செய்யுள் 33



செய்யுள்33


சிந்தாகுல   இல்லொடு   செல்வமெனும்
விந்தாடவி   என்று   விடப்பெறுவேன்
மந்தாகினி   தந்த   வரோதயனே
கந்தா   முருகா   கருணாகரனே.


    பொழிப்புரை: “ஓ கந்தப் பெருமானே! முருகா! கருணையின் உறைவிடமே! மந்தாகினிநதியில் வரத்தினால் உதித்தவனே! மனதிற்குத் துயரத்தைத் தருகின்ற, அடர்ந்து-படர்ந்திருக்கும் விந்தியமலைக் காடுகளைப் போன்றிருக்கும் (அதில் புகுந்தவர் அதிலிருந்து வெளிவரமுடியாது தவிப்பர்) குடும்பம் மற்றும் செல்வம் ஆகிய இவற்றிலிருந்து நான் எப்போது விடுதலை பெறுவேன்?” (இவற்றிலிருந்து என்னை விடுவித்து அருள்வாயாக.)

விளக்கவுரை

    முந்தைய செய்யுளில் அச்சாதகன் குடும்பத்தைத் துறந்து, சன்னியாச வாழ்க்கை மேற்கொள்ள உறுதி பூண்டதைப் பார்த்தோம். அவ்வாறு துறந்திடும் விருப்பம் நாள்தோறும் மேன்மேலும் வலுவடைகிறது. அதற்குமேல் தன்னால் பொறுக்க முடியாது என்ற நேரமும் அவனுக்கு வரத்தான் செய்தது. அதனால், அவன் கருணாமூர்த்தியான பெருமானிடம் முறையிடுகிறான்: “ஓ கந்தப் பெருமானே! முருகா! கருணாகரனே! சிவனாரின் வரத்தால் மந்தாகினி (கங்கை) நதியில் அவதரித்தவரே! அனைத்து மனத் துயரங்களுக்குக் காரணமானதும், அடர்ந்த விந்திய மலைக் காடுகளை ஒத்த குடும்பம் மற்றும் சொத்து ஆகிய இந்த சம்சார பந்தத்திலிருந்து, நான் எப்போது விடுபடுவேன்?” (இப்பிரார்த்தனையிலேயே அதன் விடையான தீர்வும் அடங்கியுள்ளது.) இப்பிரார்த்தனைக்கு செவிசாய்த்து அருள்புரிந்த பெருமானின் கருணையால், அவன் தன் வீட்டைத் துறந்து, விந்திய மலைக் காடுகளுக்கு அப்பால், புனித மந்தாகினி (கங்கை) நதிக்கரையில் அமைந்திருக்கும் தன் குருவின் ஆசிரமத்தை அடைகிறான். ஒவ்வொரு செய்யுளிலும் அருணகிரியார் பெருமானை குறிப்பிடப் பொருத்தமான அடைமொழிகளைப் பயன்படுத்துகிறார். 51 செய்யுள்கள் அடங்கிய இந்நூலில், முப்பத்திரண்டு செய்யுள்களுக்குப் பின்னர் இச்செய்யுளில் (33) தான், முதன் முதலாக கங்கையைப்பற்றி குறிப்பிடுகிறார். இதிலிருந்து அச்சாதகன் அங்கு சென்றிருக்கிறான் என்று குறிப்பிடுவதுபோல் தோன்றுகிறது. முருகப் பெருமான் ‘மந்தாகினி தந்த வரோதயன்’. அவர் சிவபெருமானால் தேவர்களுக்கு வரமாகக் கொடுக்கப்பட்ட ஒரு அவதாரம். (இதன் முழு விவரம் காப்புச் செய்யுளில் கொடுக்கப்பட்டுள்ளது.) இந்த அவதாரமே அடுத்த செய்யுளில் ‘கங்கா நதி பாலன்’’ என்று கூறப்படுகிறது; 50வது செய்யுளில் பொதுவாக ‘நதி புத்திரர்’ என்று கூறப்படுகிறது. கங்கா நதிக்கு ‘அலகனந்தா’ என்ற ஒரு பெயருமுண்டு. எனவே, அனைத்து நதிகளுமே கங்கையின் வெவ்வேறு பெயர்கள், பிரதிநிதிகள் எனலாம்.

    (குறிப்பு: பொதுவாக எல்லா நதிகளுமே ---- ஏரிகள், குளங்கள், கிணறுகள், ஆகிய அனைத்து நீர்நிலைகளுமே ---- ‘கங்கை’ என்றுதான் கருதப்படுகிறது. இது நம்முடைய பண்பாடு (மரபு). அதனால்தான், தீபாவளி தினத்தன்று ‘கங்கா ஸ்னானம் ஆயிற்றா?’ என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொள்கிறார்கள், அவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் வீட்டிலேயே குளித்திருந்தாலும்கூட. எனவே, அச்சாதகன் கங்கை நதிக்கரையில் அமைந்திருந்த தன் குருவின் ஆசிரமத்தை அடைந்ததாகக் கூறப்படும்பொழுது, அந்த நதி எந்த நதியாகவும் இருக்கலாம்; எல்லா நதிகளும் கங்கைதானே!)

    சம்சாரம் துயரமும் துன்பமும் நிறைந்தது. வீட்டு வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் எண்ணற்றவை. வீடு, வாசல் (சொத்து), மனைவி, மக்கள் (குழந்தைகள்) எல்லாம் துன்பங்களுக்கு மூல காரணம். இருந்தாலும், அவை மிகவும் வசீகரமாய் இருக்கின்றன, அதனால் அவைகளில் ஈடுபடுவதும் மிகவும் எளிதாயிருக்கிறது. அவை அழகாகவும், விரும்பத்தக்கதாகவும் தோற்றமளிக்கின்றன; அவை தூரத்தில் இருக்கும்வரை, அதாவது அவைகளை ஒருவன் அடையாதவரையில், அழகாகத் தோன்றுகின்றன. எனவே, அவைகளை அடைய மனிதன் பெருமுயற்சி செய்கிறான், மேலும் அவைகளை அவன் அடையும்வரை அமைதியின்றித் தவிக்கிறான். ஆனால், அவற்றை அடைந்து அநுபவித்த பின்னர், அவை தங்கள் வசீகரத்தை இழப்பதோடல்லாமல், அவனது மன வேதனைகளுக்கு காரணமாகிவிடுகின்றன. அவை அவனது மன அமைதியை முழுவதுமாக சூறையாடி, அவனை தூக்கமற்றவனாக்கி விடுகின்றன. குடும்ப வாழ்வின் துன்பங்களும், கவலைகளும் அனைவருக்கும் மிக நன்றாகத் தெரிந்திருக்கிறபடியால், இதற்கு மேலும் விவரிக்கத் தேவையில்லை தானே (கொல்லன் தெருவில் ஊசி விற்க முயலுவது உசிதமல்லவே)? அவைகளுடன் ஈடுபாடு கொண்டபின்னர், அவற்றை அவன் விட்டுவிட விரும்பக்கூடும், ஆனால் அவனால் அவ்வாறு செய்ய இயலாது. அவன் அவற்றை விட்டுவிலக விரும்பினாலும், அவை அவனை ஒருபொழுதும் விடுவதில்லை. அவன் இவ்வாறு பரிதாபகரமாகச் சிக்கி, முடிவில் இறந்தும் போகிறான். குடும்பம் மற்றும் சொத்து ஆகியவைகள் தாங்கவொண்ணாத, விடுவித்துக் கொள்ள முடியாத, மனதைத் தளரச்செய்யும் தொல்லைகள் பலவற்றை தந்து, சலிக்க வைக்கும் இயல்பு கொண்டிருப்பதனால், அருணகிரியார் இவைகளை மத்திய இந்தியாவில் இருக்கும் விந்திய மலைக் காடுகளுக்கு ஒப்பிடுகிறார். எப்பொழுதும் பசுமையாயிருக்கும் விந்திய மலைக் காடுகள் அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் இருக்கும். அக்காட்டின் அழகினால் வசீகரிக்கப்பட்டு, ஒருவன் அதனுள் நுழைந்துவிட்டால், அதன் அழகை அநுபவித்துக்கொண்டே தன்னை மறந்து வெகுதூரம் அதனுள் சென்றுவிடுவான். அக்காட்டின் நடுவில் செல்லச்செல்ல அது மேன்மேலும் அடர்த்தியாகிக் கொண்டே போவதால், அவன் திரும்பிச் செல்லும் வழியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி, இறுதியில் காட்டு மிருகங்களுக்கு உணவாகி விடுகிறான். மனைவி, குழந்தைகள், சொத்து ஆகியவற்றுடனான இல்வாழ்க்கையும் இதே போன்றதுதான். இல்வாழ்க்கை ஆரம்பத்தில் கவர்ச்சிகரமாயிருந்து, பின்னர் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகளைத் தந்து, அவனை இன்னும் அதிக சிக்கல்களில் ஆழ்த்துவதனால், அவன் தன்னையே இழந்து விடுகிறான்; இப்பிரச்சினைகள் அனைத்தையும் சரிசெய்து தன்னை விடுவித்துக் கொள்ள அவன் முயற்சி செய்வதிலேயே அவனது வாழ்நாள் முழுவதும் ஓடிப்போய் விடுகிறது. அதனால், இறைவனை வழிபட நேரமும், சக்தியும் அவனிடம் இருப்பதில்லை. வீடு மற்றும் சொத்து ஆகியவைகளின் மீதான ஈர்ப்பு மன அமைதியையே குலைத்து விடுகிறது, மேலும் அவை ஆன்மீக முன்னேற்றத்திற்குப் பெரும் தடைகளாகி விடுகின்றன. இதை அருணகிரியார் இங்கு எடுத்துரைக்கிறார்.

    குடும்ப வாழ்க்கையில் தவறு ஒன்றுமில்லை; வீட்டிலிருந்து கொண்டே இறைவனை வழிபட முடியும், அப்படி வழிபட்ட பலர் அவரை அடைந்திருக்கிறார்கள். எனினும், குடும்ப வாழ்க்கையில் இருக்கும் ஒரு சாதாரண மனிதன் தன் நிலமை வேறுவிதமாக இருப்பதையே பொதுவாகக் காண்கிறான். அவன் எல்லாப் பக்கங்களிலிருந்தும் துன்புறுத்தப்படுகிறான். அருணகிரிநாதர் ஒரு நடைமுறை அருளாளர், மக்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் சந்திக்கும் பரிதாப நிலையை தன் மனக்கண்ணால் அவரால் காணமுடியும். உள்ளதை உள்ளவாறே எடுத்துச் சொல்வதில் அவர் வல்லவர் ---- உயரிய ஆன்மீக அனுபவங்களை மறை மொழியில் விளக்கிக் கூறுவதானாலும் சரி, அல்லது மோசமான இவ்வுலக வாழ்க்கையை மனதில் பதியும்படி தெளிவான முறையில் எடுத்து விவரிப்பதானாலும் சரி. இந்தக் “கந்தர் அநுபூதி” நூல் இறை-அநுபூதியெனும் இறையுணர்வு அநுபவங்களைப் பற்றிய ஆய்வு நூலானதால், அருணகிரியார் எது எது எப்படியெப்படி உள்ளதோ அப்படியப்படியே -- நமக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பாராமல் –– சொல்ல வேண்டி இருக்கிறது. அதனால், நாமும் அவைகளை அதனதன் உண்மையான அர்த்தத்தில் புரிந்துகொள்ள வேண்டும், விபரீதமாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

    மனிதன் அநேகமாகத் தன்னறிவின்றியே பாலியல் மற்றும் பேராசையில் அகப்பட்டுக் கொள்கிறான். ஆனால், பின்னர்தான், அவன் செய்த தவறை உணர்ந்து, கடைசியில் அவைகளிலிருந்து விடுபட முயற்சிக்கும் பொழுது, அது முடியாத காரியமாகிறது. அவன் அவற்றை விட்டுவிடத் தயராயிருக்கிறான், ஆனால் அவை அவனை விடுவதாக இல்லை. எப்படி விந்திய மலைக்காடுகளில் மாட்டிக் கொண்ட ஒருவன் எவ்வளவுதான் முயன்றாலும் அதிலிருந்து வெளியேவர வழி காணமுடியாமல் தவிக்கின்றானோ, அப்படியே இல்வாழ்க்கையில் முழுமையாக மாட்டிக்கொண்ட ஒருவன் அவைகளிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள முடியாது பரிதவிக்கிறான். எனவேதான், அவன், “நான் எப்போது ‘விடப்பெறுவேன்’?” என்று கடவுளிடம் கேட்கிறான். ஒருவன் தன்னுடைய சொந்த முயற்சியால் மட்டுமே இந்தப் பிரசனைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இயலாது. எவ்வளவு தீவிரமாக அவன் அவற்றை விட்டுவிட முயற்சிக்கிறானோ, அதைவிடத் தீவிரமாக அவை அவனை இறுகப் பிடித்துக் கொள்ளும். இதற்கான தீர்வு, அவன் தன் மனதை இறைவன்மீது நிலைநிறுத்துவதுதான். “பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” --- “நம்மிடத்திலுள்ள எல்லா பற்றுக்களையும் விட்டொழிப்பதற்கு, பற்றில்லாதவனாகிய இறைவனுடைய தாளை மட்டும் நாம் பற்றிக் கொள்ள வேண்டும்.” என்று திருவள்ளுவர் தனது குறளில் (34.9) கூறுகிறார். பெண்ணாசை மற்றும் பொன்னாசை இவைகளிலிருந்து நம்மை விடுவித்திட இறைவன் ஒருவரால் மட்டுமே இயலும். ஆகையால், ‘விடப்பெறுவதற்காக’ பிரார்த்தனை செய்யப்படுகிறது, ‘விட்டுவிடுவதற்காக’ இல்லை. அதனால்தான், அச்சாதகன் ‘நான் எப்பொழுது விடுவேன்’ என்று பிரார்த்தனை செய்யாமல், ‘நான் எப்போது விடுவிக்கப்- படுவேன்’ என்று பிரார்த்திக்கிறான். இறைவனுடைய கிருபையை பெற்றிடுவதே சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழியாகும். இரக்கமும் கருணையும் பூரணமாக முருகனிடம் குடிகொண்டு இருக்கின்றன. எனவே இச்செய்யுளில், “மந்தாகினி தந்த வரோதயனே, கந்தா முருகா கருணாகரனே, ..... என்று விடப்பெறுவேன்?” என்று சாதகன் முருகப் பெருமானிடம் கேட்கிறான்.

    கந்த அவதாரத்தில் ஒரு மகத்தான தத்துவம் இருக்கிறது. இறைவனுடைய அவதாரம் என்பது, வானம் (ஆகாசம்), காற்று (வாயு), நெருப்பு (அக்னி), நீர் (ஆப: - கங்கா), மண் (பிருத்வி) ஆகிய ஐந்து அடிப்படை கூறுகளினாலான (பஞ்ச பூதங்களாலான) இந்த வியவகார உலகில் (in the relative plane), பரம்பொருள் தத்துவம் தோன்றுவதைக் குறிக்கிறது. இது ஐங்கூறுகளின் காரியமான (சாதகனின்) மனதில் உதிக்கும் ஆன்மீக விழிப்புணர்வைக் குறிப்பிடுகிறது. இம்மனம் பெண்ணாசை மற்றும் பொன்னாசை ஆகியவைகளின் தொந்தரவிற்கு ஆளாகி, அவைகளிலேயே மூழ்கி இருந்தது; இதிலிருந்து மனதை (அச்சாதகனை) விடுவிக்கக் கோரி இச்செய்யுளில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. கந்தனுக்கு இன்னொரு பெயர் முருகன். முருகன் என்றால் “என்றும் இளமையாகவும், அழகாகவும், தெய்வத்தன்மையுடன் இருப்பவர்” என்று பொருள். அவர் அழகுக்கெல்லாம் அழகு; மேலும் அனைத்து விஷயங்களின் பின்புலமாயிருக்கும் தெய்வத்தன்மையும் அவரே ஆவார். அவரின் பிரதிபலிப்பே எப்பொருளிலும் காணப்படும் அழகு மற்றும் மதிப்பு ஆகும். வீடு, வாசல் (சொத்து), ஆகியவைகளில் நமக்கிருக்கும் ஈர்ப்பு, முருகப்பெருமானிடம் சரண் புகுந்து ஆத்மாவை அடையும் அவாவாக மடை (பண்பு) மாற்றப்பட வேண்டும். அவர் மந்தாகினி தந்தவரானாலும் சரி, வரத்தின் அவதாரமானாலும் சரி, கந்தனானாலும் சரி, முருகனானாலும் சரி, எப்படி வேண்டுமானலும் அவரை அழைத்துக் கொள்ளுங்கள்; ஆனால், அவர் ஒருவரே மொத்த கருணையின் உருவம், இரக்கத்தின் விளைவு. அத்தகைய பெருமானிடம், “ஓ கந்தப் பெருமானே! தேவர்கள் தங்கள் சொந்த சக்தியால் அசுரன் சூரபத்மனுடன் சண்டையிட முடியவில்லை. எனவே, அவர்கள் சிவனாரை வேண்ட, அவர் தந்த வரத்தினால் நீங்கள் அவதரித்தீர்கள், சூரபத்மனை அழித்தீர்கள். நானும் தேவர்களைப் போன்றே, வீடு, வாசல் ஆகியவைகளின் மீதுள்ள ஆசைகள் ஏற்படுத்திய பந்தங்களோடுச் சண்டையிட்டு என்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. என்மேல் கிருபை கொண்டு, என்னில் உதித்து, என்னை இவைகளின் பிடியிலிருந்து விடுவிப்பீராக, ஓ கருணைக் கடலே!” என்று அச்சாதகன் பிரார்த்தனை செய்கிறான்.

No comments:

Post a Comment