செய்யுள் 25



செய்யுள் – 25


மெய்யேஎன   வெவ்வினை   வாழ்வை   உகந்து
ஐயோ   அடியேன்   அலையத்   தகுமோ
கையோ   அயிலோ   கழலோ   முழுதும்
செய்யோய்   மயிலேறிய   சேவகனே.


    பொழிப்புரை:திருக்கரங்கள், வேல், மற்றும் திருப்பாதங்கள் மட்டுமின்றி, உங்கள் திருமேனி முழுவதுமே செந்நிறமான முருகப் பெருமானே! மயிலின்மீது ஏறிய வீர மூர்த்தியே! கொடிய கர்மவினைகளால் ஆளப்படும் இவ்வாழ்வை உண்மையெனக்கருதி அதில் மகிழ்ந்து, உனது பக்தனான நான் (என் குறிக்கோளை மறந்து) அங்குமிங்கும் அலைவது (உன் மகிமைக்குத்) தகுமோ? இது நியாயமோ, ஓ பெருமானே?” (இது நியாயமில்லை. இதனை நீக்கி அருள்புரிவீராக!)

விளக்கவுரை

    கர்மங்களுக்கு இருக்கும் மகத்தான சக்தியை இச்செய்யுளிலிருந்து நாம் உணரலாம். அச்சாதகனோ ஆன்மீகப் பாதையில் போதிய அளவிற்கு முன்னேறியிருப்பவன்; குருவினிடமிருந்து தீக்ஷையும் உபதேசங்களும் பெற்றிருப்பவன்; மேலும் இவ்வுலகம் மற்றும் கடமைகள் அனைத்தும் பொய்யானவையென்று அறிந்து அவற்றைக் கைவிட முயற்சித்து வருபவன். எனினும், கர்மங்களின் சக்தியைப் பாருங்கள்! எவைகளையெல்லாம் அவன் நிராகரித்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறானோ, அவற்றை இப்பொழுது உண்மைபோல மகிழ்ச்சியுடன் ஏற்று செயல்பட வைக்கிறது!

    அறியாமை சீறித் தாக்கும்பொழுது, சாதகன் அடையும் மோசமான நிலைமையை செய்யுள்கள் 23, 24 & 25 வெகு நேர்த்தியாகச் சித்தரிக்கின்றன. செய்யுள்-23ல், அறியாமை காரண-சரீரத்தை அசைத்து அவனை இறைவனின் பாதங்களைச் சிந்திக்கக்கூட விடவில்லை; செய்யுள்-24ல், அது சூக்ஷும-சரீரத்திற்கு வந்து காம-சம்ஸ்காரங்களைத் தூண்டி அவன் மனதைத் துன்புறுத்தியது; இப்பொழுது ஸ்தூல-சரீரத்திற்கு வந்து அவனை அலையச் செய்கிறது. இந்நிலைமையில் பல சாதகர்கள், ---- தமக்கு வழிகாட்டச் சரியான குரு இல்லாதவர்களும் அல்லது வழிகாட்டப்பட்டும் கவனமற்று செயல்படுபவர்களும் ----- சாதனை மார்க்கத்தை விட்டுவிட்டு, முந்தைய சாதாரண வாழ்க்கைக்கே திரும்புகிறார்கள். ஆனால் இந்நிலையை அடைந்தும் அதற்கஞ்சாத சாதகர்கள், தங்கள் குரு கிருபையின் துணைகொண்டு, இம்மார்க்கத்தில் மேலும் தீவிரம் கொண்டு பிரயாசையுடன் உழைத்து, கர்ம பந்தத்திலிருந்து தங்களை நிரந்தரமாகவே விடுவித்துக் கொள்கிறார்கள். அதுபோன்ற ஒரு நிலையில் தான் அச்சாதகனும் இப்பொழுது இருக்கிறான். கர்மபந்தங்களால் (கர்மவினைகளால்) இந்நிலைக்குத் தள்ளப்பட்ட அச்சாதகன், அதிலிருந்து தன்னை முழுவதுமாக விடுவித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை நன்கு உணர்கிறான்; எனினும், வாழ்க்கையின் தினசரி அத்தியாவசியத் தேவைகளையும், கடமைகளையும் பூர்த்தி செய்வதற்காக என்று அது அவனை (அவற்றை உண்மைபோல எண்ண வைத்து), இங்குமங்கும் அலைந்து திரியவைத்து {வீடு, அலுவலகம், கடைத்தெரு, நண்பர்கள் மற்ற சின்னச்சின்ன செயல்கள், ஆகியவற்றில் அவனை அயராது சுற்றிச்சுற்றி வரவைத்து (அலைதல்)} அவற்றில் மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. இவ்வாறு அலைவதால், அவனால் தன் நேரத்தையும் ஆற்றலையும் முழுதுமாக, பரிபூரணமான வசீகரமுள்ள (முழுதும் செய்யோய்) முருகப் பெருமானிடம் செலுத்த முடியவில்லை. எனவே, தனது துரதிஷ்ட நிலையை நினைத்து நினைத்துப் புலம்பி இறைவனிடம் “நான் இப்படிக் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டுமா? இது நியாயமா? நியாயமில்லைதானே. இந்த கஷ்டத்திலிருந்து என்னை விடுவித்துக் காத்தருள்வாயாக” என்று விண்ணப்பிக்கிறான்.

    தியானத்தை தீவிரமாகச் செயல்படுத்துவதில், சாதகன் இவ்வுலகத்தை மறந்து அதைக்கடந்து செல்லுவதற்காக பெரு முயற்சி செய்கிறான். ஆனால், அந்த தியானத்தினால் மனதின் உள்ளே சுத்திகரிப்பும் நடப்பதால், வாசனைகள் மற்றும் சம்ஸ்காரங்கள் ஆழ்மனதிலிருந்து வெளிப்பட்டு மேலோங்கி நனவு நிலையை அடைகின்றன., பழைய அநுபவங்களின் நினைவுகளை உயிர்த்தெழுப்பி அவைகளின் அணிவகுப்பை நடத்துவதன்மூலம், அவன் தியானத்தில் எதையெல்லாம் {உலகத்தையும் உலக வாழ்வையும்} உண்மையல்லவென்று நினைத்து மறக்கவோ/ கடக்கவோ நினைக்கிறனோ, அதற்கெல்லாம் உண்மைத்தன்மையை கற்பித்து விடுகிறது. சென்ற செய்யுளில் சாதகன் அடைந்த போராட்ட நிலை சூக்ஷம-சரீரத்தில் (மனதில்); அந்த உட்போராட்டத்தின் மற்றொரு முனைத்தாக்குதல் இப்பொழுது அவனது தினசரி வாழ்க்கையில் நிகழ்கிறது. ஆகையால், அவன் கதறி அழுது, பரிபூரணமான (முழுதும் செய்யோய்) முருகப் பெருமானிடம் முறையிடுகிறான்; அதாவது, அவன் ஆத்மாவில் நிலைபெற நிச்சயித்து தன் ஆத்ம தியானத்தை மேலும் தீவிரமாக்குகிறான். “இந்த நாம-ரூப உலகம் உண்மையல்ல; அதைக் கடந்திட ஸச்சிதானந்த சொரூபமாகிய ஆத்மா அல்லது பரம்பொருள் மீது தனது மனதை நிலைநிறுத்தல் வேண்டும்” என்ற தெளிவான ஞானத்தை அவன் ஏற்கனவே பெற்றிருக்கிறான் (செய்யுள்-17). மேலும், குருவிடமிருந்து தீக்ஷையும் தியானத்தை சரியாகச் செய்திடும் வழிமுறை நுட்பத்தையும் உபதேசமாகப் பெற்றிருக்கிறான் (செய்யுள்-20). எனவே, தவிர்க்க முடியாத கர்ம வினையின் இடைவிடா செயல்பாட்டினால் உருவாகிய, நிலைத்திராத தன்மை படைத்த, இத்தடைகள் அவனை அவ்வளவு எளிதில் வழிதவறிவிடச் செய்யமுடியாது. அவைகளுக்கிருக்கும் சக்தி, சாதகனின் சாதனாசக்தியையும் குருவின் கிருபையையும் கூட வெற்றி கொள்ளும்போல் தோன்றக்கூடும். ஆனால் அப்படி முடியாது. கூடியசீக்கிரம் அவை தங்கள் இயல்பிற்கேற்ப வலிவிழந்து நீர்த்து விடும்; சாதகன் அவற்றை வெற்றி கொள்வது திண்ணம். தியானத்தில் ஏற்படும் அனைத்து தடைகளுக்குமான பரிகாரம், மேலும் தீவிரமாகவும், நீட்டித்தும் செய்யப்படும் தியானமே என்று அவனுக்குத் தெரியும். மொத்தத்தில் எப்படியிருந்தாலும், நேர்மறை எதிர்மறையை வென்றுதான் தீரும்; இறை- கிருபைதான் நிலைத்திருக்கும், கர்மங்கள் முடிவுக்கு வந்தே தீரும்.

    இப்படியாக, பெருமானிடம் தன்னுடைய (பாவங்கள்/குற்றங்கள் பற்றிய) ஒப்புதல் வாக்குமூலத்தை தந்து, இறை-கிருபையைப் பெற்றுக்கொண்ட சாதகன் (செய்யுள்-24), கர்ம வாசனை மற்றும் சம்ஸ்காரங்கள் சுனாமி போன்று கடும் புயலாகி அவனைத் தாக்கியபோதிலும், அதற்கிடையிலேயே இறைவனைத் தன் ஆத்மா அல்லது பரிபூரண பரம்பொருளாகத் தியானம் செய்வதில் மேலும் வேகத்துடன் ஈடுபடுகிறான்.

    முருகப் பெருமானின் கரங்களின் நிறம் செம்மை. அவை பக்தர்களுக்கு பாதுகாப்புத் தருகின்றன. அவை அபய கரங்கள்’, அதாவது, பக்தர்களுக்கு அச்சமின்மையையும், ஆசிகளையும் வழங்குகின்றன. அவருடைய கரங்கள் முடிவில்லாமல் வரங்களைக் கொடுத்துக் கொடுத்து சிவந்தன. கந்தப் பெருமானின் முக்கிய தெய்வீக ஆயுதமான வேல், அசுரன் சூரபத்மனை துளைத்துச் சென்றதால் அதில் இரத்தம் தோய்ந்து சிவப்பாக ஆனது. தேவர்களும் பக்தர்களும் கந்தப் பெருமானின் பாதங்களைத் தொழுதுகொண்டிருப்பதால், அவை சிவப்பாகிவிட்டன.

    முருகனின் கரங்கள் பாதுகாப்பைத் தருகின்றன. அவரது வேல் ஞானத்தைப் பொழிகிறது. அவரது பாதங்கள் முக்தியை அளிக்கின்றன. கரங்கள், வேல், பாதங்கள் ஆகியவைகள் மட்டுமன்றி, முருகப் பெருமானின் முழு சரீரமுமே செம்மை நிறம். செம்மை என்பது நேர்மை, பெருமை, அழகு, ஆகியவைகளைக் குறிக்கிறது, அதாவது, பூரணத்துவம், அனைத்திலும் முழுமைபெற்ற நிலை. எனவே, சாதகன் அப்பூரண முருகப் பெருமானின் முன்வைக்கும் பிரார்த்தனை இதுவே: “ஓ பெருமானே! நீங்கள் பரிபூரணமானவர். என்னை இந்த அபூரணத்துவ உலகிலிருந்து விடுவிப்பாயாக. நானும் பூரணத்துவத்தை அடைந்திடும் சரியான வழியை, உண்மை வாழ்வைக் காட்டுவாயாக.”

    “மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து” “கொடிய கர்மவினைகளால் ஆளப்படும் இவ்வாழ்வை உண்மையெனக்கருதி அதில் மகிழ்ந்து”: இவ்வுலக வாழ்க்கை குறையுள்ளது, அபூரணமானது. காரண- காரிய சம்பந்த சட்டங்கள் கர்ம விதி எனப்படும்; அது ஈவு இரக்கமற்றது, தயவு தாட்சண்ணியம் பாராதது. அதுதான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் கட்டுப்படுத்துகிறது, அடக்கியாளுகிறது. இவ்வுலகில் நடப்பது அனைத்தும் இந்த விதிக்கு உட்பட்டது. இவ்வுலகில் உள்ள பொருள்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன, ஜீவராசிகள் தோன்றி மறைகின்றன, மக்கள் ஒருவருடனொருவர் சேர்வது - பிரிவது, ஆகிய அனைத்தும் இந்த கர்ம விதியின் வேலையேயாகும். இவையெல்லாம் நமக்குத் தெரிந்திருந்தாலும், மாறிக்கொண்டே இருக்கும் தன்மை படைத்த இவைகளை நாம் உண்மையென்று கருதி, அதிலிருந்து இன்பம் பெற முயன்று கொண்டுதானிருக்கிறோம். – கல்லிருந்து நார் உரிக்க முயல்வது போல. எதனால் உந்தப்பட்டு நாம் இவ்வாறு செய்கிறோம்? இதற்கும் அதேதான் பதில் கர்ம விதியின் இடையறா செயல்பாடுகள்தான் அதற்குக் காரணம்.

    கர்ம விதி என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது? இதை அறிவது சுவாரஸ்யமாக இருக்கும். இது ஒரு காரணம்காரியம் சம்பந்தப்பட்ட விதி (சட்டம்- நியதி நியமம்). புவி ஈர்ப்பு விதி, அணுப் பிணைப்பு விதி, போன்ற இயற்கையின் விதிகளில் இதுவும் ஒன்று. இவ்விதிகள் மனிதனால் உருவாக்கப்பட்டவையல்ல, எந்த ஒரு மதத்தையும் சார்ந்ததுமல்ல. இவைகளனைத்தும் இப்பிரபஞ்சத்தை சிருஷ்டித்த இறைவனால் பிரபஞ்ச ஆரம்பத்தில் தோற்றுவிக்கப்பட்ட இயற்கை விதிகள்; அதனால் இவை நம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும், நாம் இவைகளை ஏற்றுக் கொண்டாலும்- கொள்ளாவிட்டாலும் சரி, நம்பினாலும் நம்பாவிட்டலும் சரி, வேண்டும் வேண்டாம் என்றாலும் சரி.

    பிரபஞ்சம் () அண்டம் () இயற்கை என்பது எப்பொழுதும் பராமரிக்கப்படும் அனைத்துச் சக்திகளின் சமநிலை ஆகும். ஏதோ ஒன்று/ எவனோ ஒருவன் அதன் சமநிலையைத் தொந்திரவு செய்தால், உடனே அது தன் சமநிலைக்குத் திரும்ப முயலும், அவ்வாறு அது திரும்பிட முயலும்போது, எப்படி சுவரில் அடிக்கப்பட்ட இரப்பர் பந்தானது உடனே அடித்தவரிடமே அதே வேகத்தோடு திரும்ப வருகிறதோ, அப்படியே தன்னை தொந்திரவு செய்த அதை (அவனை) உடனே திருப்பித் தாக்குகிறது. தான் தாக்கப்பட்டதால் சமநிலையை இழந்த பிரபஞ்சம், தன் சமநிலைக்கு திரும்ப முயலும்பொழுது ஏற்படும் எதிர்வினைகளே கர்ம-விதியின் செயல்பாடாகிறது.

    ஒவ்வொரு தனிமனிதனும் ஒவ்வொரு அகங்கார மையம்; அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களின் ஆசைகளால் தூண்டப்பட்ட சுயநலமான எண்ணம் மற்றும் செயல்கள் மூலம் பிரபஞ்ச சமநிலையை தொந்திரவிற்கு உள்ளாக்குகிறார்கள். எனவே நம் ஒவ்வொருவரின் செயல்களும் (எண்ணங்கள் உட்பட) பிரபஞ்சத்தினிடமிருந்து சமமான எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன, அந்த ஒவ்வொரு செயல்(எண்ணம்)களின் தீவிரம் மற்றும் நோக்கத்திற்குத் தகுந்தவாறு, எதை விதைக்கிறாயோ, அதையே அறுவடை செய்வாய்என்ற பழமொழிபோல், நற்செயல்களிலிருந்து நற்பலன்களும் (புண்யம்), தீயதிலிருந்து தீயபலன்களும் (பாபம்) கிடைக்கிறது. இந்த கர்ம-விதி இடையறாது செயல்படுகிறது, அதற்கு நண்பனுமில்லை விரோதியுமில்லை, அதன் செயல்பாடுகள் விஞ்ஞான முறைப்படி அமைந்துள்ளன. ஒவ்வொரு கர்மமும், அது எவ்வளவுதான் சிறியதாகயிருந்தாலும், அதற்குண்டானப் பலனை அளிக்காமல் போகாது. இரண்டுவித கர்மங்களின் பலன்களை ஒன்றுக்கொன்று சரியாக போய்விட்டது என்று சமன்படுத்திட இயலாது. இதை ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம். ஒருவன் 10 நற்செயல்களையும், 8 தீய செயல்களையும் செய்கிறானென்றால், முந்தைய பத்திலிருந்து பிந்தைய எட்டைக் கழித்துவிட்டு, மீதியிருக்கும் இரண்டிற்கான (நற்)பலன்களை மட்டும் கொடுங்களேன்? – என்று கேட்டால், அவ்வாறு சமன்படுத்திட முடியாதென்ற பதில்தான் (கர்ம விதியின்படி) கிடைக்கும். பத்து நற்செயல்கள் மற்றும் எட்டு தீயசெயல்களுக்கான பலன்கள் தனித்தனியே அதனதன் தீவிரத்திற்கும், நோக்கத்திற்கும் ஏற்றவாறு (கர்மவிதியில்) தரப்படும். அதனால்தான் கர்மவிதியென்பது இரக்கமற்றது’/ ‘இணங்காதது’/ ‘தயவு தாட்சணியமற்றது’/ ‘பாரபட்சமற்றதுஎன்றெல்லாம் கூறப்படுகிறது. அதனால்தான், இந்த ஜன்மத்தில் எந்த தீயகர்மங்களையும் செய்யாத நல்ல மனிதர்கள்கூட, பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாவதை நாம் பார்க்கிறோம்; இதற்குக் காரணம் அவர்களின் முன்வினைப் பயன்களேயாகும். அதேபோல, இந்த ஜன்மத்தில் பல தீய செயல்களைச் செய்து வருபவர்கள்கூட வெகுசொகுசான வாழ்க்கையை வாழ்வதையும் பார்க்கிறோம், இதற்குக் காரணமும் அவர்களின் முன்வினைப் பயன்களே. உண்மையாகப் பார்த்தால், கர்ம விதிகள் மிகவும் மர்மமானவை, கோரமானவை. ஆனால், அதே சமயத்தில், ஒருவன் செய்த நல்ல செயல்களுக்காக எதிர்காலத்தில் அவன் நற்பயன்களை அதிநிச்சயமாக அடைவான் என்பதை அதே கர்ம-விதி உறுதிப்படுத்துகிறது; அதேபோன்றே, இந்தவிதி தீய செயல்களுக்கும் பொருந்தும்.

    நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் எதிர்விளைவை உண்டு பண்ணுகிறது. இது திண்ணம். நாம் செய்யும் செயல்,கர்மம்எனப்படுகிறது; அதற்கான எதிர்விளைவு () அதிலிருந்து வரும் பலன் (வினைப்பயன்/ கர்மபலன்) இதுவும் கர்மம்என்றே குறிப்பிடப்படுகிறது. நாம் இப்பொழுது எடுத்திருக்கும் உடலெனும் சரீரத்திற்கு, நமது பூர்வஜன்ம கர்மங்களே காரணம்; மேலும் இப்பொழுதும் அவையே நம் வாழ்க்கையையும் நிர்வகித்து வருகின்றன. இதைத்தவிர, நாம் இப்பொழுது செய்து வரும் செயல்கள் அதற்கான விளைவுகளை உண்டாக்கி, நாம் பின்னர் எடுக்கப்போகும் ஜன்மங்களுக்குக் காரணமாகின்றன. எனவே, கர்மங்களே நமது வாழ்க்கைக்கு காரணமும், காரியமும் (இரண்டும்) ஆகின்றன; நாம் கர்ம-விதியால் முழுமையாக ஆளப்படுகிறோம். இது ஒரு முடிவில்லா வேலைக்கிரமமென்று தோன்றுகிறது. இதனால், இயற்கையாகவே நம்மில் பல கேள்விகள் எழுகின்றன: இதிலிருந்து வெளிவருவது எப்படி? வெளிவதற்கு ஏதாவது ஒரு வழியேனும் உள்ளதா? ஆமாம், நிச்சயமாக உள்ளது. இதற்கான தீர்வு பரிபூரணனான இறைவனைச் சேர்வதே ஆகும். நாம் கர்மவிதியின் ஆளுமையின் கீழ் வருவதற்கான காரணம், நாம் நம்மை கர்மங்களைச் செய்பவர்களாக நினைப்பதும், அச்செயல்களுக்குண்டான பலன்களை எதிர்பார்ப்பதுமேயாகும். ஆனால், கர்மவிதியின் ஆளுமைக்கு அப்பாற்பட்ட இறைவனை நாம் தஞ்சம் புகுந்தால், நாம் அக்கர்மவிதிகளிலிருந்து முழுவதுமாக விடுபட்டுவிடுவோம்.

    இந்த நம் சரீரம் நாம் முன்ஜன்மங்களில் செய்த கர்மபலன்களின் விளைவு. இந்த ஜன்மத்தில் நாம் பெறும் சுக-துக்க அநுபவங்கள் அனைத்தும் நாம் முன்ஜன்மங்களில் செய்த கர்மங்களின் பயன்கள். எனவே, அந்த கர்மங்களின் வேகம் தணிந்தவுடன், நம் சுக-துக்க அநுபவங்களும் ஒருநாள் முடிவிற்கு வந்தே தீரும். ஆதலால், இந்த வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை. விருப்பப்படும் அநுபவங்கள் வாய்க்கும்பொழுது அதிக சந்தோஷப்படவும் வேண்டியதில்லை; விரும்பப்படாத அநுபவங்கள் வாய்க்கும்பொழுது, மன அழுத்தத்துடன் மூழ்கிவிட்டது போல வருந்த வேண்டியதுமில்லை; ஏனெனில் இவ்விரண்டும் தாமாகவே ஒருநாள் கடந்து செல்லத்தான் போகின்றன (அவை தற்காலிகமானவை). வாழ்க்கை தோன்றி மறைகிற தன்மையுடையது (செய்யுள்-27). அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை நிலையான உண்மை என்றும், அதுவே எல்லாமென்றும் கருத வேண்டியதில்லை. இறைவன் ஒருவரே அறுதி உண்மை, பரிபூரணமானவர், அனைத்திலும் செம்மையானவர் (முழுதும் செய்யோய்). நாம் எந்நிலையில் இருந்தாலும் அவர் ஒருவரையே அடைய முயலவேண்டும். இல்லையேல், ஒரு காய்ந்த இலையானது காற்றினால் அங்கேயும், இங்கேயும் தூக்கி எறியப்படுவதுபோல, நம் வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு சிறிய சம்பவமும், நம்மை வெகு எளிதில் அலைக்கழித்து பந்தாடிவிடும். ஆனால், இறைவனில் சரண் அடைந்தவன், வலுவான காற்றினால் ஒரு துளிகூட அசையாதிருக்கும் மலையைப்போல், சிறிதும் பாதிக்கப்படாமல் இருக்க இயலும். எவனொருவன் இறைவனை நன்கு இருகப்பற்றிக் கொள்கிறானோ, அதாவது தன் மனதை இறைவனில் உறுதியாக நிலைநிறுத்துகிறானோ, அவனை வாழ்வில் கடந்து செல்லும் நிகழ்வுகள் ஒருபொழுதும் கலங்கடிப்பதில்லை. ஏனெனில், அவனுக்குத் தெரியும், இந்த அநுபவங்கள் வந்து போகும் தன்மை படைத்தவை, அவை தன் உள்ளிருக்கும் ஆத்ம தத்துவத்தை ஒன்றும் செய்திட இயலாதென்று. ஆனால், இவ்வுலகமே எல்லாம்; இதில் இருப்பவைகள் மட்டுமே உண்மை, இவைகளைவிட மேலான ஒரு பொருள் இல்லவேயில்லை என்று நினைக்கும் ஒரு சாதாரண மனிதனுக்கு, வாழ்க்கையில் நடக்கும் சிறிய சிறிய சம்பவங்கள்கூட அவனை எளிதாகக் கலங்கடித்து விடுகின்றன. அவனது வங்கியிலுள்ள பணம் கரைந்துவிட்டால், அவன் இடிந்துபோய் விடுகிறான். அவனுக்கு மிகவும் வேண்டிய ஒருவர் இறந்தால், அவன் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்டதுபோல வருந்துகிறான். இவைகளெல்லாம் அதிர்ச்சியான சம்பவங்களாகி அவனது பலமற்ற மனதை உடைத்து விடுகின்றன. ஆனால், இறைவனிடம் பக்தியும் விசுவாசமும் உள்ளவனுக்கு, இவ்வுலகப் பொருள்கள் அனைத்தும் மாறும் தன்மையை உடையவை, எப்பொழுது வேண்டுமானலும் அவை தன்னை விட்டுச் சென்று விடலாம் என்று தெரியும்; அதனால் அவைகளால் அவன் ஒருபொழுதும் பாதிக்கப்படுவதில்லை. இவையெல்லாம் நிரந்தரமானவை என்று கருதுபவனே, விதியின் செயல்பாட்டின் காரணமாக அவசியமாக அவை அவனை விட்டு விலகும்பொழுது, பலமாக பாதிக்கப்படுகிறான். மனிதர்களும், பொருள்களும் ஒன்றுடன் ஒன்று கூடுவதும், பிரிந்து போவதும் கர்மவினைகளால் நடைபெறுகிறது, எப்படி நதியில் மிதக்கும் மரத்துண்டுகள் காற்றின் போக்கினால் சேர்வதும், பிரிவதும் நடைபெறுகிறதோ அப்படியே. கர்மவிதிகள் நமது மகிழ்ச்சியையோ துக்கத்தையோ மதிப்பதில்லை. அவை அயராது செயல்படுகின்றன. எனவே, நாமும் இந்த உலகிலுள்ள அனைத்தும் நிலையற்றவை, வந்து போகும் தன்மையுடையவை என்று அறிந்து, செம்மை, பூரணம், மற்றும் நித்யமுமான இறைவனிடம் தஞ்சம் புகவேண்டும்; அவ்வாறு செய்தால், மாயையான வாழ்வில் நடைபெறும் சம்பவங்களால் ஒருபொழுதும் அலைக்கழிக்கப்பட மாட்டோம். இவற்றை எல்லாம் நன்கு அறிந்த அச்சாதகன், கர்மாவின் செயல்பாடுகளின் காரணத்தால் மோசமான நிலையை அடைந்து துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோதிலும். முழுதும் செம்மையான இறைவனிடம் சரண் அடைந்து, ஆத்ம தியானத்தை விடாமல் அதில் மேலும் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறான்.

    நமது வாழ்க்கை இடைவிடாது செயல்படுகின்ற இரக்கமற்ற கர்ம விதிகளின் ஆளுமைக்குட்பட்டது. ஆனால், இக்கர்மவிதிகளின்படி கர்மபலத்தை தரும் இறைவனோ கிருபையை பூரணமாகக் கொண்டவர். நாம் இறைவனைச் சரண் புகாது இருக்கும்வரையில், இரக்கமற்ற கர்ம விதி நம்மிடம் செயல்படுகிறது. எப்பொழுது நாம் இறைவனை சரண்புகுகின்றோமோ, அப்பொழுது முதல் கர்மவிதி நம் மீது கொண்டிருந்த பிடிப்பை இழக்கிறது. எதுவரை “இவ்வுலகு உண்மையானது, கர்மங்களை நான்தான் செய்கிறேன், அக்கர்மங்களிலிருந்து பலன்களை நான் எதிர்பார்க்கிறேன்” என்றெல்லாம் நாம் கருதுகின்றோமோ, அதுவரை கர்ம விதியின் செயல்பாடுகளிலிருந்து தப்புவதென்பது இயலாது. ‘காரணத்துவ பாவனை’ (Idea of Agency) () ‘நான் செய்கிறேன், நான் அநுபவிப்பேன் என்கிற எண்ணம்’ (கர்த்தா போக்தா பாவனை - Doership and Enjoyership) தான் நம்மை கர்மவிதியின் ஆளுமையின் கீழ் கொண்டு வருகிறது; அதுவே நாம் அதற்கு அடிமையாவதற்கும் (பந்தப்படுவதற்கும்) காரணமாகிறது. ஆனால், ஒருவன் இறைவனிடம் சரண் புகுந்து, தன்னை அவரது கருவியாகக் கருதி அவரது மகிழ்ச்சிக்காகவும், அவர் விருப்பத்தில் பங்கேற்பதற்காகவும், அவற்றிலிருந்து எந்த பலன்களையும் எதிர்பார்க்காமல், அவற்றை இறை-வழிபாடாக பாவித்து, அவருக்குக் காணிக்கை செலுத்துவது போலச் செயல்களைச் செய்து வந்தால் --- இந்த கடினமான விதியின் பிடிக்கு அகப்படாமல் அவனால் தப்பிச் சென்றிட இயலும். கிருபையே வடிவான இறைவனை சரண் அடைந்து பணிவதே, இரக்கமற்ற கர்ம விதியின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கான ஒரே வழியாகும். கர்மவிதியானது, அதை உண்டாக்கிய இறைவனை சரணடைவதன் மூலமே வெல்லப்பட இயலும்; இறைவனின் மகாமாயையை அவருடைய கிருபையின் துணையால்தான் கடந்திடமுடியும். இதை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசத்திலிருந்து நன்கு அறியலாம்: “முக்குணங்களால் ஆகிய என்னுடைய இந்த தேவ மாயையானது உண்மையில் தாண்ட முடியாதது; யார் என்னையே சரணடைகின்றார்களோ அவர்கள் மட்டுமே இந்த மாயையைத் தாண்டுகின்றார்கள்” (ஸ்ரீமத் பகவத் கீதை:7-14). கண்ணாமூச்சி ஆட்டமாடும் ஒரு குழந்தை, அவ்விளையாட்டை ஆரம்பித்து வைத்து நடத்திகொண்டிருக்கும் அதன் பாட்டியிடம் திரும்பி வரும்பொழுதுதான் அவ்விளையாட்டிலிருந்து ஓய்வு பெறமுடிகிறது அல்லவா! அதுபோல, அச்சாதகன் இறைவனை திரும்ப அடைந்திட அருளுமாறு இவ்வாறு வேண்டுகிறான்: “ஓ இறைவனே, நீங்களோ பூரணமானவ்ர்/ கருணாமூர்த்தி. இன்னும் எவ்வளவு காலம் இந்த இரக்கமற்ற கர்ம விதியின் பிடியில் சிக்கி நான் தொடர்ந்து உதைபட்டுக் கொண்டிருக்க வேண்டும்? எவ்வளவு காலம் நான் (பொய்யான) இவ்வுலகை உண்மையானதாகக் கருதி மகிழவேண்டும்? சரியான புரிதலெனப்படும் விவேகத்தை (பகுத்தறிவை) எனக்கு அருள்புரிவாயாக. உனது பாதங்களை நான் அன்புடன் வணங்கிட அருள்புரிவாயாக. என்னை காப்பாற்று, ஓ மாசிலாமணியே! ஓ மயில் வாகனனே! ஓ அனைத்துப் புகழுக்கும் உரியவனே! ஓ வீரனே! ஓ முழுதும் செய்யோய்! உனது அடிமையான நான் இந்த மாயையான வாழ்க்கையால் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கும்போழுது, உன்னை எப்படி ஆனந்தமூர்த்தி, பரிபூரணன் என்றெல்லாம் விளம்பிட முடியும்? எனது துன்ப வேதனை நிலை உனது பூரணமான நிலைக்குத் தகுமோ? தகாதுதானே! எனவே, என்னைக் காப்பாற்றுவீராக.”
    

No comments:

Post a Comment