செய்யுள் 32செய்யுள் – 32


கலையே   பதறிக்   கதறித்   தலையூடு
அலையே   படுமாறு    அதுவாய்   விடவோ
கொலையேபுரி   வேடர்குலப்   பிடிதோய்
மலையே   மலைகூறிடு   வாகையனே.


    பொழிப்புரை: ஓ கந்தப் பெருமானே! கொடூரமான கொலைத் தொழிலைப் புரிகின்ற வேடர் குலத்தில் வளர்ந்தவரும் பெண்யானை போன்றவருமான வள்ளி தேவியை அணைத்த, மலைபோன்றவரே! கிரௌஞ்ச மலையை இரண்டாகப் பிளந்து வெற்றி-வாகைகளைச் சூடிக்கொண்டிருப்பவரே! சமய நூல்களைப் பற்றி, பதறிக் கதறி விவாதித்து, அலைகள் மோதுவதைப்போல் ஏற்படும் தலையிடியால் வேதனைப்பட்டு, அந்த வாதங்களில் மூழ்கி அவைமயமாகவே நான் ஆகிவிடலாகுமோ? (ஓ பெருமானே, அவ்வாறு எனக்கு ஆகிவிடாமல் காப்பாற்றுங்கள்.)”

விளக்கவுரை

    முன்செய்யுளில் முருகன் உள்ளிருந்து தெரிவித்ததுபோல், அவன் சந்நியாசம் எடுத்துக்கொண்டால், அவனிடம் பாக்கியிருக்கும் பயங்கரமான பாவ கர்மங்களை அனுபவிக்காமல், அவற்றை ஞான-அக்கினியில் எரித்துவிடலாம் என்று தீர்மானித்து, அச்சாதகன் சந்நியாசம் எடுப்பதற்குத் தயார் செய்கிறான். “ஞானக்கனல் கர்மங்கள் அனைத்தும் எரித்துச் சாம்பலாக்கிறது” என்று ஸ்ரீமத் பகவத் கீதையும் பறை சாற்றுகிறது: ஞானாக்னி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே ததா (4.37). இவ்வாறு அவன் செய்திடவில்லையெனில், அக்கர்மங்களை அநுபவித்து அழித்திட அவனுக்குப் பல பிறவிகள் எடுக்கவேண்டியிருக்கலாம்.

    இந்த மாயவாழ்க்கையின் மீதான (வைராக்கியம்) பற்றற்ற மனப்பான்மை அச்சாதகனிடம் படிப்படியாக வளர்கிறது. முதலில் முளைவிட்டு, பின்னர்ச் செடியாகி, மரமாகி, பூத்துக் குலுங்கி, கடைசியில் பழமாகி பலன் தருகிறதென்பதை இந்நூலில் அருணகிரியார் விளக்குகிறார்.

  • வைராக்கியம் முளைவிடுதல் - இந்நூலின் நான்காவது செய்யுளிலேயேவளைபட்ட கைம்மாதொடு மக்களெனும் தளைபட்டழியத் தகுமோ தகுமோ என்கிறான் அந்த சாதகன்.
  • பின்னர், அவனிடம் இந்த வைராக்கியச் செடி சிறிது சிறிதாக வளர்கிறது --- செய்யுள்-9 (மட்டூர்குழல்), செய்யுள்-16 (பேராசையெனும்).
  • இவ்வாறு நாள்தோறும் செடியாக வளர்ந்து வந்த வைராக்கியம், பின்னர் ஒரு பெரிய மரமாகிறது ---- செய்யுள்- 25 & 27ல் ‘மெய்யே என’ & ‘மின்னே நிகர்’.
  • அந்த வைராக்கிய மரத்தில் பின்னர், தியாகம் () சன்னியாசம் எனும் பூ மலர்கிறது ---- இந்த கர்மபந்தத்திலிருந்து விடுபடுவதற்கு, சன்னியாசமே வழி என்று அவன் கருதுகிறான்.
  • அந்த வைராக்கிய மரம், பலனாகப் பழங்களை இனிமேல் தரப்போகிறது --- ஞானம் (‘வேல்’ : செய்யுள்- 42), அனுபூதி (‘பேசா அநுபூதி’ : செய்யுள்- 43), மோட்சம் (‘சரணம்’ : செய்யுள்- 44’) ஆகிய பலன்களை அச்சாதகன் பின்னர் பெறப்போகிறான்.

    அதனால் அச்சாதகன் தன் மனதில் தற்போது ஓடும் சிந்தனைகளை, இயல்பாக சாஸ்திரங்களைக் கற்றிருந்த தன் குடும்ப உறுப்பினர்கள், பெரியவர்கள், சுற்றத்தினர், நண்பர்கள் ஆகியவர்களுக்கு வெளிப்படுத்துகிறான். தான் வீட்டைத் துறந்து சன்னியாசம் எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியத்தை அவர்களிடம் சொல்கிறான். ஆனால், எதிர்ப்பார்க்கப் பட்டதுபோல், அவனுடைய இந்த முடிவிற்கு குடும்ப உறுப்பினர்கள் பலர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். மற்ற எல்லா விஷயங்களிலும் நிகழ்வது போலவே, இந்த விஷயத்திலும் ஒவ்வொருவரின் கருத்தும் வேறுபட்டது; ஏனெனில், சாஸ்திரங்களின் அறிவுரைகள்கூடப் பலவாறாக இருக்கின்றன. சாஸ்திர உபதேசங்கள் வெவ்வேறு மட்டங்களில் உள்ள மக்களுக்கு அவரவர்களின் தேவைகளுக்கும் தகுதிக்கும் தகுந்தவாறு கொடுக்கப்பட்டுள்ளதால், அவை ஒன்றுக்கொன்று முரண்பாடான மற்றும் குழப்பமான கருத்துக்களைச் சொல்வதுபோல் தோன்றும். ---- “அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.” “துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டற்று.” (திருக்குறள்). எனவே, அச்சாதகனுடனான அவர்களின் விவாதங்கள் பெரும்பாலும் காரசாரமாக நடைபெற்றது. சாஸ்திர வாக்கியங்களை மேற்கோளாக்கி சிலர் அவனது தீர்மானத்தினை ஒட்டிப் பேசியனர், பலர் வெட்டிப் பேசியனர், அவர்களுக்குள்ளே விவாதங்கள் பெரும் கூச்சலுடன் “கதறியும் பதறியும்” நடந்து வந்தன. அவ்விவாதங்கள் அவனைப் பற்றியதாக இருந்ததால், அவன் அவற்றில் மிகவும் ஈடுபாட்டுடன் பங்கேற்க வேண்டியதாயிற்று. அதனால் அவன் மனம் மிகவும் கலக்கமும் குழப்பமும் அடைந்தது. ஆனால், அவன் என்ன செய்யவேண்டுமென்று ஏற்கனவே தீர்மானித்துவிட்டதனால், இதிலெல்லாம் தன் நேரத்தை வீணாக்கிட விருப்பவில்லை. “பூமேல் மயல் போய் அற மெய்ப்புணர்வீர்” (இவ்வுலகின் மீதான மயக்கத்தைத் துறந்து, பரம்பொருளுடன் ஐக்கியமடைந்து, அதிலேயே நிலைபெறுவாயாக) என்று இறைவன் தந்த அறிவுரையின்படி அவன் நடந்திட சித்தம் கொண்டிருந்தான் (செய்யுள்-17). எனவே, இச்செய்யுளில் அச்சாதகன் “சமய நூல்களைப் பற்றி பதறிக் கதறி விவாதித்து, அதனால் ஏற்படும் அலைகள் மோதுவதைப்போல் தலையிடியால் வேதனைப் பட்டு, அந்த வாதங்களில் மூழ்கி அவைமயமாகவே நான் ஆகிவிடலாகுமோ? (ஓ பெருமானே, அவ்வாறு எனக்கு ஆகிவிடாமல் காப்பாற்றுங்கள்)”, என்று பிரார்த்தனை செய்கிறான். இப்பிரார்த்தனையில் அச்சாதகன் தன் குடும்பத்தைத் துறந்து விடும் முடிவில் தளர்வடையாமல் இருப்பதற்குத் தேவையான மன உறுதியையும், சக்தியையும் தந்தருளுமாறும் வேண்டுகிறான் என்பது அடங்கியுள்ளது.

    மனிதப்பிறவி கிடைத்தற்கு அரியது. அதன் முக்கியக் குறிக்கோள் இறைவனை அடைவது. அதை பசு-பட்சிகளைப்போல் உண்ணுவதிலும், உறங்குவதிலும், இந்திரிய சுகங்களை அனுபவிப்பதிலும் வீணாக்கிவிடக்கூடாது. அப்படிச்செய்தால் அடுத்த ஜென்மம் என்னவாகக் கிடைக்குமோ தெரியாது. இப்படியாக, சாஸ்திரங்கள் நம்முடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகின்றன. சாஸ்திரக் கல்வி, பண்பையும் ஞானத்தையும் போதிக்கின்றன; ஞானத்திலிருந்து பணிவு ஏற்பட வேண்டும். அக்கல்வி செறுக்கடையச் செய்துவிடக்கூடாது. இதை சாஸ்திரங்கள் பற்பல விதங்களில் கற்பிக்கின்றன. கல்வியால் கர்வமடைந்தவர்கள் எவ்வாறெல்லாம் தங்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டார்கள் என்றும், முற்றும் கற்றிருந்தும் விநயத்துடன் வாழ்ந்த மகான்களின் மகிமை பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. நடத்தையைப் பற்றிய விதிகள், பண்புகளை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள், தியானம் செய்யும் முறைகள், பரம்பொருளை ஆழ்ந்து சிந்தனை செய்தல், இறை-அனுபூதி பற்றிய விஷயங்கள் ஆகியவைபற்றி சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. எனவே, சாஸ்திரங்கள் நன்கு கற்கப்பட்டு, அதன் போதனைகள் சரியாக புரிந்து கொள்ளப்பட்டு, அதன் உபதேசங்கள் ஒழுங்காக கடைபிடிக்கப்பட்டு, வாழ்க்கையின் குறிக்கோளாகிய ஆத்மானுபூதி அடையப்பட வேண்டும். கல்வி, நடைமுறை ஆகி, நடைமுறை அநுபவமாக ஆகவேண்டும். கல்வி கற்பதன் நோக்கம், வாழ்க்கை நேர்மையாக வாழப்படுவதற்கும், வாழ்க்கையின் குறிக்கோளை அறிந்துகொள்வதற்கும், இறுதியில் இறை- அநுபவம் பெறுவதற்குமே. கற்பவை கற்றபின், கற்றதை தினசரி வாழ்வில் செயல்படுத்திட வேண்டும். கற்பது, வாழ்க்கையை வாழ்வதற்கே; வாழ்க்கையை வாழ்வது கற்பதற்கே. சுருங்கக் கூறின்: ‘கற்பதே வாழ்க்கை; வாழ்க்கையே கற்பது’. வாழ்வின் குறிக்கோள் இறைவனை அடைவது, அதாவது, இறையுணர்வு பெறுவது; கற்பதின் நோக்கமும் அஃதே.

    திருக்குறளில் (1.2) தமிழ் மாமுனி திருவள்ளுவர், கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் --- (தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன்தான் என்ன?’) என்று கூறுகிறார். நாம் கற்ற கல்வி வாழ்க்கையோடு சம்பந்தப்படாமல் தனியாக இருந்துவிடக் கூடாது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று ஒட்டி உறவாடிக் கொண்டிருக்க வேண்டும்.

    கற்பது, விவாதம் செய்வதற்கு அல்ல; பொருள் சம்பாதிப்பதற்கும் மட்டும் அல்ல. ஆனால், இன்றைய காலத்தில் கல்வி கற்பது பணம் சம்பாதிப்பதற்கு மட்டும்தான் என்றாகிவிட்டது நமது துர்பாக்கியம். சரியான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான அறிவை தற்காலக் கல்வி எவ்விதத்திலும் போதிப்பது இல்லை. அதாவது, வாழ்வை சரியாக எதிர்கொள்வதற்குத் தேவையான அறிவுத் திறனைக் கொடுத்தல், பிரச்சனைகளை சமாளித்து வாழ்க்கையை வாழவைத்தல், வாழ்க்கையின் குறிக்கோளை அடைய வழிகாட்டுதல் ஆகியவற்றில் எந்த ஒன்றையும் தற்காலக் கல்வி போதிப்பதில்லை. இதற்கு நேர்மாறாக, ஒருவன் பள்ளி () கல்லூரிக் கல்வியை முடித்துவிட்டு வெளியேறிய பின்னர், அடுத்து என்ன செய்வதென்று புரியாமல், எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாமல் கலங்கி நிற்கிறான். உண்மையில், வாழ்க்கை அவனைத் திணற வைக்கிறது. அவனுக்கு வாழ்க்கையில் ஒரு குறிக்கோளும் இல்லை. ஏனெனில் அவன் பெற்ற கல்வி, அதை அவனுக்கு போதிக்கவில்லை. அவன் தனக்கு ஒரு வேலை கிடைத்திடாதா என்று எதிர்பார்த்து இங்குமங்கும் சுற்றிச் சுற்றி வருகிறான். அது ஒன்றே அவன் குறிக்கோளாகிவிட்டது. அதில் அவன் கற்ற கல்வி அவனுக்கு ஒருவேளை உதவலாம். ஆனால், கல்வி கற்பதன் நோக்கம், ஒரு வேலையை சம்பாதித்துக் கொள்வதற்கு மட்டும்தான் என்று ஆகிவிடக்கூடாது. இதையே திருவள்ளுவர் மிக அழகாகவும் ஆணித்தரமாகவும் பின்வருமாறு திருக்குறளில் (40.1) கூறுகிறார்: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”; அதாவது, ‘கல்வி கற்க, நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு வாழ்வாங்கு வாழ வேண்டும்’. மேலும், அவர் பின்வருமாறு கூறுகிறார்: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள் 43.3). அதாவது, ‘எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே ஏற்றுக் கொள்ளாமல்) அப் பொருளின் உண்மையை ஆராய்ந்து காண்பதே அறிவாகும்’. எனவே, கற்பது ஒரு வேலையைத் தேடிக்கொள்வதற்காகவோ () வாழ்க்கை முழுவதையும் வீண் விவாதங்கள் செய்வதில் பாழாப்புவதற்காகவோ அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.

    நாம் கற்ற கல்வி நமது வாழ்வில் இழைந்து, நம் அங்கமாகவே ஆகிவிட்டால், நாம் இறைவனின் அருமைபெருமைகளை உணர்ந்து விநயமுடையவர்கள் ஆகிவிடுவோம்; அப்பொழுது விதவிதமான போதனைகளின் மூலம் சாஸ்திரங்கள் நமக்கு எதை போதிக்கமுனைகின்றன என்பது தெரியவரும். அப்படியல்லாமல், கற்ற அறிவு நம் வாழ்வின் அங்கமாகாமல், புத்தகத்திலும் நம் புத்தியிலும் மட்டுமே இருந்துவிட்டால், நாம் அதைப்பற்றிய தற்பெருமையும் அகங்காரமும் அடைகிறோம். அதன் விளைவு என்ன? முற்றிலும் முரண்பாடானது போலத்தோன்றும் வேதாகம அறிவுரைகளை நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல், நம்மைப்போன்ற மற்றவர்களோடு வெட்டியாய்ச் சண்டையிட்டு வீண் விவாதங்களில் ஈடுபட்டு வாழ்வை வீணாக்குகிறோம். அவ்வாறாக நடக்கும் மத விவாதங்களிலும், சர்ச்சைகளிலும் என்ன நடக்கிறது தெரியுமா? மனிதன் தன் நல்லொழுக்கத்தை இழக்கிறான். அவன் வீணே தொண்டை தண்ணீர் வற்றக் கத்தி, கூச்சலிட்டு, மற்றவர்கள் கூறுவதை வெட்டி மறுக்கத் தொடங்குகிறான். அவன் மனக் கிளர்ச்சி பெற்று, முற்றிலுமாகக் குழம்பி, வீண் பரபரப்பையடைந்து, உனர்ச்சி வசப்பட்டு, முடிவில் மன அமைதியையே இழந்துவிடுகிறான். அவன் மூளை குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறது. எவனுடைய கல்வி, அவனது உள்ளத்துடன் ஒன்றி வாழ்க்கையுடன் கலக்காமல், புத்தியில் வெறும் அறிவாக மட்டும் இருக்கிறதோ, அத்தகைய மெத்தப் படித்த மேதாவிகளின் நிலை பெரும்பாலும் இவ்வாறு அமைந்திருப்பதைக் காணலாம். அவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் மேன்மேலும் பல சாஸ்திரங்களைப் படிப்பதில் செலவிடுகிறார்கள். படித்த சாஸ்திரங்களில் என்னென்ன குறைகள் உள்ளன என்றறிவதில் கவனத்தைச் செலுத்துகிறார்கள். தாம் படித்த விஷயங்கள்பற்றி மற்றவர்களுடன் சர்ச்சைகள் செய்து, தங்கள் தற்பெருமைகளின் அணிவகுப்பை நடத்திக் காண்பிப்பார்கள். அவர்கள் சூடான விவாதங்களில் வீணாக நுழைகிறார்கள், வேதவாக்கியங்களின் நுணுக்கங்களில் சிக்கிக்கொள்கிறார்கள், அவர்கள் கற்ற கல்வி ஒரு சுமையாகவும் பந்தமாகவும் மாறிவிடுகிறது; அவர்கள் கற்பதின் நோக்கத்தையும், வாழ்க்கையின் குறிக்கோளையும் ஒருசேர இழந்து விடுகிறார்கள். எனவே, “சூடான விவாதங்களில் வீணே ஈடுபட்டு, மனக் குழப்பம் அடைந்து, எதிராளியோடு கத்திப்பேசி சண்டையிட்டு, அறிவை மயக்கும் விவாதங்களில் என்னையே இழந்துவிட வேண்டுமா? ஓ பெருமானே! அவ்வாறு (எனக்கு) நிகழக் கூடாது. ‘கற்பதின் நோக்கம் இறை- அனுபூதியை அடைவதற்கே’ என்பதை நான் வாழ்க்கையில் ஒருபொழுதும் மறக்காமல் இருப்பேனாக. நான் கற்ற கல்வியால் நான் வாழ்க்கையின் குறிக்கோளிலிருந்து வழுவி, திசை திரும்பிவிடாமலிருக்க என்னை ஆசீர்வதிப்பீர்களாக”, என்ற பிரார்த்தனை, நாம் ஒவ்வொருவரும் எப்பொழுதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்பதற்கான எச்சரிக்கை ஆகும்:

    வள்ளி தேவியார், வேடுவ இராஜனான நம்பிராஜன் என்பவரால் கண்டெடுக்கப்பட்டு, வேடர்களின் மத்தியில் வளர்ந்தார். வேடுவர்கள் மிருகங்களைக் காட்டில் வேட்டையாடிக் கொன்று வந்தனர். அவர்கள் இயற்கையிலேயே கொடுங்குணம் கொண்டவர்கள். அவர்களிடையே வள்ளி தேவியார் வாழ்ந்து வந்தாலும், தேவியார் தெய்வீக குணம் படைத்திருந்தார்; எப்படி யானைகள் ஒரு சிறு சத்தம் கூட எழாமல் மிகவும் நளினமாக நடக்க வல்லதோ, அப்படியே அவரும் மிக நளினமானவர்.

    வள்ளியம்மை ஜீவாத்மா; அவர் கொடூரமான வேடுவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்தார். வேடுவர், கொந்தளிக்கும் மனமும் இந்திரியங்களும். ஜீவாத்மாவின் இயல்பு புலன்களின் இயல்புகளிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டது. மனமும் புலன்களும் புலனின்பங்களின் வெறித்தனமான (காட்டு) விளையாட்டில் எப்பொழுதும் ஈடுபடுகின்றன. ஆனால், ஜீவாத்மாவோ இறைவனுக்குச் சொந்தமானது என்பதால், இறைவனையே நாட விழைகிறது. வள்ளி தேவியார் ஒரு யானைக்கும், முருகப் பெருமான் ஒரு மலைக்கும் ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள். மலையும், மலை சார்ந்த காடுகளுமே யானைகள் வாழுமிடம். அதேபோல், ஜீவாத்மாக்களின் உண்மையான உறைவிடம் இறைவனே, வேடுவர்களல்ல, அதாவது மனம் மற்றும் புலன்கள் (உடல்) அல்ல.

    சூரபத்மனையும் மற்றும் பல அசுரர்களையும் வெற்றி கொண்டதால், வெற்றிவாகைகள் (மலர்மாலைகள்) எப்பொழுதும் வேலாயுதப் பெருமானின் மார்பில் திகழ்கின்றன. அவரிடம் வேல் உள்ளது --- அதுவே ‘வெற்றி வேல்’. பிறிதொரு காலத்தில் முருகப் பெருமான் வந்து அழித்திடும்வரை மலையாகவே இருக்கும்படி அகஸ்திய முனிவரால் சபிக்கப்பட்ட அசுரன் கிரௌஞ்சனை கொன்றதும் கந்தப் பெருமானின் வேல்தான்.

    அசுரர்களை வதம் செய்த பெருமானின் அதே கரங்கள்தான் வள்ளி தேவியையும் அணைத்தன. இதன் தாத்பரியம் ----- எம்பெருமான் கொடூரமானவர்களுக்குப் பேரச்சம் தருபவராகவும், பக்தி செய்பவர்களுக்கு அன்புடையவராகவும் இருக்கிறார் என்பதாகும். அவர் தவறு செய்தவர்களை தண்டிக்கிறார். அதேசமயம் பக்தர்களிடம் அன்பு செலுத்துகிறார். அப்படிப்பட்ட வேலாயுதப் பெருமானிடம், “ஓ பெருமானே! நீங்கள் அசுரர்களையும், கிரௌஞ்ச மலையையும் அழித்து வெற்றி வாகை சூடியவர். தங்களின் திருச்சமூகத்தில் வள்ளியை ஏற்றீர்கள். தங்களால் கொடுக்கப்பட்ட என் கல்வியும் அறிவும் (செய்யுள்-17) என்னிடம் கர்வத்திற்கோ, தேவையற்ற விவாதங்களுக்கோ வழி வகுத்திடாமல் இருக்கட்டும்; நான் இறை-அனுபூதியை அடைய அது வழிவகை செய்யட்டும்.” என்று அச்சாதகன் பிரார்த்தனை செய்கிறான்.

No comments:

Post a Comment