செய்யுள் 26செய்யுள் – 26


ஆதாரம்   இலேன்   அருளைப்   பெறவே
நீதான்   ஒருசற்றும்   நினைந்திலையே
வேதாகம   ஞான   விநோத   மனோ
தீதா   சுரலோக   சிகாமணியே.

    பொழிப்புரை: ஓ முருகப் பெருமானே! தேவலோகச் சிகாமணியே! வேத ஆகமங்களின் ஞானத்தை அருள்வதில் விநோதரே! மனதிற்கு அப்பாற்பட்டவரே (மனதினால் அடையமுடியாதவரே)! ஓ பெருமானே, எனக்கு உங்களை விட்டால் வேறு எந்த ஆதரவும் இல்லை! (அப்படி இருந்தும்) நான் உங்கள் கிருபையைப்பெற்று உய்யுமாறு நீங்கள் ஒரு சிறிதளவேனும் சிந்திக்கவில்லையே! (என்னே என் பரிதாப நிலை!)

விளக்கவுரை

    குருவிடமிருந்து பெற்ற தீக்ஷை, உபதேசத்தால் (செய்யுள்-20), சாதகன், இறைவனின் தாள்களை வணங்கும்பொழுதே, அவரை ஸச்சிதானந்த சொரூபமாகவே உணரும் அற்புதமான அநுபவத்தையும் அடைந்தான் (செய்யுள்-22). ஆனால், அதன் பிறகு அறியாமையின் தாக்குதலுக்கு ஆளாகி, உள்ளும் புறமும் அவதியுற்று வந்தான் (செய்யுள்கள்- 23, 24 & 25). இருந்தும் இறைவன்மேல் நம்பிக்கை இழக்காமல், தன் சாதனையில் தொடர்ந்து (தடுமாற்றத்துடன்) ஈடுபட்டுவந்தான். இப்படியாக அவன் சிறிதுகாலம் அவதியுற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும் ---- பல மாதங்களோ, ஏன் ஓரிரண்டு வருடங்கள்கூட இருக்கலாம்; ஏனென்றால், காரண சரீரத்தில் மண்டிக்கிடக்கும் மூட்டை மூட்டையான சம்ஸ்காரங்கள் மற்றும் வாசனைகள் வெளிக்கிளம்பி வரும்போது அவற்றுடன் சண்டையிட்டு சமாளிப்பதென்பது ஓரிரு நாள் அல்லது மாதங்களில் முடிந்துபோய் விடக்கூடிய காரியமல்ல. உள்ளிருந்து அறியாமை தாக்கியதால் அவன் தியானம் செய்யமுடியவில்லை; மனதில் காம-விகாரங்கள் எழும்பிவந்து துன்புறுத்தின; அவனது வெளி வாழ்க்கையிலும், தனது குடும்பத்திற்கு ஏராளமான கடமைகளைச் செய்வதற்காக இங்குமங்கும் ஓடுவதிலேயே அவனுடைய பெருமளவு நேரம் விரயமாகியது. இப்படியாக அவனுடைய சாதனை தடுமாறியது. ஆக உள்ளும் புறமும், அவன் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால், அவன் மிக்க தைரியத்துடன் சமாளித்துக்கொண்டு, எப்படியோ தன் சாதனையையும் செய்துகொண்டு, இறைவனிடம் சரணடைந்து, உதவி செய்யுமாறு பிரார்த்தனையும் செய்துவந்தான். இருந்தும் அவரிடமிருந்து அவனுக்கு உதவி கிடைப்பதாகத் தெரியவில்லை. எனவே, அவன் ‘ஆதாரமில்லாதவனாக’ (‘ஆதரவற்றவனாக’) ஆகிவிட்டான். இது அவனது பொறுமையையும் மனோபலத்தையும் சோதிக்கும் நிலை. ஆனால், இறைவன் கைவிடமாட்டார் என்று அவனுக்குப் பூரண நம்பிக்கை இருந்தது. ஆதலால், மிகவும் மன்றாடி அவரது கிருபையை உடனே தந்தருளுமாறு முறையிடுகிறான்: “ஓ பெருமானே, நான் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றேன், உங்கள் உதவி வேண்டி மன்றாடியும் வருகின்றேன். உங்களைத் தவிர எனக்கு வேறு எந்த ஆதரவும் இல்லை. ஆனால் நீங்களோ தங்கள் கிருபையை தருவது பற்றி ஒரு நொடிப்பொழுதுகூட நினைக்காமல் இருக்கிறீர்கள். இவ்வாறு இருப்பதை எவ்வளவு காலம் (என்னால்) பொறுத்துக் கொள்ள இயலும்?” இப்படியாக அவரது கிருபையைப் பெறுவதற்குச் செய்த பிரார்த்தனைக்கு ஆதாரம் கொடுக்க அவரைப் புகழத் தொடங்குகிறான்: ஓ முருகப் பெருமானே! தேவலோக சிகாமணியே! வேத ஆகமங்களின் ஞானத்தை அருள்வதில் விநோதரே! தாங்கள் “மனோதீதர்!” --- மனத்தால் அடைய, நினைக்க முடியாதவர். அதனால், தாங்கள் எனக்கு தங்கள் கிருபையைத் தந்திட நினைக்காமல் இருப்பதற்குக் காரணம், நான் தங்களை நினைக்கவில்லை என்று தாங்கள் சொல்லமுடியாது!”.

    (பிராரப்த) கர்மமும் இறைகிருபையும் ஆகிய இரண்டும் ஒரே சமயத்தில் எப்படி வேலை செய்கின்றன என்பதை அறிவது ஒரு சுவாரசியமான விஷயம். கர்மங்கள் உண்மையில் அதிக பலம் கொண்டவை, இறை-கிருபையால் ஒரு சில சமயங்களில் அதன் முன்னால் நிற்கக்கூட முடிவதில்லை என்று தோன்றக்கூடும். ஆனால், இதிலுள்ள ஒரு பரம இரகசியத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். கர்மங்களின் சக்தி, தெய்வ கிருபையைக்கூடத் தற்காலிகமாக எதிர்த்து செயல்படக்கூடும்; ஆனால் அவைகளுக்கு ஒரு தொடக்கமும் உண்டு, முடிவும் உண்டு. எனவே, கர்மங்களை இயக்கிடும் சக்தி பலவீனமடைந்து என்றாவது ஒருநாள் முற்றிலும் இல்லாமற்போகும்; அப்பொழுது, கர்மங்கள் தானே முடிவடைந்து விடுகின்றன. ஆனால், இறை-கிருபையோ என்றும் வற்றாதது, மெதுவாகவும் சீராகவும் நாள்தோறும் வளர்ந்து, சாதகன் சமாதிநிலை எனப்படும் இறைஉணர்வை அடையும்வரை அது அந்தமடையாமல் இருக்கின்றது. எனவே, சாதகர்கள் சாதனை செய்யும்பொழுது பொறுமையுடனிருக்க வேண்டியது மிகவும் அவசியம். கர்மங்கள் உடனேயோ () சிறிது காலத்துக்கு பிறகோ முடிவிற்கு வந்தே தீருமென்பது திண்ணம்; இறை-கிருபை கட்டாயம் மேலோங்கி நிரந்தரமாக இருக்கும் என்பது அதைவிடத் திண்ணம்.

    இவ்வாறாக, கர்மங்களின் பலமான தாக்குதல்களை இப்பொழுது அநுபவித்து வரும் சாதகனுக்கு, குருவின் தீக்ஷை, உபதேசம் மற்றும் இறை கிருபையின் சக்தி இறுதியில் தன்னைக் காப்பாற்றுமென்று அவனுக்கு நன்கு தெரியும்.

    “வேதாகம ஞான விநோத” : வேத, ஆகமங்களின் இருப்பிடம் ஞானபண்டிதன் முருகன். அவனே ஞானம், ஞானஸ்வரூபன். அவன் ஞானத்தை வாரி வழங்குகிறான். அதுவே அவன் தொழில். ஆனால், அதற்காக அவன் பாடசாலைகள் அமைத்து, ஞானம் போதிப்பதில்லை. அவன் ஞானம் வழங்கும் விதமே விசித்திரம், வினோதம் -- ஔவைப் பிராட்டிக்கு வழங்கியது ஒருவிதம், ‘சிவனார் மனம்குளிர உபதேசம்’ பகர்ந்தது ஒருவிதம், அகஸ்தியமுனிக்கு உபதேசம் செய்தது ஒருவிதம், அருணகிரிநாதருக்கு அருளியது ஒருவிதம், பாம்பன் சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், கிருபானந்தவாரியார் சுவாமிகள், குருஜி ராகவன் மற்றும் பலருக்கு அருளியது வெவ்வேறு விதம். நம்மைப்போன்ற பாமரர்களுக்கு அருளுவது ஒருவிதம். இப்படியாக அவன் செய்யும் விநோதத்திற்கு அளவே இல்லை.

    “மனோதீதா” : அப்படிப்பட்ட ஞானஸ்வரூப முருகனை நினைத்த மாத்திரத்தில் ஸச்சிதானந்தத்தில் மூழ்கிய சாதகன் (செய்யுள்-22), அறியாமையின் தாக்குதலால் ஆரம்பத்தில் அவன் திருவடிகளை நினைக்க முடியாமல் போய்விட்டது (செய்யுள்-23). மேலும், அவன் இப்பொழுது இருக்கும் நிலை அடியோடு மோசமானது. எனவே, அவன் இறைவனைச் சரணடைந்து, அவரிடம் முறையிடுவதைவிட வேறு வழியில்லாமல் இவ்வாறு வேண்டுகிறான்: “ஓ பெருமானே! நான் உங்களைத்தவிர வேறு எவ்வித ஆதாரமும் இல்லாமல் தவிக்கிறேன். இருந்தும், நான் உங்கள் அருளைப்பெற நீங்கள் ஒரு சிறிதும் நினைக்கவில்லையே. பின் எனக்கு கதி ஏது? நான் உங்களை நினைக்காததால், நீங்கள் என்னை நினைக்கவில்லை என்று சொல்லாதீர், சொல்லக்கூடாது. ஏனெனில், நீங்கள் “மனோதீதர்”, மனதால் எட்டப்பட/நினைக்க முடியாதவர். ஆதலால், என்னை நினைத்து அருளுவது உங்கள் பொறுப்பு. நீங்கள் ஒரு வினாடி நேரம் என்னைப் பற்றி நினைத்தாலே, நான் தங்கள் கிருபையையும் இறை-அநுபவத்தையும் ஒருசேரப் பெற்றிடப் போதுமானது’.

    சாதகன் இறைவனிடம் சரணடைந்து தன் சாதனையைச் செய்துவந்த போதிலும், கர்மங்களின் சக்தியினால் அவன் தன்னை “ஆதாரமற்றவன்” அதாவது ஆதரவற்றவன் என நினைக்கிறான். மேலும், அவன் சாதனையில் வெகுவாக முன்னேறியிருந்த போதிலும், அதில் முற்றிலும் நிலை பெறவில்லை. எனவே, அவனுக்கு இது ஒரு நெருக்கடியான நிலைமை, இதுவரை பெற்றிராத அளவிற்கு இறைவனின் ஆதரவு/அருள் அவனுக்கு கட்டாயம் தேவைப்படும் தருணமிது. இப்பொழுது, மேலிருந்து இறைவன் கைகொடுத்துத் தன்னை தூக்கிவிட்டுத்தான் ஆக வேண்டுமென்ற அவசியத்தை உணர்கிறான். எனவே, இறைவனிடம் கதறி ”நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே” என்று முறையிடுகிறான். சாதகனின் தியான முன்னேற்றத்தில் இது ஒரு இடைப்பட்ட நிலை --ஜீவ உணர்வு தன்னைமீறி, சர்வ-வியாபக (இறைவன்) உணர்வை அடைந்திட முயற்சிக்கும் நிலைக்கு முன்னேறிட ஆயத்தம் செய்யும் தருணம் இது. சாதகன் தன்னுணர்வை மேன்மேலும் சரண் செய்து, இறைவனை முழுவதுமாகச் சார்ந்திட முயலும் நிலை இது, அதாவது ஜீவனாகிய தன்னை பரமாத்மாவுடன் இணைத்துக் கொள்வதற்காக, மேலும் ஆழமாக தியானம் செய்ய சாதகன் முற்படும் நிலை.

    இந்த நிலையில் சில இரகசியங்கள் உள. (1) சாதகனிருக்கும் ‘ஆதாரமற்ற’ இந்த நிலையும் இறைவனின் கிருபையின் செயலே, அதாவது சாதகனை ‘முற்றிலும் ஆதாரமற்ற’வனாக்கி, அவன் சரணாகதியைப் பூரணமாக்கி, பின்னர் அருளைப் பூரணமாகப் பொழிவதற்காகவே இந்த ‘ஆதாரமற்ற’ நிலை. இதற்கிடையில் கர்மங்களும் தங்கள் வேலையைச் செய்துவிட்டு, ஓய்ந்துவிடும். (2) “நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே” என்று சாதகன் சொல்கிறான். ஆனால், அறியாமையின் தாக்குதலை அவனால் இவ்வளவுதூரம் சமாளிக்க முடிவது இறைவனின் கிருபையினால்தான் என்பது அவனுக்குத் தெரியாது. இல்லையேல், கர்மங்களின் வெள்ளத்தின் வேகம் என்றைக்கோ அவனை சாதனையை விட்டுவிட்டு ஓடச்செய்திருக்கும் (செய்யுள்-19). “எல்லாம் இறைவனருள்” என்ற இரகசியத்தை அவன் பின்னர் உணர்கிறான்.
    

No comments:

Post a Comment