செய்யுள் 41



செய்யுள் – 41


சாகாது   எனையே   சரணங்களிலே
காகா   நமனார்   கலகம்   செயுநாள்
வாகா   முருகா   மயில்   வாகனனே
யோகா   சிவஞான   உபதேசிகனே.

    பொழிப்புரை: ஓ முருகப் பெருமானே! வெற்றிவாகை மாலைகளைச் சூடிய அழகரே! ஓ மயில் வாகனனே! ஓ யோகேஸ்வரனே! ஓ சிவஞானமாகிய பிரம்ம ஞானத்தை தந்தருளும் உயரிய குருவே! யமராஜன் வந்து கலகம் செய்யும் (உயிரை உடலிலிருந்து பிரிக்கும்) நாளில், அவன் கைவசப்பட்டு நான் சாகாமலிருக்க (பிறப்பு இறப்பு சக்கர சுழற்சியில் சிக்காமலிருக்க) தங்களின் திருக்கமலப் பாதங்களிலே என்னை (இங்கேயே) காத்தருள்வீர், (இப்பொழுதே) காத்தருள்வீர்.”

விளக்கவுரை

    சன்னியாசியான அச்சாதகன் இவ்வுலக வாழ்விற்கு மீண்டும் திரும்பாமல் செய்திடும் முக்தியை அடைவதற்காக ஞான வேலின்மேல் இடைவிடாத தியானத்தில் ஈடுபட்டான் (செய்யுள்-40) (இது ஞான மார்க்க சாதனை). அவனது அந்த ஆர்வமானது, இச்செய்யுளில் செய்யப்படும் ஒரு பிரார்த்தனை மூலம் (பக்தி மார்க்க சாதனை) வலுவூட்டப்பட்டு, உறுதிப் படுத்தப்பட்டு மற்றும் நன்கு தெளிவாக்கப்படுகிறது. அவன் பெருமானை உடனே அடைந்திட விழைகின்றான்; இவ்வுடல் சாகும்வரை காத்திருக்க விரும்பவில்லை. அவன் முனைப்பாகவும் இடைவிடாதும் தளராமலும் வேலின்மேல் செய்யும் தியானத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறான், அதனால் அவன் முக்திக்கு (ஆன்ம விடுதலைக்கு) மிகவும் நெருங்கியிருப்பதை உணர்கிறான்; அதனால், அவன் மறுபிறப்பறுக்கும் ஜீவன்முக்தியை (அதாவது, இங்கேயே, இப்பொழுதே --- இவ்வுடலில் வாழ்ந்து கொண்டிருக்கும்பொழுதே ஆன்ம விடுதலையைப்) பெற்றிட விரும்புகிறான். ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் யமராஜா வந்து, தன் கடமையைச் செய்யத்தான் போகிறார் என்று அவனுக்குத் தெரியும்; ஆனாலும், அவன் சாவதைப்பற்றி பயப்படவேயில்லை என்பதும் அவன் இயம்பும் நமனார் கலகம் செயுநாள் என்ற கூற்றிலிருந்து தெளிவாகின்றது. ஏனெனில், உடல் அழிவதை எவராலும் தவிர்க்க முடியாது, அவர் அவதார புருஷராகவே இருந்தாலும் சரி, என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்; அது இயற்கையின் விதிக்குப் புறம்பானது.

    இங்கேயே’, ‘இப்பொழுதே’ மோட்சம் (ஜீவன்முக்தி) என்றால் மோட்சமானது ஏதோவொரு குறிப்பிட்ட ‘இடத்திலோ’, ‘சமயத்திலோ’ அடையப்படுவதென்று அர்த்தமாகாது. அது இடம், நேரம் ஆகிய வரையறைகளுக்கு உட்படாமல், அவற்றைக் கடந்து செல்வதாகும். அது, இந்த உடல் உயிரோடிருக்கும்பொழுதே இறைவனை அடைந்து, எங்கும் வியாபித்திருக்கும், அனைத்தையும் அறிந்திருக்கும் ஒரு விழிப்புணர்வுடன் வாழ்வதாகும். சுவாமி சிவானந்தா இதை பின்வருமாறு விளக்குகிறார்: “ஒரு (ஜீவன்முக்த) யோகி ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் அறிகிறான். (அவருக்கு) கடந்தகாலமும், எதிர்காலமும் தற்காலத்துடன் ஒன்றாகிவிடுகின்றன. எல்லாம் ‘இப்பொழுதே’ இருக்கின்றன. எல்லாம் ‘இங்கேயே’ இருக்கின்றன. அவர் காலத்தையும் இடத்தையும்’ (Time and Space) கடந்து இருக்கிறார்.”

    “சரணங்களிலே கா கா” --- “என்னை உனது திருவடிகளில் பாதுகாப்பாயாக, பாதுகாப்பாயாக.” ‘கா’ என்றால் பாதுகாப்பது. ‘கா’, ‘கா’ பாதுகாப்பாயாக என்று இருமுறை வேண்டுவது, அவனுடைய தீவிர விருப்பம், உடனே முக்தி (இவ்வுடலில் வாழும் இப்பொழுதே முக்தி) பெறவேண்டும் என்பதையும், இவ்வுடல் சாகும்வரை காத்திருக்க அவன் தயாராகயில்லை என்பதையும் தெரியப்படுத்துகிறது. சில ஆசிரியர்கள் நினைப்பதுபோல் “கா,கா” என்பது யமன் வரப்போகிற / வந்துவிட்ட தருணத்தில் விடுக்கப்பட்ட ஒரு அவசர வேண்டுகோள் அல்ல. “நமனார் கலகம் செயும் நாள்” --- என்றோ ஒருநாள் யமன் வந்து கலகம் செய்யப் போகும் பொழுது என்று அவன் சொல்வதிலிருந்து யமன் வருநாள் தூரத்திலிருக்கிறதென்பது தெளிவாயிருக்கிறது. எனவே, இங்கு செய்யப்படும் பிரார்த்தனை, இறப்பதிலிருந்தோ அல்லது யமனிடமிருந்துத் தன்னை காத்துக் கொள்வதற்கோ செய்யப்பட்டதல்ல; உடனே (உயிருடன் வாழும் இப்பொழுதே) முக்தி பெறுவதற்கும், அதன்மூலம் (உயிர்) ‘சாகாது’ இருப்பதற்கும், அதாவது மறுபிறப்பிகளிலிருந்து விடுதலை பெறுவதற்கும், செய்யப்பட்ட பிரார்த்தனை. யமன் வந்து உயிரை உடலிருந்து பிரிப்பதென்பது உறுதி, அதிலிருந்து எவராலும் தப்புவதற்கு இயலாது; தோன்றிய ஒன்று எதுவாகயிருந்தாலும், அது ஒருநாள் அழிந்து போகத்தான் வேண்டும்; அவதாரங்களும் மகாபுருஷர்களும்கூட அவர்களுடைய உடலை விடத்தான் வேண்டியிருந்தது. எனவே, “சாகாதுஎன்பது இவ்வுடல் மரணமாகாமல் இருப்பதற்காக அல்ல; மாறாக, பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபட்டு முக்தி பெறுவதற்காக.

    ஒருவன் இறக்கும் பொழுது, யமனார் உயிரை உடலிருந்து பிரிக்கிறார்; ஆனால், அந்த உயிர் முக்தி பெற்றுவிட்ட ஆத்மாவாகவோ, அதாவது “இறைவனின் திருவடியில் காக்கப்பட்ட” ஆத்மாவாகவோ இருந்தால், யமனால் அதை மேற்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. முக்தி அடையாத (அ) இறைவனால் காக்கப்படாத ஆத்மாவைத்தான் யமன் எடுத்துக் கொண்டு சென்று, அவரவர்களின் கர்மத்திற்கேற்ப அடுத்த பிறப்பை அளித்திட முடியும். உயிர்தான் (ஆத்மாதான்) உடலிலிருந்து வெளியேறி, மறுபிறப்பை எடுக்கிறது, உடலல்ல. எனவே, உயிருக்கு மறுபிறப்பு இருக்குமானால், அது ‘சாதல்’ எனப்படுகிறது; மறுபிறப்பில்லையெனில், ’சாகாது’ எனப்படுகிறது. முக்தி பெற்ற ஆத்மா, ஞானிகள், யோகிகள் மற்றும் அருளாளர்களுக்கு மேற்கொண்டு பிறவிகளில்லாததால், அவர்கள் ‘சாகாத’வர்கள். எனவே, அவர்கள் தங்கள் உடலை நீக்கும் பொழுது, அவர்கள் ‘இறந்துவிட்டனர்’ என்று சொல்லாமல், அமரர் ஆனார்என்று கூறப்படுகின்றது; ஞானியர், யோகிகளானால் அவர் மகாசமாதி அடைந்தார்என்று கூறப்படுகின்றது. எனவே, இச்செய்யுளில், “யமனார் என்னுயிரை உடலிருந்து பிரித்தெடுக்கும் அந்தநாளில் (“நமனார் கலகம் செயுநாள்”), அவர் என்னுயிரை எடுத்துச்சென்று மறுபிறப்பு விதிக்க அவசியமேற்படாமலிருக்க (“சாகாது”), என்னை (“எனையே”) உங்கள் திருப்பாதங்களிலே (“சரணங்களிலே”) (“கா”) இங்கேயே காப்பாயாக, (“கா”) இப்பொழுதே காப்பாயாக.” என்று பிரார்த்திக்கப்படுகிறது.

    இச்செய்யுளில் செய்யப்படும் பிரார்த்தனை பத்தாம் செய்யுளின் பிரார்த்தனையிலிருந்து சிறிது வேறுபட்டது. அங்கு, யமன் ‘வந்தால்’ அவரிடமிருந்துத் தன்னை காப்பாற்றுமாறு பிரார்த்தனை; ஏனெனில், அப்பொழுது அவன் தன் சாதனையின் ஆரம்பத்திலிருந்ததால் தன் குறிக்கோளான முக்தி வெகு தூரத்திலிருந்தது, அதை அடைவதற்கு முன்னர் அவன் இறக்கத் தயாராயில்லை. ஆனால், இங்கு வேண்டுவது உடனடியாக இறைவனின் பாதங்களில் பாதுகாப்பது (அதாவது, ஜீவன்முக்தி), யமன் எப்பொழுது வரவேண்டுமோ அப்பொழுது வந்துவிட்டுப்போகட்டும், அதைப்பற்றி அவனுக்குக் கவலையில்லை.

    அச்சாதகன் செய்யுள் 21 மற்றும் 35ல், இறைவனின் திருவடிகளைத் தந்தருளுமாறு வேண்டியதும் சாவதற்கு முன் இப்பிறவியிலேயே முக்தி பெற்றிடுவதற்காகவேதான். என்றாலும், அச்சமயங்களில் முக்தியானது வெகு தொலைவில் இருந்தது. ஆனால், இப்பொழுதோ, அது அவன் கைக்கு எட்டும் தூரத்தில் வந்து விட்ட நிலை; எனவே, “உடனே முக்தி” வேண்டும் என்று “கா”, “கா” என பிரார்த்திக்கின்றான். இறைவன் உடனே (பறந்து) வரவேண்டும் என்பதற்காக அவன் பெருமானை மயில் வாகனனேஎன்று சொல்லி அழைக்கிறான். அதேபோல், யோகத்தையும், சிவ / பிரம்ம ஞானத்தையும் உடனே தந்தருளுவதற்காக அவரை யோக சிவஞான உபதேசிகனேஎன்றும் சொல்லி அழைக்கிறான். முருகப் பெருமானும் அவனுடைய பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து மகிழ்ச்சியுடன் ஓடிவந்து அவனுக்கு “உடனே” முக்தி தந்தருளுவதை அடுத்த மூன்று செய்யுள்களில் காண்போம் --- ‘வேலை நிகழ்த்திடல்’ (செய்யுள்-42), ‘பேசா அநுபூதி பிறத்தல்’ (செய்யுள்-43), மற்றும் தனது ‘திருவடி அருளுதல்’ (செய்யுள்-44). இவை மூன்றும் ஒன்றே, அதாவது இங்கேயே இப்பொழுதே முக்தி பெறுதல்’, “ஜீவன்முக்தி அடைதல்”. அவன் இவ்வாறு மூன்று விதங்களிலும் திருவருளைப் பெறுகிறான். என்னே திருவருளின் மகிமை! என்னே ஆச்சரியம்!!

    வேல்-உணர்வில் அல்லது அஹம் பிரம்ம அஸ்மிதியானத்தில் நன்கு நிலைநிறுத்திக் கொள்ளச்செய்யும் திடமான முயற்சி (செய்யுள்-40), சன்னியாசி-சாதகனின் இறப்பு பற்றிய பயத்தை நீக்கிவிட்டது; இப்பொழுது அவன் ‘இறப்பைக்’ கண்டு ஏளனமாகச் சிரிக்கிறான், ஏனெனில், (கூடிய சீக்கிரம் ஜீவன்முக்தி அடைந்தபின்) அவன் உயிர் விடும்போது, யமன் உயிரை உடலிலிருந்து பிரிக்கும் தன் கடமையை மட்டுமே வெறுமனே செய்கிறார், அதாவது இயற்கையின் நியமத்தின்படி பிராரப்த கர்மங்களின் முடிவில் இவ்வுடலானது தானே மடிந்துபோகும்; அதற்கு முன்னரே அவன் முக்தி அடைந்துவிடுவான்.

    அஹம் பிரம்மாஸ்மிதியானம் செய்வதின் நோக்கம், இவ்வுடலை விடுவதற்கு (சாவதற்கு) முன்னரே இறைவனை அடைவதுதான். எனவே, வேலின்மேல் தியானம் அல்லது அஹம் பிரம்ம அஸ்மிதியானத்தை இடைவிடாது செய்ய மேற்கொண்ட சீடன் (செய்யுள்-4௦), அத்தியானத்தை மேலும் தொடர்ந்து செய்வதோடல்லாமல், தான் உடனடியாகவே பெருமானின் திருவடியில் காக்கப்படுவதற்கு தீவிர ஆசை கொள்கிறான். அதாவது, அந்த விழிப்புணர்விலேயே நிலைபெற்றிட விழைகிறான்; இங்கேயே இப்பொழுதே முக்தி பெற்றிட, ஜீவன்முக்தி நிலையை அடைந்திட விழைகிறான், அதன் மூலம், அவன் சம்சார பந்தமான பிறப்புஇறப்பு சக்கரத்திலிருந்து நிரந்தரமாக விடுதலை அடைந்திட விரும்புகிறான்.

    பெருமானின் தாள் மற்றும் வேல்-உணர்வு ஆகிய இரண்டுமே ஒன்றுதான். இறை-தாள் என்பது ஒரு வரையறைக்குட்பட்ட பொருளல்ல; அவை அடையப்பட வேண்டிய ‘பரம இலட்சியம்’. வேல் எப்படியோ தாளும் அப்படியே; அவைகளே பரமபதம்’ (அ) சர்வ வல்லமையின் உயரிய உறைவிடம்(அவ்வாறு நாம் செய்யுள் 44ல் காண்போம்). எனவே, இறை- தாளை அருளுவது (பதங்களில் பாதுகாப்பது) அல்லது வேல்-உணர்வை அருளுவது என்பதன் அர்த்தம் ஜீவன்முக்தியாகிய ஆன்மீக விடுதலையை அடைதல் என்றாகும். “தாள்” என்பது வெளியில், கண்களுக்குத் தெரிவதாயும், ஒருவன் தலைமேல் சூடப்படுவதாயும் கருதப்படுகிறது; அப்படியிருக்க, “வேல்” என்பதோ சைதன்ய-சொரூபமாக ஒருவனின் அந்தரங்க இதயத்தில் உணர்வு-நிலையாக வெளிப்படுத்தப்படுவதாகும். ஆகையால், ஒன்று வெளிப்புறச் செயலாகும்போது, ​​மற்றொன்று உள்ளுணர்வு வெளிப்பாடு ஆகிறது, ஆனால் இரண்டும் குறிப்பது ஒன்றையே. இறை-தாளில் பாதுகாப்பு அளித்திட வேண்டி செய்யப்படும் இச்செய்யுளின் பிரார்த்தனை, உண்மையில் அவன் முந்தைய செய்யுளில் எந்த வேல்-உணர்வில் நிலைபெற்றிட இடைவிடாது பெருமுயற்சி செய்து கொண்டிருகிறானோ அந்த வேல்-உணர்வை வெளிப்படுத்துவதற்கான பிரார்த்தனையேயாகும். அடுத்த செய்யுளில் அவன் அடையும் வேல்-உணர்வு வெளிப்பாடு, அம்முயற்சியின் பூரண நிறைவேற்றமும் இச்செய்யுளில் செய்யப்படும் பிரார்த்தனையின் நிறைவேற்றமும் ஒருமிக்க அடையப்பட்டதாகும்.

    உடல்-உணர்வு (அ) சீமைக்கு (நிபந்தனைக்கு) உட்பட்ட உணர்வு மரண பயத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால், இப்பொழுது அவன் பிரார்த்திப்பதுபோல இறை-தாளில் பாதுகாப்பு அளிக்கப்படும்பொழுது (அல்லது இறை-உணர்வு (அ) வேல்-உணர்வு வந்தமையும்பொழுது), ஆன்மாவானது இறை-தாளிலேயே நிரந்தரமாக ஒடுங்கி விடுவதால், புனர் ஜன்மம் அற்றுப் போய்விடுகின்றது, மரண பயமும் நீங்கிவிடுகின்றது, சம்சாரமும் முற்றிலும் இல்லாமற்போகிறது.

    உடல் மரணமடைவது, உயிர் பிரிவது (மரணத்திற்குப் பின்னர் உயிர் பயணிப்பது) ஆகிய இரண்டிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உடல் இறப்பதென்பது உடலின் தருமம்; அது தவிர்க்க இயலாத ஒன்று; உடல் உருவானதற்குக் காரணமானது எதுவோ அது (பிராரப்தம்) வலுவிழக்கும்பொழுது, உடல் சிதைவதென்பது அவ்வுடலின் தர்மம், அது ஒரு இயற்கைச் செயல் என்றே கூறலாம். உயிர் (ஜீவாத்மா) பிரிவதென்பது அது உடலை விட்டுப் பயணிப்பது, சம்சார சுழற்சிக்காக மறுபிறப்பு எடுப்பதற்காக. மறுபிறப்பு எடுப்பது உடலல்ல; ஜீவாத்மாவே. இறந்த பிறகுதான் மறுபிறப்பு எடுப்பது இயலுமாதலால், மேலும் மறுபிறப்பென்பது ஜீவாத்மாவிற்குத்தான், உடலுக்கல்ல என்பதால், மறுபிறப்பு எடுக்க வேண்டிய ஜீவாத்மா ‘இறக்கிறது’ என்று சொல்லப்படுகிறது. எனவே, ஜீவாத்மா இறக்கிறது என்று கூறப்படும்பொழுது, அது மறுபிறப்பைத் (புனர் ஜன்மத்தைத்) தான் சுட்டுகிறது. உடல் இறப்பது ஒருபொழுதும் தவிர்க்க இயலாது; ஆனால், ஜீவாத்மாவின் இறப்பை (மறுபிறப்பை) தவிர்த்திட இயலும். மறுபிறப்பிலிருந்து விடுதலை பெற்றிடுவதையே சாகாதுஎன்றும், தவிர்த்திட இயலாததும் இயற்கை நியதியுமான உடல் இறப்பை நமனார் கலகம்என்றும் இச்செய்யுள் குறிப்பிடுகின்றது.

    உடல் இறக்கும்பொழுது, அந்த ஜீவாத்மனால் கழிக்கப்பட வேண்டிய நல்ல/தீய கர்மங்கள் (சஞ்சிதம்) மிச்சமிருந்தால், யமராஜன் அதை எடுத்துச்சென்று, அதன் கர்மவினைகளுக்கேற்ப தீர்ப்பெழுதி, உயரிய / தாழ்ந்த மறுபிறப்பை அளிக்கிறான். இந்த மறுபிறப்பு-இறப்பு சுழற்சியைத் தவிர்ப்பதற்கு ஒரு ஜீவன் தீவிர இறை-பக்தி மூலமோ அல்லது ஆழ்ந்த இறை-தியானத்தின் மூலமோ முக்தி (ஆன்மீக விடுதலை) பெறவேண்டும். அதற்காகவே, இறைவன் தனது தாளில் தன்னை சேர்த்து காப்பதற்கு அச்சாதகன் பிரார்த்தனை செய்கிறான். அதேபோல், ஜீவன், தனது உடல் அழிவதற்கு முன்பே வேல்-உணர்வில் அல்லது ஆத்ம-உணர்வில் நிலைபெற்றுவிட்டால், ஆத்ம ஞானத்தால் கர்மவினைகளை எரித்து மறுபிறப்பிலிருந்து விடுதலை பெறுகிறது. இந்த உடலில் வாழும்போதே இத்தகைய விடுதலையை ஒருவன் அடைந்திட இயலும். அதுவே, ஜீவன் முக்திஎனப்படுகிறது.

    முக்தியை (அ) இறைதாளை இறந்த பின்னர் தான் அடைந்திட இயலும் என்பது அவசியமில்லை; இங்கேயே, இவ்வுலகில் வாழ்ந்திடும் இப்பொழுதேகூட அடைந்து அநுபவிப்பது சாத்தியம்தான். மேலும், முக்தியை அடைவதற்கு, ஒருவன் இறக்கும்பொழுது அவன் உடல் எந்நிலையில் இருக்கிறது என்பது முக்கியமில்லை ---- அது ஆரோக்கியமாகவோ, நோய்வாய்ப்பட்டோ, இளமையாகவோ, முதுமையாகவோ, மற்றவர்களால் பூஜிக்கப்பட்டோ அல்லது புறக்கணிக்கப்பட்டோ இருக்கலாம்; உண்மையில் வேண்டப்படுவது யாதெனில் அந்த ஜீவனின் விழிப்புணர்வு எந்நிலையில் (ஸ்திதியில்) இருந்தென்பதே முக்கியம். ஏனெனில், முக்தி உடலிற்கு அல்ல, அது ஜீவனுக்கு மட்டும்தான் உரியது. ஜீவ உணர்வுதான் பந்தப்படுகிறது (அ) விடுதலையடைகிறது. உடல் இறப்பதற்கு முன்னரும், இறக்கும் தருணத்திலும், ஜீவ-உணர்வு எந்நிலையில் இருக்கிறதோ, அதைப்பொருத்தே இறப்பிற்கு பின்னர் அதன் நிலை அமையும். எனவே, இறப்பதற்கு சற்றுமுன்னர் ஜீவன் அறிந்திராத / இருந்திராத ஒரு நிலையை, இறந்த பின்னர் அது அடைந்திடுமென்று சொல்லமுடியாது. அது இறப்பதற்கு முன்னர் எப்படி இருந்ததோ, அப்படியே பின்னரும் இருக்கும். இது ஜீவன்முக்தியின் சாத்தியக்கூறை விளக்குகின்றது. ஆகவேதான், எமனார் தன் கலகத்தைச் செய்ய வருமுன்னரே (உயிரை எடுத்திட வருவதற்கு முன்பே), முருகப் பெருமான் அவர் தாளில் தன்னை இருத்திக் காத்தருளுமாறு அச்சாதகன் பிரார்த்தனை செய்கிறான். இதிலிருந்து அவன் இவ்வுடலில் உயிருடன் வாழும்பொழுதே முக்தி பெற ஏங்குகிறான் --- ஜீவன் முக்தியை (நிலையான இறை-உணர்வை) தனக்கு வழங்க வேண்டுகிறான். எனவே, ‘’நமனார் கலகம் செயுநாள்’’ என்பது உடல் இறப்பதையும்’, “சாகாதுஎன்பது ஜீவாத்மா மறுபடியும் பிறக்காமலிருப்பதையும்’, அதாவது ஜீவாத்மனின் சம்சார-சக்கரத்திலிருந்து விடுபட்ட முக்தியையும் குறிக்கின்றது.

    இங்கு கவனிக்கவேண்டிய சுவாரஸ்யமான விஷயம் ஒன்று உள்ளது. ஒருவன் தன் உடலை நீக்குவதற்கு முன்னரே தனது அனைத்துக் கர்மங்களையும் முடித்து விட்டால், அவன் இங்கே முக்தி பெறுவான்; அல்லது, அவனிடம் அனுபவிக்கவேண்டிய கர்மங்கள் இன்னும் பாக்கி இருக்குமாயின், அவற்றை அனுபவித்து முடிப்பதற்கு இன்னுமொரு பிறப்பாவது எடுக்க வேண்டிவரும். எனவே, பக்தி (அ) யோகம் (அ) ஞான மார்க்கத்தின் மூலம் தனது கர்மங்கள் அனைத்தையும் முடித்துக் கொள்கிறவர்கள், இவ்வுடலில் வாழும்பொழுதே முக்தி அடைகின்றனர். அவர்கள் ஜீவன்முக்தர்கள். அவர்கள் தங்கள் உடலை நீத்தபின்னர் விதேகமுக்தர்களாக ஆகிறார்கள். மற்றவர் அனைவரும் மீண்டும் பிறப்பு எடுத்துதான் ஆகவேண்டும்.

    நமனார் கலகம் செய்யும் நாளில் எனைக் காப்பாயாக! எனை உனது சரணங்களிலே காப்பாயாக!’, என்று அச்சாதகன் பிரார்த்திக்கிறான். அவன் ஏன் கா”, ”கா” – காப்பாற்று, காப்பாற்று என்று இருமுறை வேண்டுகிறான்? இது ஒரு “அவசர அறைகூவல்” அல்ல. யமனிடமிருந்து உடனே காப்பதற்காகக் கூப்பிட்டதாக இருக்கமுடியாது, ஏனெனில் ஆபத்து எதுவும் (யமன்) அவனுக்கு அருகாமையில் வந்துவிடவில்லை; ஆபத்து தூரத்தில்தான் இருக்கிறது,கலகம் செயும் நாள்(யமன் வரும் நாள்) என்று சொல்வதிலிருந்தே இது நன்கு தெரிகிறது. யமன் ஏற்கனவே வந்து, அவனுடைய உயிரை எடுக்க முயற்சி செய்கிறான், அதுவரையும்கூட முருகப் பெருமான் அவனைக் காக்க வரவில்லையென்றால், இது ஒரு “அவசர அறைகூவல்” எனக் கருத இயலும். ஆனால், அப்படி எதுவும் ஆகவில்லையே! அல்லது, “யமன் எப்பொழுது வருவானோ அப்பொழுது நீ சீக்கிரம் ஓடிவா” என்றும் சொல்லுவதற்கில்லை, அது அர்த்தமற்றது; ஏனெனில் யமன் வருவதற்கு அவகாசம் இருக்குமானால், பெருமான் வருவதற்கும் அதேயளவு அவகாசம் இருக்குமல்லவா! யமன் எருமைக்கடாவின்மேல் மெதுவாகத்தான் வரமுடியும், பெருமானோ பறக்கும் மயிலின்மேல் விரைந்து வரமுடியும். எனவே, பெருமானை இப்பொழுதே அவசரப்படுத்த வேண்டியதில்லை. மேலும், பெருமானோ அனைத்தும் அறிந்தவர், சர்வ வலிமையுடையவர், மற்றும் எங்கும் இருப்பவர் ஆயிற்றே. ஆகவே, “கா”, ‘’கா’’ என்றது யமனிடமிருந்து காப்பதற்காக அல்ல; அது அந்த ஆத்மாவின் உடனடியாக முக்தி பெறவிரும்பும் வாஞ்சையைக் குறிக்கிறது. இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது: அவன் “கா, கா” என்று காப்பாற்றுமாறு வேண்டுவது யமனிடமிருந்து அல்ல, ஆனால் அது இறைவனது தாள்களில் (சரணங்களிலே “கா, கா”). இறை-தாளில் காக்கப்படுவது என்பது முக்தியைக் குறிக்கும். இருமுறை கா,காஎன்று சொல்வதற்கு காரணம் முக்தி உடனே வேண்டும் --- இங்கேயே இப்பொழுதே, உடலில் உயிர் இருக்கும்பொழுதே முக்தி (ஜீவன்முக்தி) வேண்டும் என்பதே! இறந்தபின்னர் முக்தி அடைவதற்காக அல்ல.

    இப்பொழுதே’, ‘இங்கேயேஎன்பவை அறிந்துகொள்வதற்குக் கடினமான மறைபொருளுடைய வார்த்தைகள். அவை காலத்தையும், இடத்தையும் கடப்பதைக் குறிக்கின்றன. அதாவது காலத்தையும் இடத்தையும் கடந்துநிற்கும் நிலையை குறிக்கின்றன. ‘இப்பொழுது’ என்றால் என்ன? ஒவ்வொரு க்ஷணமும், அந்த நொடிப்பொழுதில் இப்பொழுதுதான். ‘கடந்தது’ என்பது அப்போது ‘இப்போதாக’ இருந்தது; ‘இப்போது’ என்பது இப்பொழுது ‘இப்போதாக’ இருக்கிறது; ‘நிகழப்போவது’ என்பது அப்போது ‘இப்போதாக’ இருக்கும் (அப்போதைய இப்போது). எனவே, ‘கடந்தது’, ‘இப்போது’, மற்றும் ‘நிகழப்போவது’ --- இவை ’இப்பொழுதின்’ ஒரு விளையாட்டே, அதாவது ஈறில்காலம். ஆகையால், கடந்தகாலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் என்பது ஒருவகையில் பார்த்தால் வெறும் இப்போதுஎன்பதன் வார்த்தை ஜாலம்தான், அதாவது இவை ‘ஈறில்காலம்’ அல்லது நித்தியம்என்பதையே குறிக்கும். நித்தியத்தில், கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற எந்த வித்தியாசமும் இல்லை; அது எப்பொழுதுமே இப்போதுதான். அதேபோல, எல்லையற்ற / முடிவற்ற ஒன்றில், இங்கு என்றும், அங்கு என்றும், எங்கு என்றும் இல்லை; அது எப்போதும் இங்கு’தான். எனவேதான் பிரார்த்தனை இவ்வாறு செய்யப்பட்டுள்ளது: சரணங்களிலே கா கா” --- தங்கள் திருவடிகளில் என்னைக் “கா” (இங்கேயே காப்பாயாக), “கா” (இப்பொழுதே காப்பாயாக). ஆகையால், இப்பிரார்த்தனை இங்கேயே, இப்பொழுதே, அடையப்படும் ஆன்மீக விடுதலையான ஜீவன்முக்தியைப் பெறுவதற்கான ஏக்கத்தை / தாபத்தையே வெளிப்படுத்துகிறது. தங்கள் திருப்பாதக் கமலங்களில் என்னை இங்கேயே, இப்பொழுதே சேர்த்துக் காத்து, ஜீவன் முக்திஅருள்வாயாக, அதன் மூலம் யமராஜன் வந்து கலகம் செய்யும் (உயிரை உடலிலிருந்து பிரிக்கும்) நாளில், நான் அவன் கைவசப்பட்டுச் ‘சாகா’மலிருப்பேன் (புனர் ஜன்மத்தைத் தவிர்ப்பேன்.)” ---- “நமனார் கலகம் செயுநாள், (அவன் கைவசப்பட்டு) சாகாது எனையே சரணங்களிலே கா கா.” என்று அச்சாதகன் பிரார்த்தனை செய்கிறான்.

No comments:

Post a Comment