செய்யுள் 30செய்யுள் – 30


செவ்வான்   உருவில்   திகழ்வேலவன் அன்று
ஒவ்வாதது   என   உணர்வித்த   ()துதான்
அவ்வாறு   அறிவார்   அறிகின்றது   அலால்
எவ்வாறு   ஒருவர்க்கு   இசைவிப்பதுவே.

    பொழிப்புரை: “(சூரிய உதய/அஸ்தமன நேரங்களில் சிவப்பாக இருக்கும்) செவ்வானம் போன்ற சிவந்த திருமேனி கொண்டு பிரகாசிக்கும் வேல்முருகப் பெருமானே! தாங்கள் அன்று நிகரற்றதென உணரச்செய்த பரம்பொருள் அனுபவத்தை (சற்றேகுறைய சமாதி அனுபவத்தை), ஒவ்வொருவரும் அவ்வாறே, தமக்குத்தாமே தன் அனுபவத்தில் உணரவேண்டும். (அதற்கு வேறு வழி இல்லை.) அந்த அனுபவத்தை மற்றொருவருக்கு எப்படி சொற்களால் விவரித்துக் கூற முடியும்!”

விளக்கவுரை

    அந்த மகத்தான சற்றேகுறைய சமாதி அநுபவத்தில், யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நின்ற ‘அது’, பரம்பொருள் என்று அச்சாதகன் உணர்ந்தான் (செய்யுள்-28), ஆனந்தமடைந்தான். பின்னர், இந்த ‘இல்லே எனும்’ இம்மாய உலகில் மீண்டும் வாழ வேண்டியிருக்கிறதே என்று துக்கப்பட்டான், மிகவும் வருந்தினான் (செய்யுள்-29). இந்த கழிவிரக்க மனநிலையிலிருந்து (ஏமாற்றத்திலிருந்து) தன்னை விடுவித்துக் கொள்வதற்காக, அச்சாதகன் அந்த நிகரற்ற அநுபவத்தை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்கிறான்; அவ்வாறு செய்வது அவனுக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்தது. அதுமட்டுமல்லாமல், அவன் மீண்டும் அவ்வநுபவத்தைப் பெற்றிட நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் முயற்சி செய்யத் தூண்டியது.

    “அன்று ஒவ்வாதது என உணர்வித்த ()து”: “அன்று”. என்று? “கையோ, அயிலோ, கழலோ, முழுதும் செய்யோய்!”ஆன முருகன் (செய்யுள்-25), அச்சாதகன் செய்த பிரார்த்தனைக்கு இணங்கி, செய்யுள்-28இல் நிகரற்றதான (ஒவ்வாததான) சற்றேகுறைய சமாதி அனுபவத்தைத் தந்தருளிய “அன்று”. எனவே, இச்செய்யுளில் ‘செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று’ என்றும் ‘எவ்வாறு இசைவிப்பதுவே’ என்றும் அதைக் குறிப்பிட்டு, அதற்கு நன்றியும் தெரிவிக்கிறான். அந்த அனுபவம் ஒப்பற்றது, ஒவ்வாதது (நிகரற்றது). ஏனெனில், இறை-கிருபையுடன் இணைந்த ஒரு மிகப்பெரிய போராட்டத்திற்குப் பின்னரே அது கிடைத்தது. எப்படி? அச்சாதகன் முதலில் குருவிடமிருந்து தியானத்தை சரியாகச் செய்திடும் வழிமுறை நுட்பத்தை தீக்ஷை-உபதேசம் பெற்று (செய்யுள்-20), பின்னர் இறைவனை அடைந்திட அந்த ஆழ்நிலை தியானத்தைத் தீவிரமாகப் பயிற்சித்து முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்று (செய்யுள்கள்- 21 & 22), பின்னர் அவனுடைய காரண சரீரத்திலிருந்து நனவு நிலைக்கு மேலெழும்பிய சம்ஸ்காரங்கள் தாக்கி அவனை நிலைகுலையச் செய்து, பெருமானிடம் முழுமையாக சரணடைய வைத்து, அவர் உதவி மற்றும் கிருபையை வேண்டிட வைத்து (செய்யுள்கள்- 23, 24, 25, 26 & 27 ), பின்னர் அவனது சம்ஸ்காரங்கள் தீர்ந்து போய், அவன்மேல் பெருமானின் கிருபை எதிர்பாராத அளவிற்கு பொழியப்பட்டபோது, அவன் தியானத்தின் மூன்று கட்டங்களையும் படிப்படியாகக் கடந்து, சற்றேகுறைய சமாதி நிலையை அனுபவித்தான் (செய்யுள்-28). அந்த அநுபவத்தை ‘நவிலத் தகுமோ?’ (சொற்களால் விவரித்திட இயலுமோ) என்று வியந்தான்! அந்த ஒப்பற்ற அநுபவத்தை நினைவுபடுத்திக் கொண்டுதான், இச்செய்யுளில் “அன்று ஒவ்வாதது என உணர்வித்த அது” என்றும், “எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே” என்றும் குறிப்பிடுகிறான் --- தாங்கள் அன்று என்னை நிகரற்றதென உணரச்செய்த பரம்பொருள் அனுபவத்தை (சற்றேகுறைய சமாதி அனுபவத்தை), ஒவ்வொருவரும் தானே தன் அனுபவத்தில் உணரவேண்டும். அல்லாமல், நான் அதை மற்றொருவருக்கு எப்படி சொற்களால் விவரித்துக் கூற முடியும்!”

    “எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே”: அச்சாதகனுக்கு தியானத்தில் ஒரு மகத்தான அநுபவம் கிடைத்ததாகக் கேள்விப்பட்ட மற்ற சாதகர்கள், அநேகமாய் அவனிடம் வந்து அதைப்பற்றிக் கேட்டறிய ஆவல் கொண்டு வினவியிருப்பர் என்று தோன்றுகிறது. எனவே, அச்சாதகன் அந்த அநுபவம் ஒப்பற்றது தனித்துவமானது, அதைப்பற்றி விவரிப்பதென்பது இயலாது என்று அவர்களுக்குப் பதிலளிக்கிறான். மேலும், அது உள்ளநுபவமாக உணர்த்தப்பட்ட ஒன்று; ஆதலால், ஒவ்வொருவரும் அதை தானே தனது அனுபவத்தில் உணர வேண்டும், உணர முடியும். எனவே, அதைப் பிறருக்குச் சொல்லி விளங்க வைக்க முடியாது (எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பத்துவே) என்றும் சொல்கிறான். இந்த “எவ்வாறு இசைவிப்பத்துவே” என்பது இருபத்தெட்டாம் செய்யுளில் ‘நவிலத்தகுமோ’ என்று கூறப்பட்ட அந்த மகத்தான அநுபவத்தைக் குறிப்பிடுகிறது. இரண்டு சொற்களின் அர்த்தமும் ஒன்றே; அவை அந்த ஒரு அநுபவத்தையே குறிப்பிடுகின்றன.

    அச்சாதகனுக்கு அந்த மகத்தான அநுபவத்திலிருந்து இவ்வுலக அநுபவத்திற்குத் திரும்பி வந்தது துன்பமயமானதாகவும் சமரசமடைய முடியாததாகவும்தான் இருந்தது (செய்யுள்-29). இருந்தாலும், அதே சமயம் அவன் பெற்றிருந்த ஆனந்தமயமான (சற்றேகுறைய சமாதிநிலை) அனுபவத்தின் (செய்யுள்-28) நினைவு மறுபடி மறுபடி அவன் உள்ளத்தை களிப்படையச் செய்கிறது, அதைத் தந்தருளிய தனது குருவுக்கு (பெருமானுக்கு) நன்றி செலுத்தச் செய்கிறது.

    சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரத்தில் தோன்றும் செவ்வானத்திற்கு ஒரு சிறப்பு வசீகரமும், அழகும் இருக்கத்தான் செய்கிறது; அதை வார்த்தைகளால் போதுமான அளவுக்கு வர்ணனை செய்ய முடியாது. அது ஒப்புவமை இல்லாத அற்புதம். காண்பவனின் இதயத்தில் அது ஒரு இன்ப அதிர்வை உருவாக்குகின்றது. ஆகாயத்தின் ஒரு சிறுபகுதியில் தோன்றிடும் செவ்வானமே இவ்வாறு அருமையாய் இருக்கும்பொழுது, கரங்களும், தாள்களும் மட்டுமல்லாமல் முழுத் திருமேனியுமே சிவப்பாய் ஜ்வலிக்கும் அந்த முருகப் பெருமானின் பொலிவைப் பற்றி கேட்பானேன்! (செய்யுள்-25). முருகு என்றாலே அழகின் மொத்த உருவம். அவர் அழகிற்கே வசீகரம் தருபவர். அவரின் அழகிய வடிவத்திற்கு ஒரு நெருங்கிய ஒப்பீடாக சூரிய உதய-அஸ்தமன சமயத்திலுள்ள செவ்வானத்தை வேண்டுமானால் கூறலாம், ஆனால் அச்செவ்வானின் அழகையே விவரிக்கமுடியாது, அதற்கு ஒப்பீடுமில்லை! இப்படியாக, அறியப்படாததும் காணப்படாததுமான அரியபெருமையும் அழகும் கொண்ட ஒன்றை (முருகனை), அறியக்கூடியதும் காணக்கூடியதுமான ஒன்றன் மூலமே தெரியப் படுத்தப்படுகிறது. மேலும், அன்றாடம் அனுபவத்திற்கு வரும் செவ்வானத்தின் அழகைக்கூட நம்மால் அனுபவிக்க முடியுமே தவிர, அதை பிறருக்கு சொற்களால் விளக்கி தெரிவித்திட முடியாது. சிவப்பு நிறம் என்பது அழகைத் தவிர பூரணத்துவத்தையும் குறிக்கும். முருகப்பெருமான் உருவம் முழுவதுமே சிவப்பு நிறமானது. அவர் அழகிலும் மேன்மையிலும் பூரணமானவர். செவ்வானம் போல் பிரகாசிக்கும் அந்த முருகப் பெருமான், தனக்குவமை இல்லாத முருகப் பெருமான், அந்த ஒவ்வாததான (நிகரற்ற) அநுபவத்தை (சாதகனின் தியானத்தில்) உணர்வித்து அருளினார்.

    தங்களுடைய (இறை) அனுபவங்களை சீடர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாதபோதிலும், தேர்ச்சிபெற்ற குருமார்கள் சீடர்களுக்குப் பொருத்தமான வழிகளைக்காட்டி, அவர்களையே அந்த அநுபவங்களை அடையச்செய்ய இயலும். இறைவன் ஆணை பெற்ற, ஆத்மானுபூதி அடைந்த குருமார்கள் அந்த மகத்தான காரியங்களைச் செய்கின்றனர். அவர்கள் சக்தி அளப்பரியது. கற்கண்டின் இனிப்புச் சுவையை அனுபவித்த ஒருவர் அதை பிறருக்கு விளக்கி உரைக்கமுடியாது, ஆனால் பிறர் வாயைத் திறக்கச்செய்து, அதில் ஒரு சிறு கற்கண்டுத் துண்டைப் போட்டு, அதை சுவைக்க வைத்து, அதன் இனிப்பை அநுபவத்திடச் செய்ய இயலும். இனிப்பை அனுபவிக்க விரும்பும் ஒவ்வொருவரும் அவ்வாறு செய்துதான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. அதாவது வெறுமனே கண்களால் பார்த்தோ முகர்ந்துபார்த்தோ, எவராலும் இனிப்பை உணர முடியாது; கற்கண்டைத் தன் வாயிலிட்டு சுவைப்பதன் மூலமே அதை உணர இயலும். அதேபோல்தான் இறை-அனுபவமும். ஆகையால்தான், அச்சாதகன் எவ்விதத்தில் அந்த அநுபவத்தை அடைந்தானோ, அவ்விதத்திலேயே (உள்ளுணர்வாக) ஒவ்வொருவரும் அடைய வேண்டும், வேறு வழியேயில்லை. அதை விவரிக்க இயலாது. இறைவன் அருள்கூர்ந்து உள்ளுணர்வாக வெளிப்படுத்தினால்தான், அதை நாம் உணரலாம்.

No comments:

Post a Comment