ஏற்படாது என்றும் திடமான நம்பிக்கையைக் கொடுத்தது.

    செய்யுள்கள் 8 மற்றும் 11-ல், ‘மெய்ப்பொருள் “பேசியவா”’ என்று கூறியிருப்பதிலிருந்து, அச்சாதகன் குருவிடமிருந்து பெற்றது கடவுள், மெய்ப்பொருள் அல்லது ஆத்மாவைப் பற்றிய “அறிவுரைகள்” மட்டுமே, அவை உண்மையில் “உபதேசம்” அல்ல. (உண்மையான “உபதேசம்” (தீக்ஷை) பின்னர்தான் அவனுக்குக் கிடைக்கிறது ---- செய்யுள்-20ல்).

    தென்னிந்தியாவில் சேலத்தின் அருகிலுள்ள நகரம், திருச்செங்கோடு. அந்த நகரத்தின் மறுபெயர் ‘நாகாசலம்’ ஆகும். ஆங்கு உள்ள ஒரு அழகிய மலையின் உச்சியில் அமைந்த கோவிலில் கந்தப் பெருமான் அனைவராலும் போற்றித் தொழப்படுகிறார். அருணகிரியார் அவரது தலயாத்திரையின்போது சென்று தரிசித்த கோவில்களில் இது முக்கியமானதொன்று. இது அவர் மனத்தைக் கொள்ளைகொண்டது. இதற்கான காரணங்கள் பல --- வசீகரமான ரூபம் கொண்ட கந்தப் பெருமான் (மூர்த்தி), கோவில் அமைப்பின் பாங்கு, அக்கோவில் அமைந்துள்ள இடத்தின் அழகு, ஆகியவைகள் ஆகும். இதனால் தன் மனதை இங்கு பறிகொடுத்த அருணகிரியார், ‘கந்தர் அலங்காரம்’ எனும் தனது மற்றொரு நூலில், பின்வருமாறு கூறுகின்றார்: “இந்த திருச்செங்கோட்டு தேவனின் அழகைக் கண்டு களித்து, அவனைத் தொழ நான்முகக் கடவுளான பிரம்மாஜி நாலாயிரம் கண்களுடன் என்னை படைக்காமல் போனாரே!” அருணகிரியார் இத்தலப் பெருமானைப் போற்றிப் பல திருப்புகழ் பாடல்கள் பாடி, அப்பெருமானிடமிருந்து ஒரு வரமும் பெற்றார்; ‘நீ எங்கிருந்தாலும், “கந்தா” என்று என்னை விளித்துக் கூப்பிட்டால், யான் அங்கு உடனே வருவேன்’. திருச்செங்கோட்டுப் பெருமானின் பெருமை அத்தனை சிறந்தது.

    முருகப் பெருமான் தமிழ் மொழியை அளித்ததால், தமிழ்-தெய்வம் என்று போற்றப்படுகிறார். ஆதலால், அவர் தமிழ் மொழியின் நான்கு வகைகளான கவிதைகளையும் ------ ஆசு கவி, மதுர கவி, சித்திர கவி, வித்தார கவி எனப்படும் நான்குவித கவிதைகளையும் ---- இயற்றும் புலமையைத் தர வல்லவர் ஆவார்.

    ஆசு கவி : கொடுத்த பொருளை அடுத்த பொழுதிற் பாடும் பாட்டு (கவி).

    மதுர கவி : இனிமையும் இசையும் பெருகப் பாடுங் கவி.

    சித்திர கவி : சித்திரத்தில் அமைத்தற்கு ஏற்பப் பாடும் இறைக் கவி.

    வித்தார கவி : விரிவாகப் பாடும் பிரபந்தம் (செய்யுள் நூல்).

No comments:

Post a Comment