செய்யுள் 18



செய்யுள் – 18


உதியா   மரியா   உணரா   மறவா
விதிமால்   அறியா   விமலன்   புதல்வா
அதிகா   அநகா   அபயா   அமரா
வதிகாவல   சூர   பயங்கரனே.


    பொழிப்புரை: "பிறப்பு-இறப்பு அற்றவரும் (ஆதியந்தமில்லாதவர்), நினைப்பும் மறதியும் அற்றவரும், பிரம்மா விஷ்ணு ஆகிய இருவராலும் அறியப்படாதவரும், பரிசுத்தமானவருமான பகவான் சிவபெருமானின் புதல்வனே! தலையாயவரே, பாபமற்றவரே, அடைக்கலம் தருபவரே, தேவலோகத்தின் தலைநகராகிய அமராவதியைக் காத்தவரே, சூரபத்மனுக்கு மரணபயத்தைத் தந்தவரே!”

விளக்கவுரை

    “கந்தர் அனுபூதி” நூல் முழுதிலும் இந்தச் செய்யுள் மட்டும் தனித்தன்மை வாய்ந்தது. இறைவனைப்பற்றிய விவரணம், மற்றும் அவரின் மகிமைகள் மட்டுமே இச்செய்யுளில் கூறப்பட்டுள்ளன. உதவி வேண்டிடும் பிரார்த்தனைகள் இல்லை, உதவியற்ற நிலையைப் பற்றிய வருந்துதல்கள் இல்லை, விண்ணப்பங்கள் இல்லை, அறிவுறுத்தல்கள் இல்லை, கண்டிப்பு இல்லை, கிருபை அருளுதல் இல்லை, ஆன்மீக அநுபவங்கள் பற்றிய வர்ணனைகள் இல்லை, இது இல்லை அது இல்லை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகவும், பெருமானைப் பற்றிய விவரணம் மட்டும் அடங்கிய செய்யுளாகத் தோற்றமளிக்கின்றது; உண்மையில் ஆராய்ந்து பார்க்கும் பொழுதுதான், இச்செய்யுள் பரம ரகசியமான தத்துவார்த்த அர்த்தம், தத்துவச் செறிவுகள், ஆன்மீக உட்பொருள் ஆகியவைகளை உள்ளடக்கியிருப்பது நமக்குப் புலப்படுகிறது.

    முந்தைய செய்யுளில் சாதகன் மெய்ப்பொருளான ஸச்சிதானந்தத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு அதிலேயே ஸ்திரமாக நிலைத்திருக்கவும், அதற்கான வழிமுறையாக ஜபம், இறை-நாமாக்களைப் பாடுதல் போன்ற சாதனைகளைத் தீவிரமாகச் செய்திடுமாறும் அறிவுறுத்தப் பட்டதைப் பார்த்தோம். அந்த வழிமுறை பக்தி மார்க்கம். இப்பொழுது இச்செய்யுளில் ஞான மார்க்கம் (பாதை) எனப்படும் தத்துவார்த்த, ஆன்மீகப் பார்வைகொண்ட ஒரு செயல்முறை தரப்படுகிறது. நாம் முன்பே பார்த்தது போல, “கந்தர் அநுபூதி” நூல் முழுவதிலுமே, பக்தியும் ஞானமும் கைகோர்த்தே செல்கின்றன.

    “பரம்பொருளாகிய ஸத் சிதானந்தத்துடன் ஐக்கியமாகி நிலைத்திருப்பாயாக (அற மெய்ப் புணர்வீர்)!” பரம்பொருள் எது? அதனுடன் ஐக்கியமாவது எவ்வாறு? சென்ற செய்யுளில் ஸத் சிதானந்தமே அனைத்து பெயர்கள்-உருவங்களின் பின்புலத்திலுள்ள உண்மை தத்துவம் என்று விளக்கப்பட்டது. அந்த ஸச்சிதானந்தமாகிய பரப்பிரம்மத்திற்கு இரண்டு நிலைகள் (aspects) உள்ளன:

  1. எல்லாம் கடந்த நிலைஎனும் ஆழ்நிலை’ (Transcendental aspect - பிரம்மம்).
  2. ஊடுருவிய நிலைஎனும் உள்ளார்ந்துள்ள நிலை’ (Immanent aspect ஆத்மா () உண்மை “நான்”).
    எல்லையற்ற, எங்கும் நிறைந்த, எல்லாம் கடந்ததாய் அறியப்படும்பொழுது அது பிரம்மம் என அழைக்கப்படுகின்றது. அனைத்து ஜீவராசிகளிலும் மற்றும் எல்லாப் பொருள்களிலும் உள்ளார்ந்துள்ளதாய் () அனைத்தையும் ஊடுருவிய உண்மைத் தத்துவமாக அறியப்படும்பொழுது அது ஆத்மா’ () ‘உண்மை நான் என அழைக்கப்படுகின்றது. பிரம்மமும் ஆத்மாவும் வெவ்வேறான இரண்டு பொருள்களோ தத்துவங்களோ அல்ல; இரண்டுவிதமான பார்வைக் கோணமே. ஒரே உண்மைத் தத்துவமான பரம்பொருளின் ஆழ்நிலை மற்றும் உள்ளார்ந்தநிலை என்ற இருபார்வைக் கோணங்களும், சவுகரியத்திற்காக சொல்லப்படும் இரண்டு பெயர்கள்தான். எனவே, ஆத்மாவே பிரம்மம்; ‘அயம் ஆத்மா பிரம்ம என்கிறது மாண்டூக்ய உபநிஷத்தின் மகாவாக்கிய மந்திரம். இவ்வுண்மையை மிகவும் திறமையாக அருணகிரிநாதர் இச்செய்யுளில் கையாளுகிறார்: பகவான் சிவபெருமானை பிறவாதவர், அழியாதவர் என்று பிரம்மத்திற்குறிய இலட்சணங்களுடன் விவரித்த அருணகிரியார், அவரின் புதல்வரான கந்தப் பெருமானையும் கிட்டத்தட்ட அதே இலட்சணங்கள் கொண்டு (பிறவான், இறவான் என்றெல்லாம் ஏற்கனவே செய்யுள்-12இல் உள்ளபடி) இங்கு மேலும் இவ்வாறு விளக்குகிறார்: “அதிகா! அநகா! அபயா! அமரவதிகாவல! சூர பயங்கரனே!”

    இச்செய்யுளின் முதல் இரு வரிகளில் அருணகிரியார், பகவான் சிவனாரை உதியா மரியா (பிறப்பு இறப்பு அற்றவர்), உணரா, மறவா’ (நினைப்பும், மறுப்பும் அற்றவர்) என்றெல்லாம் விவரித்திருப்பது, பரம்பொருளாகிய பிரம்மத்திற்கு உரித்தானவை. அச்சிவனாரின் புதல்வனான முருகப் பெருமானும் (குகனும்) அவ்வாறே பிறவான், இறவான்என்றெல்லாம் செய்யுள்-12இல் விவரிக்கப்பட்டுள்ளார். மேலும், அசுரனைக் கொல்வதற்காக சிவனார் எடுத்த மற்றொரு உருவம் முருகன் அல்லது குகன் என்றும் நாம் அறிவோம். ஆகையால், குகனும், சிவனும் ஒன்றே. “குகன்” என்றால் “இதயக் குகையில் உறைபவர்” என்று பொருள், அதாவது, “ஆத்மா” அல்லது உண்மையான “நான்”; எனவே சிவனார், பிரம்மன்; முருகன் (குகன்), ஆத்மா. இவ்வாறு, அருணகிரியார் வேதங்களின் நான்கு மகாவாக்கியங்களில் ஒன்றான அயம் ஆத்மா பிரம்ம என்ற மந்திரத்தை இங்கு சூட்சுமமாகக் காட்டுகிறார். எனவே, ஒரே பரம்பொருள் தத்துவத்தின் இரு அம்சங்களான ஆத்மாவும் பிரம்மமும் ஒன்றே. ஆத்மா என்பது பரம்பொருளின் உள்ளார்ந்துள்ள நிலை (Immanent aspect). இதுவே எஷ்டி என்றும் பிண்டம் (Individual) என்றும் அழைக்கப்படுகின்றன. பிரம்மம் என்பது பரம்பொருளின் எல்லாம் கடந்த நிலை (Transcendental aspect). இதுவே, சமஷ்டி என்றும் அண்டம் (Cosmic) என்றும் அழைக்கபடுகின்றன. மேலும், ஆத்மாவை தியானிப்பதன் மூலம், அவித்யா எனப்படும் அக்ஞானத்தை அழித்திட இயலும். அந்த அவித்தையே சூரபத்மன். அதனால்தான், அருணகிரியார்குகனை’ ‘சூர பயங்கரன்என்று குறிப்பிடுகிறார், அதாவது சூரபத்மனுக்கு (மரண) பயத்தைத் தருபவர்; எப்படியெனில், சாதகன் முழு ஆர்வத்துடன் ஆத்மாவின்மீது தியானம் செய்ய ஆரம்பித்தவுடனேயே, அது அவித்யைக்கு (சூரபத்மனுக்கு) மிக பயங்கரமான அச்சத்தை உண்டுபண்ணுகிறது, அவித்யைக்கு (சூரபத்மனுக்கு) வரப்போகும் மரணத்தைப்பற்றிய பயத்தை ஏற்படுத்துகிறது. அசுரன் உடனே கொல்லப்படவில்லை, அதனால்தான் மற்ற செய்யுள்களில் சூரனை அழித்தவன்என்று முருகனை அழைப்பதுபோல அழைக்காமல், இச்செய்யுளில்சூர பயங்கரன்என்றழைக்கிறார். சூரனை () அவித்யாவை அழிப்பதென்பது மிக நெடிய யுத்தம் செய்த பின்னரே நடைபெறுகிறது. முதலில் சூரன் யுத்தத்திற்குத் தன்னை தயார் படுத்திக்கொண்டு, கடும் யுத்தத்தைத் துவக்குகிறான்; அதுபோலவே, மரண கிலி பிடித்த (அழியப்போகும்) அவித்யாவும், சாதகனை எப்படியெல்லாம் துன்புறுத்தல் செய்யப்போகிறதென்பதை நாம் பின்வரும் செய்யுள்களில் காணத்தான் போகிறோம். நீண்டு பலகாலம் யுத்தம் செய்தபின்னரே, சூரன் (அவித்யா) வேலினால் (ஞானத்தால் சமாதி அநுபவநிலையில்) அழிக்கப்படுகிறான் (செய்யுள் - 42). இப்படியாக, பின்னர் ஆத்மாவின்மேல் தியானம் செய்வதற்கு உபயோகமாக இருப்பதற்கு, இச்செய்யுளில் அயம் ஆத்மா பிரம்ம என்ற மகாவாக்கியத்தை அருணகிரியார் உட்பொருளாகவும், மிக இரகசியமாகவும் புகுத்துகிறார். அருணகிரியார் ஒரு மிகப்பெரிய உளநூல் அறிஞர்.

    இப்படியாக, சமயம் மற்றும் பக்தி முறைச் சாதனையிலிருந்து, தத்துவார்த்த மற்றும் ஆன்மீக முறைச் சாதனையான ஆத்மா () தன்னிலை தியானத்திற்கு மாறுவதை இச்செய்யுள் குறிப்பிடுகிறது. உண்மைத் தியானம் எது என்பது இச்செய்யுளில் சூசகமாக தெரிவிக்கப்படுகிறது. இச்செய்யுளின் முதல் இரண்டு வரிகள் பிரம்மத்தின்/ஆத்மாவின் சொரூபத்தை வர்ணிக்கிறது; கடைசி இருவரிகள், அவித்யைக்கு (சூரபத்மன்) அச்சத்தை ஏற்படுத்தும் தன்னிலை/ ஆத்ம தியானத்தை செய்திடும் முறையைக் குறிப்பிடுகிறது.

    உலகத்தின் மேலிருக்கும் மதிமயக்கத்தை விட்டு, உண்மைத் தத்துவத்தோடு (ஆத்மாவோடு) தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று (முந்தைய செய்யுளில்) இறைவன் கொடுத்த ஞானத்தைக் கொண்டு, அச்சாதகன் ஸச்சிதானந்த சொரூபனான முருகனைத் தன்னுள்ளேயிருக்கும் ஆத்மாவாக தியானிக்கத் தொடங்குவான். அத்தியானத்தை நீண்டகாலம் பயிற்சி செய்த பின்னர், அவனுக்குத் தன் மனதை ஆத்மாவில் நிலைநிறுத்த முடியும். ஆத்மாவில் மனதை ஒருமுகப்படுத்துதல் (தாரணம்), மற்றும் நிலைநிறுத்துதல் (தியானம்) செய்திடும்பொழுது, அது அறியாமையை கிலிபிடிக்கச் செய்து உசுப்பிவிடும், அதையே சூரபத்ம பயங்கரனேஎன்று இச்செய்யுள் குறிப்பிடுகிறது.

    இறைவனுக்கு பிறப்பும் இறப்புமில்லை. அவருக்கு ஆதியுமில்லை, அந்தமுமில்லை. இவ்வுலகிலுள்ள எல்லா ஸ்தாவர ஜங்கமங்களும் (உயிரற்ற மற்றும் உயிருள்ள அனைத்துப் பொருள்களும்) அவரிடமிருந்தே தோன்றுகின்றன; அவரால், அவரிலேயே போஷிக்கப்பட்டு பாதுகாக்கப் படுகின்றன; மேலும், இவ்வனைத்தும் அவரிடமே திரும்பி வருகின்றன, அவரிலேயே சேர்ந்து விடுகின்றன. ஆனால், அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை. அவரைத் தவிர, இரண்டாவது என்ற வேறொன்றும் இல்லையாதலால், அவர் எதைப் பற்றியும் சிந்திப்பதுமில்லை, எதையும் மறப்பதுமில்லை. அத்தகைய அருமை பெருமைகளையுடைய பகவான் சிவபெருமானின் மகிமையை பகவான் பிரம்மதேவரும் விஷ்ணுதேவரும் அறிந்திலர்தானே! சிவனாரின் அடி-முடியை நன்கு தேடியும் இவ்விருவராலும் காண இயலவில்லை என்ற புராணக் கதையை இங்கு நினைவுபடுத்திக் கொள்வோம்.

    ஒரு சமயம், பிரம்மாவும், விஷ்ணுவும் தான்தான் பெரிய பகவான் என்று சொல்லிக்கொண்டு வாதிட்டனர்; ஆனால் அவர்களால் இப்போட்டியை முடிவிற்குக் கொண்டுவர முடியவில்லை. கடைசியில், இருவரும் யுத்தம் செய்வது என்றும், அதில் யார் ஜெயிக்கிறாரோ அவரே பெரிய பகவான் என்றும் முடிவு செய்தனர். யுத்தம் ஆரம்பித்து, பல்லாண்டு காலம் நடந்து வந்தபோதிலும், அது ஒரு முடிவிற்கு வருகிறதாகத் தெரியவில்லை. எனவே, பகவான் சிவன், அந்த யுத்தத்தை முடித்து வைக்கத் தீர்மானித்து, அவர்கள் முன் ஒரு ஜோதி-மலைபோலத் தோன்றி மண்ணிலிருந்து விண்வரை பரவிநின்று அவர்களைத் திகைக்க வைத்தார். அது என்ன என்று அறிய ஆர்வம் கொண்டு, இருவரும் யுத்தமிடுவதை நிறுத்தினர். அச்சமயம், அவர்கள் ஓர் அசரீரி ஒலிப்பதைக் கேட்டனர்: “யார் பெரியவர் என்று நீங்கள் இருவரும் ஏன் வீணே சண்டை பிடிக்கிறீர்கள்? பகவான் சிவனுக்கு மட்டுமே உங்கள் இருவரின் சக்திகளைப் பற்றித் தெரியும். உங்களில் யாரொருவர் இந்த ஜோதி மலையின் அடியையோ முடியையோ காண்கிறீரோ, அவரே பெரிய பகவானாவார்.”

    இதைக் கேட்டவுடனே, பகவான் விஷ்ணு ஒரு பன்றி உருவெடுத்து பூமியைத் தோண்டிக்கொண்டு, அச்சோதியின் அடியைக் காணச் சென்றார்; பகவான் பிரம்மா ஒரு பெரிய அன்னப்பட்சி உருவெடுத்து, அதன் முடியைக் காண ஆகாயத்தை நோக்கி மேலே பறந்து சென்றார். எவ்வளவு தூரம் அவர்கள் சென்றாலும், அந்த ஜோதி அதையும் கடந்து இருப்பதைக் கண்டனர். இருவரும் தங்கள் முயற்சியில் தோற்று முற்றிலும் சோர்வடைந்தனர். அதே சமயத்தில், ஒளிமலையானது பகவான் சிவனாக மாறி அவர்களுக்குக் காட்சி அளித்தது. அவ்வாறு சிவனாரைக் கண்டதும் அவ்விருவரின் அகங்காரம் உடனே மறைந்தது. இருவரும் பகவான் சிவனையே பெரும் இறைவனாக ஒத்துக் கொண்டனர். உடனே சிவனார் திரும்பவும் அடி-முடி இல்லாத ஜோதியாக மாறி, பின் சிறிது சிறிதாகக் குறுகி ஒரு மலையாக மாறினார். இதுவே திருவண்ணாமலை என்ற க்ஷேத்திரத்தில் இன்றும் இருக்கும் அருணாசல மலை’. இந்த சம்பவம் ஒரு மகாசிவராத்திரியன்று நடந்ததென்று சொல்லப்படுகிறது.

    சூரபத்மனும் மற்றும் பிற அசுரர்களும் சிவபிரானிடமிருந்து வரங்கள் பெற்றிருந்தனர். அதனால், சிவனார் தன் உருவிலேயே அவர்களைக் கொல்ல இயலாத நிலையில் இருந்தார்; மேலும், பிறிதொருவரும் அவர்களைக் கொல்ல முடியாது. எனவே, அவ்வசுரர்களை அழித்திட, சிவனார் தானே கந்தப் பெருமானாகத் தோன்றினார். ஆகையால், சிவனாரும் கந்தப் பெருமானும் ஒருவரேயாவர். இதை வலியுறுத்தவே, “உதயா மரியா ....... விமலன் புதல்வா” --- “மாசில்லா சிவனாரின் புதல்வா” என்று கந்தப் பெருமான் இச்செய்யுளில் அழைக்கப்படுகிறார்.

    அப்படிப்பட்ட கந்தப் பெருமானின் மகிமை அளவற்றது. மிகவும் பெரிய பகவான், பாபமற்றவன், தன் பக்தர்களின் பாபங்களை அழித்தொழிப்பவன் என்றெல்லாம் மிகவும் உயரியவராக அவர் விவரிக்கப்பட்டிருக்கிறார். ஒருவன் தன் முழுமனதினாலும் அவரையே நினைத்து, அவர் பாதங்களில் சரண் புகுந்தால், அவர் அவனுக்கு அடைக்கலம் நல்குவார். தன்னிடம் சரணடைந்த தேவர்களைக்காக்க சூரபத்மனைக் கொன்றார். அமராவதி பட்டிணத்தைத் தேவர்கள் திரும்பிப்பெறச் செய்தார். தேவர்களைக் காத்தார், அசுரர்களை அழித்தார் இதன் பொருள்:

  • தெய்வீக / கல்யாண குணங்களை கொண்டவர்களை (சாதகர்களை) அவர் காப்பாற்றுகிறார்.
  • அசுர குணங்களைக் (கெட்ட நடவடிக்கைகளை) கொண்டவர்களை அவர் அழிக்கிறார். அதாவது, நல்லதை (நல்லவர்களை)க் காத்து, கெட்டதை (கெட்டவர்களை) அழிக்கிறார்.
மேலும், அவர் நம்மிடமுள்ள கெட்ட குணங்களை அழித்து, நல்ல குணங்களை வளரச்செய்கிறார்.

    இச்செய்யுளின் இரண்டாவது பகுதியில் ஆத்ம-தியானம் செய்வது எப்படி என்பது கூறப்பட்டுள்ளது: “அதிகா அநகா அபயா அமராவதிகாவல சூர பயங்கரனே.” --- “தலையாயவரே, பாபமற்றவரே, அடைக்கலம் தருபவரே, தேவலோகத்தின் தலைநகராகிய அமராவதியைக் காத்தவரே, சூரபத்மனுக்கு மரணகிலியைத் தந்தவரே!” அதாவது, “உயர்ந்தது, பாவமற்றது, இதயத்தின் இறைவன், அறியாமைக்கு எமன்”, என்றெல்லாம் ஆத்மாவை தியானிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆத்மாவை (உண்மையான “நான்”) விட உயர்ந்ததாக எதுவுமேயில்லை. இந்திரியங்களைவிட மனம் உயர்ந்தது, மனதைவிட புத்தி உயர்ந்தது, புத்தியைவிட உயர்ந்தது ஆத்மா, அந்த ஆத்மாவைவிட உயர்ந்தது என்று வேறு எதுவும் இல்லை, இல்லவேயில்லை. ‘ஆத்மா, பாபமற்ற இதய-கமலத்திலிருக்கும் ஆனந்த-ஆகாசம்’ என்று மஹாநாராயண உபநிஷத் விளம்புகிறது. அது பயமற்றது, ஆனால் அதற்கு பயந்துதான் நம்மிலிருக்கும் அனைத்து உறுப்புகளும் ஒருங்கிணந்து செயல்படுகின்றன. ஆத்மாவே இதயத்தின் (அமராவதியின்) ஈஸ்வரன் (பாதுகாவலர்). தேவர்கள் என்பது இந்திரியங்கள்; எப்படி தேவர்கள் அமராவதியைத் தலைநகராகக் கொண்ட தேவலோகத்தில் வசிக்கின்றார்களோ, அப்படியே இதயத்தை தன் மத்தியில் (தலைநகராகக்) கொண்ட உடம்பில் இந்திரியங்கள் வசிக்கின்றன. கந்தப் பெருமானின் அபரிமிதமான சக்தி சூரபத்மனுக்கு கிலியைத் தருகின்றது; அதுபோலவே, ஆத்மாவின் எங்கும் நிறைந்த (Cosmic) உண்மை நிலையை சாதகன் தியானம் செய்யும்போது, அறியாமை எனப்படும் தனிமனித அகங்காரத்திற்கு (individuality) மரணபயம் தரப்படுகிறது. ஆத்மாவைப் பற்றிய தியானம் செய்யும்முறை இப்படியாக இச்செய்யுளில் அறிவுறுத்தப்படுகிறது: “ஆத்மா உயர்ந்தது, அது பாபமற்றது, அது பயமற்றது, அது என்னிடமுள்ள நற்குணங்களை ஆதரித்துத் தாங்குகிறது, என்னிடமுள்ள கெட்ட குணங்களை தாக்கி அழிக்கிறது, அது அறியாமைக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.”
    

No comments:

Post a Comment