செய்யுள் 44செய்யுள் – 44


சாடும்   தனிவேல்   முருகன்   சரணம்
சூடும்படி   தந்தது   சொல்லுமதோ
வீடும்   சுரர்மாமுடி   வேதமும்   வெம்
காடும்   புனமும்   கமழும்   கழலே.

    பொழிப்புரை: பகைவர்களை அழிக்கும் ஒப்புயர்வற்ற வெற்றி வேலைத் தாங்கும் முருகப் பெருமான், தன்னுடைய பாதங்களை என் தலைமேல் சூட்டிக்கொள்ளுமாறு தந்தருளிய கருணையை என்னென்று சொல்லுவது! அப்பாதங்கள் முத்தித் தலத்திலும், தேவர்களின் சிரங்களிலும், வேதங்களிலும், வள்ளி வாழ்ந்த அனல்போல் தகிக்கும் காடுகளிலும், தினைப்புனத்திலும் மணக்கின்றன/ஒளிர்கின்றன.

விளக்கவுரை

    பேசா அநுபூதி நிலையிலிருந்து வெளிவந்த ஜீவன்முக்தனின் (விந்தையான) தன்னேரில்லாத அநுபவங்களை இச்செய்யுள் சித்தரிக்கிறது. அச்சமாதி நிலையிலிருந்தபோது அவன் என்ன அநுபவித்தானோ, அது முதல் இரு வரிகளில் “சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லுமதோ” என்று கடந்த காலத்தில் கூறப்பட்டுள்ளது. அச்சமாதி நிலையிலிருந்து வெளிவந்தவுடன் அவனுடைய அநுபவம் கடைசி இரு வரிகளில் இவ்வாறு விளக்கப்படுகின்றது: “மோட்சத்திலும், தேவர்கள் தலையிலும், வேதத்திலும், அனல்போல் தகிக்கும் காடுகளிலும், தினைப்புனத்திலும் (எங்கும்) மணக்கின்ற பாதங்கள்! (கமழும் கழல்)”. இது நிகழ்காலத்தில் உள்ளது. சமாதியிலிருந்து வெளிவந்தபின், ஜீவன்முக்தன் எங்கும் இறைவனுடைய பாதங்களையே (இறைவனையே) காண்கிறான், அனுபவிக்கிறான், உணருகிறான்! இந்த ஜீவன்முக்த அனுபவம் மேலும் மலர்ந்து சஹஜ சமாதி அவஸ்தை அனுபவமாக மிளிர்வதைக் கடைசிச் செய்யுளில் காண்போம்.

    ஏற்பட்ட ஒரு அநுபவம் இறைவனை அடைந்து விட்ட அநுபவமா இல்லையா என்பதை ஒரு சோதனை முலம் அறியலாம் --- அந்த அநுபவத்திலிருந்து வெளிவந்த பிறகு அவன் அநுபவம் என்ன என்பதைக் கொண்டு அறியலாம் -— இறைவன் எல்லா இடங்களிலும் இருப்பதை அவன் உணருகிறானா இல்லையா என்பதை வைத்து அறிந்து கொள்ளலாம். இந்த சோதனையின்படிப் பார்த்தால், 28-ம் செய்யுளில் அச்சாதகன் அடைந்த அந்த சற்றேகுறைய சமாதி அநுபவம், எத்தனைதான் உயர்ந்த ஒன்றாயினும், இறைவனை உண்மையாக அடைந்த ஒரு பூரண அநுபவம் அல்ல; ஏனெனில், அதிலிருந்து வெளிவந்தவுடன், அதற்கு அடுத்த செய்யுளிலேயே அவன் “இல்லையெனும் மாயையில் இட்டனை நீ, பொல்லேன் அறியாமை பொருத்திலையே” என்று புலம்புகிறான். — ‘இல்லையென்று சொல்லப்படும் இந்த மாயையில் என்னைத் தள்ளி விட்டுவிட்டீர்களே? தாங்கள் எனது அறியாமையை மன்னிக்கவில்லை (அழிக்கவில்லை)’.

    இறைவனின் பாதங்களைப் பற்றி பல செய்யுள்களில் குறிப்பிடப்படுகின்றன. எனினும், பிரத்யேகமான பிரார்த்தனைகள் மூன்று செய்யுள்களில் செய்யப்பட்டுள்ளன:
  • நான் நினைப்பும் மறப்புமற்ற நிலையான முக்தியையடைய தங்களின் இரண்டு பாதத் தாமரைகளை எனக்குத் தந்தருள என்று திருவுள்ளம் கொள்வீர்? (செய்யுள்- 21).
  • நான் நற்கதியை (முக்தியை) அடையத் தங்கள் தாமரைமலர் போன்ற திருப்பாதங்களை என்று அருள்வீர்? (செய்யுள்- 35).
  • நான் யமராஜன் கைவசப்பட்டுச் சாகாமலிருக்க (புனர் ஜன்ம சக்கரத்தில் உழலாமலிருக்க) தங்களின் திருக்கமலப் பாதங்களிலே என்னை (இங்கேயே) காத்தருள்வீர், (இப்பொழுதே) காத்தருள்வீர். (செய்யுள்- 41).
இப்பிரார்த்தனைகள் அனைத்தும் இச்செய்யுளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பேசா அநுபூதியில் ஆழ்ந்திருந்துவிட்டு (முந்தைய செய்யுளில்), இப்பொழுது அதிலிருந்து ஜீவன்முக்தனாக வெளிப்பட்ட சன்னியாச-சீடன், தனக்கு அருளப்பட்ட இறை-பாதங்களை மோட்சத்திலும், தேவர்களின் சிரங்களிலும், வேதங்களிலும், சூடான காடுகளிலும், தினைப்புனத்திலுமாக எல்லா இடங்களிலும் காண்கிறான். இதுதான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை எங்கும் காணும் ஜீவன்முக்தனின் அநுபவம். அவன் இறைவனை எங்கும் அநுபவிக்கிறான் ---- நிரந்தரமான பரம்பொருளாக (மோட்சமாக) மட்டுமல்லாமல், இப்பிரபஞ்சமாகவும் (சுர லோகமாகவும்); “அங்கு”மட்டுமல்லாமல் (சுர லோகங்களில்), “இங்கு”ம் (காடு மற்றும் தினைப்புனங்கள்); (இறை) பாதங்கள் “தரப்பட்ட அப்பொழுது” மட்டுமல்லாமல், சமாதி நிலையிலிருந்து வெளிவந்துபின் “இப்பொழுதும்” கூட. ‘கமழும் கழல்’ என்று கூறுவதன்மூலம், அப்பொழுது தரப்பட்ட இறைவனின் பாதங்கள், இப்பொழுது, மலரின் மணம்போல, நுகரப்படும் அனுபவமாக உணரப்படுகிறதென்ற உண்மையைச் சாடையாகக் கூறுகிறார் அருட்செல்வர் அருணகிரியார்.

    செய்யுள் 42ன்தனி வேல்”, செய்யுள் 43ன்முருகன்”, மற்றும் செய்யுள் 44ன்சரணம்” ஆகிய மூன்றும் குறிப்பது ‘முக்திநிலை’-யை. இச்செய்யுளில் இம்மூன்றும் அதே வரிசையில் வருவதிலிருந்தும், சரணங்கள் மோட்சமாகவும் மற்றும் பலவாகவும் ஒளிர்கிறது என்று கூறப்பட்டதிலிருந்தும் இது புஷ்டி செய்யப்படுகிறது. எவருடைய சரணங்கள் அவனுக்கு தந்தருளப்பட்டது? எந்த முருகப் பெருமானது சரணங்கள் தேவர்களின் தலைகளை அலங்கரிக்கின்றனவோ, எவருடைய சிரசு வள்ளிதேவியின் கழல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளனவோ (செய்யுள்-36) அந்த சரணங்கள் அந்த ஜீவன்முக்தனுக்கு அருளப்பட்டன! இது ஒரு பெறற்கரிய பாக்கியம்; ஒரு அசாதாரணமான, தனிச் சிறப்பு வாய்ந்த தெய்வீகப் பரிசு. எனவே, இதைப்பெற்ற அந்த ஜீவன்முக்தன், “ஓ! நான் எப்படி அவருடைய இந்த கருணை மிகுந்த செயலை விளக்கிக் கூறுவேன்!’ என்று மகிழ்ச்சி பொங்கிக் கூறுகிறான்:

    செய்யுள் 37ல், வேல்” சம்பந்தமாகத் தரப்பட்ட அறிவுரையானது முழுவதுமாக நிறைவேறியதை செய்யுள் 42ல் கண்டோம். அப்படியே செய்யுள் 14ல் “கைவாய் கதிர் வேல் முருகன் கழல் -- பெற்று உய்வாய்” என்று தரப்பட்ட அறிவுரையானது, அதே வரிசைக் கிரமத்தில், ‘சாடும் தனி வேல் முருகன் சரணம் -- சூடும்படி தந்தது’ என்று நிறைவேறியிருப்பதை இச்செய்யுளில் காண்கிறோம்.

    அடுத்தடுத்த மூன்று செய்யுள்களும் (42, 43 & 44) முக்தி நிலையைப்பற்றியே விவரிக்கின்றன, எனினும் மூன்றும் வெவ்வேறு விதங்களில் விளக்குகின்றன. குறிக்கோளான முக்தி அடையப்பட்டதை எதற்காக மூன்று செய்யுள்களில் மூன்று விதமாக விளக்க வேண்டும்? அருணகிரியார் ஏன் இப்படிச்செய்தாரென்று நமக்குத்தெரியாது! எனினும், நம் புத்திக்கு எட்டிய அளவில் நாம் அறிய முயலலாம். இரு காரணங்களுக்காக இவ்வாறு செய்தாரென்று தோன்றுகிறது:

    (1) ‘கந்தர் அநுபூதி’ நூலின் தொடக்கத்திலிருந்தே, செய்யுள்கள் ஒரு வினோதமான கலவையில் இருப்பதைக் காணுகிறோம்:
  • சில செய்யுள்கள் ‘வேலிடம்’ செய்யப்படும் பிரார்த்தனைகள்.
  • சில இறைவனின் பாதங்களைத் தந்தருளுமாறு செய்யப்படும் பிரார்த்தனைகள்.
  • சில நேரடியாக இறைவனிடம் செய்யப்படும் பிரார்த்தனைகள்.
    
வேல் (ஞானம்) மற்றும் இறை-பாதங்கள் (பக்தி) ஆகிய இரண்டும் ஒன்றையொன்று சேர்ந்தே செல்கின்றன; இவையிரண்டும் ஒன்றேயென்றும், மேலும் இவை இறைவனிலிருந்து வேறானவையல்ல என்பதையும் சுட்டிக் காட்டுவதற்கே. இம்மூன்று அம்சங்களையும் பூர்த்திசெய்வதற்காக அருட்செல்வர் அருணகிரியார் மூன்று செய்யுள்களை பிரயோகித்தார் என்று தோன்றுகிறது.
  • (அ) ‘அநுபூதி’’ அல்லது இறையநுபவம் அடைவதுதான் ‘கந்தர் அநுபூதி’ நூலின் ஆய்வுப்பொருள்; முருகப் பெருமான் (பரம் பொருள்) தான் அடையவேண்டிய குறிக்கோள். இரண்டாவது செய்யுளில், ‘எல்லாமற என்னை இழந்த நலம் சொல்லாய்’ என்ற பிரார்த்தனை முருகப் பெருமானிடம் செய்யப்பட்டது. அவருடைய மற்றெல்லாப் பெயர்களையும்விட முருகன் என்ற பெயரே மிக அதிகமான (10) செய்யுள்களில் உபயோகிக்கப்பட்டுள்ளது. எனவே, அருணகிரியார் முருகனுக்கு ஒரு செய்யுளை (செய்யுள்-43) அர்ப்பணித்து, முருகனின் கிருபையால் “பேசா அநுபூதி” அடையப்பட்டது என்று சொல்கிறார்.
  • (ஆ) பல செய்யுள்களில், முருகப் பெருமானுக்கு ஒப்பானதும் அவரிடமிருந்து வேறுபடாததுமான ‘வேல்’ குறிப்பிடப்பட்டு, அவ்வேலிடம் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டு, கடைசியாக முக்தி கிடைக்கப்பெறும்வரை வேலின் மேல் இடைவிடாது தியானமும் மேற்கொள்ளப்பட்டது (“வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்” – செய்யுள்: 40). எனவே, ஒரு செய்யுள் ‘வேலுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது (செய்யுள்- 42).
  • (இ) மேலும், முக்தி (அ) மோட்சமேயாகும் இறை- (பாத) கமலங்களைத் தந்தருளுமாறு பிரார்த்தனை பல செய்யுள்களில் செய்யப்பட்டது, (மிகக்குறிப்பாக செய்யுள்கள் 21 மற்றும் 35). ஆனால், உச்சகட்டமாக செய்யுள் 41ல் இப்பொழுதே, இங்கேயே இறை-பாதங்களில் பாதுகாப்பு (ஜீவன்முக்தி) தந்தருளுமாறு பிரார்த்தனை செய்யப்பட்டது. அதற்கு செவிசாய்த்துத் தந்தருளியதற்கு நன்றி செலுத்த ஒரு செய்யுள் இறை-பாதங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது (செய்யுள்- 44).
இவ்வாறாக, அருட்செல்வர் அருணகிரியார் இச்சீடன் அடைந்த முக்தியை விளக்கிட தொடர்ந்து மூன்று செய்யுள்களை அர்ப்பணித்துள்ளார். இருப்பினும், முதன்முதலில் (இரண்டாவது செய்யுளில்) செய்யப்பட்ட பிரார்த்தனை பரம்பொருளான முருகனுக்கு ஆனதால், அவருக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பி, இம்மூன்று செய்யுள்களின் நடுச்செய்யுளான 43-ல் முருகன் மற்றும் அநுபூதி என்று சொற்களை நடுநாயகமாகக் குறிப்பிட்டு, வேல் மற்றும் இறை-பாதங்களை இச்செய்யுளுக்கு முன்னரும், பின்னரும் அமைத்து, அப்படிச்செய்வதன்மூலம் அவ்விரண்டும் முருகப்பெருமானுக்கு ஒப்பானவையென்றும் அவையும் முக்திநிலை அல்லது ஆத்மானுபூதியையே குறிக்கின்றன என்றும் தெரியப்படுத்துகிறார் அருணகிரியார்.

    (2) (அ) செய்யுள்-42 தியானச் செயல்முறைமூலம் சமாதிநிலையில் புகுதலையும், சமாதியில் இருப்பதையும் விளக்குகின்றது; அச்சமாதியில் ஜீவாத்மன் எனப்படும் தனிமனிதத்துவம் (தன்னுணர்வு) கரைந்துப்போய் விடுகிறது. ஜீவாத்மன் இல்லாது போய்விடுகிறது.

    (ஆ) செய்யுள்-43 சமாதியில் ஆழ்ந்து இருக்கும் நிலையை (அ) சமாதியை அனுபவிக்கும் நிலையை (சமாதி அநுபூதி) பற்றி விளக்குகின்றது. இங்கு, பரம்பொருள், பிரம்மம் (முருகன்) மட்டுமே விளங்குகின்றது.

    (இ) செய்யுள்-44 சமாதி நிலையில் இருத்தல் மற்றும் சமாதியிலிருந்து வெளிப்பட்டதும், முன்பிருந்த ஜீவனாக இல்லாமல், எங்கும் நிறைந்துள்ள இறைவனை உணர்பவனாய், உலகளாவிய பார்வை கொண்ட ஜீவன்முக்த புருஷனாக ஆகி எல்லோரும் இன்புற்று இருக்க விழைபவனாய் உலாவுவதை விளக்குகின்றது.

    இப்படியாக, சமாதி நிலையை விவரிக்கும் இம்மூன்று செய்யுள்களும், அந்நிலையின் மூன்று கட்டங்களைச் சித்தரிகின்றன: (1) சமாதி நிலையில் புகுதலும் அதில் இருத்தலும், (2) சமாதியில் மூழ்கியிருத்தல், மற்றும் (3) சமாதியில் மூழ்கியிருந்து, அதிலிருந்து வெளிப்பட்டபின் ஏற்படும் நிகழ்வுகள். அருள் நிறைந்த பேரின்ப அநுபவம் – உண்மையில் மகத்தானது, விவரிக்க முடியாத ஒன்று!

    இந்த “பேசா அநுபூதி” நிலை {(ஆ) --- செய்யுள்-43} ஆத்மசக்தியோடு ஒன்றுகூடிய செயலற்ற நிலை (static identity). அதிலிருந்து வெளிப்பட்ட ஜீவன்முக்தன் {(இ) --- செய்யுள்-44} உயர்வு / தாழ்வு, மேல்/ கீழ், விண்ணுலகம் / மண்ணுலகம், எல்லையில்லாதது / எல்லைக்குட்பட்டது என்ற எவ்வித வித்தியாசமுமின்றி அனைத்திலும், எங்கும், எதிலும் இறைவனைக் காண்கிறான்; முருகப் பெருமான் அவருடைய சரணம் சூடும்படி அருள்புரிந்ததை நினைத்து அவன் ஆனந்தத்தில் கூத்தாடுகிறான் என்றால் மிகையாகாது. இது அவனுடைய ஆத்மசக்தியோடு ஒன்றுகூடி செயலாற்றும் நிலையாகும் (dynamic identity).

    “சரணம் சூடும்படி தந்தது” --- “இறை-பாதங்கள் தரப்பட்டன” என்று அருணகிரியார் கூறுகிறார். அவை எப்பொழுது தரப்பட்டன? எப்பொழுது அவனுக்கு ‘வேல்’ வெளிப்படுத்தப்பட்டதோ (செய்யுள்- 42), அப்பொழுதே இறை- பாதங்களும் அவனுக்குத் தரப்பட்டன; ஏனெனில், இவ்விரண்டும் ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுபடாத ஒரே சமயத்தில் நடைந்தேறும் செயல்கள். ஆனால், இதை அங்கு அவன் கூறமுடியவில்லை, ஏனெனில் அச்சமயம் அவனது அனைத்து அவயவங்களும் தத்தம் செயல்பாட்டை இழந்திருந்தன (செய்யுள்- 42), அந்நிலையில் ‘பேசா அநுபூதி’யும் பிறந்து விடுகிறது (செய்யுள்: 43). அவ்வநுபவ நிலையிலிருந்து அவன் வெளிப்பட்ட பின்னரே, பெருமானின் பரமகிருபையைப் பரவசத்துடன் நினைத்துப் பார்த்து, அதற்கு நன்றிகூறும் வகையில் அதைப்பற்றி இப்பொழுது எடுத்துக் கூறுகிறான். எனவே, அவனுக்கு அங்கு/ அப்பொழுதே இறை-பாதங்கள் தரப்பட்டுவிட்டன (செய்யுள்- 42) என்பதை நன்றியுடன் இங்கு பறைசாற்றி அறிவிக்கிறான் .

    28ம் செய்யுளில் அச்சாதகன் அடைந்த அநுபவம் சற்றேகுறைய சமாதியேதவிர ஒரு முழுமையான இறை-அநுபூதியல்ல என்பதும், இப்பொழுது 43ம் செய்யுளில் அவன் பெற்றதே உண்மையான இறை-அநுபூதி என்பதும், அந்த அந்த நிலைகளிலிருந்து வெளிவந்த பின்னர் அவன் கூறியதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். சற்றேகுறைய சமாதியிலிருந்து (செய்யுள்- 28) வெளிப்பட்ட சாதகன் தன் மேல் கடுமையான கழிவிரக்கம் கொண்டு, “இல்லேயெனும் இம்மாயையில் என்னை ஏன் மீண்டும் இட்டாய்?” என்று புலம்புகிறான் (செய்யுள்- 29); எனினும், தன் சாதனையின் தொடக்க காலங்களில் மாயை அவனுக்குத் தந்து வந்த தொந்தரவின் கடுமை அளவைப் பார்க்கும்போது (செய்யுள்- 5), இப்போதைய அளவு வெகுவாக குறைந்திருப்பதையும் அவன் உணர்ந்துதான் இருந்தான். ஆனால், பேசா- அநுபூதி நிலையிலிருந்து – உண்மை இறையநுபூதி நிலையிலிருந்து --- இப்பொழுது வெளிப்பட்ட பின்னர் (செய்யுள்- 43), அவன் ஓர் ஆனந்தப் பரவசத்தை அநுபவித்துக் கொண்டு, எங்கும் எதிலும் இறைவனை உணர்கிறான் – நோக்குமிடமெங்கும் இறை-பாதத்தை இப்பொழுது தரிசனம் செய்கிறான். முன்னர், சற்றேகுறைய சமாதி அனுபவத்திற்குப் பின்னரும், அவனுடைய அறியாமை விலகாமல் இருந்தது (“அறியாமை பொறுத்திலை”; செய்யுள்- 29), ஆனால் இப்பொழுது அவன் பெற்ற மகத்தான இறை-அநுபூதிக்கு பின்னர் அவனிடமிருந்து அறியாமை அற்றுப்போய் விடுகிறது (“அறியாமை அற்றது”, செய்யுள்- 42; மற்றும் “ஆசா நிகளம் துகள் ஆயின”, செய்யுள்- 43 என்று பறை சாற்றி அவன் அறிவிக்கிறான்). மேலும், முன்னர் அநுபவத்தில் (செய்யுள்-28), அகந்தையானது தற்காலிகமாக விழுங்கப்பட்டது, அதன் மூலகாரணமான அறியாமையானது அழிக்கப்படவில்லை; அதனால்தான் செய்யுள்-37ல் “அரிவாய் அடியோடும் அகந்தையையே’ என்று அவன் அறிவுறுத்தப்படுகிறான்.

    “அறியாமை அற்றது” (செய்யுள்- 42), “பேசா அநுபூதி பிறந்தது” (செய்யுள்- 43), மற்றும் “சரணம் சூடும்படி தந்தது” (செய்யுள்- 44) ஆகிய மூன்றும் குறிக்கோளான இறையனுபூதி அடையப்பட்டதற்கான ஆணித்தரமான பிரகடனங்களே. இம்மூன்று செய்யுள்களும் விசேஷ வசீகரமும், அழகும், முக்கியத்துவமும் வாய்ந்தவை. சாதகன் தன் ஜீவத்துவத்தை நீத்து இறைவனுடன் ஒன்றாக இருக்கிறான் (செய்யுள்-42); இறை-அநுபூதியில் திளைக்கிறான் (செய்யுள்-43); அவ்வநுபூதி நிலையிலிருந்து ஜீவன்முக்தனாக (இறை-மனிதனாக) வெளிப்படுகிறான் (செய்யுள்-44). இறை-அநுபூதியிலிருந்து ஜீவன்முக்தனாக வெளிப்பட்டபின் அவன் பெற்ற ஆனந்தத்தை இச்செய்யுள் சித்தரிக்கிறது. இத்தகைய அபூர்வமான கருத்துக்கள் இச்செய்யுள்களில் மிக அழகாக மறைவாக பொதிக்கப்பட்டுள்ளன.

    இப்பொழுது அந்த சன்னியாசி-சீடன் ஒரு சித்த புருஷராக, ஜீவன்முக்த புருஷராக, ஞானியாக ஆகிவிட்டான். அவன் இனிமேல் ஒரு சாதாரண சாதகனோ, ஜீவனோ அல்ல; அவன் தன் குறிக்கோளை அடைந்துவிட்டான், எனவே முயற்சிசெய்து சாதனை செய்யவேண்டிய தேவையில்லை. அவனுடைய வாழ்க்கையே சாதனைதான். ஏனெனில் அவனில் பரம்பொருளின் உள்ளுணர்வு உறுதியாகவும் இடைவிடாமலும் இருப்பதால், சாதனை முயற்சியின்றி இயற்கையாகவே நடைபெறும், இது சுபாவமாகிவிடுகிறது. அதனால்தான் இச்செய்யுளிலிருந்து ஜீவாத்மாவைக் குறிக்கும் வள்ளி என்ற சொல் எங்கும் காணப்படுவதில்லை; ஜீவாத்மாவின் சாதனையின் முன்னேற்றத்தைக் காட்டும் ஒரு செய்யுளுக்கும் மற்றொன்றிற்குமுள்ள தொடர்பிற்கும் இதுவரை காட்டிவந்ததுபோல் இனிமேல் வேலையுமில்லை (தேவையுமில்லை).

    இச்செய்யுள் மிகவும் எளிய அர்த்தம் கொண்டதுதான்; ஆனால் அதன் தாக்கங்கள் மகத்துவம் வாய்ந்தவை, பல திசைகளிலும் பரவும் தன்மை உடையவை. முருகப் பெருமான், கிருபையுடன், தன் பாதங்களைச் சூடும்படி தந்தருளினார். இதுதான் பெறுதற்கரிய கிருபைகளிலேயே மிகவும் உயர்ந்தது, ஏனெனில் இதைப் பெறுபவன் முக்தியை அடைகிறான். இறைபாதமும் முக்தியும் ஒன்றே. எப்பாதங்கள் அவனுக்கு அருளப்பட்டன அல்லது அந்த பாதங்கள் எவருடையது என்று பார்ப்போம் : கல்போன்றுக் கடினமான தன் இதயத்தில் அழகான தாமரை போன்ற பாதம் மலர வேண்டும் என்று சாதனையின் தொடக்கத்தில் பிரார்த்திக்கப்பட்ட (செய்யுள்- 6) அப்பாதங்கள் தான் அவை; தன் செல்வங்களைத் தர்மம் செய்யும்போது எப்பாதங்களை தியானிப்பது சம்சார பந்தத்திலிருந்து விடுவித்து முக்தி அளிக்குமோ (செய்யுள்- 7) அப்பாதங்கள்தான் அவை; எப்பாதங்களை பெறுவதன் மூலம் ஒருவன் தனது எல்லா ஆசைகளையும் களைந்து, தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியுமோ, அதாவது முக்தி அடைந்திட முடியுமோ (செய்யுள்- 14), அப்பாதங்கள்தான் அவை; நினைப்பும் மறப்புமற்ற நிலையான முக்தியையடைய எப்பாதத் தாமரைகளைத் தனக்குத் தந்தருளுமாறு முன்னர் பிரார்த்தித்தானோ (செய்யுள்- 21) அப்பாதங்கள் தான் அவை; எப்பாதங்களைப் பணியும்போது, அவை ‘ஸச்சிதானந்தம்’ என்று கருதி உணருமளவிற்கு அவன் தவம் அடைந்ததோ (செய்யுள்- 22) அப்பாதங்கள்தான் அவை; எப்பாதங்களை, அறியாமை விளையாட்டின் எழுச்சி காரணமாக, நினைக்கமுடியாமல் போய்விட்ட கெட்டநிலையிலிருந்து காத்தருள வேண்டிப் பிரார்த்தித்தானோ (செய்யுள்-23) அப்பாதங்கள்தான் அவை; எவருடைய பாதங்கள் மட்டுமன்றி உடல் முழுவதும் செம்மையாய் இருக்கின்றதோ (செய்யுள்- 25) அவருடைய பாதங்கள்தான் அவை; விடமுடியாத சஞ்சித கர்ம வினைகளிலிருந்து விடுதலை அடைய (முக்தி பெற) அவன் எப்பாதங்களை அருளிட வேண்டி ஏங்கித் தவித்தானோ (செய்யுள்- 35) அப்பாதங்கள்தான் அவை; எப்பாதங்களை சதுர்முக பிரம்மாவும் (படைப்புக் கடவுள்) மற்ற தேவர்களும் தங்களுடைய சிரங்களில் சூடி அலங்கரித்துக் கொள்கிறார்களோ (செய்யுள்- 36) அப்பாதங்கள்தான் அவை; எப்பாதங்களில் காக்கப்படுவது (சரணடைவது) மறுபிறப்பை அழித்து, ஜீவன்முக்திநிலையை இங்கேயே இப்பொழுதே அடையச்செய்யுமோ அதற்குப் பிரார்த்தனை செய்யப்பட்டதோ (செய்யுள்- 41) அப்பாதங்கள்தான் அவை. இவையனைத்தையும் கொடுத்த பாதங்களே அவன் சூடிக்கொள்ள அருளப்பட்டவை.

    இறைவனின் பாதங்கள் அருளப்பட்டவுடன் நடப்பது என்ன? பந்தப்பட்ட ஜீவன் உடனே பந்தத்திலிருந்து விடுதலையடைகிறான், சாதகனாயிருந்தவன் சித்தனாகிறான், அருளாளராகிறான். அத்தகைய ஆசீர்வாதத்தைப் பெற்ற புனிதனான அவனுக்கு, இறைபாதங்கள் தமது உண்மை சொரூபத்தை வெளிப்படுத்துவதால், ஒரு புது பார்வை நோக்கு தோன்றுகிறது. அப்பாதங்களே புலன்களுக்குத் தெரியாத பரம்பொருளாகவும், காணப்படும் இப்பிரபஞ்சமாகவும், அவைகளிரண்டிற்கும் இணைப்பாகவும் பிரகாசிக்கின்றன. அருணகிரியார் இப்பாதங்களை தானே-ஒளிரும் மோட்சமாகவும், சொர்க்கத்தில் வாழும் தேவர்களின் சிரங்களிலும், அழிவற்ற வேதங்களாகவும், காடுகளிலும் தினைப் புனங்களிலும் ஒளிரும் (மென்மையான) பாதங்களாகவும் வர்ணித்துள்ளார். எளிதில் விளக்க இயலாத ‘கமழும் கழல்’ என்ற ஒரு சொற்றொடரை அவர் பிரயோகித்துள்ளார். இதற்கு பலவிதங்களில் அர்த்தம் கொள்ளலாம்: ‘இனிய மணம் பரப்பும் பாதங்கள்’, ‘ஒளிரும் பாதங்கள்’, ‘தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும் பாதங்கள்’. இதன் மூலம் அவர் சொல்ல வருவதென்னவெனில், அப்பாதங்கள் அருளப்பட்ட அப்போது பார்வைக்குத் தெரிந்த ஸ்தூல திருப்பாதங்கள் மட்டுமல்லாமல், அவற்றின் தெய்வீகத் தன்மை அல்லது குணம் சூட்சுமமாக இப்போதும், எப்பொழுதும் உணரப்படுகிறது என்பதுதான். எப்படி மலரின் மணமானது காணப்படாமல் உணரப்பட மட்டுமே இயலுமோ, அப்படியே இறை பாதங்கள் ஸ்தூலமாகக் காணாமல், உள்ளுணர்வாக உணர்ந்து ஒரு ஜீவன்முக்தனால் அனுபவிக்கப்படுகிறது.கமழும் (ஒளிரும்/ மணம் பரப்பும்) என்ற சொல்லின் சிறப்பம்சம் இதுவே. மேலும், இறை பாதங்கள் வழங்கப்பட்ட செயல் தந்தது என்று இறந்த காலத்தில் கூறப்பட்டிருக்கிறது; ஆனால் அப்படி அருளப்பட்ட பாதங்களின் சொரூபத்தை வர்ணிக்கும்போது அருட்செல்வர், கமழும் கழல் என்று நிகழ் காலத்தில் கூறுகிறார். இதன் மூலம் அவர் குறிப்பிடுவதென்னவெனில், முன்பு அருளப்பட்ட பாதங்கள் தேவர்களின் சிரங்களில் சூட்டப்பட்டதும், வள்ளியைத் தேடி காடுகளிலும், வயல்வெளிகளிலும் தேடியலைந்தது மட்டுமல்ல, ஆனால் அப்பாதங்கள் முக்தி அடைந்த சித்த புருஷர்களுக்கு எப்பொழுதும் சந்நிதானமாக நித்தியமும் இருந்து கொண்டிருக்கின்றன. இறை பாதங்கள் ஒளிர்வதாகச் சில இடங்களை மட்டும் கூறப்பட்டது ஒரு அடையாள நிமித்தமாகத்தான், உண்மையில் அவை எங்கும் எதிலும் ஒளிர்கின்றன என்பதைக் குறிப்பிடுவதற்காகவேதான். அருணகிரியார் கூறும் இடங்களெல்லாம் விசேஷ அர்த்தம் கொண்டவை. அவை: “வீடும், சுரர்மாமுடி, வேதமும், வெம்காடும், புனமும் கமழும் கழல்.”

    (1) “வீடும்” : மனிதனின் எல்லா நாட்டங்களின் இறுதிக் குறிக்கோள் ‘மோட்சம்’ அடைவது, அதை அடைந்தவுடன் வாழ்வின் நோக்கம் பூரணமாகிறது. அது பூரண, முழுமையான விடுதலை (முக்தி) அடைந்துவிட்டதன் உணர்வு. அதுவே பரம பதம், உன்னதமான தெய்வீக உறைவிடம். அதுவே இறைவனின் திருப்பொற்பாதங்கள். இறை-பாதங்களே மோட்சபுரியாக ஒளிர்கிறது, மோட்சமென்பதே எல்லையற்றப் பரம்பொருளான பரபிரம்மம்தான்.

    (2) “சுரர்மாமுடி” : முருகப் பெருமானின் இறை-பாதங்கள் தேவர்களின் சிரங்களில் ஒளிருகின்றன. அழிவற்றதும் உருவமற்றதுமான பரம்பொருளே தேவர்களின் துன்பங்களைப் போக்குவதற்காக முருகப் பெருமானாக அவதரித்தது என்று பார்த்தோம். அசுரன் சூரபத்மனின் கொடுங்கோன்மையால் துன்பப்பட்டுக்கொண்டிருந்த தேவர்களின் துயரம், அவனை முருகப் பெருமான் அழித்ததால், துடைக்கப்பட்டபோது, அனைத்து தேவர்களும் மரியாதை நிமித்தமாகவும், தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதற்காகவும் அவரது பாத கமலங்களை தங்கள் சிரங்களில் இருத்திப் போற்றி வணங்கினர். ஆதலால், அவரது பாத கமலங்கள் சொர்க்கத்திலிருக்கும் தேவர்களின் சிரங்களில் ஒளிர்கிறது. இப்படியாக, வரம்பற்ற பரம்பொருளாக எங்கும் பிரகாசிக்கும் {மேலே (1)ல் கூறியபடி} அதே (இறை) பாதங்கள் மேல் (சொர்க்க) லோகங்களிலும் பிரகாசிக்கின்றன.

    (3) “வேதமும்”: பாதங்கள் பரம்பொருளாகவும் மேல் லோகங்களாகவும் பிரகாசிப்பவை மட்டுமல்ல, அவற்றை அடைவதற்கு வழிகாட்டும் வேதங்களும் அவையே. வேதங்கள் ஞானத்தின் களஞ்சியம். அவை அபௌர்ஷேய என்று கருதப்படுகின்றன, அதாவது, மனிதர்களால் இயற்றப்பட்டவையோ அல்லது உண்டாக்கப்பட்டவையோ அல்ல, பரம்பொருளிடமிருந்தே வெளிப்பட்டவையாகக் கருதப்படுகின்றன. வேதங்கள் எவராலும் எழுதப்படவில்லை (எழுதாக் கிளவி), அது நித்தியமான ஒன்று; வேத- ஞானமானது, இறையனுபூதி அடைந்த ரிஷிமார்கள், ஞானிகள் தங்கள் தியானத்தில் ஞானக்கண்ணால் கண்டெடுத்த உண்மைகளின் ஆனந்த வெளிப்பாடுகள். இவை, குரு-சிஷ்ய பரம்பரையின் மூலம் வழிவழியாக யுகயுகமாக கேட்டு- ஓதப்பட்டு நமது பரம்பரைவரை கொண்டு சேர்க்கப்பட்டு நமக்குத் தரப்பட்டுள்ளன. எனவே, வேதங்கள் ‘சுருதி’ (எது கேட்கப்பட்டு- வெளிப்படுத்தப்படுகிறதோ, அது சுருதி) என்றும், வேதங்கள் வெளிப்படுத்தும் தாத்பரியங்களை விளக்குவதற்காக மனிதர்களால் இயற்றப்பட்ட நூல்கள் ‘ஸ்ம்ருதி’ என்றும் அழைக்கப்படுகின்றன. வேதங்கள் இறைவனைப் போற்றுகின்றன, இறைவனை அடையும்படி மனிதனை அறிவுறுத்துகின்றன. அவைகளில் பற்பல உபாசனைகளும், தியான முறைகளும் (வித்யை) தரப்பட்டுள்ளன; இவ்வுபாசனை/ வித்யைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு, இவை சொர்க்கத்தையும், முக்தியையும் தரவல்லவை. வேதங்கள் பரம்பொருளின் வெளிப்பாடானவையாலும், சொர்க்கம் மற்றும் மோட்சத்தை அடையும் மார்க்க-தர்ஷிணியானதாலும், அவை இறை-பாதங்களாகவே கருதப்படுகின்றன. இப்படியாக, வேதங்களில் இறைபாதங்கள் பிரகாசிக்கின்றன. பரம்பொருளாகவும், மேல் லோகங்களாகவும் பிரகாசிக்கும் இறை-பாதங்கள், வேதங்களாகவும் பிரகாசித்து அவைகளை பெறுவதற்கான வழியாகவும் அமைகின்றன.
    
    (4) “வெம் காடும் புனமும்” : ஜீவர்கள் தங்கள் கர்மங்களுக்கேற்ப விதவிதமான சுகதுக்கங்களை அநுபவித்து, மனம் சுத்தமடைந்து, மேலானப் பிறவிகளையடைந்து கடைசியில் இறைவனை நாடியடைவதற்கு உறுதுணையாக இருக்கும் ஒரு அரங்காக இப்பிரபஞ்சம் இறைவனால் படைக்கப்பட்டது. ஜீவாத்மாக்கள் முக்திபெற தகுதி பெற்றவுடனே, அவர்களது பக்தியினால் ஈர்க்கப்பட்டு அவர்களுக்கு முக்தியை அருளுவதற்காக இறைவன் இப்பூமியில் தோன்றுகிறார். வள்ளியின் பக்தி, கந்தப் பெருமானை அவருடைய இருப்பிடத்திலிருந்து இழுத்து, அவளைத் தேடி சுனையிலும், அருவித்துறையிலும், காடுகளிலும், தினைப்புனங்களிலும் அலைய வைத்தது. இது ஸ்கந்த லீலை – கந்தப் பெருமானின் தெய்வீகத் திருவிளையாடல். இப்பிரபஞ்சம் முழுவதும், அதிலும் நமது வாழ்க்கை நடைபெறும் இப்பூவுலகம், இறைவனின் திருவிளையாடல் அரங்கமும், அதேசமயம் ஜீவர்களின் அநுபவ-முன்னேற்றக் களமுமாகிறது. இது ஒரு விளையாடும் இடம், ஜீவர்களும் இறைவனும் சந்திக்குமிடம். இறைவனின் பாதங்கள் காடுகளிலும் கழனிகளிலும் பிரகாசிக்கின்றன என்று அருணகிரியார் கூறியதற்கு காரணம் உண்டு. இங்குதான் முருகப் பெருமான் வள்ளியைத் தேடிச்சென்று, சந்தித்து, ஸ்வீகரித்தார் என்பதை அழகாகவும் உருவக வடிவாகவும் அடையாளப்படுத்திடவே அவ்வாறு கூறியுள்ளார். பரம்பொருள் தன்னையேத் தியாகம் செய்து இப்பிரபஞ்சமாக பிரகாசிக்கிறது. அது அப்பரம்பொருளின் ஒரு பாதம், அதாவது அவரின் பரிமாணத்தில் நான்கில் ஒரு பங்கு; அவரின் முக்கால் பங்கு என்றும் அழியாதது மற்றும் நித்தியமானது மற்றும் தோன்றாதது. அப்பாதம் இப்பிரபஞ்சமாக பிரகாசிக்கிறது.

    ஆக, பரம்பொருளாக (வீடு), மேல் லோகங்களில், வேதங்களில், இப்பூமியில், என அனைத்திலும் இறை-பாதங்கள் கமழ்கின்றன, பிரகாசிக்கின்றன. அவருடைய பாதங்களே ஆதாரமும், மார்க்கமும் மற்றும் அடையப்படும் குறிக்கோளுமாக இருக்கின்றன.

    இவை அனைத்தின் மூலம் அருணகிரியார், இறை-பாதங்கள் அருளப்பெற்ற ஜீவன்முக்த மகாபுருஷன் உணரும் இறைவனின் எங்கும் வியாபித்திருக்கும் (பிரகாசிக்கும்) தன்மையை வெளிப்படுத்துகிறார். முருகப் பெருமான் தன்னுடைய பாதகமலங்களை ஒருவன் சிரத்தில் சூடும்படி தந்தருளும்போது, அவன் அப்பாதங்களின் உலகளாவிய (அண்டம்) தரிசனத்தைப் பெறுகிறான், அப்பாதங்களை எங்கும், எதிலும் காண்கிறான். பாதங்கள் சிரத்தில் சூட்டப்படுவது ஒருமுறையாகவே இருந்தாலும்கூட, அதன் பலனாக அவற்றை அனைத்திலும் காணும் பாக்கியம் என்றென்றைக்கும் நீடித்திருக்கிறது; ஏனெனில், “பாதங்கள்” தந்தருளுதலும் “வேல்” வெளிப்படுதலும் ஒன்றே --- “வேல்” என்பது பேருணர்வு, ‘வேல்-வெளிப்படுதல்’ என்பது இதயத்தில் நிலைத்திருக்கும் ஓர் உள்ளுணர்வு நிலை. எனவே, பாதங்கள் தரப்பட்டதை “தந்தது” என்று இறந்த காலத்திலும், அப்படி தரப்பட்ட பாதங்கள் பிரகாசிக்கும் இடங்களை வர்ணிக்கும்போது “கமழும் கழல்” என்று நிகழ் காலத்திலும் கூறப்பட்டுள்ளன.
    
    இறை-பாதங்களின் மகிமை பற்றி மேன்மேலும் சொல்லிக் கொண்டே போகலாம், ஆனால் இப்போதைக்கு இது போதும்! முருகப் பெருமானின் வேல் எத்தகையது என்று சற்று பார்ப்போம். அதன் மகிமையும் பாதங்களைப் போன்றதே! பாதங்களும், வேலும் சேர்ந்தே செல்கின்றன என்றும், அவை இரண்டும் ஒன்றே என்றெல்லாம் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இவ்வுண்மையானது இச்செய்யுளில் மிகவும் அழகாக வெளிப்படுத்தப்படுவதைக் காண்கிறோம்: ‘’சாடும்’’ (அழித்திடும்) மற்றும் “தனி” (ஒப்பிலா) என்ற இரு அடைமொழிகள் தரப்பட்டு வேலின் இரு அம்சங்களான உலக சம்பந்தப்பட்ட (relative aspect) மற்றும் நித்திய உண்மைத் தன்மைகள் (Absolute aspect) போற்றப்படுவதைக் காணலாம்.

    வேல் ஒப்பில்லாதது; அது பரம்பொருள் (நித்திய உண்மை); வேலும் இறைவனும் ஒன்றே (இரண்டும் வேறுபட்டவை அல்ல); அதுவே தூய-உணர்வு என்று செய்யுள்-40ல் பார்த்தோம். “தனி” (ஒப்பில்லா) என்ற சொல் வேலின் பரம்பொருள் தன்மையைக் குறிக்கிறது; மேலும், அது “சாடும்” வேல், அதாவது தீயவைகளை அழித்திடும் தன்மை கொண்டது. வேல் எதை அழிக்கிறது? அது அகங்காரத்தின் மொத்த உருவமாக இருந்த அசுரன் சூரபத்மன் மற்றும் அவனுக்கு துணைநின்ற உற்றார் உறவினர் அனைவரையும் முறியடித்து வெற்றி கொண்டு. தேவர்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தது. அசுரர்கள் வெளியிலுள்ள எதிரிகள்; அவர்களை அழித்த வேல், அவித்யை (அறியாமை), காமம் (ஆசை) மற்றும் கர்மம் (பிரயத்தனம் – ஆசைகளைப் பூர்த்திசெய்ய செய்யப்படும் செயல்கள்) ஆகிய உள் எதிரிகளையும் அழிக்கிறது. வேல், சாதகனின் சாதனை-சக்தியாகி, அவனுடைய புத்தியைக் கூர்மையாக்கி அறியாமையைத் துளைத்து அழிகிறது. இந்த “சாடும்” (அழிக்கும்) என்பது வேலின் இவ்வுலக சம்பந்தப்பட்ட அம்சம் (புலன்களுக்கு புலப்படும் அம்சம்). இவ்வாறு அறியாமை அழிக்கப்பட்டபின், அந்த வேல் தூய-உணர்வாக (சைதன்யமாக) இருந்து பிரகாசிக்கிறது. வேல், அறியாமையை அழிக்கும் சாதனமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு அதை அழித்த பின்னர், அடையப்பட்ட இலக்காகவே அது (தனித்து) நிற்கிறது. ஆக, வேலே (இலக்கை அடைவதற்கான) சாதனமும், இலக்கும்; அசைவதும், அசையாததும் அதுதான்; உலக சம்பந்தப்பட்டதும், பரம்பொருளும் அதுவே; ‘சாடும்’ (அழிப்பதும்), ‘தனி’த்து நிற்பதும்’ (ஒப்பற்றதும்) அதுவே.

    இந்த அரிய செய்யுளில்தான் ‘வேல்’ மற்றும் ‘பாதம்’ ஆகியவைகளின் ‘உலக சம்பந்தப்பட்ட’ மற்றும் ‘எல்லையற்ற பரம்பொருள்’ நிலைகள் ஆகிய இரண்டும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன், மிகஅழகாக இணைக்கப்பட்டுள்ளன; அதாவது, இது ஆத்மானுபூதியடைந்த ஒரு ஜீவன்முக்தனின் நிலைமையை மிக நேர்த்தியாக சித்தரிக்கிறதென்று காட்ட. ‘உலக சம்பந்தப்பட்ட நிலை’ மற்றும் ‘எல்லையற்ற பரம்பொருள் நிலை’ ஆகிய இரண்டு நிலைகளையும் ஒரே சமயத்தில் அநுபவிக்கும் தனிச்சலுகையை அவன் ஒருவனே பெற்றுள்ளான். இதுபற்றி ஸ்வாமி சிவானந்த மகராஜ் குரு தத்துவம் என்ற தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்: “குரு, மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலான ஒரு இணைப்பு போன்றவர். அவர் தன்னை “இகத்திலிருந்து” “பரத்திற்கு” உயர்த்திக் கொண்டவர்; அதனால், அவ்விரண்டு நிலைகளுக்கும் எவ்விதத் தடைகளுமின்றி நுழைவுரிமை உள்ளவர். நித்தியத்தின் (பரத்தின்) நுழைவாயிலில் நின்றுகொண்டு; அங்கிருந்து கீழே குனிந்து போராடிக் கொண்டிருக்கும் ஜீவர்களை ஒரு கையால் தூக்கி, மற்றொன்றால் நித்திய மகிழ்ச்சியும் எல்லையற்ற உண்மை-உணர்வு நிலையுமான பரலோகத்தில் இருத்துகிறார்.”

    சமாதி நிலையில் (செய்யுள்- 42), ‘வேல்’ என்பது ‘தனி’ (ஒப்பற்றது) என்று மட்டும், ‘பாதம்’ என்பது ‘நெறி’ (முக்தி/ மோட்சம்) என்று மட்டும் அனுபவிக்கப்படுகிறது; அதாவது, அவற்றின் எல்லையில்லாப் பரம்பொருள் அம்சத்தில் மட்டும்தான். சமாதியிலிருந்து ஜீவன்முக்தனாக வெளிப்பட்ட பின்னர், (இச்செய்யுளில் சொல்லியபடி) அவைகளிரண்டும் அவைகளின் இரண்டு அம்சங்களிலும் அனுபவிக்கப் படுகின்றன – அதாவது, ‘வேல்’, ‘தனி’ மட்டுமல்லாமல் ‘சாடும்’ ஆகவும்; ‘பாதம்’, ‘மோட்சம்’ (வீடு) மட்டுமல்லாமல், ‘காடும் புனமும்’ (பூமி) ஆகவும் -- அவற்றின் இரு (பர மற்றும் இக) அம்சங்களிலும் அனுபவிக்கப் படுகின்றன. இவ்வாறாக, வேல் வெளிப்படுத்தப்பட்டதில் (செய்யுள்-42), இறை-பாதங்களும் அருளப்பட்டன என்ற குறிப்பு தொக்கியிருப்பதை இச்செய்யுள் தெளிவுபடுத்துகிறது. ஆனால், செய்யுள்-42ல் சமாதிநிலையின் அநுபவம், இங்கோ ஜீவன்முக்தனின் அனுபவம்.

    அங்கு செய்யுள்-42ல் வேல் வெளிப்படுவதும், இங்கு இறை-பாதங்கள் அருளப்படுவதும் ஒன்றே; இரண்டும் குறிப்பது ஒன்றையே, அதாவது முக்தி அடைவதையே. செய்யுள் 42ல், முக்தி நிலையானது ‘நெறி’ என்றும் ‘வேல்’ என்றும் குறிக்கப்பட்டது, அதாவது ‘நெறியை’ மற்றும் ‘வேலை’ என்று. இப்பொழுது, இச்செய்யுளில், அதே முக்தி (‘வீடு’) இறைபாதங்களாகக் குறிக்கப்படுகிறது. ஆகவே, வேல்-வெளிப்படுத்தப்படுவது, மற்றும் இறை- பாதங்கள் அருளப்படுவது ஆகிய இரண்டும் ஒரே சமயத்தில் நடந்தேறும் சம்பவங்கள்தான், – முன்னது உள்ளே உணரப்பட்ட உணர்வு என்றும், பின்னது வெளிச் செயல் என்றும் சொல்லலாம்.

    செய்யுள் 21ல், “கருதா மறவா நெறி காண” – அதாவது “நினைப்பும் மறப்புமற்ற நிலையான முக்தியையடைய”, --- இறை-பாதங்களைத் தந்தருளும்படியான பிரார்த்தனை செய்யப்பட்டது. செய்யுள் 42ல், ”குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்”, ‘அறியாமையும் அற்றது’ எனப்படுகிறது; அதாவது, முக்தி அடைந்ததைக் குறிக்கிறது. இதிலிருந்து, இறை-பாதமும் வேலும் ஆகிய இரண்டும் முக்தியையே குறிக்கின்றன என்பது தெளிவாகிறது.

    செய்யுள்-40ல் குறிக்கோளை அடையும்வரை இடைவிடாத தியானம் ‘வேல்’இன் மேல் மேற்கொள்ளப்பட்டது, ஆனால், செய்யுள்-41ல் வேண்டப்பட்டது இறை-பாதங்களில் தன்னை இருத்திக்காத்து உடனே ஜீவன்முக்தி தந்தருளுவதற்கே; செய்யுள்-41ல் அப்படி செய்யப்பட்ட பிரார்த்தனைக்கிணங்கி ‘வேல்’ தான் அருளப்பட்டது (செய்யுள்- 42); மேலும், செய்யுள்-42ல் ‘வேல்’ வெளிப்படுத்தப்பட்டு அருளப்பட்டதென்றாலும், செய்யுள்-44ல் இறை-பாதங்களைத் தந்தருளியதற்காக ஆச்சரியத்துடன் நன்றி தெரிவிக்கப்- படுகிறது. எப்படி மிகவும் நேர்த்தியாக ‘வேல்’ மற்றும் ‘இறை-பாதங்களை’ மாற்றி மாற்றி பிரயோகித்து அருணகிரியார் அவ்விரண்டும் குறிப்பது ஒன்றையே என்பதை தெளிவாக்குகிறார் பாருங்களேன்! இதை உறுதிபடுத்தவே, இச்செய்யுளில் வேல் மற்றும் இறை-பாதங்கள் ஆகிய இரண்டையும் ஒன்று சேர்த்து, ‘சாடும் தனி வேல் முருகன் சரணம்’ (பாதம்), என்றுகூறி, அவ்விரண்டின் உலகசம்பந்தப்பட்ட அம்சம் மற்றும் எல்லையற்ற (நித்திய) பரம்பொருள் அம்சம் ஆகிய இரண்டையும் போற்றுகிறார்.

    “குறியைக் குறியாது குறித்தறியும் நெறி” (செய்யுள்-42) மற்றும் “பேசா- அநுபூதி” (செய்யுள்-43) நிலைகளை இறைவனுடன் அனுபவிக்கும் செயலற்ற-சமாதிநிலை என்று கொள்ளலாம்; அதாவது, சமாதியில் இருக்கும்போது அனைத்து அவயவங்களும் செயலற்றுப்போன நிலை. அச்சமாதி நிலையான “பேசா- அனுபூதி”யிலேயே ஒருவன் நிலைத்து இருந்துவிடுவதில்லை, அதிலிருந்து வெளிப்படத்தான் செய்கிறான்; எனினும், அவன் இதயத்தில் இறைவனுடன் “தொடர்பு” அறுபடாமல் இருப்பதோடல்லாமல், அவ்விறைவனை எங்கும் எதிலும் காண்கிறான் என்ற ஒரு இரகசியம் இச்செய்யுளில் (44ல்) வெளிப்படுத்தப்படுகிறது. எனவே, இச்செய்யுளில் விளக்கப்பட்ட நிலையை இயங்கும் சமாதிநிலை என்று கொள்ளலாம், அதாவது சமாதிநிலையிலிருந்து ஜீவன்முக்தனாக வெளிவந்தவன் நித்தியமாக, சாசுவதமாக இறை-அநுபவத்தில் நிலைத்திருந்து செயலாற்றுகிறான் என்று கொள்ளலாம். இவ்வாறு, அந்த பெறுதற்கரிய மிக உன்னத இறை-அநுபூதி உச்ச நிலையிலிருந்து இயங்கும் சமாதிநிலைக்கு வரும் மகாத்மாக்களால் மட்டுமே உலகிற்கு சேவை செய்யவும் சாதகர்களுக்கு வழிகாட்டவும் இயலும். இவ்வரிய மகாபுருஷர்கள், அரும் ஆன்மீகப்பணி ஆற்றிடுமாறு தெய்வக் கட்டளையைப் பெற்று, அந்த தெய்வீகப் பணியை செவ்வனே நிறைவேற்றிடத் தேவையான அசாதாரணமான சக்தியையும் பெறுகின்றனர். இது ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, ஸ்வாமி சிவானந்த மகராஜ், மகரிஷி அரவிந்தர், போன்ற அநேக மகாத்மாக்களின் வாழ்வில் காணப்படுகிறது.

    இவ்வாறாக, இச்செய்யுளின் அர்த்தமானது மிகவும் எளிதானதாக இருப்பினும், அதன் தாக்கங்கள் ஆழமானதாகவும், அனைத்து திசைகளிலும் பரவுவதாகவும் இருப்பதைக் காண்கிறோம்.

No comments:

Post a Comment