செய்யுள் 22செய்யுள் – 22


காளைக்   குமரேசன்   எனக்   கருதித்
தாளைப்   பணியத்   தவம்   எய்தியவா
பாளைக்குழல்   வள்ளிபதம்   பணியும்
வேளைச்   சுரபூபதி   மேருவையே.

    
    பொழிப்புரை: "ஓ தேவலோகத்தின் ஈஸ்வரனான முருகப் பெருமானே! மேரு மலை போன்ற பெருமையுடையவரே! கமுகின் பாளை போன்ற நீண்ட கூந்தலையுடைய வள்ளிதேவியின் பாதங்களைத் தொழுகின்ற செவ்வேளாகிய பெருமானே! தங்களை ஸச்சிதானந்தம் எனக்கருதி (உணர்ந்து) தங்கள் பாதங்களைப் பணியும் சீரிய தவநிலையான பெரும் பாக்கியத்தை நான் அடைந்தேன். என்ன ஆச்சரியம்!”

விளக்கவுரை

    இச்செய்யுளில் வெளிப்படையாக நமக்குக் காணப்படுவதுபோல் இல்லாமல், மிகவும் சூசகமாக உட்பொருள் நிறைந்துள்ளது. இறைவனை இளமையானவரென்றும், பெரும்சக்தி படைத்தவரென்றும் (குமரன் மற்றும் காளை எனக்) கருதி, அவர் தாளைப் பணியும் தவநிலை அடைந்தேனென்று சொல்வதாக இச்செய்யுளிற்கு விளக்கங்கள் தரப்படுகின்றன. இவ்வாறு கருதித் தாளைப்பணிவது எல்லா சாதாரண பக்தர்களும், துவக்கநிலையிலுள்ள ஆன்மீக சாதகர்களும்கூட செய்ய முடியும், செய்கிறார்கள். அதற்கு பெரும் தவமோ () கடுமையான சாதனைகளோ நீண்டகாலம் செய்யத் தேவையில்லை. ஆனால், நாம் பணியும் இறைவன் (அவன் விக்ரஹம்) ஸச்சிதானந்தம் (பகுக்கப்படாத/ பிளவுபடாத, எங்கும் நிறைந்த, மொத்த இருப்பு உணர்வு சைதன்யம் ஆனந்தம்) என்று நினைத்து, அவ்வாறு உணர்ந்துகொண்டே, அவர் தாளைப் பணிவதற்கு, அர்ப்பணிப்பு பாவனையுடன் கூடிய நீண்டகால சாதனையும் குரு/இறை அருளும் இருந்தால்தான் முடியும். இது ஒரு பெரிய தவம், சுலபமாக அடையக்கூடியதல்ல. இதையே இச்செய்யுளில் தவம் எய்தியவா என சாதகன் ஆச்சரியத்துடன் வியக்கிறான். இது மிகவும் முன்னேற்றமடைந்த தியான வகையைச் சார்ந்தது, இதை ஒருவன் பெற்றிட மிக நெடிய காலமாக சாதகனைகளையும் செய்திருக்க வேண்டும், மேலும் அவனுக்கு இறையருளும் குரு அருளும் கிடைத்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் ஒரு சாதனுக்கு இது சாத்தியமாகியிருக்கும்.

    “காளைக் குமரேசன்” --- இச்சொற்கள் பரம இரகசியமான உட்பொருளை கொண்டுள்ளன. ‘காளை என்றால் என்றும்/நித்திய இளமை எனப் பொருள், அதாவது ‘நித்தியமாக இருப்பது’ அல்லது ‘ஸத். ‘குமரன்என்றால் ‘’தீமைகளை அழிப்பவர்’, அதாவது “‘உலக மாயாஎனும் மாயையை அழிப்பவர் எனப் பொருள்; அதாவது மாயையை அழிக்கும் ‘ஞானம்’ அல்லது ‘சித்’.ஈசன்என்றால் அனைத்தையும் கட்டி ஆள்பவர்’, (அ) உயரிய/ மகா (ஈஸ்வர) சக்திஎனப் பொருள், அதாவது இதில் அடங்கியுள்ள இரகசியப் பொருள் பரமானந்தம்எனும் ஆனந்த நிலை’. சுருங்கக் கூறின், ‘காளைக் குமர ஈசன்என்பது ‘ஸத்சித்-ஆனந்தம்’ என்பதேயாகும்.

    கந்த அவதாரத்தைப் பற்றி முன்னர் (காப்பு செய்யுளில்) இவ்வாறு பார்த்தோம்: “ ‘பிரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பு’ (ஸச்சிதானந்தம்) ஒரு மேனியாகி முருகப் பெருமானாகஅவதாரமெடுத்தது “ என்று. முருகப் பெருமானின் முன்னர் வணங்கும்பொழுது, இப்படியாக அவரை எல்லையற்ற ஸச்சிதானந்தமாக நினைத்து, உணருதல் அனைவராலும் சுலபத்தில் அடையக் கூடியதல்ல. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில்களிலும், தங்கள் வீடுகளிலும் பெருமானை விழுந்து விழுந்து தினந்தோறும் வணங்கித்தான் வருகிறார்கள்; என்றாலும், அவர்களில் எவ்வளவு பேரால் அந்த ஸச்சிதானந்த சைதன்யத்தைத்தான் தாங்கள் வணங்குகிறோமென்று உணர முடிகிறது?

    குருவின் தீக்ஷையும், அதனுடன் வழங்கப்பட்ட மிகவும் ஆற்றல் கொண்ட சக்தியும் (செய்யுள்-2௦), தான் கூடிய சீக்கிரமே இறைவனை அடைய வேண்டுமென்ற துடிப்பை அச்சாதகனிடம் ஏற்படுத்தியது. எனவே, அவன் தன் தியானத்தை மேலும் தீவிரப்படுத்தி, “கருதா மறவா நெறிகாண எனக்கு இருதாள் வனசந்தர என்றிசைவாய்?” (செய்யுள்-21) என்று தீவிர தியானம் மற்றும் பிரார்த்தனைகளை நெடுங்காலம் கடைபிடிக்கிறான், இவ்வாறு செய்வதென்பது மிகக் கடுமையான தவமாகிறது. இத்தவத்தின் விசேஷ பலனாக அவன் முருகப் பெருமானின் பாதங்களில் விழுந்து வணங்கும் பொழுதே, அவரை ஸச்சிதானந்த சொரூபமாக (இருப்பு ஞானம்- ஆனந்தம்) நினைத்து அவ்வாறு உணரவும் செய்கிறான். இது அடைவதற்கரிய பெரும் சாதனைதானே? தன்னால் இவ்வரிய சாதனையை செய்ய முடிந்தது குறித்து பெருவியப்படைகிறான்! ‘இது குருவருளாலும் இறைவனின் அருளாலும்தான் நடந்தேறியது என்று சொல்லாமல் தெரிவிக்கிறான்.

    குருவாகிய முருகப் பெருமானின் உருவத்தின் பின்புலத்தில் ஸச்சிதானந்தத்தை சாதகனால் உணர முடிந்ததென்பதை பூமேல் மயல்போய் அறமெய்ப்புணர்வீர்-------- (நாம-ரூப) பெயர், மற்றும் உருவத்தின் பின்புலத்திலுள்ள ஸச்சிதானந்தத்தைக் கண்டு (உணர்ந்து) கொள்வது -------- என்ற உபதேசத்தின் (செய்யுள்-17) முதல்நிலை பயிற்சி எனக் கொள்ளலாம். இப்படியாக, முதன்முதலாக இறைவனின் பெயர்-உருவத்தில் மட்டும் ஸச்சிதானந்தத்தை உணரத் துவங்கிய சாதகனுக்கு, நாளடைவில் அனைத்து பெயர்-உருவங்களிலும் -------- இப்பிரபஞ்சத்திலுள்ள (உயிரற்ற உயிருள்ள) பொருள்கள் அனைத்திலும் ------ ஸச்சிதானந்தத்தை உணர்வது சுலபமாகிவிடும்.

    குரு தீக்ஷை கொடுத்து, எவ்வாறு தியானம் செய்ய வேண்டுமென்ற நுட்பத்தையும் சாதகனுக்குத் தந்தருளினார் (செய்யுள் – 20). இதன்மூலம் ஆன்ம விடுதலையை அடைந்தேயாக வேண்டுமென்ற உறுதிபூண்டு, அவனும் இறை-தியானத்தை உடனே செய்யத் துவங்கினான் (செய்யுள்-21); குரு வழங்கிய தீக்ஷையின் உடனடி சக்தி வேகத்தால் அவன் தினசரி செய்யும் தியானத்தில் பெருவெற்றி பெறுகிறான். அவ்வாறு இறை-தியானத்தை அவன் தொடர்ந்து சிலகாலம் செய்துவர, அவன் பூஜை மற்றும் தியானம் செய்யும் உருவத்தின் பின்புலத்திலுள்ள ஸச்சிதானந்தப் பரம்பொருளை உணர முடிகிறது. இது அவனுக்கு பெரும் மகிழ்ச்சியை தருவதால், இறைவனின் எல்லையற்ற கிருபையை நினைத்து நினைத்து வியப்படைகின்றான். ஆனால், இத்தியானத்தால் உசுப்பிவிடப்படும் அவித்யை (அறியாமை), அவனுக்கு தீமைகளைச் செய்யத் துவங்கிவிடுகிறது; எனவே இத்தகைய அற்புத அனுபவங்கள் நீண்டகாலம் நீடிக்கவில்லையென்று நாம் பின்வரும் செய்யுள்களிலிருந்து அறிவோம்.

    இறை-பாதங்களைத் தொழும் பொழுதே, ஸச்சிதானந்தத்தை நினைத்து உணர்வது” ------ “காளைக் குமரேசன் எனக் கருதித் தாளைப் பணிய” ---- இந்த அனுபவத்தில், ஞானமும் (ஸச்சிதானந்தத்தை உணர்வது), பக்தியும் (இறைவனை பணிந்து தொழுவது) ஒன்றாகக் கலந்துவிடுகின்றன. அதனால்தான், இது பெரிய தவமாகவும், சாதனையில் வெற்றியாகவும் போற்றப்படுகிறது.

    இறைவனைப் பணிந்து தொழும்பொழுது, நாம் அவரை வெறும் பெயர்- உருவம் தாங்கிய ஒருவராகக் கருதாமல், ஸச்சிதானந்தமாகவே நினைத்திட வேண்டும். நமது உடல் இறைவனின் உருவத்தையோ படத்தையோ தொழ வேண்டும்; ஆனால் அதே சமயத்தில் நமது மனமோ அவரின் எல்லையற்ற சொரூபத்தில் நிலைத்திருக்க வேண்டும். நாம் தொழும் இறைவனின் நாம-ரூபம் எதுவாக இருந்தாலும் ---- சிவன், விஷ்ணு, இராமர், கிருஷ்ணர், ஸ்கந்தன், விநாயகர், தேவி, கிறிஸ்து, புத்தர் போன்று எதுவாக இருந்தாலும், அவை அனைத்தும் உண்மையில் ஸச்சிதானந்தம் என்ற ஒன்றே; நகைகளின் பெயர் வடிவம் எதுவாகயிருந்தாலும், அவை அனைத்தும் உண்மையில் தங்கமே. இவ்வுண்மையை நாம் மனதில் இருத்தவேண்டும். நாம் எந்த தெய்வத்தை நினைத்தாலும், தியானித்தாலும், தொழுதாலும், அவர்களின் உண்மைப்பொருள் ஸச்சிதானந்தமே. அவ்வாறு செய்வோமாயின், அது நமக்கு ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதமாக அமையும்.

    “இறைவனை ஸச்சிதானந்தமாக நினைத்து, அவர் பாதங்களைத் தொழுதல்” என்று கூறும்பொழுது, அவை, முறையே, இறைவனின் சொரூப- இலட்சணத்தையும், தடஸ்த-இலட்சணத்தையும் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். இறை-பாதம் தொழுதல் என்று சொல்லும்பொழுது, அவரின் உருவத்தை (அது எதுவாயிருப்பினும்) குறிக்கிறது ---- இது தடஸ்த இலட்சணம் எனப்படுகிறது. ஏதாவது குறிப்பிட்ட காரியத்தை நிறைவேற்றிட, இறைவன் ஒரு உருவம் தாங்கி அவதாரம் எடுப்பதென்பது இறைவனின் சார்பியல் அம்சத்தைச் சார்ந்தது (அதாவது, ஜீவ-ஜகத் சம்பந்தப்பட்ட ஈஸ்வர அம்சத்தின் அவதாரமெனலாம் - Relativistic aspect of God). இவ்வாறு சொல்வதால், அவர் அதே உருவத்தில் திரும்ப அவதாரம் எடுக்க மாட்டார் என்றோ, அல்லது தன் பக்தர்களுக்கு தரிசனம் தருவதற்காகக்கூட அந்த உருவத்தில் வரமாட்டார் என்றோ கருதலாகாது. அவரால் அனைத்தும் இயலும். ஆனால், இறைவன் உருவம் தாங்கி வருவதென்பது, அவரது சொரூப இலட்சணமுமல்ல; அவரது அடிப்படை இயல்பும் (Essential Nature) அல்ல. பின் எதுதான் அவரின் சொரூப இலட்சணம்? இறைவனின் சொரூப இலட்சணம் ஸச்சிதானந்தம், ‘இருப்பு-ஞானம்-ஆனந்தம்’. அவதாரத்திற்கு அவதாரம் தடஸ்த இலட்சணம் வேறுபடுகிறது, ஆனால், சொரூப இலட்சணமோ எப்பொழுதும் மாறாமல் அனைத்திலும் ஒரேமாதிரியாக இருக்கிறது. எனவே, இறைவனின் சொரூப இலட்சனத்தில் மனதை நிலைநிறுத்தி, அவரின் பல உருவங்களில் ஏதோ ஒன்றைப் பணிந்து தொழுவதற்கு ஒரு சாதகனால் முடிகிறதென்றால், அவன் நீண்ட காலமாக செய்துவந்த சாதனைகளின் பலனும், இறை-அருளும்தான் அதற்கு நிச்சயம் காரணமாயிருந்தன என்று கூறலாம்; ஏனெனில், மனிதனின் புத்தியால் இறைவனின் தடஸ்த இலட்சணத்தை எளிதாக அறிந்துகொள்ள இயலும், ஆனால், அவரின் சொரூப இலட்சணத்தை ஒருவன் தன் நெஞ்சத்தில் உணரவோ, அனுபவிக்கவோ வேண்டுமென்றால், அதற்கு இறைவனே அவன்பால் கிருபைகொண்டு அவ்வாறு வெளிப்படுத்தினால்தான் இயலும்.

    நமது பிரார்த்தனைகள், வழிபாடு, தியானம், ஆகியவைகள் வெறுமனே தடஸ்த இலட்சணத்தை அடைவதோடு மட்டும் நின்றுவிடலாகாது. இச் சாதனைகளின் ஒரே குறிக்கோள் சொரூப இலட்சணத்தை அடைவதற்காக இருக்க வேண்டும். பெருவாரியான மக்களால், அவரவர்களுக்குள்ள சமய நம்பிக்கை மற்றும் பழக்கவழக்கத்திற்கேற்ப, செய்யப்படும் சாதனை,பொதுஜன சமயம்’ (Popular Religion) என அழைக்கப்படுகிறது. அதனால், அச்சாதனைகள் மதத்திற்கு மதம் (Religion) வேறுபடுகிறது. ஆனால், சொரூப இலட்சண சாதனைகள், எல்லா மதங்களையும்சார்ந்த ஞானிகள் மற்றும் அருளாளர்களால் கடைப்பிடிக்கப்படும் தெய்வீக சமயத்தைச் (Mystic Religion) சார்ந்தது. எனவே, அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுடைய அனுபவங்கள் ஒரே மாதிரியாகவே இருக்கும். அவர்களுடைய அனுபவங்களிலோ, கருத்துக்களிலோ, அபிப்பிராயங்களிலோ எவ்வித வேறுபாடும் இருப்பதில்லை.

    பொதுஜன சமயங்களுக்கிடையேதான் சண்டைகள், சித்தாந்த சம்பந்தமான பிடிவாதம், ஆகியவை ஏற்படுகின்றன. இக்காரணங்களால் பொதுஜன சமயம்’ () இறைவனைப் பலவிதங்களில், பல உருவங்களில் தொழுவதை விட்டுவிட வேண்டுமா என்ற சந்தேகம் நமக்கு ஏற்படலாம்? அதற்கு பதில், இல்லையென்பதே. அதை விட்டுவிட வேண்டிய அவசியமில்லை, விரும்பத்தக்கதும் இல்லை. ஆரம்ப நிலையில் உள்ள சாதகனுக்கு, அவன் சாதனையைச் செய்யத் துவங்கும் ஆரம்ப காலகட்டங்களில், தன் மனதை ஏதேனும் ஒன்றில் நிலைநிறுத்துவது அவசியமாகிறது, அதற்கான ஒரு பிடிப்பை (மதம்) சமயம் அவனுக்குத் தந்து உதவுகிறது; அதை கொழுகொம்புபோல் பற்றினால்தான் அவனால் தெய்வீகத்தில் முன்னேற முடியும். எனவே, பல்வேறு மதங்களையும், அவைகளின் வெவ்வேறு நடைமுறைகளையும் ஒதுக்கித் தள்ள வேண்டிய அவசியமில்லை; பதிலாக, இவற்றை தெய்வீக மதத்துடன் சேர்த்து உபயோகித்து, முன்னேறவேண்டும். கடைசியில் இவைகளைக் கடந்து மேலேறிச் செல்வதே உசிதம்.

    இது எப்படியென்றால் கல்லூரிப் படிப்பு உயர்நிலைப்பள்ளியில் படித்ததை நிராகரிக்காமல், அதையும் பயன்படுத்தி, மேன்மேலும் முன்னேறிச் செல்வதைப்போல எனலாம். மேலும், கல்லூரிகள் இருக்கிறதென்பதால், நாம் ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை மூடி விடுவதில்லை; ஏனெனில், அவைகள்தான் உயர்படிப்பிற்குத் தேவையான ஆரம்பக் கல்வியை தருகின்றன, கல்லூரி படிப்பிற்கான தகுதியையும் தருகின்றன, அத்தகுதி இல்லையேல் கல்லூரி படிப்பிற்கே செல்ல முடியாதல்லவா? அதுபோன்றதே, ‘பொதுஜன மதமும்எனலாம். மேலும், கல்லூரிப் படிப்பை தொடரத் தேவையான வசதி அனைவரிடமும் இருப்பதில்லை. ஆனால், ஒரு படிக்காதவனைவிட உயர்நிலைப் பள்ளி கல்வி கற்றவன் சிறந்தவன்தானே. அதேபோல், அனைவராலும் தெய்வீக மதத்திற்குமுன்னேறுவது சுலபமல்ல என்பது உண்மைதான் என்றாலும், அவன் குறைந்தது பொதுஜன மதத்திலாவது இருந்தால், ஒரு உலகாயதவாதி’ (உலகத்துக்கு அப்பால் எதுவும் இல்லை என்று நினைப்பவன்) எனப்படும் மதத்தை மறுதலிப்பவனைவிட அவன் சிறந்தவனாகத்தான் இருப்பானல்லவா!உலகாயதவாதியாக இருப்பவன் எல்லா சட்ட விரோத செயல்களையும், பாவங்களையும் செய்வான்; ஆனால், மதத்தைக் கடைப்பிடிப்பவன், இறைவனுக்கு பயந்தவனாகவும், தார்மிக மற்றும் ஆன்மீக வாழ்விற்கு மதிப்பளிப்பவனாகவும் இருப்பான். ஆனால், ஒருவன் வெறும் மதவாதியாக மட்டும் நிரந்தரமாக இருந்துவிடக் கூடாது. அம்மதவாதிக்கு பொதுஜன மதத்தைவிட உயர்ந்த (ஆன்மீக) மதம் ஒன்று உள்ளது என்றும், முன்னது பின்னதற்கு வழிகாட்டி என்றும் அவனுக்கு குறைந்த பட்சம் தெரிந்திருக்க வேண்டும். பொதுஜன மதம் ஆன்மீக மதத்திற்கு வழி காட்ட வேண்டுமே ஒழிய, மதசம்பந்தமான சண்டை, சச்சரவுகளுக்கல்ல. தடஸ்த இலட்சணம், சொரூப இலட்சணம் ஆகிய இரண்டுமே இறைவனுக்குரியதே; எனவே, தடஸ்த இலட்சணம் நாளடைவில் நம்மை சொரூப இலட்சணத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

    “இறைவனை ஸச்சிதானந்த சொரூபமாக நினைத்து, அவன் பாதங்களில் பணிந்து தொழ வேண்டும்”: “நினைப்பதென்பது” ஒருவனின் உள் மனப்பான்மை, ஆனால் “பணிந்து தொழுதல்” என்பது ஒருவனின் வெளிச்செயல். இதன் உட்கருத்து: ஒரு செயல் செய்யப்படும்பொழுது, சரியான பாவனையில் (Attitude) அது செய்யப்படவேண்டும். இறைவன் தாள் தொழும்பொழுது, எங்கும் வியாபித்திருக்கும் அவரது தன்மையும் உணரப்பட வேண்டும் என்பது இங்கு அழுத்தமாக கூறப்படுகிறது. சரியான பாவனை இன்றி, வெறுமனே வெளிச்செயல்களை மட்டும் செய்வது அர்த்தமற்றது, மற்றும் பாசாங்குத்தனமாக ஆகிவிடக்கூடும். இவ்வாறாகின், மதமும், மதச் சடங்குகளும், ஏன் தனிநபரின் மதச்சார்பற்ற தினசரி நடவடிக்கைகள்கூட, உயிரற்றதாகப் போய்விடும், --- அவை எவ்வளவுதான் வெளிப்புற ஆடம்பரத்துடனும், பெருமையுடனும் செய்யப்பட்டாலும் சரி.

    ஆனால், இங்கு ஒரு சந்தேகம் எழலாம்: இறைவனின் எங்கும் வியாபித்திருக்கும் தன்மையை உணர்ந்திருக்கும் ஞானிகளும், அருட்செல்வர்களும்கூட, வெளிப்புற சடங்குகளான இறைவனைத் தொழுவது, வணங்குவது, வழிபாடு செய்வது ஆகியவைகளைத் தொடர்ந்து செய்யத்தான் வேண்டுமா? ஆமாம், செய்யத்தான் வேண்டும். அது தேவையான ஒன்றுதான். இறைவன் அவர்களின் நெஞ்சத்தையும், பாவனையையும் மட்டும்தான் பார்க்கிறார் என்றாலும், அவர்கள் புற வழிபாடுகளையும் செய்வது நல்லது; ஏனெனில், மகான்களும், ஞானிகளும் எதையெல்லாம் செய்கிறார்களோ, அதையே மக்களும் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க முயற்சிக்கிறார்கள், மகான்களை தமக்கு ஒரு உதாரண புருஷர்களாக மதிக்கிறார்கள். எனவே, அவர்கள் பூஜை, வழிபாடு, பிரார்த்தனை ஆகியவைகளை (அவர்களுக்கு அவசியமில்லாததால்) செய்யாமல் விட்டுவிட்டால், அவர்களைப் பின்பற்றும் மக்களும் அவைகளைச் செய்யாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் மகான்களும், ஞானிகளும் வெளிப்படையாக பூஜை முதலியவை செய்யாமல் இறைவனை அவர்கள் நெஞ்சில் உணரமுடியும்; ஆனால் அப்படி சாதாரண மக்களால் உணர முடியாது. இத்தகைய மக்கள் தங்கள் வெளி – உள் (பக்தி – உணர்வு) ஆகிய இரண்டிலும் பிடிப்பில்லாமற்போய், நாளடைவில் தங்களை முற்றிலுமாக இழந்து விடுவார்கள். எனவே, ஞானிகள் – மகான்கள் பகிரங்க வழிபாடுகளை விட்டுவிடாமல் தொடர்கிறார்கள்; மற்றவர்கள் தங்களைப் பார்த்து, தம்மைப் பின்பற்றி பயன்பெறட்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். மக்கள் அவர்களைப் பார்த்து இறைவழிபாடு போன்ற (பகிரங்க) பக்தி சாதனைகளைத் தொடர்ந்து கடைபிடிக்கும்பொழுது, நாளடைவில் சரியான மனப்போக்கையும் உணர்வையும் இறை-கிருபையால் இம்மக்கள் பெற்றுவிடுவார்கள். என்ன ஒரு ஆழமான அர்த்தம் உடைய செய்யுள் இது!! அருணகிரியார் ஒரு சில சொற்களிலேயே முழு ஞானத்தையும் எப்படி உள்ளடக்கி (மறைபொருளாக) தந்துவிடுகிறார் பார்த்தீர்களா!

    இவ்வுலகிலேயே மிக உயர்ந்த மலையென்று மேரு பர்வதம் (மலை) அழைக்கப்படுகிறது. அதனுடைய நீளம், அகலம், உயரம் மற்றும் மகிமை ஆகியவைகளை ஒருவராலும் அளவிட இயலாது. அதுவே இப்பிரபஞ்சத்தின் அச்சு (ஆதாரம்) என கருதப்படுகிறது. அதேமாதிரிதான், மனிதனின் புரிந்து கொள்ளும் திறமைக்கும் - விளக்கத்திற்கும் அப்பாற்பட்டவராக, அனைத்துக்கும் ஆதாரமாக முருகப் பெருமான் இருக்கிறார். இவ்வளவு பெருமைவாய்ந்த இறைவன் கமுகின் பாளை போன்ற நீண்ட கூந்தலையுடைய வள்ளிதேவியின் பாதங்களைத் தொழுகின்றார். என்னே அவருடைய மகிமை! என்னே அவருடைய தெய்வீகத் திருவிளையாடல்!!

No comments:

Post a Comment