செய்யுள் 23செய்யுள் – 23


அடியைக்   குறியாது   அறியாமையினால்
முடியக்   கெடவோ   முறையோ   முறையோ
வடிவிக்ரம   வேல்   மகிபா   குறமின்
கொடியைப்   புணரும்   குணபூதரனே.


    பொழிப்புரை: "கூர்மையும் வீரமும் கொண்ட வேலாயுதத்தை ஏந்திய அரசே! மின்னல் கொடிபோன்ற குறமகளைத் (வள்ளியைத்) தழுவும் குணமலையே! அறியாமையின் விளைவாக தங்கள் திருவடிகளைச் சிந்திக்காமல் நான் முற்றிலும் அழிந்திடத்தான் வேண்டுமோ! இது நியாயமோ, ஓ பெருமானே, இது நீதியோ?

விளக்கவுரை

    மிடி’ () ‘வறுமைஎன்ற சொல்லிற்கு அர்த்தம் அறியாமைஎன்று முன்னர் குறிப்பால் உணர்த்தியதை (செய்யுள்–19), இச்செய்யுள் வெளிப்படையாகவேஅறியாமை’ (Ignorance - அக்ஞானம்) என்று குறிப்பிடுகிறது.

    ஆழ்நிலை தியானம் தந்த அனுபவமும், ஆனந்தமும் (செய்யுள்கள் – 21 & 22), சாதகனிடம் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கவில்லை. இறைவனின் பாதம் பணியும் பொழுது, எங்கும் நிறைந்திருக்கும் அவரின் ஸச்சிதானந்த சொரூபத்தை நன்கு உணர முடிந்த சாதகனால், சில காலத்திற்குப் பின்னர் இறைவனின் பாதங்களைச் சிந்திக்கக்கூட முடியவில்லை! அவன் மனம் அமைதி குலைந்து தடுமாறிப் போனது. எதனால் அப்படி நிகழ்ந்தது? நெடியகாலத்திற்கு செய்யப்பட்ட அந்த ஆழ்நிலை தியானத்தினால், சாதகனின் நெஞ்சில் அவனுக்கே தெரியாமல் ஆனந்தமாக ஒடுங்கியிருந்து, மனம் மற்றும் அகங்காரத்தின் மூலம் எல்லாவிதமான தீமைகளையும் செய்து வந்த அந்த பாவிஎனப்படும் அறியாமைமீது தீவட்டி போன்ற வெளிச்சம் நேராகப் பாய்ச்சப்பட்டது. அதனால் ஒடுங்கியிருந்த அறியாமை எழுப்பப்பட்டது, அச்சுறுத்தவும்பட்டது. எப்படி தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நாகப்பாம்பை தொந்திரவு செய்தால், உடனே அது எழுந்து சீறிக் கடிக்க வருமோ, அப்படிபட்ட ஒரு நிலைதான் இது. எனவே, அவித்யை எனப்படும் அறியாமை விழித்தெழுந்து தன்னை சீண்டிய சாதகனை பழிவாங்கத் துவங்கி, அவனுக்குப் பேரழிவை ஏற்படுத்த முற்படுகிறது. அதனால், அவன் நிலைகுலைந்து போகிறான். முன்னர் இறை-பாதங்களைத் தொழும்பொழுதே எங்கும் நிறைந்த ஸச்சிதானந்த சொரூபத்தை உணர முடிந்த சாதகன் (செய்யுள்–22), இப்பொழுது இறை-பாதங்களை தன்னால் தியானிக்கக்கூட முடியாததை அறிகிறான். தன்னையே இழந்துவிட்டதைப்போல் பரிதவிக்கிறான். அதனால், குழம்பிய மனநிலையிலிருந்த அவன் இறைவனிடம் இவ்வாறு வேண்டிக்கொண்டே சரண் அடைகிறான்: “அறியாமையினால் அடியைக் குறியாது முடியக் கெடவோ முறையோ முறையோ” --- “இது நியாயமா? ஓ முருகப் பெருமானே! இது நீதியோ, இந்த பாவி’ ‘அறியாமை’-யால் நான் முழுவதும் அழிந்து போவதா? தாங்கள் கூர்மையான, வீரம்மிக்க வெற்றிதரும் வேலாயுதத்தைத் தாங்கியிருக்கும் இறைவனவல்லவா! தயவுசெய்து உடனே என்னைக் காப்பாற்றுங்கள்.தனது பரிதாபகரமான நிலையை உணர்ந்து அவன் பெருமானிடம் சரண் அடைகிறான். அறியாமையின் சக்திதான் என்னே!

    சாதனையின் துவக்க காலத்தில், சாதகனின் பிரச்சனைகள் வெளிப்புறமானவை --- உடல் மற்றும் நனவு (physical or conscious level) ரீதியாக ஸ்தூல-சரீர சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாக இருந்தன (செய்யுள் – 4 முதல்). பின்னர் அவை உட்புறப் பிரச்சனையாயின நுட்பமான () ஆழ்மனது (subtle or sub-conscious level) ரீதியாக சூட்சும-சரீர சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாக இருந்தன (செய்யுள் – 14 முதல்). இப்பொழுது, அவை காரண () நினைவற்ற (Causal or Unconscious level) ரீதியாக காரண-சரீர சம்பந்தப்பட்டப் பிரச்சனைகளாக மாறின. காரண-சரீரம்தான் அறியாமையின் இருப்பிடம், இவையிரண்டும் ஒன்றேயென்று சொல்லலாம்; அதில்தான் அநேக ஜன்மங்களாகச் செய்யப்பட்ட கர்மங்களின் பலன்கள் சம்ஸ்காரங்கள் என அழைக்கப்படும் பதிவுகளாக முத்திரை குத்தப்பட்டுள்ளன. ஆழ்ந்த தியானத்தினால், அறியாமை எழுப்பப்படும்பொழுது, இந்த சம்ஸ்காரங்கள்தூண்டப்பட்டு பாம்புபோல் சீறி, காரண நிலையிலிருந்து சூட்சும மற்றும் ஸ்தூல நிலைகளுக்கு வெளிவந்து, சாதகனுக்குப் பலவிதமான பிரச்சனைகளை உண்டுபண்ணுகின்றன ----- உடல் வியாதிகள், மனதை ஒருமுகப்படுத்த முடியாத நிலை, முன்பு அனுபவித்த இந்திரிய போகங்களைத் திரும்பத் திரும்ப அனுபவப்பதில் தீவிர ஆசை, போன்ற பிரச்சனைகள் சாதகனை தாக்குகின்றன. இச்செய்யுளில் சொல்லப்பட்ட இறை-பாதங்களை சிந்திக்கக்கூட முடியாத சாதகனின் நிலை, அவனுக்குப் பின்னர் வரப்போகும் பிரச்சனைகளின் ஒரு துவக்கமே; ஏனெனில், இப்பொழுது அந்த சம்ஸ்காரங்கள்காரண-சரீரத்தில்தான் இருக்கின்றன. நினைவற்ற காரண நிலையில், மன உளைச்சல்கள் இருக்கும்பொழுதே, அச்சாதகனால் தியானம் செய்ய முடியவில்லை, இறைவனைச் சிறிதளவுகூட நினைக்க இயலவில்லை. பின்னர் அறியாமையின் தாக்கம், சூட்சும மற்றும் நினைவு மனநிலைகளுக்கு மேலெழும்பொழுது, அவனுக்கு இதைவிடப் பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டு, அவன் நாலாபக்கங்களில் இருந்தும் தாக்கப்படுவதைப் பற்றி, பின்வரும் செய்யுள்களின் மூலம் போகப்போக அறிவோம்.

    இங்கு ஒரு கேள்வி எழலாம்: ‘ஆத்மாவை தியானிக்கும்பொழுது, அறியாமை ஏன் பாதிக்கப்படவேண்டும்?’ இதைப் பற்றி அறிய, நம் ஆளுமையின் சரீரகட்டுமான அமைப்பைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்கு முன்று சரீரங்கள் உள்ளன: உடல் எனும் ஸ்தூல சரீரம், மனம் முதலான சூட்சும சரீரம், அகம் எனும் காரண சரீரம். இதற்கேற்ப, நமக்கு மூன்று நிலைகள் உள்ளன – நனவு, கனவு, நினைவிழந்தநிலை எனும் மூன்று நிலைகள். அதேபோல், மூன்று ஸ்திதிகள் உள்ளன – விழிப்பு, சொப்னம், ஆழ்ந்த உறக்கம் எனும் மூன்று ஸ்திதிகள். ஸ்தூல-சரீரம், நனவு-நிலை, விழிப்பு-ஸ்திதி ஆகிய இவை வெளிப்படையான முதற்படி என்றால்; இவை ஒவ்வொன்றின் முந்தைய படி, இவற்றிற்கு உட்புறமும், மேலும் வியாபித்தும் பரவியுள்ளது. அறியாமை என்பது (கடைசி) மூன்றாவது படிபோன்ற காரண சரீரத்தில், நினைவிழந்த நிலையில், ஆழ்ந்த உறக்க ஸ்திதியில் இருக்கிறது. ஆத்மாவோ இம்மூன்று சரீரங்களையும், மூன்று நிலைகளையும், மூன்று ஸ்திதிகளையும் கடந்து அனைத்திற்கும் உள்ளுக்குள்ளாய் இருக்கிறது (இருப்பாக, உணர்வாக, ஆனந்தமாக – ஸச்சிதானந்த சொரூபமாக இருக்கிறது). அதனால்தான், இந்நிலையை “எல்லாம் கடந்த நிலை” (துரீய அவஸ்தா/ ஸ்திதி), “நான்காவது நிலை /படி/ ஸ்திதி” என்கிறோம். எனவே, “நான்காவது நிலை”யான ஆத்மாவின்மீது தியானம் செய்யும்போது, இம்மூன்று நிலைகளையும், மூன்றாம் நிலையிலுள்ள அறியாமையையும் கடக்கவேண்டி இருக்கிறது, அப்பொழுது அறியாமை தொந்திரவு செய்யப்படுகிறது.

    வேல் கூர்மையானது, வீரமானது. அது தன் குறிக்கோளை ஒருபொழுதும் தவறுவதில்லை. இவ்வேல் கிரௌஞ்ச மலையைத் (அசுரனைத்) துளைத்து, சூரபத்மன் மற்றும் அவன் சகோதரர்களையும் அழித்தது. வேல் என்பது ஞானத்தைக் குறிக்கும், அது ஒன்றால்தான் அக்ஞானத்தை அழிக்க இயலும். ‘இவ்வுலகப் பொருள்களை உண்மையென மதித்து, எங்கும் நிறைந்துள்ள இறைவனை மறந்து, அதனால் துன்புறுவது’ அறியாமை எனப்படுகிறது. இறைவனோ நற்குணங்களின் திருவுருவம். நாம் அவரை தியானித்தால், அவரது நற்குணங்கள் அனைத்தையும் அடையப் பெறுவோம், மேலும் அவர் கையிலிருக்கும் வேல் நமது அறியாமையை அழித்து விடும்.

    முருகப் பெருமான் வள்ளியை மணந்தார். வள்ளியின் பூர்வீகம் தெய்வீகம், ஆனால் காட்டில் வாழும் வேடுவ குலத்தினரால் வளர்க்கப்பட்டாள். அதுபோல் ஜீவனும் உண்மையில் தெய்வீகம், ஆனால் பிரகிருதியின் உடல் – மனம் எனும் வலையில் அகப்பட்டிருக்கிறது. முருகப் பெருமான் வள்ளியை தழுவியது, அவர் தன்னை தியானிக்கும் மற்றும் தன்னிடம் சரண் புகும் ஜீவர்களை ஏற்றுக்கொள்கிறார் என்பதையே குறிக்கிறது.
    
    

No comments:

Post a Comment