செய்யுள் 39செய்யுள்39


மாவேழ்   சனனம்கெட   மாயைவிடா
மூவேடணை   என்று   முடிந்திடுமோ
கோவே   குறமின்கொடி   தோள்புணரும்
தேவே   சிவசங்கர   தேசிகனே.
    
    பொழிப்புரை:பிரபஞ்சத்தின் அரசே! குறவர் குலத்தில் வளர்ந்த மின்னல் கொடி போன்ற வள்ளி தேவியின் தோள்களை அன்புடன் தழுவுகின்ற முருகப் பெருமானே! சிவசங்கரப் பெருமானின் குருவே! ஏழு வகையான பெரிய பிறவிகள் முடிவடைய (தீர்ந்துவிட), மாயையிலிருந்து பிரியாது (விடுபடாது) இருக்கும் மூன்று வகையான ஏடணைகளும் (ஆசைகளும்) எப்பொழுதுதான் முடிவிற்கு வருமோ? (உடனடியாக முடித்திடப் பிரார்த்திக்கிறேன்.)

விளக்கவுரை

    சன்னியாச-தீக்ஷை, மகாவாக்கிய உபதேசம், தியானம் செய்யும் முறை ஆகிய எல்லாவற்றையும் பெற்று பரம்பொருளை அடைவதற்குத் தன்னை முழுமையாகத் தயார் செய்துகொண்ட அச்சாதகன், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இறைவனை அடையஅவா கொள்கிறான். தனது குரு உபதேசித்த முறையில், அவன் சம்சார சுழற்சிக்குக் காரணமான பந்தத்தை விரைவில் உடைத்து, இறை-அநுபவத்தைப் பெற்றிடும் உறுதி பூண்டு, தன் சாதனையைத் தீவிரமாக்கிடும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறான். இத்தகைய அவாவானது அவன் உள்ளத்தில் பொங்கிப் பீறிடுவதால், பரம்பொருள் தியானத்தில் (ஞான மார்க்கத்தில்) தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கு முன்னர் (அவன் அவ்வாறு அடுத்த செய்யுளிலிருந்து தொடங்குகிறான்), மனமார்ந்த ஒரு பிரார்த்தனையை (பக்தி மார்க்கம்) இச்செய்யுளில் பெருமானிடம் சமர்ப்பித்துக் கொள்கிறான். முதலிலிருந்தே பக்தியும் ஞானமும் கைகோர்த்துக் கொண்டு வருவதையும், அவை இரண்டும் மெதுவாக ஒன்றோடொன்று இணைந்துகொண்டு வருவதையும் பார்த்து வருகிறோம். அவன், பிரபஞ்சத்தின் அரசான முருகப் பெருமானே! வள்ளி தேவியை அன்புடன் அணைந்தவரே! சிவசங்கரப் பெருமானின் குருவே! ஏழு வகையான பெரிய பிறப்புகள்கொண்ட இந்த சம்சாரச் சக்கரம் முடிவடைய (தீர்ந்துவிட), மாயையிலிருந்து பிரியாது (விடுபடாது) இருக்கும் மூன்று வகையான ஏடணைகளையும் கூடிய சீக்கிரம் முடிவடையச்செய்வாய். அவை முடிவிற்கு வந்தால்தானே, நான் இவ்வெழுவகை பிறப்புகளிலிருந்தும் விடுபட இயலும். என்று பிரார்த்தனை செய்கிறான்.

    இந்த மாயையானது எளிதில் விளங்காதது, விவரிக்கவும் இயலாதது. இதன் ஆதிக்கம் பிண்டத்திலும் (தனித்துவ ஜீவன் நிலை: Individual) உள்ளது, அண்டத்திலும் (பிரபஞ்சம்: Cosmic Universe) உள்ளது --- ஒரு பக்கம், ஆசையெனப்படும் மூன்றுவித ஏடணைகளுடன் (ஆசைகளுடன்) ஒன்றாயிருந்து (தனித்துவ ஜீவனை) மனிதனை ஆசையால்-தூண்டப்பட்ட கர்மங்களைச் செய்ய வைக்கிறது; இன்னொரு பக்கம், அவரவர்களின் கர்மங்களுக்கு ஏற்ப ஏழு விதமான உயிரினங்களில் அந்த ஜீவர்கள் பிறந்து அந்த கர்மங்களை அநுபவிப்பதற்கு ஏற்ற புலங்களை (இடம், காலம், சூழ்நிலை, பொருள்கள் ஆகியவைகளை) இப்பரந்த பிரபஞ்சத்தில் ஏற்படுத்தித் தருகிறது. இப்பிரபஞ்சத்தின் இப்புலங்களையே (பெரிய ஏழுவித பிறப்புகளையே) அடுத்த செய்யுளில் மனைஎன்று கூறப்படுகிறது, எவற்றில் அறிவிலிகளான ஜீவராசிகள் மீண்டும் மீண்டும் பிறந்திறந்து சுற்றிக் கொண்டேயிருக்கின்றன.

    பொன்னாசை (செல்வம்/ சொத்து/ உடைமை), பெண்ணாசை (மனைவி, குழந்தைகள், குடும்பம்), மண்ணாசை (இவ்வுலக வாழ்வில் பெயர், புகழ்; அவ்வுலக-சொர்க்க வாழ்வில் சுகம்) ஆகிய இம்மூன்றுமே ஏடணைகள் எனப்படும் அடிப்படை வாஞ்சைகளாகும் (ஆசைகளாகும்). இவையனைத்தும் காரண சரீரத்திலிருந்து பிரிக்கவே முடியாதவைகள்; இதுவே அவித்யா, அறியாமை, அஞ்ஞானம், மாயை என்றெல்லாம் பலவிதமாக அழைக்கப் படுகின்றது. தேவர், மனிதன், விலங்கு, பறவை, பூச்சி, நீரினம், மரஞ்செடிகொடி ஆகிய ஏழுவிதமான யோனி வகைகளில் ஜீவர்கள் பிறப்பதற்கு இம்மூன்று ஏடணைகளே காரணம் ---- அவ்வேழு சனனமும் இப்பிரபஞ்சத்தின் புலம்கள், மாயையின் ‘மனை’ அல்லது ‘வீடு’. எனவே, இம்மூன்று ஏடணைகளும் அழிவதற்கான பிரார்த்தனை இங்கு செய்யப்படுகிறது.

    இச்செய்யுள் ஒரு விதத்தில் முன்னர் நாம் பார்த்த செய்யுள்-16ன் விரிவாக்கமென்று கொள்ளலாம். 16-ம் செய்யுளில் கூறப்பட்ட பேராசை”, இங்கு மூவித ஏடணைகள் என்றும், அங்கு கூறப்பட்ட உழலுதல்இங்கு மாவேழ் சனனம்என்றும் கூறப்படுகிறது. (மேலும், இச்செய்யுள், “விதிகாணும் உடம்பை விடா வினையேன்..............” என்ற 35-ம் செய்யுளுடன் தொடர்பு உள்ளது.)

    அச்சாதகன் குடும்பத்தையும் வீட்டையும் துறந்துவிட்டான், சன்னியாசமும் மேற்கொண்டுவிட்டான், மகாவாக்கிய உபதேசமும் பெற்றிருக்கிறான் (செய்யுள்- 37). இப்பொழுது அவன் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் --- அதுதான் மாயையின் கடைசி மேற்போர்வையான அதனுடைய காரண வடிவமாயிருக்கும், அதாவது அதிலிருந்து பிரிவுபடாது பிணைந்திருக்கும், மூன்று ஏடணைகளை அடியோடு அழிப்பது. அதையும் ஒழித்திட அவன் மிகவும் ஏங்குகிறான். சம்சாரச் சக்கரத்திலிருந்து உடனே விடுபட அவன் இப்போது கொண்டிருக்கும் தீவிர ஏக்கமானது, அவன் விரைவிலேயே ஆன்மீகத்தின் கடைசி கட்ட சாதனையைச் செய்யத் தொடங்கப் போகிறானென்பதற்கான அறிகுறி (உண்மையில் அவன் இவ்வாறு செய்வதை நாம் அடுத்த செய்யுளில் காணலாம்); அதனாலேயே அவன் முருகப் பெருமானிடம் எப்படி அவர் வள்ளி தேவியை ஸ்வீகரித்து ஏற்றுக்கொண்டு தனது சொந்தமாக ஆக்கிக் கொண்டாரோ, அப்படியே தன்னையும் அவரது வசமாக்கிக் கொள்ள அவரைப் பிரார்த்திக்கிறான்.

    பிறப்பிறப்பு சக்கரம் முடிவற்றது. ஜீவாத்மா (தனித்துவமடைந்த ஆத்மா) தனது ஆசைகள் மற்றும் கர்மவினைகளுக்கேற்ப பற்பல உயிரினங்களாகப் பிறந்தும் இறந்தும் கொண்டுதான் இருப்பான்; ஜீவன் எல்லா ஆசைகளிலிருந்தும் தன்னை முழுவதுமாக விடுவித்துக் கொள்ளும்வரை அத்தகைய சம்சார சுழற்சியென்பது முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். 84 இலட்சம் வகையான யோனிகள்/ உயிரினங்கள் உள்ளனவென்றும், கடைசியில் மோக்ஷத்திற்குக் கடைவாயிலான (மோக்ஷத்-துவாரமான) மனித ஜென்மம் கிடைக்கிறதென்றும் சொல்லப்படுகிறது. இந்த 84 இலட்சம் யோனிகளும் (உயிரினங்களும்), மரஞ்செடிகொடி, நீரினம், ஊர்வன, பறப்பன, விலங்கு, மனிதன், மற்றும் தெய்வம், ஆகிய ஏழு வகைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வேழும் பரந்த பிரிவுவகைகள் என்பதைக் குறிக்கவே மாவேழ்’ (பெரிய ஏழு) என்று சொல்லப்பட்டிருக்கிறது --- ஒவ்வொரு பரந்த பிரிவுகளிலும் கணக்கற்ற உட்பிரிவுகள் உள்ளன. 84 இலட்சம் யோனிகளும் இவ்வேழு பிரிவுகளில் பின்வருமாறு பங்கீடு செய்யப்பட்டுள்ளன: (1) தேவர்கள் 14 இலட்சம் யோனிகள், (2) மனிதன் 9 இலட்சம், (3) விலங்குகள் 10 இலட்சம், (4) பறவைகள் 10 இலட்சம், (5) ஊர்வன 11 இலட்சம், (6) நீரினங்கள் 10 இலட்சம், மற்றும் (7) மரஞ்செடிகொடிகள் 20 இலட்சம்.

    இவ்வேழு மகா சனனங்களும் மாயையின் ஆளுமைக்கு உட்பட்டவை. பிறப்பு இறப்பிலிருந்து ஒரு ஜீவன் விடுபடவேண்டுமானால், அந்த ஜீவனின் மூன்றுவித ஏடணைகளும் அழிக்கப்பட வேண்டும். இந்த மூன்றுவித ஏடணைகள் மாயையின் சாரம்; இவை மாயையிலிருந்து தனிப்பட்டவையல்ல, எனவே இவைகளே மாயையாகும். எனவே, ஏடணைகளிலிருந்து விடுபடுவதென்றால், மாயையிலிருந்து விடுபடுவதேயாகும். ஏடணை என்றால் வாஞ்சை; ஆனால், இங்கு குறிப்பிடப்படுவது ஸ்தூலப் பொருள்கள் மீதான விருப்பமோ ஆசையோ அல்ல. ஜீவாத்மாவை வெளிநோக்கிச்செல்லவைக்கும் அடிப்படை ஏக்கம் () உந்துதலைக் குறிக்கும். ஆசைகள் எண்ணிலடங்காதவை என்றாலும், அவை அடிப்படையில் மூன்றில் அடக்கமாகும். மாவேழ் சனனங்களில் அதாவது வெவ்வேறு கருப்பைகளில் (முட்டை/ விதை/ கருப்பை/ ஈரப்பத வெப்பம் ஆகிய நான்கு விதங்களில்) ஜீவனானவன் பிறந்து உழலுவதற்கு, இந்த மூன்றுவித ஏடணைகளே காரணம். இந்த ஏடணைகளை ஜீவன் விட்டொழித்தாலன்றி, பிறப்புஇறப்பிலிருந்து விடுதலை பெறுவது சாத்தியமில்லை.
இந்த மூன்றுவித ஏடணைகள்:
  1. வித்தேஷணை () அர்தேஷணை:
அர்தேஷணை என்பது சொத்து, செல்வம், (பணம்), ஆகியவற்றின் மீதான ஆசை. பெருத்த செல்வம் தங்களிடமிருந்தால் அனைத்தையும் கட்டி ஆளலாம், வாழ்க்கையை முழுவதுமாக அநுபவிக்கலாம் என்று மக்கள் எண்ணுகிறார்கள். அதனால், மக்கள் செல்வந்தர்களாக ஏங்குகிறார்கள்.
  1. புத்ரேஷணை:
புத்ரேஷணை என்பது மனைவி மற்றும் குழந்தைகள் (குறிப்பாக மகன்) மீதான ஆசை. இவ்வுலகிலும் சொர்க்கத்திலும் சுகங்களை அனுபவிக்க ஆசை.
  1. லோகைஷணை:
லோகைஷணை என்பது இவ்வுலகத்தில் பெயர் மற்றும் புகழுடன் வாழ்வதில் ஆசை. அவரவர்களது இடத்தில் (ஊர்/ மாநிலம்/ நாடு), அவரவர்களின் துறைகளில் (கலை, விளையாட்டு), மதம் மற்றும் ஆன்மீகத் துறைகளில் கூட ஒவ்வொருவரும் மிக முக்கியமான நபராகவும், பரவலாக அறியப்பட்டவராகவும், மதிக்கப்பட்டவராகவும் இருக்க விரும்புகிறார்கள். சுருங்கக் கூறின், ஒருவன் எங்கிருந்தாலும், என்ன செயல் செய்து வந்தாலும், எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவன் முக்கியமானவனாகவும், நன்கு அறியப்பட்டவனாகவுமே இருக்க விரும்புகிறான்.

    தமிழ் மொழியில் இந்த மூன்று ஏடணைகள் (ஆசைகள்) மண்ணாசை, பெண்ணாசை மற்றும் பொன்னாசை என்று அழைக்கப்படுகின்றன.

    ஏடணைகள் ஒருவனுக்கு இவ்வுலகில் மகிழ்ச்சி தந்து, அவனை சொர்க்கத்திற்கும் அழைத்துச் செல்லக்கூடும், ஆனால் அவை அவன் முக்தியடைவதற்கு பெரும் தடைகளாக இருக்கின்றன. அவற்றை இதய முடிச்சு (ஹிருதய கிரந்தி) மற்றும் சம்சாரத்தின் மூலம் என அழைக்கலாம். அவற்றை தகர்த்தெறிவதென்பது மிகவும் கடினம். பிரபஞ்சத்தையும் கடந்து எங்குமிருக்கும் எல்லையில்லாப் பேருணர்வை, அவை ஒரு குறிப்பிட்ட தனி உடல் அல்லது குறிப்பிட்ட உலக அநுபவத்தின் எல்லைக்குள் கட்டுப்படுத்துகின்றன. இந்த ஏடணைகள் மட்டும் (ஜீவனிடத்தில்) இல்லையெனில், எவர்தான் மோக்ஷத்தை அடையமாட்டார்கள்? இப்படியாக, ஆசைகளே பரம்பொருளை அடைவதற்கும், அதன் அநுபூதியை பெறுவதற்கும் நேரடியான தடைகளாக இருக்கின்றன; ஆனால், அதற்கு நேர்மாறாக, இறை-கிருபை ஆத்மானுபூதியை அடைவதற்கான நேரடியான வழியாகிறது. எனவே, அச்சாதகன் இந்த மூன்றுவித ஏடணைகளை அழித்திட பெருமானின் கிருபையை வேண்டி மூன்றுவித அடைமொழிகளால் அவரை அழைக்கிறான்: “இப்பிரபஞ்சத்தின் அரசனே”, “வள்ளி தேவியை அன்புடன் அணைத்த பெருமானே”, “பகவான் சிவனாருக்கே குருவானவரே”.

    ஒரு நாட்டிலுள்ள குடிமக்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால், அவற்றைத் தீர்த்துக் கொள்ள இயல்பாகவே அவர்கள் தங்கள் அரசனைத்தான் நாடுவார்கள். அதுபோலவே, அச்சாதகனும் தனது ஏடணைகளை களைந்திடுவதற்கு, இப்பிரபஞ்சத்திற்கே அரசனாகிய இறைவனை நாடுகிறான்.

    கந்தப் பெருமான் வள்ளி தேவியார் இருந்த தினைப் புனத்திற்கே சென்று, அன்புடன் அவரை அணைத்து, தனது துணைவியாகவே அவரை ஏற்றுக்கொண்டு, அதன் மூலம் கொடூரமான வேடுவர்களின் பிடியிலிருந்து அவரை நிரந்தரமாகவே விடுவித்தார். அதுபோலவே, ஒரு சாதகன் பெருமானின் கிருபையால் அன்போடு அணைக்கப்பட்டால், அவன் இந்த ஏடணைகளின் பிடியிலிருந்து நிரந்தரமாக விடுதலைபெறுவான். எனவேதான், அச்சாதகன், பெருமானைவேடுவர்களால் வளர்க்கப்பட்ட மின்னல் போன்ற வள்ளி தேவியை அன்புடன் அணைத்தவரேஎன்று அழைத்து அவரின் கிருபையை தனக்கருளுமாறு மிகவும் வேண்டிப் பிரார்த்திக்கிறான்.

    மேலும், குருவின் கிருபையானது ஒருவனுக்கு முழுவதுமாக வந்தமையும்போது, அவன் பரம்பொருளுடன் நன்கு ஐக்கியம் ஆகிவிடுகிறான். ஆகையால், “சிவசங்கரரின் குருவானவரேஎன்று முருகப் பெருமானை குறிப்பிடுகிறான்.

    சாதனையின் துவக்கக் கட்டத்தில், மாயையானது ஒரு சாதகனை மனைவி, குழந்தைகள், செல்வம், போன்ற தனித்தனியான ஸ்தூலப் பொருள்களின் வடிவத்தில் அவனுக்கு வெளியிலிருந்து தொந்திரவு செய்கிறது. தனது ஆன்மீகப் பயணத்தின் துவக்க நிலையிலிருந்த அச்சாதகனது இவ்வாறான நிலைமை செய்யுள்-5-ல் வர்ணிக்கப்பட்டிருந்தது. ஆனால், குருவிடமிருந்து தியான நுட்பங்களைப் பற்றிய உபதேசத்தைப் பெற்று, தன் தியானத்தில் சற்றேகுறைய சமாதிநிலையை அனுபவித்த பின்னர், மாயை என்பது அவனுக்கு வர்ணிக்க முடியாத ஒன்றாகிறது ---இல்லேயெனும் மாயை” (செய்யுள்- 29). கண்ணிற்குப் புலனாகிற உலகமாக இருந்தபோதிலும், அண்ட-விழிப்புணர்வில் (சற்றேகுறைய சமாதிநிலையில்) இந்த மாயை இல்லாததாகிறது; இந்த மாறுபட்ட பார்வையினால், மாயையானது, எப்படியிருந்தாலும், அழிந்துவிடும் (“படுமாயை”) என்ற ஒரு நிர்ணயத்தை அவனுக்குத் தந்தது. ஆயினும், அவன் இவ்வுலகில்தான் எதார்த்தமாக வாழ்ந்தும் அதை அநுபவித்தும் வர வேண்டியிருக்கின்றது (செய்யுள்-31). ஆனால், அந்நிலையில், மாயையானது முன்பிருந்ததுபோல் ஸ்தூலமான தனித்தனிப் பொருள்களாக இல்லாமல், இப்போது மொத்த உலகமாகவே இருக்கின்றது. உலகம் என்று இங்கு கூறப்படுவதில் அவனது உடலும் அடக்கம். மற்ற சமயங்களில் அனுபவிக்கப் பட்டாலும், இவை தியானநிலையில் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால், இச்செய்யுளில், மாயையானது சிருஷ்டி முழுவதற்கும் நீடித்துப் பரந்துள்ளது --- அதாவது, ஏழு வகையான ச()னனமாகத் தொகுக்கப்பட்ட 84 இலட்சம் யோனிகளும் அந்த மொத்த சிருஷ்டி முழுவதுமே மாயையின் விரிவாக்கம்தான் (காதுகளால் கேள்விப்பட்ட ஆனால் கண்ணால் பார்த்திராத பல லோகங்கள் கொண்ட இப்பிரபஞ்ச மாயை) --- எனினும், அதுவே (மாயையே) ஜீவர்களின் இதயத்தில் ஏடணைகளாக (அடிப்படை வாஞ்சைகளாக) அமர்ந்திருக்கிறது. இந்த மாயைதான் எவ்வளவு விசித்திரமாக இருக்கிறது பாருங்களேன்!

    அதன் ஸ்தூல வடிவத்தில், மாயை, மனைவி, வீடு போன்ற தனித்தனியான பொருள்களாகவும், சாதகனுக்குப் புறம்பானதாகவும் கருதப்படுகின்றது; ---- அதாவது, இப்பொருள்கள் வரம்புக்குட்பட்டவை, மேலும் தூரத்திலுள்ளன. அதன் சூட்சும வடிவத்தில், மாயை இரு புறங்களிலும் விரிகின்றது, அதாவது ஒருபுறத்தில் தனித்தனியான பொருள்களிலிருந்து உலகம் முழுவதையுமே ஒரே பொருளாக்கிக் கொள்கிறது, அதேபோல் மற்றொரு புறத்தில் வெளியிலுள்ள பொருள்களிலிருந்து அவன் உடல்வரையும் (உடல் உட்பட) வந்துவிடுகிறது ---- அதிகமாகப் பரந்து இருக்கிறது, மற்றும் அருகாமையிலும் இருக்கின்றது. அதன் காரண வடிவத்தில், தனித்தனிப் பொருள்கள் மற்றும் உலகம் முழுவதும் என்பதிலிருந்து மேலும் விரிந்து முழு பிரபஞ்சத்தையும் (84 இலட்சம் யோனிகள் கொண்ட ஏழு பெரிய சனனங்களையும்) சேர்த்துக் கொள்கிறது ஒரு புறத்தில்; அதே சமயம் இன்னொரு பக்கம் அது அவனுக்குள்ளேயே நுழைந்து, அவனது இதயத்தில் ஏடணைகளாக அமர்ந்துகொள்கின்றன ----- மிகமிகப் பரந்தும் அகன்றதுமாக இருக்கிறது, அதே சமயத்தில் மிகமிக அண்மையானதும் ஆகிவிடுகிறது. இதுதான் மாயையின் மர்மம்.

    ஆகையால், மனைவி, வீடு போன்ற பொருள்களைத் துறப்பது (ஸ்தூல நிலை) ஒரு நல்ல விஷயம்தான்; எனினும், ஆத்மாவை அடைவதற்கு அது மட்டும் போதாது. அதேபோல், தியானத்தில் இவ்வுலகமும் இவ்வுடலும் இல்லையென்ற நிலை ஏற்படுவது (சூட்சும நிலை) அதைவிட சிறந்ததுதான்; எனினும், இதுவும் போதாது. முக்தி அடையப்பட வேண்டுமானால், இதயத்தில் குடிகொண்டுள்ள ஏடணைகளை (வாஞ்சைகளை) அழிப்பதன்மூலம் (காரண நிலை) மாவேழ் சனனங்கள் முடிவிற்கு வரவேண்டும். எப்படி இரத்தினச் சுருக்கமாகவும் மிக ஆற்றலுடனும் அருணகிரியார் நுட்பமான ஆன்மீக இரசியங்களை நமக்கு எடுத்துக் கூறுகிறார் பார்த்தீர்களா!

    அச்சாதகன் சன்னியாசம் எடுத்துக் கொண்டபோதே அனைத்து ஆசைகளையும் துறந்து விட்டானே, பின் இப்பொழுது எதற்காக மூவேடணை அழிக்கப்பட வேண்டுமென்று திரும்பவும் கூறப்படுகின்றது என்ற கேள்வி எழலாம். சன்னியாசம் மேற்கொள்ளும் சமயத்தில் அவன் துறந்தது மூவித ஏடணைகளின் ஸ்தூல மற்றும் சூட்சும வடிவங்களை மட்டுமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது அழிக்கப்பட வேண்டியது ஏடணைகளின் (வாஞ்சைகளின்) காரண வடிவம் அல்லது காரண நிலை; இவ்வடிவில், மூவித ஏடணைகளையுமே தனித்தனியாக பிரித்திட இயலாது, அவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும்; மேலும் இவ்வேடணைகள் மாயையோடு பின்னிப் பிணைந்து ஒன்றாகி இருப்பதால், அவைகளை மாயையிலிருந்து பிரித்துக் காணவோ அறியவோ இயலாது. சன்னியாசம் மேற்கொள்ளும் அச்சமயத்திலேயே, மாயையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் ஏடணைகளின் காரண வடிவமும் அழிக்கப்பட்டு விட்டதென்று கொண்டால், அப்பொழுதே சாதகன் இறைவனை அடைந்திருப்பானே! அப்படியாக இருந்திருப்பின், ஏன் குருவானவர் அவனை “அஹம் பிரம்ம அஸ்மி” என்று தியானம் செய்து, “பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையை” (அதன் மூலம் அகந்தையை அதன் வேரான அறியாமையுடன் களைவாயாக) என்று அதன் பின்னர் உபதேசித்தார்? (செய்யுள்-37). “அரிவாய் அடியோடும் அகந்தையை” என்பது ஏடணைகளின் காரண வடிவத்தைக் குறிக்கிறது. ‘ஏடணைகளின் காரண வடிவம்’, மாயை, அறியாமை, அவித்யை, அகந்தையின் அடி (மூலம்) --- இவையெல்லாம் ஒன்றே. சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தபடி இந்த வார்த்தைகள் உபயோகப் படுத்தப்படுகின்றன.

    இச்செய்யுளில் குறிப்பிடப்பட்ட மாயையிலிருந்து விடுபடாத மூவித ஏடணைகள், அவற்றின் காரண வடிவத்தைக் குறிக்கின்றன; ஏனெனில் அவை ‘மாவேழ் சனனத்திற்குக்’ காரணம். இந்த காரண வடிவ மாயையைதான் மகாமாயை என்றும், இதை அழிக்க வல்லவர் இறைவன் மட்டுமே (“மகமாயை களைந்திட வல்ல பிரான்”) என்றும் செய்யுள்-5இன் முன்பகுதியில் கூறப்பட்டுள்ளது. மாயையின் இந்த காரண வடிவத்தை, அதன் ஸ்தூல வடிவமானஅகமாடை மடந்தையர்” (செய்யுள்-5-ன் பின்பகுதி) என குறிப்பிடப்பட்ட வீடு, செல்வம், மனைவி ஆகியவைகளாலான ஜகமாயா-விலிருந்து வேறுபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டும்; அதேபோல், அதன் சூட்சும வடிவமானஇல்லேயெனும் மாயை” (செய்யுள்-29), “படு மாயை” (செய்யுள்-31) என்று குறிப்பிடப்பட்டதிலிருந்தும் வேறுபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, அச்சாதகன், இச்செய்யுளில் மூவித ஏடணைகளின் காரண வடிவமான மகாமாயையைக் கூடிய சீக்கிரம் அழித்திட, பெருமானின் கிருபைக்குக் கடுமையாக ஏங்குகிறான்.

    மூவித ஏடணைகளின் பிடியிலிருந்து முற்றிலுமாக விடுபடுவதற்குத் தீவிரமாக ஏங்கும் அச்சாதகன் துயரத்துடன் அழுவதை இச்செய்யுள் எதிரொலிக்கிறது. இச்செய்யுளை நெருக்கமாகவும் மற்றும் ஆழமாகவும் ஆராய்ந்து பார்த்தால், அதிலிருந்து அவனுடைய மனமார்ந்த இரகசியப் பிரார்த்தனை பின்வருமாறு காணப்படும்: “எனது ஜீவாத்மா மூவித ஏடணைகளால் பீடிக்கப்பட்டிருக்கிறது. தாங்கள் வள்ளிதேவியை அன்புடன் அணைத்துக்கொண்டதுபோல, (ஜீவாத்மாவான) என்னையும் அரவணைத்தால்தான், என்னால் இவ்வேடணைகளின் பிடியிலிருந்து விடுபட்டு பிறப்புஇறப்பு சங்கிலியை அறுத்திட இயலும். ஓ பெருமானே, தாங்கள் அவ்வாறு செய்ய எப்பொழுது தயவு காட்டப் போகிறீர்கள்? உங்களைத்தவிர எனக்கு வேறு கதி இல்லை. எனவே, என்மேல் மனமிரங்கி வெகு சீக்கிரம் தயை செய்யுங்கள்.ஜீவனை மாவேழ் சனனத்தில் ஆழ்த்தி துயரப்படுத்திக் கொண்டிருக்கும் மூவித ஏடணைகளிலாலான இறைவனின் இந்த மாயையை, அதே இறைவனின் கிருபையால் மட்டுமே கடந்திட இயலும். எனவேதான், பகவான் ஸ்ரீகிருஷ்ணர், உண்மையில் ஸத் துவம், ரஜஸ், மற்றும் தமஸ் ஆகிய முக்குணங்களாலான என்னுடைய தேவமாயை தாண்ட முடியாதது. யார் என்னை சரணடைகின்றனரோ அவர்கள் மட்டுமே இந்த மாயையை தாண்டுகின்றனர்என்று ஸ்ரீமத் பகவத் கீதையில் (7.14) பறையறிவித்துக் கூறுகிறார்.

No comments:

Post a Comment