செய்யுள் 42செய்யுள் – 42


குறியைக்   குறியாது   குறித்தறியும்
நெறியைத்   தனிவேலை   நிகழ்த்திடலும்
செறிவற்று   உலகோடு   உரை   சிந்தையுமற்று
அறிவற்று   அறியாமையும்   அற்றதுவே.

    பொழிப்புரை: (தியானத்தின் குறிக்கோளான) குறியை (பிரம்மத்தை) வேறொன்றையும் சிந்திக்காமல் அதைமட்டுமே சிந்தித்து அறியும் (அனுபவத்தில் உணரப்படும்) முக்திநெறியை (முக்திநிலையை), (அந்த நிலையேயான) ஒப்பற்ற வேலை, (நிகழ்த்திடலும்) உணரச்செய்தவுடனே, மக்களுடனும் உலகத்துடனுமான அனைத்து உறவுகளும் அற்று, பேச்சும் மனமும் அறவே செயல்பாடு அற்று நின்று, புத்தியும் அற்று, அறியாமையும் அடியோடு அற்றுப் போயின.”

விளக்கவுரை

    கந்தர் அனுபூதி நூலில் இந்த ஒரு செய்யுளில் மட்டும்தான் இறைவனைப் பற்றிய நேரடியான குறிப்பு இல்லை; ஏனெனில், இது சமாதி நிலை அல்லது பேருணர்வு நிலையை விவரிப்பதனால் இருக்கக்கூடும்.

    ஆம்; இறைவன் மற்றும் குருவின் அருளால், சாதனையின் குறிக்கோள் அடையப்பட்டது, வேல் நிகழ்த்தப்பட்டது, ஜீவ உணர்வை பிரம்ம உணர்வு ஆட்கொண்டுவிட்டது, ஜீவன்முக்தி அடையப்பட்டது, அறியாமையும் அகன்றது, அதன் அனைத்துப் பரிவாரங்களும் செயல்படாமல் போய்விட்டன! ஆஹா! இடையறாது செய்யப்பட்ட இப்பெரும் (ஆன்மீகப்) போராட்டம் பிரம்ம ஞானமெனும் பழத்தை அளித்தது!

    இச்செய்யுள், அதியற்புத அகநிலை உணர்வு அநுபவமாகிய சமாதி நிலையைப்பற்றியது; இதை ஒருவன் தான் புரிந்து கொள்வதென்பதே மிக மிக அதிசயம் (மிகவும் கடினம்), அதனினும் கடினம் அதனைப் பிறருக்கு விளக்கிச் சொல்வது. ஆனால் இதுதான் புனிதத்திலும் புனிதமான அநுபவிக்கவேண்டிய நிலை என்பது மட்டும் திண்ணம். அநுபவம், சுய அநுபவமே; அதை புத்தியால் புரிந்து கொள்ள முடியாது, அதை விவரிக்கவும் முடியாது, ஆனால், ஒவ்வொருவரும் அதை தமக்குத் தாமே அநுபவிக்கப்படவேண்டியதே. இது தெய்வ கிருபையுடன் வாழ்நாள் முழுவதும் செய்யப்பட்ட ஆன்மீக சாதனையின் சிகரம், உச்சநிலை, முழுநிறைவு. அந்த சன்னியாச-சீடன், குரு தனக்குத் (செய்யுள்-37ல்) தந்தருளிய உபதேசங்களை, ஒன்றுகூட மிச்சமில்லாமல் மொத்தமாக தீவிரமாக, இடையறாது செயல்படுத்தி, தனது குறிக்கோளான சமாதிநிலையை, இறையனுபூதியை அடைந்தான்.

    செய்யுள்- 37ல் குரு தந்த உபதேசம்:
  1. அஹம் பிரம்ம அஸ்மி’ (“இறையோன் பரிவாரம்”) என்று தியானம் செய்வாயாக; அந்த மேலாம் பதத்தை அடைய, அதில் நிலைபெற முயற்சிப்பாயாக (“எனும் பதம் மேவலையே புரிவாய்”);
  2. “பொறையாம் அறிவால்” – சித்-சொரூபமான, ‘பூரண அறிவு’, ‘நிறை உணர்வு’ அல்லது 'உணர்வு-இருப்பு’ என்ற அறிவின் துணை கொண்டு;
  3. “அரிவாய் அடியோடும் அகந்தையையே” – அகந்தையை அதன் ஆணி வேருடன் அறுத்தெறிவாயாக (களைந்தெறிவாயாக, பிடுங்கி எறிவாயாக).
அந்த சன்னியாச சீடன் தீவிர ஆர்வத்துடனும் முனைப்புடனும் குரு தனக்குக் கொடுத்த (மேற்படி) உபதேசித்ததை அனுசரித்து, கர்மத்தை அழிக்கும் ‘வேலின்’-மீது இடையறாது தியானம் செய்யத் துவங்கினான் (செய்யுள்-40); பின்னர், அதை உறுதிப்படுத்த, உடனேயே ஜீவன்முக்தி நிலையை இங்கேயே இப்பொழுதே அடைந்திடுவதற்கு பெரும் ஏக்கம்கொண்டு இறைவனிடம் பிரார்த்தனையும் செய்தான் (செய்யுள்-41); இறுதியாக, இப்பொழுது இச்செய்யுளில் இறைவனை ---- தன் குறிக்கோளை --- அடைந்து விட்டான். எப்படி?

    “குறியை” --- ‘குறி’ என்பது இலட்சியம் (அ) குறிக்கோள் (அ) அடையப்பட வேண்டிய பொருள், அதாவது பிரம்மம். (பக்தி மார்க்கத்தில், இது முருகன், இறைதாள் (இறைபாதம்) என்றழைக்கப்படுகிறது. ஞான மார்க்கத்தில், இது வேல்-உணர்வு, ஆத்மா, ஸச்சிதானந்தம், பரபிரம்மம், பரம்பொருள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது).

    “குறித்து” --- ‘குறித்து’ என்றால் ‘குறியை’ (பிரம்மத்தை) ஒருமுகப்படுத்திய மனதுடன் சிந்திப்பது. இது “தாரணம்” என்று சொல்லப்படும். இப்படி பிரம்மத்தை ஒருமுகப்படுத்திய மனதுடன் ‘தாரணம்’ செய்யும்போது, அதில் தொந்தரவுகள், இடையூறுகள் செய்யும் திசைதிருப்பும் வேறுவித எண்ணங்களும் இருக்கும்.

    “குறியாது குறித்து” – ‘குறியாது’ என்றால் வேறு எந்த ஒன்றைப்பற்றியும் எண்ணாதிருத்தல், அதாவது வேறுவித திசைதிருப்புதல்கள் இல்லாது இருத்தல் என்றாகும்; ‘குறியாது குறித்து’ என்றால் ‘எந்தவித திசைதிருப்புதல்களுமின்றி, பிரம்மத்தின்மீது முழுமையாக ஒருமுகப்பட்ட மனதை நிலைநிறுத்துதல்’ என்றாகும். பிரம்மத்தைப் (வேலைப்) பற்றியே இடையறாது எண்ணுதல் என்பது, எப்படி எண்ணையை ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொன்றிற்கு வார்க்கும்பொழுது அது இடைவெளியின்றித் தொடர்ந்து பாய்வது போன்றதாகும். இது தியானம் எனப்படுகிறது. தியானம் என்பது ஒரு செயல்முறை, இதில் மூன்று விஷயங்கள் உள்ளன: தியானிப்பவர், தியானப் பொருள், மற்றும் தியானம் செய்தல் (தியானிக்கப்படும் பொருளைப் பற்றி எண்ணுதல்). திசைதிருப்பல்கள் எதுவுமின்றி தியானமானது நீண்ட காலத்திற்கு செயல்படுத்தப்படும்பொழுது, சமாதி நிலையை அடைவது தானே நிகழ்கிறது.

    “அறிதல்” – ‘அறிதல்’ என்றால் ‘அறிந்து இருத்தல்’ (அ) ’அநுபவித்தல்’, அதாவது ‘சமாதி’. சமாதியில், தியானிப்பவர், தியானச் செயல் ஆகிய இரண்டும் தியானப் பொருளான ‘பிரம்மத்தில்’ ஐக்கியமாகி, அது மட்டுமே ‘இருக்கிறது’.

    “குறியைக் குறியாது குறித்து அறிதல்” – என்றால் பிரம்மத்தைத் தவிர வேறு எந்த எண்ணமுமின்றி அதைப்பற்றி மட்டும் தியானம் செய்வதால், மனம் பிரம்மத்தில் லயமடைந்து, பிரம்மமாகவே ஆகிவிடுகிறது (நதியானது கடலில் கலந்து, கடலாகவே ஆகிவிடுவதுபோல), மேலும் பிரம்மமாக இருந்து பிரம்மத்தை அறிகிறது. இந்நிலை சமாதி எனப்படுகிறது. இதுவே ‘ஆன்மீக விடுதலை’, இதுவே ‘முக்தி’, இதுவே ‘மோட்சம்’. ‘குறியைக் குறியாது குறித்து அறிதல்’ என்ற இச்சொற்றொடர் சமாதியில் முடிவடையும் உண்மை தியானத்தின் வழிமுறையை விவரிக்கிறது. இவ்வாறு முடிவடையும் “நிலை”யாகிய சமாதி, ‘’நெறி” என அழைக்கப்படுகிறது --- “குறியைக் குறியாது குறித்து அறியும் நெறி”.

    “நெறி”: -- இதன் அர்த்தம் முக்தி, அதாவது ஆன்ம விடுதலை (அ) மோட்சம். இது (ஒன்றை அடைவதற்கான) வழியோ/ சாதனமோ அல்ல, இது ஒரு ‘தூய உணர்வு நிலை’ (“State” of Consciousness), சமாதி.

    “குறியைக் குறியாது குறித்து அறிதல்” மற்றும் “நெறி” --- இவ்விரண்டும் ஒன்றையே குறிக்கிறது --- சமாதி அல்லது மோட்சம்.

    ஆக, பரம்பொருளான, பூரணமான பிரம்மத்தை (குறியை), வேறு எந்த ஒன்றையும் சிந்திக்காது (குறியாது), முழுதும் குவிக்கப்பட்ட மனதை (ஏகாக்ர சித்தம்) பிரம்மத்தில் நிலைநிறுத்தி {(குறியை மட்டும்) “குறித்து”}, அவன் பிரம்மத்தை அறிந்தான் (அ) பிரம்ம-அநுபூதி அடைந்தான் (அறிதல்); அந்த நிலையே “சமாதி”, “மோட்சம்”, “ஆன்மீக விடுதலை” (“நெறி”). ‘நெறி’ என்பது ‘முக்தி’ அல்லது ’மோட்சம்’; அது மோட்சத்திற்கு ஒரு வழி அல்ல.

    இந்த “நெறி” என்பதே ‘பதம்’ என்று செய்யுள்-37ல் குறிப்பிடப்பட்டது --- “பதம் மேவலையே புரிவாய்” என்று அதை அடைந்திட விரும்பவேண்டும் என்று சாதகனுக்கு அறிவுரை கொடுக்கப்பட்டது. சமாதி நிலையில், தியானம் செய்திடும் ஜீவ-உணர்வு பிரம்ம-உணர்வில் ஐக்கியமாகி, பிரம்மமாக ஆகி, பிரம்மமாகவே ‘இருந்து’ விடுகிறது, எப்படி நதியானது கடலை நோக்கி வேகமாக ஓடி, கடலில் சங்கமித்து அதில் ஐக்கியமாகி, கடலாக ஆகி, அதன்பின்னர் கடலாகவே இருந்து விடுகிறதோ அப்படியே. சமாதியில், ஒருவன் பிரம்மமாக இருந்து, பிரம்மத்தை அனுபவிக்கிறான், அதாவது பிரம்மத்தை அறிகிறான் அதாவது ‘பிரம்மமாக இருத்தல்’ (ஸத்) மற்றும் ‘பிரம்மத்தை அறிதல்’ (சித்), ---- ‘இருத்தல்’, ‘அறிதல்’ ஆகிய இரண்டும் ஒன்றே; அதாவது ‘ஸத்’ தான் ‘சித்’. மேலும், பிரம்மம் என்பது தூய-உணர்வு (“பிரக்ஞானம் பிரம்ம” – மகாவாக்கியம்); ‘வேல்’ என்பதும் அஃதே. பிரம்மம், வேல், மோட்சம், தூய-உணர்வு, சமாதி, ஆன்மீக விடுதலை, இறை-பாதம் ---- ஆகிய அனைத்து சொற்களும் ஒன்றையே தான் உணர்த்துகின்றன. எனவேதான், அருணகிரியார் ‘நெறியை’ (மோட்சம்), ‘தனி வேலை’ (தூய / பெரிய உணர்வு), என்று சொல்லி, அவை இரண்டையும் ஒன்றாகவே/ சமமாகவே பாவிக்கிறார், ---- அவ்விரண்டு சொற்களும் ஒரே பொருளையே குறிக்கின்றன; வேறு வேறுப பொருள்களை அல்ல. இவ்விரண்டு சொற்களும் குறிப்பது (அவைகளால் அடையப்பட்ட நிலைகள்) வேறு வேறாக இருந்திருப்பின், இரண்டையும் தனிமைப்படுத்திக் (வேறுபடுத்திக்) காட்ட, ‘நெறியையும்’, ‘தனி வேலையும்’ என்றுதானே அவர் சொற்களை அமைத்திருப்பார். (இச்செய்யுளில் பின் இரு வரிகளில் “உரை சிந்தையும் அற்று அறிவற்று அறியாமையும் அற்றதுவே” என்பதில், ‘உரை’, ‘சிந்தை’, ‘அறிவு’, ‘அறியாமை’, இவை ஒன்றிலிருந்து மற்றொன்று வேறானது.) ஆனால், அப்படி ‘நெறியையும்’, ‘தனி வேலையும்’ என்று சொல்லாமல், ‘நெறியை’, ‘தனி வேலை’, ‘நிகழ்த்திடலும்’ என்றுதான் அமைத்திருக்கிறார். ‘நிகழ்த்திடலும்’ என்பதன் அர்த்தம்: ‘அளிக்கப்பட்டதும்’, ‘சம்பவித்ததும்’, ‘நடைபெறச் செய்ததும்’. மோட்சம், சமாதி, வேல், பேருணர்வு, ஆகியவை தூய-உணர்வு “நிலைகள்”; இவை ஒருவரால் “கொடுக்கப்படுவதல்ல”, “தரப்பட்டதல்ல”. இவை இறை-அருள்/குரு-கிருபையால் “தானே நிகழ்வன”. சமாதி (அ) மேலாம்-உணர்வு (பேருணர்வு) நிலையானது தியானத்தின் உச்ச கட்ட முடிவில் தன்னில் தானே வந்தமைவது. தியானம், ஒரு செயல்முறை; ஆனால், சமாதி என்பது ஒரு ‘நிலை’, ‘அனுபவம்’ (அதில் செயல்முறை கிடையாது). தியானத்தின் முடிவில் ‘சமாதி-நிலை’ தானே வந்தமைகிறது. ஆகவேதான், ‘நிகழ்த்திடலும்’ என்று இங்கு குறிப்பிடப்படுகிறது, அதாவது, (இறையருளினால்) சமாதி-நிலை தானே நடைபெறும் (அ) சம்பவிக்கும் (அ) நிகழந்திடும். எனவே, ‘நெறியை, தனி வேலை, நிகழ்த்திடலும்’ --- சமாதி நிலை (அ) வேல்-உணர்வு நிகழ்ந்தபோது, என்ன ஆயிற்று? “மக்கள் மற்றும் வெளியுலகத்துடனான அனைத்து உறவுகளும்/ தொடர்புகளும் அற்றுப்போயின, பேச்சும் மனமும் அற்றுப்போயின, புத்தி (அகங்காரம்) அற்றுப்போயிற்று, அறியாமையும் அழிந்து போயிற்று”. “அரிவாய் அடியோடும் அகந்தையையே” என்று அச்சாதகனுக்கு செய்யுள் 37ல் அறிவுறுத்தப்பட்டது, அதன்படி அவன் அகந்தையின் வேரை (அறியாமையை) வெட்டி எறிந்தபோது, அதன் கிளைகளும், சுள்ளிகளும், தழைகளும் சேர்ந்தே அழியத்தானே செய்யும்! எனவே, அகந்தையின் வேரான அறியாமை அழிக்கப்பட்டபோது, அதனோடு சேர்ந்த புத்தி, மனம், பேச்சாற்றல், மற்றும் அனைத்து உறவுகளுமே அற்றுப்போய்விட்டன என்று இங்கு குறிப்பிடப்படுகின்றது. இப்படியாக, செய்யுள் 37ல் அளிக்கப்பட்ட உபதேசத்திற்கும், அது இங்கு அடையப்பட்டதற்கும் உள்ள முழு பொருத்தத்தை இச்செய்யுளில் காண்கிறோம்.

    சற்றேகுறைய சமாதி அநுபவம் பெற்ற பின்னர் அச்சாதகனிடம் அறியாமை அழியாமல் இருந்தது; எனவேதான், அவன் “(தாங்கள்) பொல்லேன் அறியாமை பொறுத்திலையே” என்று பெருமானிடம் புலம்பினான் (செய்யுள்-28 & 29). அதற்காக, ‘அஹம் பிரம்ம அஸ்மி’ என்று தியானம் செய்து, ‘அரிவாய் அடியோடும் அகந்தையையே’ என்ற உபதேசம் அவனுக்குத் தரப்பட்டது (செய்யுள்-37). அந்த அறியாமை முழுமையாக அழிக்கப்பட்டதென்ற ஒரு தெள்ளத்தெளிவான அறிவிப்பு இச்செய்யுளில் செய்யப்பட்டுள்ளது.

    சமாதி-நிலை எப்படி நிகழ்கிறது என்பது ஓர் அதிசயமே? ஒருவனின் பூர்வ-புண்ணியங்கள் (பல ஜன்மங்களில் செய்த நற்செயல்களின் புண்ணியங்கள்), சாதனை-சக்தி (ஆன்மீகப் பயிற்சியின் சக்தி), குருவின் தீக்ஷையின் (சக்தி-பாய்ச்சலின்) பலம், மற்றும் ஈஸ்வர-கிருபை (இறையருள்) ஆகிய அனைத்தும் ஒரு மர்மமான முறையில் ஒன்று சேர்வதன்மூலம், வேல்-உணர்வு (அ) பேருணர்வு தானே ‘வெளிப்படுகிறது’ / ‘நிகழ்கிறது’. இந்நிலை ‘துரீயம்’ என கூறப்படும். {மூவித அவஸ்தைகளான நினைவு, கனவு மற்றும் ஆழ்-உறக்க நிலைகளை எல்லாம் கடந்த ‘நான்காம்’ (துரீயம்) நிலை’}. இந்தத் துரீய நிலையில், உணர்வின் ஐந்து கோசங்களுடனுமான தொடர்பு அற்றுப்போய் விடுகின்றது. இந்நிலை இச்செய்யுளில் மிகச்சிறப்பான முறையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    உலகத்திடனுனான உறவு அன்னமய கோசம் (தூல உறை – Physical Sheath) எனப்படும் ஸ்தூல உடலால் (ஐந்து கர்மேந்திரியங்களின் மூலம்) ஏற்படுகிறது. ‘பேச்சு’ பிராணனின் செயல்பாடு – அது பிராணமய கோசம் (முக்கிய உறை – Vital Sheath) எனப்படுகிறது. மனம், மனோமய கோசம் எனப்படுகிறது (மன உறை- Mental Sheath). புத்தி, விக்ஞானமய கோசம் (புத்தி உறை - Intellectual Sheath). அவித்யா அல்லது அறியாமை ஆனந்தமய கோசம் (பேரின்ப உறை- Bliss Sheath). ஜீவனானவன் சமாதி-நிலை அடையும் பொழுது ஐந்து கோசங்களும் செயலற்றுப்போகின்றன. இதை வெகுஅழகாக இச்செய்யுளில் “செறிவற்று உலகோடு, உரை சிந்தையுமற்று, அறிவற்று, அறியாமையும் அற்றது” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையே ஆழந்த மோன/மௌன நிலையுமாகும், அடுத்த செய்யுளில் சொல்லப்பட்ட ‘பேசா அநுபூதி’ நிலை; செய்யுள்-44ல் சொல்லப்படும் ‘சூடும்படி அளிக்கப்பட்ட’ மோட்சத்திலும் மற்ற இடங்களிலும் கமழும் (ஒளிரும்) முருகனின் கழல்களும் ஆகும் (“முருகன் சரணம் சூடும்படி தந்தது”).

    இம்மூன்று செய்யுள்களும் (செய்யுள்-42, 43 & 44) இறைவனை அடையப்பட்டதை (இறையனுபூதியை) மூன்று விதங்களில் விவரிக்கின்றன. இச்செய்யுளில், இது ஆழ்ந்த உட்பொருளுடைய, இரகசியமான முறையில் கூறப்பட்டுள்ளது (ஞானம், அல்லது வேல்); அடுத்த செய்யுளில் வெளிப்படையாக, ‘அநுபூதி’ என்ற சொல்லை உபயோகப்படுத்தி (‘அநுபூதி பிறந்தது’) கூறப்பட்டுள்ளது. அதனால் அடுத்த செய்யுள் இந்நூலின் முகடாக, உச்சகட்டமாகக் கருதப்படுகின்றது. அதற்கடுத்த செய்யுளான 44ல், பக்தி பூர்வமாகப் பேசப்படுகிறது (பக்தி -- ‘முருகன் சரணம் சூடும்படி தந்தது’). ஆனால், எதற்காக அருணகிரியார் இறையனுபூதியை மூன்றுவிதமாக மூன்று செய்யுள்களில் விவரிக்கவேண்டும்? இதற்கான பதிலறிய நாம் 44ம் செய்யுள்வரை காத்திருக்க வேண்டும்.

    இச்செய்யுளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதே கருத்துக்கள் செய்யுள்-48லும் மேலும் மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

    வேல்-உணர்வு (அஹம் பிரம்ம அஸ்மி) தியானத்தில் நிலைபெறுவதற்காக உறுதியான முயற்சி அச்சாதகனால் கையாளப்பட்டதாலும் (செய்யுள்- 40), ஜீவன் முக்தி நிலையை இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் இப்பொழுதே அடைந்துவிட ஏக்கம் கொண்டு அம்முயற்சி மேன்மேலும் அவனால் தீவிரப்படுத்தப்பட்டதாலும் (செய்யுள்- 41), அவனுக்கு வேல்-உணர்வெனப்படும் முக்தி இப்பொழுது அளிக்கப்பட்டு, அதனால் ஜீவ-உணர்வெனப்படும் அறியாமையும் அழிக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் ‘அறியாமை அற்றது’ என்று பறைசாற்றுவதுபோல் இச்செய்யுளில் அறிவிக்கப்படுகிறது. இங்கு அடையப்பட்ட நிலையே சமாதி நிலை ---- இதுவே உணர்வு-இருப்பு நிலை --- இதுவே முன்னர் கூறப்பட்ட ‘அஹம் பிரம்ம அஸ்மி’ என்ற தியானத்தை தொடர்ந்து செய்ததால் ஏற்பட்ட அறியாமையை அழித்தொழிக்கும் ‘பொறையாம் அறிவு’. இந்த மிகப்பெரிய அநுபவமானது மேலும் விரிவாகவும், துல்லியமாகவும் நேர்மறையில் அடுத்த செய்யுளில் “பேசா அநுபூதி பிறந்தது என்றழைக்கப்படுகிறது.

    முந்தைய செய்யுளில் வேலும், இறை-பாதமும் ஒன்றையே குறிக்கின்றன என்று பார்த்தோம், அவையிரண்டும் ஒன்றோடொன்று சேர்ந்தே போகின்றன. அக்கருத்து இச்செய்யுளிலும் உறுதி செய்யப்படுகிறது. எப்படி எனப் பார்ப்போம். செய்யுள்-21ல் “கருதா மறவா நெறிகாண எனக்கு இருதாள் வனசந்தர என்றிசைவாய்” என்று அச்சாதகன் செய்த பிரார்த்தனை, இச்செய்யுளில் “குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்,........அறியாமையும் அற்றது.” என்பதில் பூர்த்தி செய்யப்பட்டது. செய்யுள்-21ன் “கருதா மறவா நெறி”, இச்செய்யுளின் “குறியைக் குறியாது குறித்தறியும் நெறி” மற்றும் “தனிவேல்” --- இவை ஒன்றே; அதாவது இறை-பாதங்கள் அருளப்படுவதால் அடையப்படும் ‘நெறி’ (முக்தி), “வேல்”-உணர்வு வெளிப்படுத்தப்பட்டபோது அடையப்பட்டது. அங்கு ‘கருதா மறவா நெறி’ (செய்யுள்-21) என்று குறிப்பிடப்பட்டதே இச்செய்யுளில் “குறியைக் குறியாது குறித்து அறியும் நெறி; தனிவேல்” என்று அழைக்கப்படுகிறது: இதன் அர்த்தம் என்னவெனில் இறை-தாள் வழங்கப்படுவதால் அடையப்படும் அதே முக்தி (நெறி) தான், வேல் வெளிப்படுத்தப்பட்ட போதும் அடையப்படுகிறது. இதிலிருந்து நாம் அறிவதென்னவென்றால் இறை-தாளும், வேலும் ஒன்றையே குறிக்கின்றன; அதாவது, ‘நெறி’, முக்தி, ஆன்மிக விடுதலை. இறை-தாள் மற்றும் வேல் -- இவ்விரண்டிற்கும் இடையில் எந்தவொரு வேற்றுமையும் இல்லையென்பதை 40 மற்றும் 41ம் செய்யுள்களிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். செய்யுள் 40ல் வேல்-உணர்வு தியானத்தில் இடைவிடாமல் நிலைநிற்கச் செய்யும் முயற்சியானது, செய்யுள்-41ல் தீவிரமானபோது, அது இறை-தாள்களை உடனே கொடுத்து அவற்றில் தன்னை காத்தருளும் வாஞ்சை-பிரார்த்தனையாக மாறியது. “வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்” (செய்யுள்-4௦) என்பது “சாகாது எனையே சரணங்களிலே காகா” (செய்யுள்-41) என்று தீவிரமடைந்தது. இப்பொழுது, இச்செய்யுளில் “வேலை நிகழ்த்திடலும்” (வேல்-உணர்வு வழங்கப்பட்டவுடன்) என்பதில், அதே சமயத்தில் இறை-தாளும் அவனுக்கு இயற்கையாகவே அருளப்பட்டது என்பதும் மறைமுகமாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த உண்மை, பின்னர் (செய்யுள் 44ல்)“முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லுமதோ!” என்று வெளிப்படையாகவும் ஆணித்தரமாகவும் சாற்றப்படுகிறது.இது, அவன் அப்படித் தன் பிரார்த்தனையின் பலனாக சரணங்கள் சூடப்பட்டதற்கு ஆச்சரியமடைந்து ஆனந்தத்தையும், நன்றியையும் தெரியப்படுத்துவதாகும்.

    செய்யுள் 21லும் கூட ‘நெறி’ என்ற சொல் முக்தியைத்தான் குறிக்கிறது; வழி/பாதை (அ) செயல்முறையை அல்ல; ஏனெனில் இறை-தாள் ஒருவனுக்கு அளிக்கப்படும்போது, அவன் முக்தியைப் பெற்றுவிடுகிறான். ‘நெறி’, ‘இறை-தாள்’, ‘வேல்’ -- இவை முக்தியே; முக்தியையோ அல்லது மற்ற எதையோ அடைவதற்கு இவை மார்க்கமோ, சாதனமோ அல்ல. இறை-தாள்/இறை-பாதம் என்பது பரம-பதம், ‘எங்குமிருக்கும் பரம்பொருள்’ (Omnipresence); இவை அடையப்படவேண்டியவை, மற்ற எதையோ அடைவதற்கு உதவியாய் இருப்பவையல்ல. இதை அச்சாதகன் செய்யுள்- 35 மற்றும் 41ல் விடுக்கும் பிரார்த்தனைகளிலிருந்து தெளிவாக அறியலாம் –-- “கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்” (35); “சாகாது எனையே சரணங்களிலே காகா” (41). எனவே, இறைவன் தன் சரணங்களை அளிப்பதுவே ‘முக்தி’; இது செய்யுள்-44லும் உறுதி செய்யப்படுகிறது. ஆகையால், ‘நெறி’ என்பது ‘முக்தி; அது ஒரு நிலையே; அது ஒரு வரைமுறையல்ல. அதுவே குறிக்கோள் (End), குறிக்கோளை அடைந்திடும் ஒரு பாதையல்ல (Not a means to an End).

    அறிவு பெறுதல் இருவகைப்படும்: செயல்முறை மூலம் பெறும் அறிவு, மற்றும் “அதுவாயிருந்து அறியும் அறிவு; ---- புலனறிவு (புலன்களின் மூலம் பெறப்படும் அறிவு), மற்றும் ‘சுய-உணர்வு’ (உள்ளுணர்வு) (Intuition); தொடர்புள்ள/நேரடியில்லாத அறிவு, மற்றும் உடனடி/ நேரடியான அறிவு. புலனறிவு என்பது புலன்கள், மனது மற்றும் புத்தியின் மூலம் பெறப்பெற்ற அறிவு. இத்தகைய அறிவு ஒரு செயல்முறைமூலம் பெறப்படுகிறது. இதில், சாதகனின் அறியும் தத்துவமான ஆத்மா அல்லது விழிப்புணர்வு, புலன்கள், மனம், புத்தி ஆகியவைகளைக் கருவிகளாக்கி, அறிவைப் பெறுகிறது. வரையறையற்ற பேருணர்வு (மொத்த உணர்வு) இந்தக் கருவிகளுடன் தொடர்பு வைக்கும்போது, அவைகளோடு ஈடுபட்டு, அவைகளில் சிக்கி, அவற்றின் வரையறைக்குள்ளாகிறது. அதன்பின், அது தன்னை (சொரூபத்தை) மறந்து, வெளிப் பொருள்களை அறியத் தொடங்குகிறது, அவ்வாறு அது அறிவது ஒரு செயல்முறை மூலம். இப்படியாகத் தன்னை ஒரு வரையறைக்கு உட்படுத்திக் கொண்ட உணர்வு (ஜீவாத்மா), மனதின் மூலம் வெளிச்செல்லத் தொடங்கும்போது, மனம் செயல்பட்டு, எண்ணத்தொடங்குகிறது, அதாவது சிந்திப்பதென்பது நடைபெறுகிறது. அது மேலும் வெளிச் செல்லும்போது, உலகுடன் தொடர்பு கொள்ள உதவும் புலன்கள் மற்றும் மற்ற அவயவங்களை செயல்படுத்தி, பேச்சு மற்றும் செயல்கள் மூலம் உலகுடன் தொடர்புகொள்கிறது. இவ்வாறாக, உணர்வு வெளிப்பட்டு, மனது, புலன்கள் மற்றும் உடல் மூலம் வெளி உலகுடன் தொடர்புகொண்டு, உலகத்தைப்பற்றிய அறிவைப்பெருகிறது. இப்படிப்பட்ட அறிவுதான் நமக்குத் தெரியும், இது புலன்சார்ந்த அறிவு. இவ்வகை அறிவில் மிக மிக உயர்ந்தது புத்தி-அறிவு, அதாவது அறிவார்ந்த அறிவு, புலன்கள் வெளிஉலகைப் பற்றி நமக்கு அளித்த அறிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட அறிவு. இத்தகைய அறிவு புத்தி-அறிவு, தொடர்பு-அறிவு (Mediate Knowledge).

    ஆனால், இதனின்றும் வேறுபட்ட, முற்றிலும் வியப்பளிக்கிற, புதுவகையான ஒரு அறிவு உண்டு. அது சுய-உணர்வு, தன்னுணர்வு மற்றும் உள்ளுணர்வு (Intuition) என்று அழைக்கப்படுகிறது. அது ஆத்மானுபூதியில், சமாதி நிலையில் தானே நிகழ்கிறது (உள்ளுணர்வாக பரிமளிக்கிறது). இது புறத்தொடற்பற்ற அறிவு. இதுவே வேல்-உணர்வு (அ) “‘குறியைக் குறியாது குறித்தறியும்’ அறிவு” என்று இச்செய்யுளில் குறிப்பிடப்படுகிறது, இந்த சொற்களில் நமது புத்தியினால் எளிதில் கிரகிக்க முடியாத இரகசியமான கருத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன. சிந்திக்காமல் சிந்தித்தல், தூங்காமல் தூங்குதல், வேல்-உணர்வு, இவை மிக மர்மமானவை; அவை என்ன தெரிவிக்கின்றன என்பதை நம்மால் அவ்வளவு சுலபத்தில் அறிய இயலாது. அவை அனைத்தும் சமாதி நிலையை, முக்தி நிலையைக் குறிக்கின்றன, அருணகிரியார் அதையே ‘நெறி’ என்கிறார். இந்த சுய-உணர்வு அல்லது தன்னுணர்வு (Self-Consciousness) வார்த்தைகளால் விவரிப்பதென்பது ஓர் இயலாத காரியமே! ஏனெனில், அது ஓர் (புலனறிவுக்கெட்டாத அறிவுசார்) அநுபவம் (ஒவ்வொருவரும் தன்னில் தானே அநுபவிப்பதன் மூலம் மட்டுமே உணரக் கூடிய ஒன்று). இருந்தபோதிலும், நாள்தோறும் நாம் பெறும் ஒரு அநுபவத்தின் மூலம் இதை அறிவது சுலபமாயிருக்கும்.

    ஒரு பொருள் இருக்கிறது என்பதை அறிவதற்கும், நான் இருக்கிறேன் (‘நான்’ உடல் என்ற பொருளில்) என்று தெரிந்து கொள்வதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறதென்பதை நாம் அறிவோம். ஒரு பொருள் உள்ளது என்பதை நாம் எப்படி அறிகிறோம்? காணும் மற்றும் சிந்திக்கும் செயல்முறையை உபயோகித்துத் தான் ஒரு பொருள் உள்ளதை அறிகிறோம். அதாவது அறியப்படும் பொருள் மற்றும் அறியும் நான் (அறிபவன்) இரண்டும் ஒன்றல்ல, இரண்டும் தனித் தனியானவை, வேறுவேறானவை. இன்னொரு விதத்தில் கூறினால், ஒரு பொருளின் இருப்பு அதை அறியும் உணர்விலிருந்து (அறிபவனிலிருந்து) வேறுபட்டதாய் உள்ளது.

    ஆனால், நாம் இருக்கிறோம் என்பதை நாம் எப்படி அறிந்து கொள்கிறோம்? நம்மை நாம் அறிவது காண்பதன் மூலமல்ல; சிந்திப்பதன் மூலமுமல்ல; நாம் இருக்கிறோம் என்பதை அறிய, நாம் நம்மைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அல்லது நாம் நம்மைப் பற்றி சிந்திக்கவோ பகுத்தறிவைப் பயன்படுத்தவோ வேண்டிய அவசியமில்லை. ஒருவித உள்ளுணர்வு (அ) சுய-உணர்வு கொண்டே நாம் இருப்பதை நாம் தெரிந்து கொள்கிறோம்! அப்படி என்றால் என்ன? உள்-உணர்வு எனப்படும் நமக்குள் உள்ள அறிபவன் (ஜீவாத்மா), தன்னைத் தன் உடலிலிருந்து தனித்துப் பார்க்காமல், தன்னையே உடலாகக் கருதிக்கொண்டு, ‘நான் இருக்கிறேன்’ (‘நான், இந்த உடல்’ என்று அர்த்தத்தில்) என்று உணர்கிறது, அதாவது, அனைத்து நடைமுறை நோக்கிலும், ‘நான்’ என்றால் ‘உடல்’ என்று பொருள் கொள்ளப்படுகிறது.

    புலனறிவு விஷயத்தில், ஜீவாத்மா, தன்னைத் தவறுதலாக உடலாகக் கருதுவதோடுமட்டுமின்றி (அறியும் ‘நான்’) தன் உடலிலிருந்து வெளியே சென்று, உலகப் பொருள்களை அறிகிறது. ஆனால், நாம் நம்மை (உடலாக) அறிவதற்கு, பொருள்களை நாடி உடலிலிருந்து வெளியே சென்ற ஜீவாத்மா (‘நான்’) தனக்கே (அதாவது, தன் உடலுக்கே) திரும்பி வருவதைத்தவிர வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை, அதாவது தனக்கே (தன் உடலுக்கே) திரும்பிவந்து, தானாகவே இருந்து, “நான் இருக்கிறேன்” என்று அறிகிறது. இதற்கு, பார்வையோ, சிந்திப்போ அவசியமில்லை. அவ்வாறு அறிவதற்கு அது புலன்கள், எண்ணங்கள், ஆகிய உறுப்புகள் எதையும் உபயோகிப்பதில்லை. இவ்வாறாக (ஜீவ) உணர்வானது தன்னிடமே திரும்புதல், தானாகவே இருத்தல், தன்னையே தானாக அறிதல் --- இதுவே ‘உள்ளுணர்வு’, ’சுய-உணர்வு’ – இது ‘சிந்திக்காமல் சிந்தித்து’ அறிதலாகும்; அதுவாகவே இருந்து அறிவதாகும் இந்நிலையில் இருப்பும், அறிவும் ஒன்றே, இருத்தலும் அறிதலும் ஒன்றே; அதாவது இருப்பே அறிதல்.

    இது உள்ளுணர்வு (intuition) அல்லது சுய-உணர்வின் (self-consciousness) ஸ்தூல (பக்குவப்படாத) நிலை, ஏனெனில் இந்நிலையில் இரண்டு அம்சங்கள் உள்ளன -- ஜட உடல் மற்றும் அறிகின்ற உணர்வு ஆகிய இரண்டு அம்சங்கள்; இவையிரண்டும் ஒன்றின்மேல் மற்றொன்று சுமத்தப் பட்டுள்ளன. ஜீவ-உணர்வு தன்னை உடலாகக் கருதுவது சுய-உணர்வின் கீழ்ப்படி (கடைநிலை) நிலையாகும், அதற்கு மேலே இன்னும் சில சுய-உணர்வு நிலைகள் உள்ளன. அதாவது சுய-உணர்வு தன்னை மனதாக (‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’, ‘நான் மனத்தளர்வோடு இருக்கிறேன்’), தன்னைப் புத்தியாக (‘நான் அறிந்திருக்கிறேன்’ ‘நான் குழப்பத்திலிருக்கிறேன்’), தன்னை அகங்காரமாகக் (“நான்”) கருதுவது. அண்ட-இருப்பான ஈஸ்வரனிலிருந்து தனி இருப்பு தனக்கு உள்ளது என்ற பாவத்துடன் அந்த ஜீவ-உணர்வு அல்லது சுய-உணர்வு கருதும்போது, ‘நான் இருக்கிறேன்’ (I Am) என்பதே ஜீவாத்மா எனப்படும் தூய ஜீவ-உணர்வின் அல்லது சுய-உணர்வின் அதிமேலாம் நிலை. இந்நிலையில் பிரபஞ்ச (பரமாத்ம) உணர்வானது அவித்யையில் (அறியாமையில்) தனித்தன்மையாகப் பிரதிபலித்துக்கொண்டு, தன் தூய பரமாத்ம சொரூபத்தை மறந்து, எல்லைக்குட்பட்ட பிரதிபலிப்பாக தன் தனித்தன்மையை ‘நான்’ என்று வலியுறுத்துகிறது. எனவே, ‘நான் உடல்’, ‘நான் மனம்’ போன்ற எண்ணங்கள் ஜீவாத்மாவின் சுய-உணர்வின் வெவ்வேறு நிலைகள். ஆனால், சுய-உணர்வு எனப்படும் உள்ளுணர்வின் தூய நிலையில், பிரதிபலிப்பதன்மூலம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ஜீவ-உணர்வு, தனது ஆரம்ப (உற்பத்தி) இடத்திற்குத் திரும்புகிறது --- அதாவது ஈஸ்வரத்துவ நிலையான அண்ட-உணர்வுக்கு, தூய நிலைக்குத் திரும்புகிறது. இந்நிலையில், உணர்வு, மனம், புத்தி போன்ற சங்கங்கள் அற்று இருப்பதால், அது தூய உணர்வாக இருந்து, தன்னை அவ்வாறே (தூய உணர்வாக) அறிகிறது. இந்நிலையில், எது எதை அறிகிறது; எது அறிவது, எது அறியப்படுவது, என்றெல்லாம் கூறுவது மிகவும் கடினம்; ஏனென்றால், தூய சுய-உணர்வு (பேருணர்வு அல்லது அண்ட-உணர்வு) நிலையில் அறியும் பொருள், அறியப்படும் பொருள் இரண்டும் அஃதே; அறிபவனும், அறியப்படு பொருளும் அஃதே. மொத்த-உணர்வு தன்னைத் தானே அறிவதாகும். ஏதோ ஒன்று இருக்கிறது, அது “நான் இருக்கிறேன்”, (அஹம் அஸ்மி) என்று தன்னைத் தானாக அறிகிறது. இது உலகளாவி இருக்கும் ‘இருப்பின்’ சுய-உணர்வு அல்லது ஆத்ம-உணர்வு (Self-Consciousness of Universal Being) --- அது இருப்பு-உணர்வு (Being-Consciousness).

    உலகப்பொருள்களை நாடி உடலைவிட்டு வெளியேசென்ற ஜீவ-உணர்வு மீண்டும் தன் நிலைக்கே (உடலுக்கே) திரும்பிவந்து தன்னை உணர்வது, ஒரு வகையில் (சீமித்த அர்த்தத்தில்), சுய-உணர்வு. இந்த (வெறும்) ஜீவ-உணர்வு அல்லது சுய-உணர்வு, ஈஸ்வர அல்லது அண்ட உணர்வுக்கு (பரமாத்மாவுக்கு) திரும்புவது, உண்மையான ஆத்ம-உணர்வு, ஆத்மானுபூதி, இறையனுபூதி எனப்படும் --– இவ்விரண்டு நிலைகளிலும் சுய-அறிவேதவிர புற-அறிவு கிடையாது; தானே அதுவாகி, அதுவாக தன்னை அறிகிறது --- தன்னை, வீடு, மனைவி, உடல், மனம் ஆகியவைகளாகக் கருதிய ஜீவாத்மா அந்த எண்ணங்களை துறந்து, தன்னை பரமாத்மாவின் பிரதிபலிப்பாக உணர்கிறது. (இது ஜீவனின் தூய-உணர்வு); பின்னர், அந்தப் பிரதிபலிப்பான வெறும் ஜீவாத்ம நிலையிலிருந்து, அதன் மூலமான பரமாத்மாவிடம் திரும்பிவந்து, பரமாத்மாகவே இருந்து, உணர்ந்து, அறிகிறது. இதுவே ஆத்மானுபூதி, அல்லது இறையனுபூதி.

    இங்கு, “ஒன்று உண்மையில் மற்றொன்று ஆக முடியுமா?” என்று ஒரு கேள்வி எழுப்பப்படலாம். உண்மையில் ஒன்று மற்றொன்றாக ஆகிவிட (இருக்க) இயலாதுதான்; ஆனால், ஒன்று தன்னைத் தவறாக வேறொன்றாக கற்பனைசெய்து கொண்டு அதுவாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது, அது அந்தத் தவறான கற்பனையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளலாம்தானே! தவறான கற்பனையைத் துறந்து, அது உண்மையில் எதுவாக இருந்ததோ அதுவாகவே திரும்பவும் ஆகி, அதுவாக இருக்கிறது. இதை ஆத்மானுபூதி என்கிறோம். (அதற்காகவே “அஹம் பிரம்ம அஸ்மி” தியானம் செய்யப்படுகிறது).

    எப்படி ஜீவன் ஈஸ்வரனாகி (இறைவனாகி), ஈஸ்வரனை (இறைவனை) அறிகிறான்? ஒவ்வொரு ஜீவனிலும் (மனிதனிலும்) ஈஸ்வர அம்சம் உள்ளது. எப்போது மனிதன் தன் (உடற்கூறுகளுடனான/ மனிதத்திறன்களுடனான) மனிதத்தன்மையைத் துறக்கிறானோ, அப்போது தனித்து நிற்கும் இறை-அம்சம், தன்னை அதுவாகவே (இறைவனாகவே) உணர்கிறது. எனவே, இறைவன் இறைவனை உணர்தல்/அடைதல், மனிதன் இறைவனை அடைதலல்ல. ஒரு பொருள் மற்றொரு பொருளை எப்படி அடைய இயலும்? மனிதன் மனிதனாகவே இருந்து எப்படி இறைவனை அடைய இயலும்? அதனால்தான், இது இறைவனை அடை(றி)தல் (இறையனுபூதி), ஆத்மனை அடை(றி)தல் (ஆத்மானுபூதி), சாக்ஷாத்காரம் (தன்னைத் தானே அறிதல்) என்று அழைக்கப்படுகிறது; மனித-அநுபூதி என்று அழைக்கப்படுவதில்லை. இது இறை-அநுபவம், மனித-அநுபவம் அல்ல.

    வேதாந்த வழிமுறையான நேதி, நேதி கோட்பாடு மற்றும் அஹம் பிரம்ம அஸ்மி பாவனையுடன் கூடிய அபேத பிரம்ம சிந்தனை : உலகளாவிய (எல்லையற்ற) தன்மையையுடைய தூய-உணர்வு, தன்னை (அறியாமையில்) வரையறைப்படுத்திக் கொண்டு, மனம்-புத்தியோடு சேர்ந்து வெளிப்படும்போது, புலன்கள்-உடல் துணைகொண்டு உலகுடன் தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்கிறது. அவ்வாறான மதிமயக்க நிலையிலுள்ள ஜீவன் தன்னை உடல், புலன்கள் மற்றும் மனமென்று கருதுகிறது. பின்னர், குரு சன்னியாச தீக்ஷை கொடுத்து, மகாவாக்கிய உபதேசத்தை சீடனுக்குத் தந்து, அவனை ‘அஹம் பிரம்ம அஸ்மி’ என்று தியானிக்க அறிவுறுத்துகிறார், அப்போது உணர்வானது தன் உண்மை இயல்பிற்கு விழித்தெழுகிறது. அந்நிலையில், ஆத்ம தியான நடைமுறை ஆரம்பிக்கப்படுகிறது. இதுவரை, ஜீவன் தன்னை உடலாக நினைத்து, ‘நான் இவ்வுடல்’, ‘என் பெயர் இது’, ‘என் பெயர் அது’, ‘நான் உயரமானவன்’, என்றெல்லாம் கருதி வந்தது; இப்பொழுது, இவ்வுடல் ஜடமானது என்றும், இந்த ஜடமான உடலிருந்து தான் வேறானவன் என்றும் தெளிவாக அறிகிறது. பிறகு, “(நான்) இது (உடல்) அல்ல” (‘நேதி’) என்று நிச்சயமாக உணர்கிறது. அதேசமயம், குரு உபதேசித்தபடி, ”நான் பிரம்மன்” (‘அஹம் பிரம்ம அஸ்மி’) என்று தன் உண்மை சொரூபத்தில் நிலை பெற உறுதியாய் செயல்படுகிறது. அதேபோல, ‘(நான்) இது அல்ல’, ‘(நான்) இது அல்ல’ என்ற ‘நேதி’ ‘நேதி’ முறைக்கோட்பாட்டை உபயோகித்து, புலன்கள், மனம், புத்தி, அகங்காரம், அவித்யை ஆகிய ஒவ்வொன்றிலிருந்தும் தன்னைப் படிப்படியே விலக்கிக் கொள்கிறது. இவ்வாறாக, ஜீவ உணர்வானது தன்னைக் கட்டுப்படுத்தும் இணைப்புக் கருவிகளிலிருந்து தன்னைப் பூரணமாக விடுவித்துக்கொண்டு, கடைசியாகத் தன்னிலேயே இருக்கும்பொழுது, (எல்லா உறவுகளிலிருந்தும் விலகித் தனியாக இருக்கும்பொழுது), உணர்வு உணர்வாகவே இருக்கிறது; அது தன்னைத்தானே உணர்கிறது; ‘நான் விழிப்புணர்வு’ என்று அநுபவிக்கிறது --- “நான் பிரம்மன்” – ‘அஹம் பிரம்ம அஸ்மி’ என்ற உண்மையை உணர்ந்து அனுபவிக்கிறது.

    ‘அஹம் பிரம்ம அஸ்மி’ -- ‘நான் பிரம்மம்’ -- என்கிற தியானத்தில், ‘நான்’ ஒன்று, ‘பிரம்மன்’ மற்றொன்று என்று இரண்டு பொருள்கள் இல்லை; ‘நான்’ என்ற ஒன்று, ‘பிரம்மன்’ எனப்படும் மற்றொரு பொருளாகத் தன்னைச் சொல்வதோ, கருதுவதோ இல்லை. ‘நான் தான் பிரம்மன்’ என்று ஜீவாத்மாவின் அகங்காரம் வலியுறுத்திக் கூறுவதுமில்லை. (அறியாமையால்) உடலுறுப்புகளுடனான ‘உபாதி’களில் வரையறுக்கும்போது, பிரம்மனே ஜீவன் என்ற பெயரைப் பெறுகிறது. அப்படி அறியாமையின் பிடியிலுள்ள வரையறைக்குட்பட்ட ஜீவாத்மா ‘நான் பிரம்மம்’ என்று கருதுவதுமில்லை; ஆனால், உண்மையில், பிரம்மமே ‘நான் பிரம்மன்’ என்று உணர்கிறது. எது உளதோ (பிரம்மம்) அது ‘நான் நானே’ என்று உணர்ந்து, அவ்வாறே அநுபவிக்கிறது. எது உள்ளதோ அது ‘நான்’ என்று அறிந்து, உணர்கிறது. இது கடவுளின் “நான் இருக்கிறேன்” (அஹம் அஸ்மி) என்கிற சுய-விழிப்புணர்வு. (இன்னொரு கோணத்தில் கூறுவதானால், தன்னைத் தவறுதலாக ஜீவன் என்று கருதிய பிரம்மம், அத்தவறை விட்டுவிட்டு, தன் சுய-விழிப்புணர்வில் ‘நான் பிரம்மம்’ என்று நிலைத்து நிற்கிறது.)

    உதாரணமாக, கிருஷ்ணன் என்பவரைப் பார்த்து ‘நீங்கள் யார்?’ என்று கேட்டால், ‘நான் கிருஷ்ணன்’ என்று அவர் சொல்வார். ஆனால், அவர் தனக்குத் தானே ‘நான் கிருஷ்ணன்’ என்று சொல்லிக்கொள்ள மாட்டார்; பதிலாக, ‘நான்’ (அ) ‘நான் இருக்கிறேன்’ என்று மட்டும்தான் நினைப்பார். அதேபோல், குரு சீடனுக்கு தீக்ஷை கொடுத்து, “தத் த்வம் அஸி’” (‘நீ அது’) என்று உபதேசத்தை தரும்போது, சீடன் ‘அஹம் பிரம்ம அஸ்மி’ (‘நான் பிரம்மம்’) என்று சொல்கிறான்; பின்னரும் அவ்வாறே தன் தியானத்திலும் நான் பிரம்மம்’ என்று அறிவுறுத்திக் கொண்டு, --- உடல், மனம், புத்தி, போன்ற ஒவ்வொரு உறுப்புகளையும், ‘நேதி நேதி’ கோட்பாட்டை கடைப்பிடித்து, அது தானல்ல, தானல்ல என்று கூறி ஒதுக்கித் தள்ளுகிறான். இறுதியில், தீவிரமாக நெடுங்காலம் அனுசரிக்கப்பட்ட தியானத்தின் விளைவு மற்றும் இறை-கிருபையால் சமாதிநிலை அடையப்படுகிறது, சுய-விழிப்புணர்வு அதில் நிலைபெறுகிறது, ஜீவன் ஆன்ம விடுதலை எனப்படும் முக்திநிலையை அடைகிறது. அவ்வாறு விடுதலை அடைந்த ஜீவன் தன்னிலேயே நிலை பெற்று, ‘அஹமஸ்மி’ (“நான் இருக்கிறேன்”) என்று தன்னை அறிகிறது.

    முக்தி (இறையனுபூதி) என்பது ஒருவன் இறந்த பின்னர்தான் அடையவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை; இவ்வுடலில் வாழ்ந்து கொண்டிருக்கும் இப்பொழுதேகூட அடையக்கூடிய ஒரு அநுபவம் (உணர்வின் நிலை) அது. இத்தகைய நிலையையே “ஜீவன் முக்தி” என்றழைக்கின்றனர்; இந்நிலையை மகான்கள் அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், அருணகிரிநாதர், ஸ்வாமி சிவானந்தர் போன்ற மற்றும் பல அருட்செல்வர்கள் அடைந்து ஜீவன்முக்தர்களாக வாழ்ந்து காட்டியுள்ளனர். இங்கேயே முக்தி பெற முடியும், ஏனெனில் இறைவன் சர்வ-வியாபி, எங்குமுள்ளவர்; எங்கோ ஏழாவது சொர்க்கத்தில் (அல்லது ஏதோவொரு குறிப்பிட்ட இடத்தில்) மட்டும் இருப்பவரல்ல; அவ்வாறு இருந்தால் ஒருவன் இறந்த பின்னரே அங்கு சென்று அவரை அடைந்திட இயலும். இறைவன் உலகளாவிய உண்மை, எங்கும் நிறைந்திருப்பவர் (சர்வ-வியாபி), எல்லாம் அறிந்தவர். அவர் எங்குமிருப்பதால் அவரை இங்கும் அடைய இயலும்தானே. இறைவனை ‘இங்கு’ அடைய முடியாதென்றால், ‘அங்கும்’ முடியாதுதானே. இறைவன் வேறொரு இடத்தில் இருக்கிறாரென்றால், இங்கும் இருந்து தானே ஆக வேண்டும்; அவ்வாறில்லையென்றால் அவர் இறைவனாகவே --- நித்தியமான மற்றும் எங்கும் நிறைந்த இறைவனாக --- இருக்கமுடியதல்லவா? மற்ற எல்லா பொருட்களையும் போல அவரும் ஒரு பொருளாகி விடுவார். அவ்விறைவன் எவ்வளவுதான் பெரியவராக, மேன்மை உடையவராக, புகழ் கொண்டவராக இருந்தாலும் சரி, அவரும் மற்ற அனைத்துப் பொருட்களையும்போல வரம்புக்கு உட்பட்டவராகி விடுவார். எனவே, முக்தியை இங்கேயே இப்பொழுதே அடையலாம். இது ஜீவன்முக்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜீவன்முக்தி நிலைதான் இச்செய்யுளில் அருளப்பட்டது --- அதற்கு ‘நெறி’ மற்றும் ‘தனிவேல்’ என்ற சொற்கள் கையாளப்பட்டுள்ளன.

    ‘கந்தர் அநுபூதி’ என்ற இந்நூலில், ‘நெறி’ என்ற சொல்லை அருணகிரிநாதர் இரண்டு செய்யுள்களில் மட்டுமே (செய்யுள் 21 மற்றும் 42) பயன்படுத்தியுள்ளார். செய்யுள் 21ல், முக்தியை அடைய இறைவனின் திருப்பாதங்களை அருளுமாறு பிரார்த்தனை செய்யப்படுகிறது, செய்யுள் 42ல், முக்தி அளிக்கப்படுகிறது.

    இச்செய்யுளை அருணகிரியார் பூர்த்தி செய்யும்விதம் அவருடைய தேர்ச்சித்திறமிக்க திறமையை நன்கு புலன் படுத்துகிறது : “நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும், செறிவற்று உலகோடு உரை சிந்தையுமற்று அறிவற்று அறியாமையும் அற்றதுவே.” --- “எனக்கு ‘நெறி’, ‘தனிவேல்’ (முக்தி) அருளப்பட்ட அத்தருணத்திலேயே, மக்களுடனும் உலகத்துடனுமான அனைத்து உறவுகளும் அறுபட்டு, பேச்சும் மனமும் அறவே நின்று, புத்தியும் அற்று, அறியாமையும் அற்றுப் போயின.” இவையனைத்தும் ஒருசேர அற்றுப்போவது, மிகவும் குறிப்பாக அறியாமை அழிவது, எப்பொழுது என்றால், ஜீவன் இறைவனை அடைந்த அத்தருணத்தில்தான் (அதாவது ஜீவன் ஆத்மானுபூதி பெற்றவுடன்). முக்தி, நெறி, வேல், ஆத்மானுபூதி, இறையனுபூதி --- இவையெல்லாம் ஒன்றே. எனவே, நெறி அல்லது வேல் நிகழ்த்தப்பட்டவுடன் (முக்தி அடைந்த அத்தருணத்திலேயே) அவித்யை (அறியாமை) அழிந்துவிட்டது. எனவே, இச்செய்யுள், சிலர் நினைப்பதுபோல், தியானத்தைச் செய்யும் முறையைப் பற்றிய அறிவுரை அல்ல; ஏனெனில், அறிவுரை கொடுத்த அத்தருணத்திலேயே ஒருவனுடைய அறியாமை அற்றுப்போய்விடாது, அதை செயல்படுத்தவேண்டும். எனவே, இச்செய்யுள், எதோ ஒரு குறிக்கோளை அடைவதற்குச் செய்யவேண்டிய சாதனை பற்றிய அறிவுரையன்று; ஆனால், குறிக்கோளை (முக்தி) அடைந்ததை அறிவிக்கிறது. முந்தைய இருசெய்யுள்களில் கூறப்பட்ட (செய்யுள்-4௦ ஞான மார்க்கம், செய்யுள்-41 பக்தி மார்க்கம்) வழிகளை நடைமுறைப்படுத்தியதின் பலனாக இப்பொழுது (இச்செய்யுளில்) குறிக்கோளானது “அடையப்பட்டது” அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment