செய்யுள் 16



செய்யுள் – 16


பேராசை   எனும்   பிணியில்   பிணிபட்டு
ஓரா   வினையேன்   உழலத்   தகுமோ
வீரா   முதுசூர்பட   வேல்   எறியும்
சூரா   சுரலோக   துரந்தரனே.

    
    பொழிப்புரை: ", வீரனே! நெடிது காலம் வாழ்ந்த அசுரன் சூரபத்மன் அழியும்படி வேலாயுதத்தை எறிந்த சூரனே! தேவலோகத்தைக் காப்பாற்றியவனே! பேராசை எனும் (ஆழ்ந்து கிடக்கும் ஆசைகளின்) பிணியில் கட்டுண்டு, அதனால் நல்லது கெட்டதென்று ஆய்ந்தறியும் கூரறிவில்லாத தீவினையேனாகிய நான், பிறப்பு இறப்பு எனும் சுழற்சியில் சிக்கி உழலுவது (உமது பெருமைக்குத்) தகுதியாகுமோ?” (ஆகாது, ஆகவே நீ என்னைக் காத்தருள்வாயாக.)

விளக்கவுரை

    சாதகன் (செய்யுள்-15-ல் விளக்கியவாறு) தனது சாதனையை மேலும் தீவிரப்படுத்தி, மனதை உருக வைத்திட முயற்சி செய்யும்பொழுது, அது அவ்வளவு எளிதான வேலையல்ல என்று அறிகிறான். இங்கே நாம் நன்றாக நினைவில் கொள்ள வேண்டிய விஷயம், ஒரு செய்யுளிலிருந்து மற்றொன்றிற்கான மாற்றமேற்பட சில காலம் பிடிக்கும் என்பதாகும். முந்திய செய்யுளில் தான் பெற்ற அறிவுரைகளை சாதகன் உடனே நடைமுறைப் படுத்தும்போது, பின்வரும் செய்யுளில் அதிலிருந்து வந்த அனுபவம் அல்லது விளைவு கூறப்படும்போது, அது அடுத்த நாளிலேயே வந்தது என்று கொள்ளக்கூடாது. சாதகன் அந்த நடைமுறையை தொடர்ந்து சிலகாலம் கடைப்பிடித்த பின்னரே (சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகியிருக்கலாம்), அடுத்த செய்யுளில் சொல்லப் பட்டிருப்பதை அவன் அனுபவிக்கிறான். இப்படியாக, ஐம்புலன்களின் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் ஸ்தூல ஆசைகளை (செய்யுள்-14), நீண்டகால சாதனையால் ஓரளவு அடக்கிய பிறகு, தன் மனதை உருகச்செய்ய மேலும் தீவிரமாக முயலும்போது, அவன் ஆழ்மனதில் புதைந்திருக்கும் சூட்சும ஆசைகள், அச்சாதகனை வம்பிற்கு இழுத்து துன்புறுத்தத் தொடங்குகின்றன. ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் மிகசூட்சும விருப்பங்களையும், நாட்டங்களையும் தூண்டிவிட்டு, ஏக்கங்களாக மேலெழும்ப வைக்கின்றன. "பல காலமாக பூட்டப்பட்டிருந்ததால் ஒரு சமக்காள விரிப்பின் அளவிற்கு தூசிகள் ஆழமாக இறுகிப் படிந்துவிட்ட ஒரு அறையின் தரையை சுத்தம்செய்வது போன்றது இது. அவ்வாறு தரையைப் பெருக்கும்போது, தூசியானது மேலெழும்பி பெருக்குபவனின் கண்பார்வையை மங்கச்செய்து, பெருக்குவதை அவன் தொடர முடியாமற் செய்யும். ஆனால் அறையை சுத்தம் செய்தேயாக வேண்டுமென்று அவன் விரும்பினால், பெருக்குவதை எப்படியாவது சாமர்த்தியமாகத் தொடர்ந்துதான் ஆக வேண்டும்.” என்கிறார் சுவாமி சிவானந்தா மகராஜ் அவர்கள். ஒரு தீவிர சாதகனின் நிலையும் இது போன்றதே.

    ஆழ்ந்த சாதனைகள் மூலம் இறைவனில் மனதை நெகிழச் செய்ய முயற்சிக்கும்போது, தனக்கு எது நல்லது என்றறியும் பகுத்தறிவு இல்லாததால், முந்தையப் பிறவிகளில் அவனாலேயே விரும்பப்பட்ட பொருள்களின் மேலுள்ள ஆசைகளில், ஏக்கங்களில் (பேராசை) பூர்த்தி செய்யப்படாதவை தனது ஆழ் மனதில் நிறைந்திருப்பது அச்சாதகனுக்குத் தெரியவருகிறது. இந்த பூர்த்தி செய்யப்படாத ஆசைகளின், ஏக்கங்களின் மூட்டையே ஒரு “பிணி” ----- “பேராசை எனும் பிணி”. இப்பிணி உடலைப்பற்றியதல்ல; உடல் அழியும்போது அதோடு அழிந்துபோய்விடும் பிணியல்ல; இறப்பினால் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத மனதிற்குரியது. மனதில் உள்ள அவ்வாசை(பேராசை)கள் தங்களைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக அவனை மீண்டும் மீண்டும் தூண்டுவதன் மூலம், பிறப்பு இறப்பு எனும் சுழற்சியில் ஆழ்த்தி அதிலேயே உழலச் செய்கின்றன. எனவே, இந்த பயங்கரப் பிணியிலிருந்து விடுதலை பெற, அச்சாதகன் நாமஜபத்தை தீவிரப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இறைவனிடம் தஞ்சமும் அடைந்து இவ்வாறு வேண்டுகிறான்: " முருகா! நான் பேராசை எனும் தீராத பிணி வசப்பட்டு பகுத்தறிவையிழந்து தீய கர்மங்களைச் செய்பவன்; அதனால், பிறப்பு இறப்பு என்ற சம்சாரச் சுழற்சியில் மாட்டிக்கொண்டு, நான் நிரந்தரமாக உழன்றுதான் ஆக வேண்டுமா? பெருமானே, இவ்வாறு நீங்கள் என்னை உழலவிடுவது நியாயமா? இது தகுமா / முறையா? தயவுசெய்து இதிலிருந்து என்னைக் காப்பாற்றி அருள்வீர்களாக.” சாதனை – தடைகள் – அடைக்கலம் / பிரார்த்தனை - இறைவனின் கிருபை - தடைகளைக் கடத்தல் ------ இப்படிப்பட்ட ஒரு சுழற்சி, சாதகன் தன் இலக்கை இறுதியாக அடையும் வரை (அதாவது சாதனையின் காலம் முழுவதும்) சாதகனுக்கு ஏற்படுவதையும், அது போகப்போக நுட்பமாகிக் கொண்டே போவதையும், நாம் காண்போம்.

    “பேராசை” பற்றி அருணகிரியார் கருத்து என்ன? இதுபற்றி நாம் புரிந்து கொள்ள முயற்சிப்போம். வெறுமனே பேராசை அல்லது உலோபம் என்ற அர்த்தத்தில் நாம் சாதாரணமாக புரிந்துகொள்ளுவதுபோல் அல்ல இது. பின் என்ன! நம்முடைய ஒவ்வொரு அனுபவமும் --- பெரியது () சிறியது, நல்லது () கெட்டது, புனிதமானது () அசுத்தமானது, விரும்பத்தக்கது () விரும்பத்தகாதது, உலகியல் () ஆன்மீக சம்பந்தப்பட்டது போன்ற எப்படிப்பட்ட அநுபவமாக அது இருப்பினும் --- நாம் அனுபவிக்கும் அதே சமயத்தில், நம் ஆழ்மனதில் ஒரு பதிவையும் (அடையாளம்) ஏற்படுத்தி விட்டுச் செல்கிறது. இந்த பதிவுகள் சம்ஸ்காரங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த சம்ஸ்காரங்களிலிருந்து, வாசனைகள்’ எனும் நுட்பமான (சூட்சும) ஆசைகள் ஆழ்மனதிலிருந்து அந்த இன்பத்தை மறுபடியும் அநுபவிக்க வேண்டுமென்றஎண்ண’ (விருத்தி) (Vruththi) வடிவமாக உணர்வு-மனதில் (Conscious mind) வெளிப்படுகின்றன. அதன் விளைவாக இன்பம் திரும்பத் திரும்ப அடையப்படும்போது, பலப்பல பதிவுகளை (சம்ஸ்காரங்களை) ஆழ்மனதில் மேன்மேலும் விட்டுச்செல்வதால், ஏற்கனவே அங்கிருக்கும் பதிவுகள் (சம்ஸ்காரங்கள்) மேன்மேலும் கெட்டியாகி ஸ்திரமடைகின்றன. இவ்வாறாக, ஆசைகள் மீண்டும் மீண்டும் பூர்த்தி செய்யப்பட்டு, இன்ப அநுபவங்கள் பெருவதன் காரணமாக, மேலும் கெட்டியாகி ஆழ்மனதில் ஆழமாக வேர் விட்டு ஸ்திரம் பெறுகின்றன. ​அவ்வாறு ஆழ்மனதில் பதிந்து ஸ்திரம் பெற்ற ஆசைகள், கட்டுக்கடங்காத அல்லது பிடிவாதமான ஆசைகளாகின்றன. அதுவே 'பேராசை' என்று இச்செய்யுளில் குறிப்பிடப்படுகிறது. அப்பேராசைகள், சீர்தூக்கிப் பார்த்து செயல்படும் (விவேக) சக்தியை சிதைத்து, அவ்வாசைகளுக்கு மனிதனை அடிமைப்படுத்தி, அவைகளை மீண்டும் மீண்டும் அநுபவிப்பதற்காக வெவ்வேறு உயிரினங்களாக அவனை மறுபடி மறுபடி பிறக்க வைத்து சம்சார சக்கரத்தில் உழலச் செய்கிறது. இது அவ்வளவு எளிதில் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயல்ல.    

    இப்பேராசையானது மனதை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்ட காரணத்தால், சென்ற செய்யுளில் கூறப்பட்ட ‘நாம ஜபத்தை’ தினசரி செய்வதுகூட, ஒரு சுலபமான விஷயமாக இருப்பதில்லை. அதனால்தான், சிறிது நேரம் உட்கார்ந்து நாம ஜபம் செய்வது, இறைவனைப் புகழ்ந்து பாடுவது நேரத்தை வீணாக்கும் ஒரு வீண் வேலை என்று பெரும்பாலான மக்கள் நினைப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. செல்வம் ஈட்டி இன்பம் துய்த்திடத் தூண்டும் இப்பேராசைகள், சில நிமிடங்களுக்குக்கூட அவர்களை அமைதியாக உட்கார்ந்து இறைவனை நினைக்கவோ, உள் அமைதியை அனுபவிக்கவோ அனுமதிப்பதில்லை. இந்த ஆசைகளின் சக்தி அளப்பரியது! அவை மனிதனை உலுக்கியெடுத்து, ஆட்டம் காண வைத்து, மனதையும் புலன்களையும் கிளர்ச்சி பெற வைத்து, அவனை அமைதியாக இருக்க விடுவதில்லை. இந்த ஆசைகள் மனிதனைக் கவர்ந்து, முட்டாளாக்கி, வெளிப்புற விஷயங்களில் நாட்டம் கொள்ளச்செய்து, நிலையில்லாத செல்வம் மற்றும் தற்காலிக இன்பம் ஆகியவைகளை அடைவதற்காகப் போராட வைத்து, தன் பரிவாரத்தில் ஒன்றான துன்பத்தையும் அவனுக்குப் பரிசாக அளிக்கின்றன. இவ்வாறு மனிதன் தன் பேராசைகளால் அவனறியாமலே பந்தாடப் படுகிறான். என்னே பரிதாபமான மனித வாழ்க்கை! ஆசைகளின் கைப்பாவையாகத் தான் ஆகிவிட்டதுகூட அவனுக்குத் தெரியாது. அர்ஜூனன், பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் எவ்வளவு அழகாக இத்தகைய இழிவான நிலையைப் பற்றி கேட்டான் பார்த்தீர்களா: "ஒ ஸ்ரீகிருஷ்ண பகவானே! மனிதன் எதனால் உந்தப்பட்டு, தன் மனம் விரும்பாவிட்டாலும், ஏதோ ஒரு சக்தியால் கட்டாயப்படுத்தப்படுவது போல, பாவங்களைச் செய்கின்றான்” (ஸ்ரீமத் பகவத் கீதா III:36-37). பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ரகசியங்களிலெல்லாம் மிகவும் ரகசியமான உண்மையை இவ்வாறு வெளிப்படுத்தினார்: “இந்த பேராசையும், இந்த கோபமும்தான், மனிதனின் அனைத்து பாவச் செயல்களுக்கும் காரணம்; அவன் விரும்பாவிட்டாலும், அவனைப் பாவச்செயல்களில் தூண்டிவிடுகின்றன.” எவ்வளவு நேர்த்தியாக பதில்! ஆசையும் கோபமுமே (கோபமென்பது நிறைவேறாத ஆசையின் பரிணாம வடிவமே) மனிதன் படும் துன்பங்களுக்குக் காரணம். ஆழ்ந்து நோக்கின், எல்லா பாவங்களுக்கும் இவ்விரண்டு அரக்க சக்திகளும்தான் மூல காரணம் என்பது புரியும். உலக நாடகத்தை நடத்திவைப்பது ஆசைகளே.

    ஆசைகள் ஒருபொழுதும் பூர்த்தி செய்யப்பட முடியாதவை. நாம் அவற்றை பூர்த்தி செய்யச்செய்ய, அவை இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கேட்கும் தன்மையது. நெய்யைத் தீயில் விட்டால், அத்தீ நன்கு வளர்ந்து, மேலும் நெய்யை வார்த்திடக் கேட்பது போன்றதே ஆசைகளும். ஆசைகள், ஒவ்வொரு முறை திருப்தி செய்யப்படும் போதும், அவை மேலும் வலிவடைந்து, மேன்மேலும் திருப்தி பெறத் தீவிரமாக முயற்சி செய்கின்றன. அப்படி ஆசைகளைத் திருப்தி செய்வதில் ஏதாவது தடை செய்தால்/தடுத்தால், அது கோபத்தை உண்டாக்குகிறது; கோபத்தின் அழிவுகரமான விளைவுகளை நாம் அனைவரும் நன்கறிவோம். கோபமடைந்த மனிதன் தனது சமநிலையை இழந்து, உண்மையாகவே ஒரு மிருகம்போல் மாறிவிடுகிறான்.

    இவ்வாறு, ஆசைகள் விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன. மாறாக, இறை நாமஜபம் செய்யும்பொழுதே இனிமையாகவும் திருப்திகரமாகவும் இருக்கிறது, நெஞ்சுக்கும் ஆறுதல் கிடைக்கிறது, இறுதியில் ஜீவாத்மாவிற்கு மோட்சத்தையும் அளிக்கிறது. எனினும், ஆழ்மனதில் சூட்சுமமாக புதைந்துள்ள ஆசைகள், மனிதனை அழிந்துபோகிற உலகப் பொருள்களைநாடிச் செல்லவைத்து, பின்னர் வாழ்நாள் முழுவதும் அவனை மீளாத்துன்பத்தில் ஆழ்த்துகின்றன. ஆசைகள் எனும் சக்கரத்தில் அகப்பட்டு மனிதன் உழன்றுகொண்டே இருக்கிறான். இப்போது இந்த பொருளுக்கும், மற்றொருசமயம் மற்றொன்டிற்குமாக. ஆசைகளின் பிடியில் அகப்பட்ட ஒரு கருவியே மனிதன். அந்தோ பரிதாபம்!

    இந்தப் பேராசை எனும் பிணிக்கு அவிவேகமே (அதாவது நல்லது கெட்டதை பகுத்தறியும் ஆற்றல் இல்லாமையே) காரணமென்று அருணாகிரிநாதர் கண்டுபிடித்துள்ளார். மனித வாழ்விற்கும், அதில் பெருமளவு காணப்படும் துன்பத்திற்கும், இந்த பகுத்தறிவின்மையே காரணம். மனித வாழ்க்கை என்றாலே துன்பமாகக் காணப்படுகிறது. இந்த சரீர வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி இல்லை. நம்மால் இன்பம் என்று அழைக்கப்படுபவைகளும்கூட, ஞானிகளால் துன்பமாகவே கருதப்படுகிறது; ஏனெனில், எல்லா இன்பங்களும் தற்காலிகமானதாகவும் பொய்யானதாகவும் இருப்பதோடல்லாமல், துன்பம், ஏக்கம், அமைதியின்மை, கவலை மற்றும் பாவம் --- இவற்றில் முடிவடைகின்றன. நம்முடைய துயரத்தின் காரணம் என்ன? நாம் உடல்தாங்கிய ஜீவனாகப் பிறந்திருப்பதே நமது துன்பங்களுக்குக் காரணம். அப்படி உடலுருவம் கொண்டு பிறப்பதற்குக் காரணம் நம் கர்மங்கள். இந்த அநித்திய உலகிற்கு கர்மங்களே நம்மை அழைத்து வருகின்றன. நாம் ஏன் கர்மங்களைச் செய்கிறோம்? அன்பு () பகை, விருப்பு () வெறுப்பு (ராகம் - துவேஷம்) கொண்டுதான் நாம் செயல்படுகிறோம்; பற்றுகள்தான் அன்பு அல்லது பகைக்கான காரணமாகிறது. சில நபர்கள் மற்றும் விஷயங்களுடன் நாம் பற்றுக் கொண்டிருக்கிறோம் என்றால், அவசியம் வேறு சில நபர்கள் மற்றும் விஷயங்களுடன் நாம் பகை/வெறுப்பு கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதற்கு பகுத்தறிவின்மை அல்லது சரியான புரிதல் (விவேகம்) இல்லாததுவே காரணமாகும். எல்லாம் இறைவனின் படைப்பு. எல்லாம் அவரின் அங்கங்கள். அவரிலிருந்து வேறுபட்டு எதுவும் இல்லை. அவரே அனைத்துமாய் உள்ளார். எல்லாவற்றின் உள்ளேயும் அவர் உறைகிறார். தோன்றிய அனைத்தும் மறைந்து போவது உறுதி. இதுவே உண்மை. அப்படியிருக்க, சிலவற்றின் மீது அன்பு பாராட்டுவதற்கும், சிலவற்றை வெறுப்பதற்கும் எந்தவித காரணமும் இல்லை. ஆனாலும், அவிவேகத்தினால் நாம் அவ்வாறுதான் செய்கிறோம். அந்த அவிவேகம்தான் (பகுத்தறிவின்மைதான்) நாம் படும் அனைத்து துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் காரணம். அக்ஞானம் அல்லது அறியாமை தான் இந்த அவிவேகத்திற்கு மூல காரணம் என்றாலும், யதார்த்தமான (நடைமுறை) நோக்கத்தில் பார்த்தால், பேராசை எனும் பிணி, பிறப்பு, மற்றும் துன்பம் ஆகியவைகளுக்கு அவிவேகமே காரணம் என நாம் உறுதியாகக் கருதலாம்.

    மீண்டும் மீண்டும் பிறந்து இறப்பதற்குக் காரணம் பேராசை. எனவேதான், அது ஒரு நோய் என குறிப்பிடப்படுகிறது. உள்ளபடி, இதுதான் உண்மையான நோய். உடலில் தோன்றும் நலிவுகளும் நோய்களும் உண்மையில் நோய்களேயல்ல, ஏனென்றால் அவை ஒரு குறுகிய காலத்திற்குத்தான் நம்மை தொந்தரவு செய்கின்றன, பின்னர் அவை குணப்படுத்தப்பட்டு விடுகின்றன (அல்லது, உடல் அழியும் பொழுது, அவைகளும் அழிந்துவிடுகின்றன). மனக் கோளாறுகளைக்கூட குணப்படுத்திவிட இயலும் அல்லது கட்டுப்படுத்தி வைக்க முடியும். தீராத நோய்கள்கூட, உடல் நீடிக்கும்வரைதான், நீடித்து இருக்கும்; உடல் இறக்கும்போது, ​​அவை உடலோடு சேர்ந்து மறைந்து விடுகின்றன. அவைகளால் மறுபிறப்பு ஏற்படுவதில்லை; ஒருவனின் அடுத்த பிறவியில் அவைகள் தொடர்வதில்லை. ஆனால் இந்த அசாதாரண நோயான பேராசைகள் அடுத்தடுத்த பிறவிகளில்கூட ஒரு நபரை விட்டு வைப்பதில்லை; மாறாக அவைகளே மறுபிறவிகளுக்குக் காரணமாகின்றன. நிறைவேறாத ஆசைகள் தற்போதைய வாழ்க்கை முழுவதுமே ஒரு மனிதனைத் தொந்தரவு செய்வதோடல்லாமல், மறுபிறப்பிற்கும் காரணமாகின்றன; மேலும், அதற்கு பின்வரும் பிறப்புகளிலும் அவனைத் தொடர்ந்து தொந்தரவு செய்கின்றன. நாம் முன்னரே பார்த்ததுபோல, ஆசைகள் ஒருபோதும் பூர்த்தி செய்யப்பட முடியாதவை. ஆதலால், தெய்வீகக் கிருபையுடன் கூடிய ஆன்மீக சாதனைகள் மூலம் அவை பதங்கமாகப்படும் வரை () துறக்கப்படும்வரை, அவை முடிவில்லாப் பிறப்புகளுக்குக் காரணமாகின்றன. ஆசைகளின் உண்மைத்தன்மை, அவைகளின் காரணங்கள், அவைகளைப் பதங்கமாக்கும் (தூய்மைப்படுத்தி மேன்மைப் படுத்தும்) முறை ஆகியவைகளைப்பற்றி நன்கு பகுத்தாராய்ந்து, அறிந்து (இதன் விவரங்களுக்கு செய்யுள்-14 பார்க்கவும்) செயல்பட்டு, இறைவனிடம் அடைக்கலம் புகுந்து, அவரின் கிருபையைப் பெறுவதன்மூலமே, ஆசைகளைப் பதங்கமாக்குவதோ / துறப்பதோ சாத்தியமாகும்.

    எனவே, அச்சாதகன் பெருமானின் முன்னர் அழுது புரண்டு, கிருபையையும் தயையையும் தனக்கு உடனே தந்தருளிட அவரிடம் இறைஞ்சி மன்றாடி வேண்டுகிறான். எந்தப் பெருமானிடம் வேண்டுகிறான்? இப்பூவுலகம் முழுவதையுமே பல்லாண்டு காலம் ஆண்டதில் திருப்தி அடையாமல், தேவர்களை வென்று அவர்களை அடிமைப்படுத்தி தேவலோகத்தையும் தன் வசப்படுத்திய பேராசையும் அகங்காரமுமே உருவான சூரபத்மனைக் கொன்ற அந்த முருகப் பெருமானிடம் வேண்டுகிறான். அப்படிப்பட்ட பராக்கிரமம் கொண்ட சூரபத்மனையும், அவனது படை முழுவதையும், ஒரு சிறு விளையாட்டுப் போல, ஒருமுறை வேலாயுதத்தை எய்தி, அழித்து, தேவர்களுக்கு தேவலோகத்தையும் திரும்பப் பெற்றுத் தந்தார் முருகப் பெருமான். எனவேதான், அச்சமற்றவரென்றும், நெடிது வாழ்ந்திருந்த சூரனை அழித்தவரென்றும், தேவலோகத்தை பாதுகாத்தவரென்றும் முருகப்பெருமான் இச்செய்யுளில் புகழ்ந்து போற்றப்படுகிறார்.

    எப்படி முருகப் பெருமானின் சக்தி-வேலால் மட்டுமே அசுரனான சூரபத்மனை அழிக்க முடிந்ததோ, அப்படியே இறை-கிருபையின் துணை கொண்டு மட்டுமே ஆசைகளை அழித்திட இயலும். எனவே, அச்சாதகன் இறைவனிடம் இவ்வாறு வேண்டுகிறான்: “ஓ பெருமானே! பல்லாண்டு காலமாக வாழ்ந்திருந்த சூரபத்மனை வேல் எறிந்து அழித்து, தேவர்களைத் காத்தவர் நீங்கள்! அவனைவிட மிகப்பயங்கரமான பேராசை எனும் பிணி என்னுள் இருக்கிறது. நான் இந்த பேராசைகளின் பிடியில் சிக்கி, விவேக சக்தியையும் இழந்து, நிரந்தரமாகத் துன்பப்பட வேண்டுமா? இது நியாயமாகுமா? உங்கள் கிருபை எனப்படும் வேல் கொண்டு, பேராசை எனும் அரக்கனாகிய இப்பெரும் பிணியை அழித்து என்னைக் காத்தருளும்.” அவன் மேலும் வேண்டுகிறான்: “ஓ பெருமானே, நீங்கள் தேவலோகத்தைக் காத்தருளியதுபோல, என்னையும் காத்தருளக் கூடாதா? இது உங்களுக்கு ஒரு பெரிய வேலையா என்ன? என் மேல் தயை கொண்டு, என்னை காத்தருளுங்கள்.”

    மண் (வீடு), பொன் (பொருள்), பெண் (மனைவி) ஆகிய இம்மூன்றின் மீதுள்ள பற்றே ஜகன்-மாயா எனப்படும் உலக மாயையின் சாரம் என்று ஐந்தாம் செய்யுளில் அறிந்தோம். இம்மூன்றுமே, மூன்று ஏடணைகளின் ஸ்தூல வடிவம், அதாவது “பொருள்கள்மீதான பற்று”; இவை அவன் வாழ்வில் சொல்லமுடியாத துன்பங்களைத் தந்தபோதும், அவற்றை விட்டொழிப்பதென்பது மிகவும் கடினம். இந்த மூன்று ஏடணைகளின் சூட்சும வடிவம் அவன் ஆழ்மனதில் படிந்திருக்கும் ஏக்கங்கள் எனும் “பேராசை”; இவை அவனை தொடர்-பிறப்பில் (சம்சாரத்தில்) ஆழ்த்துகின்றன என்று இச்செய்யுளில் அறிகிறோம். இந்த மூன்று ஏடணைகளின் காரண வடிவம் மாயையிலிருந்து பிரிக்கமுடியாத (அதாவது மாயையோடு ஒன்றுபட்டிருக்கும்) நிலையை, 39-ஆம் செய்யுளில் சித்தரிப்பதைக் காண்போம்.

    இப்பதினாறாம் செய்யுளுக்கும், முப்பத்தொன்பதாம் செய்யுளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. முப்பத்தொன்பதாம் செய்யுளில் சொல்லப்படும் “மூவித ஏடணை”களின் ‘சூட்சும வடிவம் இச்செய்யுளில்பேராசைஎனக் கூறப்பட்டுள்ளது; முப்பத்தொன்பதாம் செய்யுளின் மாவேழ் சனனம், இச்செய்யுளில் உழலுதல்’ (பிறப்பு இறப்பு எனும் சம்சார சக்கரத்தில். தொடர்ந்து சுற்றுதல்) என்று குறிப்பிடப்படுகிறதெனலாம்

No comments:

Post a Comment