செய்யுள் 36



செய்யுள் – 36

    
நாதா   குமரா   நமவென்று   அரனார்
ஓதாய்   என   ஓதியது   எப்பொருள்   தான்
வேதா   முதல்   விண்னவர்   சூடுமலர்ப்
பாதா   குறமின்   பதசேகரனே.

    பொழிப்புரை: ஓ கந்தப் பெருமானே! பிரம்மனும் மற்ற தேவர்களும் அவர்கள் சிரங்களில் சூடிக்கொள்ளும் தாமரை போன்ற பாதங்களை உடையவரே! குறமகளான ஸ்ரீ வள்ளி தேவியின் பாதங்களை உங்கள் சிரத்தில் சூடிக் கொள்பவரே! ‘குருநாதா! குமரா! நமஸ்காரம்’ என்று வணங்கி, ‘எனக்கு உபதேசித்தருள்வாய்’ என்று சிவபெருமான் கேட்க, நீ அவருக்கு உபதேசித்தது எப்பொருள்?” (அதை அடியேனுக்கும் உபதேசித்து அருள்வீராக.)

விளக்கவுரை

    சிங்கார மடந்தையர் தீநெறி போய் தன்னை இழக்காமலிருக்கும் வரத்தை வேண்டிப் பெற்றுக்கொண்டு (செய்யுள்-34), அனைத்துக் கர்மங்களையும் (“தாழ்வானவை செய்தன” --- செய்யுள்-31) அழித்திட இறை-பாதங்களைத் தந்தருளப் பிரார்த்தனை செய்துகொண்டு (செய்யுள்-35), தனது குருவின் நேரடியான வழிகாட்டுதலுடன் அச்சாதகன் தீவிரமாகச் சாதனையைச் சிலகாலம் செய்து வந்தான். அதன்பயனாக, சாதனையை மேலும் தீவிரப்படுத்தி முக்தி அல்லது ஆத்மானுபூதியை கூடியசீக்கிரம் அடையவேண்டுமென்ற அவா அவனை ஆட்கொண்டது. அப்படி அனைத்து கர்மங்களிலிருந்தும் சம்சாரத் தளைகளிலிருந்தும் விடுதலை பெற்று ஆத்மானுபூதி அடைய, மிக ஆழ்ந்த தியானம் செய்வதற்குரிய உயரிய மறைஞான தீக்ஷை பெற்றிட வேண்டியதன் அவசியத்தை அவன் உணர்கிறான். பிரணவ உபதேசத்தைப் பெற்றிடுவதற்காக எப்படி சிவனார் முருகப் பெருமானை அணுகி பவ்யமாக வேண்டினாரோ, அப்படியே அச்சாதகனும் தன் குருவை அணுகி அவரைப் பணிந்து வணங்கி, பிரணவத்தின் (ஓங்காரத்தின்) மறைபொருள் இரகசியம், மற்றும் பரம்பொருள் பரமாத்வாவைப் பற்றி தனக்கு உபதேசித்திட வேண்டுகிறான். வெறும் ‘பிரணவம்’ அல்லது ‘ஓம்’ என்கிற மந்திரம் பிரத்யேகமாக சன்னியாசிகளுக்கான விசேஷ மந்திரமானதால், இதன் உபதேசத்தை அச்சாதகன் வேண்டுவதன் மூலம் அவன் சன்னியாச-தீக்ஷை கொடுக்குமாறு வேண்டுகிறானென்று மறைமுகமாகக் குறிப்பிடப்படுகிறது; ஏனெனில் சந்நியாசம், கர்மங்களை எரித்து, ஆத்மானுபூதி அடைய ஏதுவாயிருக்கும். ஓம், ஆத்மா, பிரம்மம் ஆகிய இம்மூன்றும் ஒன்றேயென்று மாண்டூக்ய உபநிஷதம் கூறுகிறது.

    பகவான் சிவனார் முருகப் பெருமானைப் பணிந்து ஓம் எனும் பிரணவ உபதேசத்தை ஏன் வேண்டினார்? இதைப்பற்றி ‘கந்த புராணம்’ விவரிப்பதைக் காண்போம்: ஒரு சமயம், ஸ்ருஷ்டி-கர்த்தா பிரம்மாஜியுடன் மற்ற தேவர்களும் பகவான் சிவனாரை தரிசிக்க கைலாயம் சென்றனர். சிவனாரை வழிபாடு செய்து, விடைபெற்றுத் திரும்பும்போது, அவர்கள் கந்தப் பெருமான் இருக்கும் வழியே சென்றனர். சிறுவனான முருகப் பெருமான் அப்பொழுது தன் நண்பர்களுடன் அங்கு விளையாடிக் கொண்டிருந்தார். தான் படைப்புத் தொழிலின் ஈஸ்வரன் என்று இறுமாப்புக் கொண்டிருந்த பிரம்மாஜி, முருகனை கண்டும் காணாததுபோல் விரைந்து சென்றார். முருகன் பிரம்மாஜிக்கு ஒரு படிப்பினை தர எண்ணி, அவரை தன்னிடம் வருமாறு கூப்பிட்டார். பிரம்மாஜியும் உடனே அவரிடம் வந்து, தலைவணங்கி, கூப்பிய கரங்களுடன் நின்றார்.

அப்போது இருவருக்கும் இடையில் நடந்த உரையாடல் இது:

    முருகப் பெருமான்: ‘தாங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?’
    பிரம்மாஜி : ‘படைப்புத் தொழில்
    முருகப் பெருமான்: ‘படைப்புத் தொழிலை எப்படிச் செய்கிறீர்கள்?’
    பிரம்மாஜி : ‘வேதங்களின் துணை கொண்டு
    முருகப் பெருமான்: ‘நீங்கள் வேதங்களை அறிவீர்களா?’
    பிரம்மாஜி : ‘ஆம், அறிவேன்
    முருகப் பெருமான்: ‘அப்படியானால், (வேதம்) ஓதுங்கள்
    பிரம்மாஜி உடனே ஓம்” என்ற கோஷத்துடன் தொடங்கும் ரிக்” வேதத்தை ஓத ஆரம்பித்தார்.
    முருகப் பெருமான்: ‘நிறுத்துங்கள், “ஓம்என்பதற்கு அர்த்தம் கூற முடியுமா’.
பிரம்மாஜி அதன் அர்த்தத்தைக் கூற முயன்றார், ஆனால் அவரால் அதன் பொருளைத் திருப்திகரமாகக் கூற இயலவில்லை. படைப்பிற்கு ஆதாரமான ௐம்’ (பிரணவம்) என்ற மந்திரத்தின் அர்த்தத்தைக்கூட சரியாக அறிந்திராத ஒருவர், படைப்புத் தொழிலைச் செய்திடத் தகுதி அற்றவர் என்று கருதிய முருகப்பெருமான் அத்தொழிலை தானே எடுத்துக் கொண்டு, பிரம்மாஜியை சிறையில் அடைத்தார். பிரம்மாஜியுடன் வந்திருந்த தேவர்கள் அனைவரும் பகவான் சிவனாரிடம் சென்று நடந்ததைச் சொல்லி, பிரம்மாஜியை சிறையிலிருந்து விடுவித்துத் தருமாறு வேண்டினர். சிவனார் முருகனிருந்த இடத்திற்கு வந்து, முருகனிடம் பிரம்மாஜியை விடுவிக்க உத்தரவிட்டார். முற்கூறிய காரணத்தால் பிரம்மாஜியை விடுவித்திட முருகன் விரும்பாவிட்டாலும், தன் தந்தையார் சிவனார் உத்தரவிட்டதனால் பிரம்மாஜியை விடுதலை செய்தார். கந்தப் பெருமானின் அருமை பெருமைகளை நன்கு உணர்ந்துகொண்ட பிரம்மாஜியும் மற்ற தேவர்களும் அவருக்குத் தலைவணங்கி, அவருடைய பாதங்களைத் தங்கள் தலைமீது சூடி, அவர் ஆசி பெற்று பின்னர், அவரின் அனுமதியுடன், தங்கள் தங்கள் லோகங்களுக்குத் திரும்பினர். எனவே, “ஓ கந்தப் பெருமானே! பிரம்மாஜியும் மற்ற தேவர்களும் தங்கள் சிரங்களில் சூடிக்கொள்ளும் பாதங்களை உடையவரே என்று இச்செய்யுள் கூறுகிறது. (தென் இந்தியாவில் இருக்கும் திண்டுக்கல் நகரத்திற்கு அருகில் ஏழு மைல் தொலைவில் இருக்கும் சின்னாளப்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு கோவிலில் குடிகொண்டுள்ள முருகப் பெருமானுக்கு, பிரம்மாஜிக்கு இருப்பதைப்போல, நான்கு முகங்கள் உள்ளன).

    பின்னர், சிவபெருமான் சிறுவன் முருகனிடம், “குழந்தாய், உனக்குப் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? தெரியுமானால் அது என்னவென்று எனக்குச் சொல்வாயாக.” என்று அன்போடு கேட்டார். உடனே, கந்தப் பெருமான், “அவ்வுயரிய பிரணவ மந்திரத்தின் உட்பொருளை வெளிப்படையாகச் சொல்லக் கூடாது; தனிமையில், ஒரு சீடனாக ஆகி குருவிற்குரிய மரியாதை தந்து, கேட்டு, அறியவேண்டிய இரகசியம் அது” என்று கூறினார். தானே ஓங்கார சொரூபம், மேலும் கந்தப் பெருமான் தன்னுடைய மற்றொரு உருவமானபோதிலும், தன் சிறுபிள்ளையின் தித்திக்கும் மொழியில் ஓங்காரத்தின் பொருளைக் கேட்டு மகிழ்ந்திட சித்தம் கொண்டு, சிவபெருமான் ஒரு சீடனுக்குரிய நடைஉடை- பாவனைகளுடன் குமரனிடம், “நாதா!, குமரா! நம:” (ஓ குருநாதா, ஓ குமரா, உனக்கு நமஸ்காரங்கள்) என்று கூறி, அவரைப் போற்றி வணங்கி, முருகனை எடுத்துத் தன் மடிமேல் வைத்துக்கொண்டு, “ஓதாய்” என்று கூறி உபதேசத்தைத் தந்தருள கேட்டுக்கொண்டார். அவ்வாறு விரும்பிக்கேட்ட சிவனாரின் காதில், பிரணவ மந்திரத்தின் பொருளை இரகசியமாக குமரன் உபதேசித்தார். அந்த உபதேசத்தைக் கேட்டு சிவனார் மகிழ்வுற்றார். ஏனெனில், தான் முன்னர் முருகனுக்கு எவ்வாறு உபதேசித்தாரோ, அவ்வாறே இருந்தது முருகனின் வியாக்கியானம். எனவே, வியந்து போற்றிய சிவனார் : “ஆம், மிகவும் உண்மை. நீ கூறிய பிரணவத்தின் அர்த்தம் மிகச் சரியானது. வேதங்கள் தங்கள் முடிவுப் பகுதியில் சுப்ரமணிய ஓம்”, ”சதாசிவ ஓம் என்று கூறப்படுவதுபோல், நாம் இருவருமே பிரணவத்திற்குப் பொருளாக இருக்கிறோம். எவன் இவ்வாறு அறிகிறானோ, அவன் எனக்குச் சரிசமமாகிறான், அதாவது அவன் என்னை அடைகின்றான். பரபிரம்ம பரம்பொருளை அடைய முயலும் ஆழமான நூலறிவும், புரிதலும் பெற்ற சாதுக்கள் மற்றும் சுத்த-சத்துவம் மிகுந்த துறவிகள் (சன்னியாசிகள்) செய்ய வேண்டிய முதன்மையான சாதனை பிரணவத்தின் அர்த்தத்தை அறிந்து கொள்வதே ஆகும். தன் பதவி பற்றிய கர்வம் கொண்ட பிரம்மாஜியால் இதன் பொருளை எப்படி அறிய முடியும்? ஆத்ம தியானத்தின் மூலம் பாவங்களிலிருந்து தங்களை சுத்தப்படுத்திக் கொண்ட யோகிகளுக்குக்கூட இது தெரியாது. என் பக்தர்கள் மட்டுமே என் கிருபையினால் இதை அறிவார்கள். அன்புக் குழந்தையே! நீ நானாக இருப்பதால், பிரணவத்தின் இந்த இரகசியமான அர்த்தம் உனக்குத் தெரிந்திருக்கிறது. அனைத்து யோகிகளிலும், அகஸ்திய முனிவர் ஒருவரே பிரணவத்தைப் பற்றி தெரிந்து கொள்ளத் தகுதி உடையவர். ஆகையால், அவருக்கு “ஓம்” பற்றி நீ உபதேசிப்பாயாக; அவர் உனது முக்கிய சீடராக ஆகிவிடுவார். இவ்வாறு பரம்பரை பரம்பரையாக இவ்வுபதேசம் மேன்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்”. என்று கூறியருளினார்.

    சிவனார் கந்தப் பெருமானிடமிருந்து “ஓம்” பற்றிய உபதேசம் பெற்றதற்கான காரணம், அவருக்கு அது தெரியாதென்பதனால் அல்ல; ஆனால், கந்தப் பெருமான் எல்லா விதங்களிலும் சிவபெருமானாகவே இருக்கிறார் என்பதை இவ்வுலகிற்கு வெளிப்படுத்துவதற்காகவே அவ்வாறு செய்தார். மேலும், இந்த சம்பவம் ஒருவன் எவ்வாறு தன் குருவை அணுகி அவரிடம் இருந்து ஆன்மீக ஞானத்தைப் பெற்றிட வேண்டும் என்பதற்கான வழிமுறையை வகுத்துத் தருகிறது. மேலும், சிவனார் கந்தப் பெருமானிடமிருந்து இவ்வாறு பிரணவத்தின் இரகசிய அர்த்தத்தைக் கேட்டுப் பெறாமல் இருந்தால், பிரணவத்தின் பொருளை அறியாததற்காக பிரம்மாஜியை சிறைச்சாலைக்கு அனுப்பிய கந்தன் அதன் பொருளை உண்மையில் அறிந்திருந்தாரா, இல்லையா என்ற சந்தேகம் மக்களின் மனதில் தோன்றக்கூடும் அல்லவா இவ்வாறாக, பிரணவ உபதேச சம்பவமானது, பல இரகசியங்களை தன்னகத்தே மறைத்து வைத்திருக்கிறது!

    ஓங்கார வடிவம்பெற்ற சிவபெருமானுக்குப் பிரணவ ரகசியத்தை உபதேசித்த அரியபெரிய மகிமைகள் கொண்ட முருகப் பெருமான், வள்ளி தேவியின் பாதங்களைத் தன் சிரசில் சூடிக்கொள்ளுகிறார் என்பது அவரின் எளிமையையும் கிருபையையும் சுட்டிக் காட்டுகிறது. மேலும் உண்மையான பக்தர்களை நாடிச்சென்று அவர்களுக்கு அருள் புரிய அவருக்கு இருக்கும் விருப்பத்தையும் இது வெளிப்படுத்துகிறது. வள்ளி தேவி பெருமானை அடைவதற்காக கடுமையான தவம் செய்து வந்தார். தேவி தன் குழந்தைப் பருவத்தில் இருந்தே, அவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக எப்போதும் அவரையே நினைத்து வாழ்ந்து வந்தார்; வாழ்க்கையில் வேறு எதுவும் அவருக்கு ருசிக்கவில்லை. அப்படியிருந்தும், அவளை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், அவள் பக்தியை மிகக் கடுமையாக பெருமான் சோதித்தார். ஆனால், அவள் தன்பால் வைத்திருந்த அன்பு உண்மையானதென்று திருப்தியடைந்தபோது, ​​அவளுடைய பாதங்களைத் தன் சிரசில் சூடுவதில் பெருமகிழ்ச்சி அடைந்தார்! இறைவன் உண்மையிலேயே தனது உண்மையான பக்தர்களின் சேவகனாக ஆகிவிடுகிறார். எவ்வித வரையறையுமின்றித் தன்னைப் பூரணமாக பெருமானிடம் அர்ப்பணித்து விடுகிற பக்தனுக்கு அவர் தன்னையே முழுமையாக தந்து அருள் செய்கிறார். இறைவனுடைய இரக்கமும் எளிமையும் அருள்புரியும் தன்மையும் இத்தகைய சிறப்புக்குரியது.

No comments:

Post a Comment