செய்யுள் 46செய்யுள் - 46


எந்தாயும்   எனக்கருள்   தந்தையும்   நீ
சிந்தாகுலம்   ஆனவை   தீர்த்து   எனையாள்
கந்தா   கதிர்வேலவனே   உமையாள்
மைந்தா   குமரா   மறைநாயகனே.

    பொழிப்புரை: கந்தப் பெருமானே! ஒளி வீசும் வேலை உடைய பெருமானே! உமா தேவியின் மைந்தனே! குமரப் பெருமானே! வேதங்களுக்குத் தலைவனே! எனக்கு அருள்செய்யும் தாயும் தந்தையும் நீயே. எனது மனக் கவலைகள் அனைத்தையும் அகற்றி, என்னை ஆட்கொண்டு அருள்வாயாக.

விளக்கவுரை

    தங்கள் மன வேதனைகளையும், சாதனை செய்யும்போது உண்டாகும் குழப்பங்களையும் அகற்றிடுவதற்கு ஜீவன்முக்தரிடம் அறிவுரைக்கு வந்த சாதகர்களுக்கு அவர் வழங்கிய அறிவுரை இச்செய்யுள். எனினும், இச்செய்யுள் நம் வேதனைகளைக் களைந்து, இறையருளைப் பெற்றிட மிகச்சிறந்த சக்தி வாய்ந்த பிரார்த்தனை.

    அருட்செல்வர் இறைவனுடன் நமக்குள்ள உண்மையான உறவை உறுதிப்படுத்தும்படி உபதேசிக்கிறார்; அதாவது, இறைவன் நமக்கு உண்மையான சொந்தமானவர், கருணைமயமானவர், நமக்கு அருள்புரியும் தாயும் தந்தையுமாக இருப்பவர். நமது ஆத்மாவும் அவரே, நமது மன வேதனைகள் நீங்குவதற்கும், அடைக்கலம் பெறுவதற்கும், நாம் அவரை நாடுதல் மிகவும் அவசியம். வேதனைகளை நீக்கிக் கொள்வது நாம் இங்கு வசதியாக வாழ்வதற்காக அல்ல; அவரை அடைந்து (அவர் எனை ஆள) என்றுமழியா பேரானந்தத்தை அநுபவிப்பதற்காகவே. பரமாத்மாவான அவரை நமக்கு மிகவும் நெருங்கிய பெற்றோரை அணுகுவது போல் நினைத்து அணுக வேண்டும். அவர் எங்கேயோ, வெகுதூரத்தில், வேறு உலகத்தில் இருப்பதாக நினைக்கக்கூடாது.

    இச்செய்யுளில் வைக்கப்படும் பிரார்த்தனை மிகவும் எளியது மற்றும் நேரடியானது; நமக்கு இறைவனுடனிருக்கும் உண்மையான நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. இதைப்போன்ற செய்யுள்கள் ஆத்மானுபூதி அடைந்த மகான்கள் இறைவனுடன் ஒன்றாய் இருக்கும் உணர்வின் அனுபவத்தின் வெளிப்பாடுகள். ஜீவன்முக்தன், தான் இறைவனுடன் மிகவும் அன்யோன்யமாகி விட்டதை உணர்வதால், அவருடனுள்ள மிக நெருங்கிய உறவை உரிமையுடன் சொல்கிறான்: “பெருமானே, எனது கருணைமிக்க தாயும், தந்தையும் நீங்கள்தான்.” சுவாமி சிவானந்த மகராஜ், “இறைவன் மட்டுமே உனது உண்மையான தாய், தந்தை, சினேகிதன், மற்றும் குரு. இறைவனை இங்கேயே இப்பொழுதே உணர்வாயாக, என்றென்றும் ஆனந்தமாக இருப்பாயாக.” என்று சொல்கிறார்.

    அருட்செல்வர் நமது மன வேதனைகளுக்கான காரணத்தைக் காட்டி, அவற்றைக் களைவதற்கான வழியையும் காட்டி, இறைவனால் ஆட்கொள்ளப்படுவதற்கான வழிமுறைகளையும் தருகிறார். இறைவனே நமது தாயும் தந்தையும்; அவர் நமக்குத் திருவருள் பாலிக்க எப்பொழுதும் தயாராக உள்ளார். நமது உண்மையான சொந்தம் இறைவனுடன், நமக்குள்ளே இருக்கும் ஆத்மாவோடு மட்டுமே. இறைவனே அனைத்துப் பொருள்கள் மற்றும் ஜீவர்களின் பின்புலத்தில் (ஆதாரமாக) இருக்கும் உலகளாவிய உண்மை பரம்பொருள். அவர் நமக்கு உள்ளேயிருந்து நம்மைத் தன்னிடம் வந்திடுமாறு எப்பொழுதும் சைகை செய்து அழைத்துக் கொண்டேயிருக்கிறார். ஆனால், நாமோ அவரைப் பொருட்படுத்தாமல், உலகிலுள்ள பொருள்கள் நமக்கு மகிழ்ச்சி தரக்கூடுமென்ற பிரமையில் அவை பின்னால் சென்று கொண்டிருக்கிறோம். இந்தத் தவறான முயற்சியில், ஆசை, கோபம், லோபம், ஆகிய தீயசக்திகளால் பீடிக்கப்பட்டு நாம் முடிவில்லாத் துன்பத்தில் ஆழ்ந்துவிடுகிறோம். இதிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி, உலகப் பொருள்களின் பின்னால் செல்லும் தவறான அணுகுமுறையைப் புறக்கணித்துவிட்டு, இறைவனிடம் திரும்பிச் செல்வதேயாகும். எங்குமுள்ள பரமாத்மாவே (இறைவனே) நம் எல்லோருடைய தாயும் தந்தையுமாக (உலகத்தாய், உலகப்பிதா) இருக்கிறார்கள் என்று உணர்ந்து, அவரே நம்முள் நம் ஆத்மாவாகவே இருக்கிறார் என்றும், அவரே நம்முடைய உண்மையான தாயும் தந்தையும் என்றும் உணர்ந்து, அவரை அணுகுவதேயாகும். நமக்கும் அனைத்து பொருள்களுக்கும் பின்புலத்திலுள்ள பரம்பொருளைக் கண்டுகொள்ளாமல், உலகப்பொருள்களையே உண்மை என்று கருதுவதுதான் நாம் செய்யும் அடிப்படை தவறு, அந்தத்தவறே நாம் அடையும் மன வேதனைகளுக்கு காரணமாகிறது.

    இச்செய்யுள், மேலும் அதிகமான பொருள்களை உணர்த்துவதாகத் தெரிகிறது. “இறைவா, எனது கருணைமயமான தாயும் நீயே, தந்தையும் நீயே.” எப்படி ஒருவரே தாயும் தந்தையுமாக இருக்கமுடியும்? இது விசித்திரமாகத்தான் தெரிகிறது; ஆனால் இது எளிதில் புரிந்துகொள்ள இயலாத ஒரு தெய்வீக இரகசியம், இதில் நமது முக்திக்கு வழிகாட்டும் திறவுகோல் மறைந்துள்ளது. உலகியல் அர்த்தத்தில் (நடைமுறையில்) நோக்கினால், தாயும் தந்தையும் வேறுபட்ட இரு நபர்கள்; தந்தை தாயாக முடியாது, அதேபோல் தான் தாயும். தாயும் தந்தையுமே இரு நபர்களாக இருக்கும்போது, குழந்தை மூன்றாவதாக ஆகிவிடுமல்லவா? ஆனால், ஆன்மீக விஷயத்தில், இவற்றின் அர்த்தங்கள் முற்றிலும் வேறாகிறது. இச்செய்யுளில், ஜீவன்முக்தர்களான மகாபுருஷர்களின் ஒரு புதிய திருஷ்டி சித்தரிக்கப்படுகிறது. அவர்களுக்கு, இறைவன் தாயும் ஆகிறார், தந்தையும் ஆகிறார். எப்படி? இறைவனை எல்லையற்ற பரப்பிரம்மமாக நோக்கும்போது, அவர் தந்தையாகிறார். பிரம்மத்திலிருந்து வேறில்லாததும் புரிந்துகொள்ள முடியாததுமான மாயையாக (மாயா-சக்தியாக) நோக்கும்போது, இறைவனே தாயுமாகிறார். இவ்வாறாக, அவரே தாயுமாகி தந்தையுமாகி விடும் பொழுது, குழந்தைகளும் (அதாவது ஜீவர்களும், உலகமும்) அவரேதான். இவ்வாறான ஆய்வின் இறுதியில், அனைத்து ஜீவர்களும், மற்றும் இப்பிரபஞ்சம் முழுவதுமே பிரம்மத்தைத் தவிர வேறொன்றுமில்லை. எனவே, “இறைவனே நமது தாயும் ஆவார், தந்தையும் ஆவார்” என்று அருணகிரியார் சொல்லும்போது, ‘அறுதி உண்மைப் பரம்பொருளான பிரம்மம் இரண்டற்றது (அத்வைதம்)’ என்ற சித்தாந்தம் அவரால் இங்கு மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தப்படுகிறது.

    ஸ்ரீமத் பகவத் கீதையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பின்வருமாறு கூறுகிறார்: “பாரதா, பெரிய பிரகிருதி (மஹத் பிரம்ம) எனது கர்ப்பாயசம். அதில் நான் கர்ப்பத்தை வைக்கிறேன். அதனின்று உயிர்களெல்லாம் உற்பத்தியாகின்றன (மம யோனிர் மஹத்பிரம்ம தஸ்மின் கர்பம் ததாம்யஹம்! ஸம்பவ: ஸர்வபூதானாம் ததோ பவதி பாரத!! - பகவத் கீதை: 14.3). குந்திபுத்ரா, கர்ப்பாசயங்கள் எல்லாவற்றிலும் பிறக்கின்ற வடிவங்களுக்குப் பெரிய பிரகிருதி (மஹத் பிரம்ம) தாயாகின்றாள். கர்ப்பதான செய்யும் தந்தை நான் (ஸர்வ யோனிஷு கௌந்தேய மூர்த்ய: ஸம்பவந்தி யா: ! தாஸாம் பிரம்ம மஹத்யோனிரஹம் பீஜப்ரத: பிதா !! – பகவத் கீதை: 14.4).” பெரிய பிரகிருதி எனும் மஹத் பிரம்ம என்று பகவான் குறிப்பிடுவது மூல பிரகிருதியை (ஆதி காலத்திலிருந்து இருக்கும் இயற்கை), அதுவே அவ்யக்தம் (தோன்றாநிலையில் இருக்கின்றது) என்றும் அழைக்கப்படுகிறது. அதையே சாங்கியர்கள் பிரகிருதி என்பர்; வேதாந்திகள் மாயை என்பர்.

    ஆனால், வேதாந்திகளின் மாயை, சாங்கியர்களின் பிரகிருதி-யிலிருந்து வித்தியாசப்பட்டது. சாங்கியர்களின் கொள்கைப்படி, புருஷ(ன்) மற்றும் பிரகிருதி என்ற இரண்டு நித்திய உண்மைகள் உள்ளன. ஆனால், மாயை அப்படிப்பட்டதல்ல. மாயை மனித அறிவிற்கு எட்டாதது, மர்மமானது. ஜீவாத்மாக்களுக்கும் இப்பிரபஞ்சத்திற்கும் பரமாத்மாவிற்குமிடையே உள்ள தொடர்பை (அப்படி ஒன்று இருந்தால்) புரிந்துகொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட கருத்து இந்த மாயை; இது அல்ஜீப்ரா கணிதத்தில் சமன்பாடு (Equation) கணக்குகளை தீர்த்துவைப்பதற்காக, ‘X’ என்ற காரணியை சேர்த்துக் கொள்வதைப் போன்றது. எப்படி “X” காரணியைப்பற்றி ஏன், என்ன என்றெல்லாம் கேட்கக் கூடாதோ, அப்படியேதான் ‘ஏன் மாயை? மாயை என்றால் என்ன?’ என்றெல்லாம் கேட்கக் கூடாது; இதன் அவசியம் நமது சிக்கல்களை (புதிரான பிரச்சனைகளை) தீர்ப்பதற்காகத்தான். பின்னர் சமன்பாடு கணக்கின் குறிக்கோளான விடையானது காணப்படும்பொழுது, விடை காண்பதற்காக மட்டுமே புகுத்தப்பட்ட அந்த ‘X’ –காரணி தானே இல்லாமல் போய் விடுகிறது. அதே போன்றதுதான் இந்த மாயையும். அது நாம் தற்போது இருக்கும் இக்கட்டான (புரிந்துகொள்ள இயலாத) நிலையை விளக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது ---- அறுதிப்பொருளான பரபிரம்மத்திற்கும், இப்பிரபஞ்சத்திற்கும்; காணப்படாததற்கும் காணப் படுவதற்கும்; உண்மைக்கும் தோற்றத்திற்கும்; இருப்பதற்கும் இருப்பதுபோல் தோற்றமளிப்பதற்கும் --- இடையேயுள்ள சம்பந்தத்தை, ஜீவனால் புரிந்து கொள்ள முடிவதில்லை. சுருங்கக் கூறின், பிரம்மம், பிரபஞ்சம், மற்றும் ஜீவன் ஆகிய இம்மூன்றின் இடையேயுள்ள சம்பந்தத்தை ஜீவனால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அப்பரம்பொருளானது நாமே என்று அநுபவத்தில் நாம் எப்பொழுது உணர்கிறோமோ, அப்பொழுது இந்த மர்மமான உறவு சம்பந்தமான பிரச்சனை தீர்ந்து போய்விடுகிறது, அதாவது அப்பொழுது மாயையும் இல்லாமல் போய்விடுகிறது. இரண்டற்ற பிரம்மம் மட்டுமே நிற்கிறது --- தாயாகவும் தந்தையாகவும் ஆன இறைவன் மட்டுமே இருக்கிறார். எனவே, கடவுளின் இயல்பு மற்றும் அவருடன் நமது உறவு பற்றிய உண்மையான புரிதல் கொள்வது மட்டுமே (மாயையைப் புரிந்து கொள்வது மட்டுமே) நாம் எதிர்கொள்ளும் துன்பங்களிலிருந்து நிரந்தர விடுதலை பெற்றிடும் ஒரே வழி. இல்லையேல், நாம் இப்பொழுது இருப்பது போலவே துயரத்தில் ஆழ்ந்துதான் இருப்போம்.

    ஒரு மாணவனுக்கு கணக்கில் “X” காரணியைப் பிரயோகிக்கும் அடிப்படை நியமமும் வழிமுறையும் தெரியவில்லையெனில், அவன் அந்தக் கணக்கிற்கு விடை காண்பதற்குப் பதிலாக, விஷயத்தை மேலும் சிக்கலாக்கி, மிகப் பெரிய குழப்பத்தில் சிக்கித் தவிப்பான். சில மாணவர்கள் ஒரு சில நிமிடங்களில் முடிக்க வேண்டிய ஒரு கணக்கை, நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு, பல பக்கங்களையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருப்பதையும் நாம் பார்த்துத்தான் இருக்கிறோம். எனவே, ஒருவனால் “X” காரணியானது சரியான முறையில் பிரயோகிக்கப்படும்பொழுது, அவன் அக்கணக்கை சீக்கிரத்திலும், எளிதாகவும், சரியாகவும் முடித்திட அக்காரணி பெரிதும் உதவும்; ஆனால், அவன் அக்காரணியைப் பிரயோகிக்கும் முறையை ஒரு ஆசிரியரிடமிருந்து சரியாகக் கற்று, புரிந்து கொண்டு, சாமர்த்தியமாக பிரயோகிக்காவிட்டால், அதுவே அவனுக்கு மயக்கத்தையும் குழப்பத்தையும் தந்துவிடும். அதே போன்ற ஒன்றுதான் மாயையும். தேவைப்படும் நுட்பமான புரிதலையும், மற்றும் ஒரு ஆன்மீக குருவின் வழிகாட்டுதலையும் அருளாகப் பெற்ற சில அதிர்ஷ்டசாலி சாதகர்கள் மட்டுமே மாயையின் இரகசியத்தை உணர்ந்து, அதைக் கடந்து, இறைவனை அடைகிறார்கள். மற்றவர்களோ அதைப்பற்றி பல நூறு கேள்விகள் கேட்டுக்கொண்டு, அதற்கு எதிராக ஆட்சேபனைகளை எழுப்பிக் கொண்டு, குழப்பத்தில் மாட்டிக்கொள்கிறார்கள். மேலும், அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் மேன்மேலும் மாயையில் சிக்கிக்கொள்கிறார்கள் என்பதையே அவர்கள் அறிவதில்லை. இத்தகைய ஒரு வருந்தத்தக்க நிலையிலிருந்து ஒருவனை குரு/இறைவன் கிருபை ஒன்றே காப்பாற்ற இயலும். எனவே, அருணகிரியார்: ‘’எனக்கு கிருபையை அருளும் தாயும் தந்தையும் நீவிர்தானே.’’ என்று மகிழ்வுறுகிறார். பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் ஸ்ரீமத் பகவத் கீதையில் (7.14ல்) இதுபற்றி அவ்வாறே கூறுவதைக் காண்கிறோம்: “இந்த முக்குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கு மிகவும் அரியது; என்னையே யார் சரணடைகின்றனரோ, (எனது கிருபையின் துணையால்) அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள். {தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா! மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே !! 7.14}.”

    அருள்தான் விஷயங்களின் உண்மையான உளக்காட்சியை வெளிப்படுத்துகிறது. அவ்வருள் இல்லையெனில், மாயையில் புதைந்துள்ள தெய்வீக இரகசியத்தை --- அதாவது இறைவன் மற்றும் உலகத்துடன் நமக்குள்ள உண்மை சம்பந்தத்தை --- புரிந்துகொள்ள முடிவதில்லை; அதனால் ஜீவர்களின் மனம் பற்பலவிதமான வலி மற்றும் துன்பங்களால் பீடிக்கப்படுகிறது. அவர்கள் தங்களை இறைவனிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்களாகவும், மேலும் இவ்வுலகத்தை இறைவனுக்குப் புறம்பான ஒரு உண்மைப் பொருளாகவும் கருதி, அதனுடன் ஒரு வெளிஉறவு கொள்ளவேண்டிய அவசியத்துடன் வாழ்கின்றனர், இந்தத் தவறான புரிதலே ஒருவன் படும் அனைத்துவிதமான மன வேதனைகளுக்கும் காரணம். அதனால்தான், இத்தவறான கருத்தை அகற்றிடுவதற்கும், தன்னை ஆட்கொள்ளுவதற்கும் இச்செய்யுளில் இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்படுகிறது. இறைவனைத் தாயாகவும் தந்தையாகவும் விளிப்பதன் மூலம் இறைவன் இரண்டற்றவன் என்பதும், இப்புரிதலின் மூலம் ஜீவர்களும், உலகமும் இறைவனிடமிருந்து வேறுபட்டதல்ல என்பதும் உணர்த்தப்படுகிறது. இது ஜீவனை வெளிநோக்கு-உணர்விலிருந்து விடுவிக்கிறது, இதன் மூலம் ஜீவன் அனைத்து மன வேதனைகளிலிருந்தும் விடுதலை பெறுகிறது; இறைவனில் இறுதியமைதியும் பெறுகிறது, அதாவது, இறைவனால் ஏற்று, ஆட்கொள்ளப் படுகிறது, பிரம்மத்தில் இரண்டற்று கலந்திடுகிறது. இதனாலெல்லாம், வலியுறுத்தப்படுவது யாதெனில் இரண்டற்ற பிரம்மம் மட்டுமே இருக்கிறது; அந்த பிரம்மத்திலிருந்து நாம் முற்றிலும் வேறுபட்டவர்களல்ல, நம்மைப் பாதுகாப்பவர் அவரே. அப்படியில்லாமல், நமக்கும் அவருக்கும் யாதொரு சம்பந்தமுமில்லையென்று நினைக்கும்வரை, ஜீவனின் மனவேதனைகள் ஒருபொழுதும் அகல முடியாது, இவ்வேதனைகளிலிருந்து விடுதலை பெற வேண்டுமெனில், ஜீவன் இரண்டற்ற ஒன்றான பிரம்மத்துடனான உண்மை சம்பந்தமான அபேதத்தை கண்டு கொள்ள வேண்டும், அதாவது பிரம்மமாக ஆக வேண்டும் (பிரம்மத்துடன் இணைந்து ஒன்றாக வேண்டும்).

    நாம் எவருடன் திரும்பவும் உறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமோ (அல்லது எவரின் உறவை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமோ) அந்த இறைவனின் (ஆத்மாவின்) சொரூபம் இச்செய்யுளில் விரிவாக வர்ணிக்கப்பட்டுள்ளது -- “கந்தா, கதிர்வேலவனே, உமையாள் மைந்தா, குமரா, மறைநாயகனே” என்று. (ஸ்)கந்தன் என்றால் எதிரிகளைப் பொசுக்கி விடுபவர் என்று பொருள்; எத்தகைய எதிரிகள்? நம் மன வேதனைகளுக்குக் காரணமான நமக்குள்ளேயே உள்ள காமம், லோபம், கோபம், போன்ற பல எதிரிகள். மேலும், அவரே கதிர்வேலவன் (சுயமாக பிரகாசிக்கும் வேல் தாங்கிய கந்தப் பெருமான்). இது சுயமாகப் பிரகாசிக்கும் (வெளிப்படுத்திக்கொள்ளும்) ஆத்மாவைக் குறிக்கிறது. ஆத்மா அறியாமையாகிய இருளை அழிக்கும் ஒட்டுமொத்த பிரகாசம் (உணர்வு). அவரே உமாதேவியின் மைந்தன் – கடவுள் சிவனாரின் மூன்றாவது கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஒளிப்பிழம்பு, கடைசியில் (சரவணப் பொய்கையில்) ஸ்கந்தப் பெருமானாகி, உமாதேவியால் அரவணைக்கப்பட்டு பேணப்பட்டவர். அவரே குமரன், உலக மாயையை நீக்குபவர். இறுதியாக, அவரே மறை நாயகன், வேதங்களின் தலைவன், ஞானத்தை வெளிப்படுத்தி அறியாமையை நீக்கி, ஜீவனை பூரணமாக தூய்மையாக்கி ஆட்கொள்பவர் (தனது பரிவாரத்தில் ஏற்றுக்கொள்பவர்).

    இச்செய்யுள் மிக எளிதானது. ஆனால், மனமுவந்து ஒருமுறை ஓதினால்கூட நம் கண்ணில் நீர் ததும்பிடச்செய்யும். இதில் அருணகிரியார், இறைவனுடன் மிக நெருங்கிய உறவு கொண்டு, அவரிடம் நேரடியாக முறையீடு செய்வது எப்படி என்பதை நமக்குச் சொல்லித் தருகிறார். எப்படி ஒரு குழந்தையானது தனது பெற்றோர்களிடம் உரிமையுடன் தனக்கு வேண்டியதை கேட்கிறதோ, அப்படியே நாமும் இறைவனிடம் நமது மனவேதனைகளை அழித்து, அவருடன் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுதல் செய்ய வேண்டும். எப்படி? முதலில் இறைவனுடனான நமது உறவை இவ்வாறு அறிவித்து, உறுதி செய்திட வேண்டும்: “நீங்கள்தான் எனக்கு அருள்புரியும் தாயும், தந்தையும்” என்று கூறிட வேண்டும்; (அப்படி இல்லாமல், ‘நீ எனக்கு அருள்புரியும் தாயும் தகப்பனும் அல்லவோ’ என்று கூறக் கூடாது.) இவ்வாறு வழியை தெளிவாக்கிக்கொண்டு, பின்னர் நம்மை ஏற்றுக் கொள்ள அவரிடம் உரிமையுடன் கேட்கலாம். தங்கள் குழந்தையின் கோரிக்கைகளை பெற்றோர்களால் நிராகரித்திட முடியாது. குழந்தையானது பெற்றோரிடம் தனது கோரிக்கைகளை உரிமையுடன் வலியுறுத்திக்கேட்கும். மேலும் பெற்றோரிடமிருந்து அவைகளை நிறைவேற்றிக்கொள்ளும்.

    இச்செய்யுளில் அருணகிரியார் இறைவனைப் பற்றி சொல்வது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தன்னைப் பற்றி ஸ்ரீமத் பகவத் கீதையில் (9.17) சொல்வதோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறது: “இந்த ஜகத்தின் தந்தை, தாய், கர்மபலனை கொடுப்பவன், பாட்டனார், அறியத் தக்கவன், தூய்மை செய்பவன், ஓங்காரம், ரிக், சாமம், யஜுர் முதலிய வேதம் அனைத்தும் நானே” (“பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ:! வேத்யம் பவித்ர மோங்கார ருக் ஸாம யஜுரேவ ச!!”).

No comments:

Post a Comment