செய்யுள் 19செய்யுள் – 19


வடிவும்   தனமும்   மனமும்   குணமும்
குடியும்   குலமும்   குடிபோகியவா
அடியந்தமிலா   அயில்வேல்   அரசே
மிடியென்று   ஒருபாவி   வெளிப்படினே.


    பொழிப்புரை: “ஓ ஆதியும் அந்தமுமில்லாத மகாராஜரே! ஓ, கூரிய வேல் தாங்கிய அரசரே (பெருமானே)! அறியாமையெனும் பாவி வெளிப்படின், என்ன பரிதாபம்! அழகும், செல்வமும், நல்ல மனநிலையும், உயரிய குணமும், பிறந்த குடியின் சிறப்பும், குலத்தின் கௌரவமும் ---- ஆகிய இவையனைத்தும் ஒருவனை விட்டு ஓடிப்போய் விடுகின்றனவே!”

    
விளக்கவுரை

    முன்செய்யுளில் சொல்லியபடி, அச்சாதகன் அந்த ஆத்ம-தியானம் செய்யத் தொடங்குகிறான். அப்பொழுது, அச்செய்யுளில் கூறியபடி, அது அவித்யையை (அறியாமையை) அச்சுறுத்தத் துவங்குகிறது (சூரனுக்கு பயத்தை உண்டுபண்ணுகிறது). இந்த அறியாமையையே “மிடி” (வறுமை) மற்றும் “பாவி” (பழி, பாபம் புரிபவர்) என்று அருணகிரியார் இச்செய்யுளில் குறிப்பிடுகிறார். ஏனெனில், அக்ஞானமெனும் அறியாமையே “முதல் பாபம்” (Original Sin); அந்த அறியாமையே நாம் செய்கின்ற அனைத்து பாபச்செயல்களுக்கும் மூல காரணம், அனைத்துவகையான பாபங்களுக்கும் காரணமாயிருக்கும் காமம்- குரோதம்- உலோபம்- மோகம்- மதம்- மாச்சர்யம் ஆகிய மன விகாரங்களுக்கு அதுவே தூண்டுகோலாக அமைகிறது, நமக்குண்டாகும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அதுவே காரணம். எனவே, அறியாமையை “மிடி” என்கிறார் அருணகிரியார். இதுவே 23-ஆம் செய்யுளில் வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது.

    ‘யோக வாசிஷ்ட’-த்தில் வசிஷ்ட மகாரிஷி ஸ்ரீராமருக்கு “அறியாமையே எல்லாவகையான வறுமையிலும் மிக மிக மோசமானது” என்று கூறுகிறார். அறியாமை நம் நெஞ்சில் வசிக்கிறது, அதுவே நாம் அநுபவிக்கும் அனைத்துத் துயரங்களுக்கும் காரணம். ஜன்மாதி ஜன்மங்களாய் நாம் அதன் பிடியில் அகப்பட்டு, அதற்கு அடிமையாக வாழ்கிறோம். ஆனால், அது நம்மிடம் இருப்பதே நமக்குத்தெரியாது. என்ன ஆச்சரியம்! நாம் அதன் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு, நம் வாழ்க்கை சரியாக இல்லாவிட்டாலும், நாம் சரியாகத்தான் வாழ்கிறோமென்று எண்ணி வருகிறோம். இதுவே அறியாமை. அந்த அறியாமை நம்மில் இருக்கிறதென்பதை, அதன் கிளைகளான அகங்காரம் (அ) தன்னை முன்னிருத்தும் நானெனும் ‘பாவனை’, ராக-துவேஷம் (அ) விருப்பு–வெறுப்பு, மற்றும் அபினிவேஷம் (அ) தேக-அபிமானமும் தேகப்பற்றும் ஆகியவைகளால் ஊகிக்கப்படுகிறது. அந்த அவித்யையை (அறியாமையை) நாம் தொந்தரவு செய்யாதவரையில், நமது நெஞ்சில் அது இருப்பதே நமக்குத் தெரிந்துவிடாமல் மறைந்து, வசதியாக ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறது; ஆனால், சாதகனாவன் நாம-ஜபம், ஆத்ம-தியானம் ஆகியவைகளைச் செய்வதன் மூலம் தன்னை அச்சுறுத்த துவங்குகின்றானென்று தெரிந்தால், உடனே அது தன் மறைவிடத்திலிருந்து (நெஞ்சிலிருந்து) “வெளிப்பட்டு”, அச்சாதகனின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடத் துவங்கும். அப்படி அது “வெளிப்படின்”, --- வெளிப்படுகின்றபோது, ---- அது சாதகனின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை குலைக்கிறது. அவனது உடலுக்கு வியாதியைத் தந்து அவன் அழகையும், ஆன்மீக செல்வங்களையும், விவேகம் மற்றும் வைராக்கியத்தையும், உயரிய மனம் மற்றும் சீரிய குணம், குடும்ப மற்றும் குல கௌரவம், போன்ற எல்லாவற்றையும் குலைக்கிறது. (செய்யுள் 23 முதல் 27 வரை இதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்). பதஞ்சலி மகரிஷி அவர்களும், தன் “யோக சூத்திரத்தில்” (I-3o) இவ்வாறான தடங்கல்கள் ஏற்படுமென்று சொல்கிறார். இந்த அறியாமையே உண்மையான வறுமை (மிடி), மற்றும் பாவி. இதுவே ஆன்மீக வறுமை. அருணகிரியார் ‘வெளிப்படின்’ என்ற வார்த்தையின் மூலம் இந்த அறியாமையைக் குறிப்பிடுகிறார் – ‘வெளிப்படின்’ என்றால், இதுவரை உள்ளிருந்த அது இப்பொழுது வெளித்தோன்றினால் (அ) வெளிப்பட்டால் என்று அர்த்தம்; இதிலிருந்து, மறைந்த நிலையில் அது முன்பே உள்ளிருந்தது என்பதும் தெரிய வருகிறது. எனவே, இங்கு “வெளிப்படின்” என்ற வார்த்தை, அறியாமையின் வெளிப்பாட்டை குறிக்குமே தவிர பொருளற்ற வறுமையைக் குறிக்கவில்லை என்பது நிச்சயம்; ஏனெனில் பொருள்-வறுமை, உறக்க நிலையில் ஒவ்வொருவரிடமும் மறைந்து இருக்கிறதென்றும், அங்கிருந்து வெளிப்படுகிறது என்றும் சொல்ல முடியாது. எனவே, இங்கு வெளிப்படின் என்பது அறியாமையையே குறிக்கிறதென்பது நிச்சயமாகிறது – ஏனெனில் அவித்யை (அறியாமை) நம் ஒவ்வொருவரிடமும் காரண-சரீரமாக ஆழமாகப் புதைந்திருக்கிறது; அதுவே நம் ஜீவத்துவத்திற்கு (நானெனும் தனித்தன்மைக்கு) மூலகாரணம். மேலும், வறுமையால் மக்கள் “பாதிக்கப்படுவதாகக்” கூறப்படுகிறது, இதிலிருந்து இது ஒரு நபரை வெளியிலிருந்து பாதிக்கும் நிலை என்றாகிறதல்லவா? அதேபோல, வறுமையை வெளியிலிருந்து நீக்க முடியும், அதாவது மற்றவர்கள் பொருள் கொடுத்து உதவுவதன் மூலம் அல்லது சிரமப்பட்டு பொருள் சம்பாதிப்பதின் மூலம் வறுமையை நீக்கமுடியும். ஆனால், அறியாமையோ இறைவன் (அ) குருவின் கிருபையால் ஞானோதயத்தின் மூலம் மட்டுமே அழிக்க இயலும், வேறு எந்தவொரு விதத்திலும் இயலாது. அதனால்தான் இச்செய்யுள் ‘அயில்வேல் அரசே’ (கூர்மையான வேலாயுதத்தைத் தாங்கிய பெருமானே) என குறிப்பிடுகிறது. வேல் என்பது உயரிய (ஆத்ம) ஞானத்தை குறிக்கிறதென்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான்.

    அச்சாதகன் சாதனையைப் புதிதாகத் துவங்கியவனல்ல (not a neophyte). அவன் வெகு காலமாகச் சாதனை செய்துவருவதால், அதில் அவன் நல்ல அளவுக்கு பழக்கமுடையவன், தேர்ச்சியும் பெற்றவன், முன்னேறியவனும்கூட. முன்செய்யுளில் கூறிய முறைப்படி, அவன் ஆத்ம தியானத்தை எப்பொழுதிலிருந்து தீவிரமாகச் செய்யத் துவக்கிவிட்டானோ, அப்பொழுதே அவனுடைய அறியாமைக்கு செய்தி கிடைத்து, உலுக்கப்பட்டது. அதனால், அவன் தொடர்ந்து சாதனை புரிவதற்கு நிறைய முட்டுக்கட்டைகளைப் போட கூடிய சீக்கிரமே அது ஆரம்பித்து விடும் என்று, அவன் ஓதிய கல்வி மற்றும் குருவின் அறிவுரைகள் மூலம் அவன் பெற்ற அறிவிலிருந்து (செய்யுள் -17) அவனுக்குத் தெரியும். மேலும், புத்தக-ஞானமும் குருவின் அறிவுரைகளும் மட்டுமே முட்டுக்கட்டைகளைச் சமாளிக்கப் போதாதென்றும் அவனுக்குத் தெரியும். எனவே, அத்தகைய சந்தர்ப்பம் வருவதற்கு முன்னால், அதிலிருந்து தன்னை காத்துக்கொள்ள, அவன் தன் குருவிடமிருந்து ஆத்ம தியானத்தை முறைப்படி தடங்கல்கள் இல்லாமல் செய்திட ‘உபதேசம் உணர்த்திட’, அதாவது தீக்ஷை (Initiation) பெற, விழைகிறான். ஏனெனில், தீக்ஷைதான் அவனுக்குத் தேவையான உள்நிலை மாற்றத்தை ஏற்படுத்தித் தந்திடும். தீக்ஷை கொடுப்பதன்மூலம் குரு தனது ஆன்மீகசக்தியை சாதகனுக்குப் பாயச்செய்து, அதன்மூலம் அவனது சாதனை-சக்தியை மேலும் வலிமைப்படுத்தி, வரப்போகும் முட்டுக்கட்டைகளை அவன் சுலபமாகச் சமாளிக்க வழி செய்கிறார். எனவே, அறியாமை வெளிப்பட்டு அவனை தாக்கும்பொழுது, அதற்கு அடிபணிந்து போய்விடாமல் அதிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள, சாதகன் குருவிடம் சரண் அடைந்து அவரிடமிருந்து தீக்ஷை பெற விரும்பி, தீக்ஷை கொடுக்குமாறு (“உபதேசம் உணர்த்த” அடுத்த செய்யுள்) வேண்டுகிறான் – ‘அடியந்தமிலா அயில் வேல் அரசே - ’ என்று இச்செய்யுளில் சாதகன் கந்தப் பெருமானிடம் வைக்கும் முறையீட்டில், குருவிடமிருந்து தீக்ஷை உபதேசத்தை வேண்டுகிறானென்பது உள்ளடங்கியுளதெனலாம் (Implied meaning). குரு மற்றும் இறைவனாகிய கந்தப்பெருமான் ஆகிய இருவரும் ஒருவரே என்று பதின்மூன்றாம் செய்யுளில் நாம் ஏற்கனவே பார்த்தோம். அடுத்த செய்யுளில், குரு உபதேச தீட்சையை அருளுகிறார் ((“உபதேசம் உணர்த்தியவா”).

    ஆசைகள் மற்றும் பேராசையெனும் ஏக்கங்களும் ஏற்படுவதற்கு காரணம் எதுவென்று யதார்த்தமாக ஆராய்ந்தால், அவிவேகமே (பகுத்தறிவின்மை) காரணம் என்று அருணகிரியார் குறிப்பிட்டதை நாம் ஏற்கனவே பார்த்தோம் (செய்யுள்– 16). பின்னர், சாதகன் தன்னில் விவேகத்தை உருவாக்கிக் கொண்டதால் அதுவே அவிவேகத்தை விரட்டிவிட்டதையும் (செய்யுள் – 17), அதன்பின் (செய்யுள் - 18) அவன் ஆத்ம-தியானம் செய்யத் துவங்கும்பொழுது அவிவேகத்தின் காரணமான அவித்யை (அறியாமை) உள்ளிருந்து தானே வெளிக்கிளம்பும் என்பதையும் பார்த்தோம். எப்படி ஒரு போர்க்களத்தில், முதலில் கடைநிலை அதிகாரிகள் மட்டும் போர் செய்வதையும், பின்னர் தேவைப்பட்டால் கடைசியாக தளபதியானவர் போரில் பங்கேற்பதையும் பார்க்கிறோமோ. அதுபோலவே, சாதகனின் அந்தரங்கப் போரிலும் இது நடைபெறுவதைக் காணலாம் .

    எப்படி பொருள்களின் நாம-ரூபங்கள் அவற்றின் பின்புலத்தில் உள்ள ஸச்சிதானந்த உண்மையுடன் ஒன்றிணைவதற்குத் தடையாக உள்ளனவோ, அதேபோல அறியாமை மற்றும் அதன் விளைவுகள் ஒருவன் ஆத்ம-தியானம் செய்வதிலும், உள்ளிருக்கும் ஆத்மாவுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வதிலும் தடையாக உள்ளன.

    வறுமை மூன்று வகைப்படுமெனலாம் ---- பொருள்-வறுமை, ஒழுக்க/தார்மீக-வறுமை, மற்றும் ஆன்மீக-வறுமை. பொருள் வறுமை கொடிது, தார்மீக/ஒழுக்க வறுமை அதைவிடக்கொடிது; ஆன்மீக வறுமையோ மிக மிகக்கொடிது. பொருள் இல்லாமையை ஒருவன் தனது முயற்சி மூலமோ, (அ) மற்றவர்கள் கொடுத்துதவும் தனத்தின் மூலமோ நீக்கிட முடியும். எனவே, பொருள் வறுமையை நீக்குவது எளிமையானதெனலாம். ஆனால், தார்மீக/ஒழுக்க வறுமை ஒருவனிடம் இருந்தால், அதிலிருந்து விடுதலை பெறுவது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு பிரம்ம பிரயத்தனம் (Herculean Task) செய்தால்தான் இயலும். எனினும், ஒருவன் உறுதியான முயற்சி செய்தால், முடியும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடைவரோ? ஆனால், அக்ஞானம்/அறியாமை எனப்படும் ஆன்மீக வறுமையை போக்குவதென்பது மனிதப் பிரயத்தனத்தினால் இயலாத காரியமென்றே சொல்லலாம். இவ்வறுமையால் நாம் எல்லோருமே கோடானகோடி பிறப்புகளாய் துன்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இதனுடன் பிறந்து, இதனுடனேயே இறக்கிறோம். அறியாமை எனப்படும் ‘முதல் பாபம்’ நம்மை எப்பொழுது வந்தடைந்தது என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம். நமது எல்லையற்ற ஸச்சிதானந்த சொரூபத்தை மறந்து, ஒரு குறிப்பிட்ட உடலுக்கு நம்மை கட்டுப்படுத்திக்கொண்டு, நொடிப்பொழுதில் விரைந்தோடி மாறி(அழிந்தி)டும் இவ்வுலகை உண்மையெனக் கருதி, சிலபொருள்களை விரும்பியும் சிலவற்றை வெறுத்தும், இந்திரியங்கள் தரும் இன்பத்தில் (இந்திரிய சுகம்) மயங்கி அதற்காக மூடத்தனமாக செயல்கள் பலசெய்து, முடிவற்ற துன்பத்தில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம். இதைவிட கொடுமையான ஒன்று உளதோ? “நான் யார்? எனக்கு எது நல்லது? எப்படி அதைத் தேடி அடைவது?” என்றெல்லாம் நமக்குத் தெரியாதிருப்பதே உண்மையான வறுமை. ஞான சொரூபமாகவும், அதை உருவகப்படுத்திக் காட்டிடும் கூர்மையான வேலாயுதத்தைத் தாங்கியுமிருக்கும் இறைவன் (கந்தப் பெருமான்) ஒருவரால் மட்டுமே, இந்த ஆன்மிக வறுமையை அழித்திட இயலும். எப்படி வேலாயுதம் அசுரனைப் பிளந்தழித்ததோ, அப்படியே ஞானமெனும் வேல் நம்முள்ளிருக்கும் அக்ஞானமெனும் அசுரனை அழித்தொழிக்க வேண்டும். அப்படி நடந்தால்தான், நமக்கு முக்தியெனும் விடிவு பிறக்கும். பொருள் வறுமையை மற்றவர்கள் உதவியால் போக்கமுடிவதுபோல, ஆன்மீக வறுமையை மற்றவர்கள் உதவியால் போக்கமுடியாது; இறை–கிருபை (அ) குரு-கிருபை ஒன்றினால் மட்டுமே இவ்வறுமையைப் போக்கிட இயலும். எனவேதான், கூர்மையான வேலாயுதம் தாங்கிய அரசர்க்கரசனாகிய கந்தப் பெருமானிடம் இப்பிரார்த்தனை வைக்கப்படுகிறது.

    ‘பாவி’, ‘வெளிப்படின்’, என்ற அடைமொழிகள் ’மிடி’-க்கு (வறுமைக்கு) தரப்பட்டதிலிருந்து, பொருள்-வறுமையைவிட ஆன்மீக வறுமையான அறியாமைதான் குறிப்பிடப்படுகின்றதென்பது தெளிவாகிறது. அவித்யைதான் ‘முதன் முதலில் விளைந்த பாபம்’, அதனால், அதுவே ‘பாவி’ என்று குறிப்பிடப்படுகிறதை ஏற்கனவே பார்த்தோம்.

    அவித்யை ‘வெளிப்படின்’ என்று கூறுவதன் அர்த்தம் யாதென பார்ப்போம். நாம் ஒவ்வொருவருமே அவித்யையின் விளைவு. நம் ஒவ்வொருவருள்ளும் அது உள்ளது. எனினும், நாம் அதை தொடாதிருக்கும்வரை, நமக்கு எல்லாமே சரியாக இருப்பதுபோல் தோன்றுகிறது. நாம் ஓய்வு ஒழிவின்றி, முற்றிலும் வெளிஉலக விவகாரங்களில் மூழ்கி விடுவதால், நமக்குள்ளே (நான்கு கோசங்களைத் தாண்டி) ஆழத்திலிருக்கும் காரண சரீரமான ஆனந்தமய கோசம்வரை சென்று அவித்யையை சீண்ட நேரமில்லை. ஆனால், அச்சாதகன் சாதனைகளை உறுதியாகக் கடைப்பிடித்து ஓரளவு முன்னேற்றம் பெற்றபின், வெளிஉலக விவகாரங்களிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, உள்ளிருக்கும் ஆத்மாவை தியானிக்க முயலும் பொழுது (செய்யுள்–18), இதுகாறும் அவனுள்ளே எதனாலும் தொடப்படாமலும், எந்தவித தொந்தரவுக்கும் ஆட்படாமலும் இருந்துவந்த அக்ஞானமெனும் அவித்யை (அறியாமை) இப்பொழுது உசுப்பிவிடப்படுவதால், அவனைத் தாக்க முயல்கிறது. அது தன்னை எதிர்மறை சக்திகளாக வெளிப்படுத்திக்கொள்ள துவங்கி, அவனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டு, ஆன்மீகச் செல்வமான விவேகம், வைராக்கியம், ஆகியவைகளை சிதைத்து. அவனது உடல் மற்றும் மன நலன்களையும் பாதிக்க முற்படும்.

    தீவிர ஆன்மிக சாதனைகளைச் செய்வததென்பது, நல்ல கும்மிருட்டான ஒரு அறையின் மூலையில், தான் இருக்கிறதே எவருக்கும் தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு நாகப்பாம்பை தொந்தரவு செய்வதைப் போன்றதே. அப்பொழுது அது சீறிப் பாய்ந்து நம்மை தீண்ட முயலும். அப்படியானால், அதை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? அதை அப்படியே உறங்க விட்டுவிடலாமே? என்று நாம் கேட்கலாம். இது நல்ல கேள்விதான்! ஆனால் அப்படி செய்யவேண்டியது அவசியமே. ஏனெனில், அது உறங்கிக்கொண்டிருப்பதால் நமக்கு ஆபத்தே இல்லையென்றாகி விடாது. அது இருக்கின்றவரை, ஆபத்து வருவதென்பது திண்ணம்; ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் ஆபத்தை நாம் எதிர்கொள்ளத்தான் போகிறோம். அது எப்பொழுது வேண்டுமானாலும் விழித்துக்கொண்டு, நம்மைச் சீண்டலாமே! அது அழிக்கப்படும்வரை, பின்னர் ஒருநாள் அது தரவிருக்கும் பேராபத்திலிருந்து நாம் தப்பிப்பதென்பது முடியாது. அதே போன்ற ஒரு நிலைதான் அவித்யை விஷயத்திலும் உள்ளது. அது இருக்கின்றவரையில், நாம் இந்த மரண வாழ்விற்கு கட்டுப்பட்டு, பிறப்பிற்கு பின் இறப்பு, இறப்பிற்குப்பின் மற்றொரு பிறப்பு என்று தொடர்ந்து வேதனையடைந்துதான் தீர வேண்டும். அநுபூதி நிலை (அ) இறைவனை அடைந்து, அமைதி மற்றும் ஆனந்தநிலையில் நிரந்தரமாக உறைவதற்கு, ஒருநாள் இல்லாவிட்டால் மற்றொரு நாள், அவித்யையானது சாதனையின் மூலம் அழிக்கப்பட்டுதான் ஆகவேண்டும். இதைத்தவிர வேறு எந்த வழியும் இல்லை. நிலைமை அவ்வாறு இருக்கும்பொழுது, எதற்காக அவித்யையை அழிப்பதைத் தள்ளிப்போட வேண்டும்? எதற்காக வேதனைகள் மிகுந்த வாழ்வினைத் தொடரவிட வேண்டும்? அறியாமை அழிக்கப்பட்டால்தான் மனிதன் உண்மையில் மகிழ்ச்சியாக, ஆனந்தமயமாக வாழ இயலும். எங்கும் வியாபித்திருக்கும் இறைவனில் தன்னை ஐக்கியமாக்கிக் கொள்வதே அந்த பேரின்பநிலை.

No comments:

Post a Comment