செய்யுள் 47



செய்யுள் - 47


ஆறாறையும்   நீத்து   அதன்மேல்   நிலையைப்  
பேறா   அடியேன்   பெறுமாறு   உளதோ
சீறா   வருசூர்   சிதைவித்து   இமையோர்
கூறா   உலகம்   குளிர்வித்தவனே.

    பொழிப்புரை: கந்தப் பெருமானே! உமக்கெதிராக (உம்மைத் தாக்கிட) கோபத்தில் சீறிப் பாய்ந்து வந்த அசுரன் சூரபத்மனைக் கொன்று, தேவர்களுக்கு உரிமையான தேவலோகத்தைக் குளிர்வித்து (தேவர்களின் உள்ளங்களையும் குளிரச்செய்து), அதை அவர்களுக்கு மீட்டுக்கொடுத்தவரே! முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து, அதற்கு மேலான நிலையை (அநுபூதி நிலையை / முக்தியை) பெரும்பேறாக அடையும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்திடுமோ?” (கிடைத்திடுமாறு செய்து அருள்வீராக.)

விளக்கவுரை

    ஒரு சில வார்த்தைகளில் பல கருத்துக்களைப் பொதிய வைக்கும் அருணகிரியாரின் திறமையை இச்செய்யுள் வெளிப்படுத்துகிறது, பற்பல விளக்கங்களுக்கு இடம் தருவதால் இச்செய்யுளைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். சுருங்கக் கூறின், அவர் சொல்வதாவது:

    (1) 36 தத்துவங்களுக்கும் அப்பாலுள்ள அப்பரம்பொருள் உண்மையே (அல்லது), (2) இந்துமதத்தின் ஆறு பிரிவுகளுக்கும் அப்பாலுள்ள பரப்பிரம்மமே (அல்லது) (3) ஆறு சக்கரங்களுக்கும் அப்பாலுள்ள பரம்பொருளே (சிவமே)
அடையப்படவேண்டிய உன்னத குறிக்கோளாக வரிக்கப்பட்டு, பெரும் விருப்பத்துடன் முயலப்பட்டு அடையப்பட வேண்டும்.

    இச்செய்யுளில் ஜீவன்முக்தரானவர் சாதகர்களுக்கு மனம்/புலன்களால் உணரப்படும் முப்பத்தாறு தத்துவங்களுக்கு அப்பாலுள்ள அத்வைத விழிப்புணர்வு நிலையை (பரம்பொருளை), அடைந்திடுவதில் விருப்பம் கொள்ளுமாறு ஆலோசனை தருகிறார். 36 தத்துவங்கள் பற்றிய விவரங்கள் இந்து மதத்தின் சைவ சித்தாந்தம் மற்றும் சாக்தப் பிரிவுகளின் நூல்களில், சிறுசிறு வித்தியாசங்களுடன், காணக்கிடைக்கிறது. இருப்பினும், நாம் சைவ சித்தாந்தப் பிரிவு கூறும் விவரங்களின்படி சிறிது பார்க்கலாம். மூன்று தொகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த 36 தத்துவங்களாவன:
  • ஆத்ம தத்துவங்கள் எனும் அசுத்த தத்துவங்கள் – 24. அவையாவன:
(அ) ஐந்து கர்ம இந்திரியங்கள் (செயற்புலன்கள்) – வாய் (பேச்சு), கால், கை, மலஜல கழித்தல், பிறப்பு ஆகிய ஐந்துவித செயல்களை செய்வதற்கான புலன்கள்.
(ஆ) ஐந்து ஞான இந்திரியங்கள் (அறிவுப் புலன்கள்) – மெய், வாய், கண், மூக்கு (நாசி), செவி ஆகிய ஐந்துவித அறிவுகளைத் தரும் புலன்கள்.
(இ) ஐந்து மஹா-பூதங்கள் (பஞ்ச ஸ்தூல பூதங்கள்) – பூமி (மண்), நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து மூலப் பொருள்கள்.
(ஈ) ஐந்து தன்மாத்திரைகள் (பஞ்ச சூட்சும பூதங்கள்) – நாற்றம் (மணம்- கந்த), சுவை (ருசி- ரஸ), நிறம் (உருவம்- ரூப), ஊறு (தொடு உணர்ச்சி- ஸ்பர்ச), சத்தம் (ஓசை- சப்த) ஆகிய பஞ்ச புலன் விஷயங்கள்.
(உ) நான்கு அந்தக்கரணங்கள் (உள் உறுப்புகள்) – மனம், புத்தி, அகங்காரம், சித்தம்.
  • வித்யா தத்துவங்கள் எனும் சுத்த-அசுத்த தத்துவங்கள்
அவையாவன: காலம், நியதி, கலை, வித்யா, அராகம், புருடன், மூலப்பிரகிருதி.
  • சிவ தத்துவங்கள் எனும் சுத்த தத்துவங்கள் 5.
அவையாவன: சுத்த வித்தை (ருத்ரன்), ஈசுரம் (மஹேஷ்வரன்), சாதாக்கியம் (சதாசிவன்), விந்து (சக்தி), நாதம் (சிவன்).       
    சைவ சித்தாந்தமும், சாக்தமும் தத்துவங்களை 36 (சிறுசிறு வித்தியாசங்களுடன்) எனக் கூறுகின்றன; வேதாந்தமும், சாங்க்யமும் 24 என்று (சிறுசிறு வித்தியாசத்தோடு) கூறுகின்றன. சிலர், சைவ சித்தாந்தத்தின் 36 தத்துவங்களையும் அல்லது வேதந்தத்தின் 24 தத்துவங்களையும், மேலும் பிரித்து 96 என்றும் கூறுகின்றனர். தத்துவங்கள் என்றால் ‘கொள்கைகள்’, ‘பிரிவுகள்’, ‘சுபாவம்’ மற்றும் ‘உண்மைகள்’ என்றாகும். தத்துவங்கள் என்பது தத்துவ ஞான சாஸ்திரத்தின் அடிப்படை நுண்பொருள் கோட்பாட்டுக் கொள்கைகள், இதைக்கொண்டுதான் ஒவ்வொரு தத்துவ ஞான சாஸ்திரமும் வரையறுக்கப்படுகிறது. எனவே, ஒவ்வொரு தத்துவ ஞான சாஸ்திரத்தின் அமைப்புமுறையும் இத்தத்துவங்களை வெவ்வேறுவிதங்களில் பட்டியலிடுகின்றன; ஆனால், அவற்றின் நோக்கம் மட்டும் ஒன்றேதான் --- ஜீவர்கள் தங்கள் கர்ம வினைகளை அநுபவித்துக் கழிப்பதற்கும் மற்றும் சாதனைசெய்து ஆன்மீக விடுதலை (முக்தி) அடைவதற்கும் தேவையான நில-புலமாக (பூமி) விளங்கும் இவ்வுலகத்தின் (இப்பிரபஞ்சத்தின்) தோற்றம் (பரிணாமம்) மற்றும் மறைவு (அழிவாக்கம்) பற்றி விளக்கிக் காட்டுவதே அவற்றின் நோக்கம். ஆனால், இறைவன் (பிரம்மம்) புலன்களுக்கு எட்டாதவர், எல்லைகளுக்கு அப்பால் இருப்பவர்; இறுதி உண்மையாக இருப்பவர், இவர் தத்துவங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். எனவே, அந்த தத்துவங்கள் எத்தனையாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுத் தான் போகட்டுமே! புலன்விஷயம் சம்பந்தப்பட்ட இத்தத்துவங்கள் இப்பிரபஞ்சத்தைச் சார்ந்த தற்காலிக உண்மையே, பிரம்மம் மட்டுமே அறுதியான உண்மை (எல்லையில்லாப் பரம்பொருள்). முக்தி என்பது இத்தத்துவங்களுக்கெல்லாம் அப்பாலுள்ள (அவைகளைக் கடந்தபின் அடையப்படும் நிலையாக உள்ள) அறுதி உண்மையுடன் (பரம்பொருளுடன்) கலந்து ஒன்றாயிருக்கும் நிலை.

    தத்துவங்கள், 24 (அ) 36, (அ) (96) என்று எத்தனையாக இருந்தாலும் சரி, அவைகள் அனைத்தும் ஆதியிலிருந்து இருக்கும் ஒரு மாயையின் (அவ்யக்தம் அல்லது பிரகிருதி) பரிணாமங்களே. இந்த மாயை, ஸத்துவ, ரஜஸ், மற்றும் தமஸ் என்ற மூன்று குணங்களாகப் பிரிந்து, மேன்மேலும் உப-பிரிவுகளாக பிரிகிறது. அவை எத்தனையாக இருந்தாலும் சரி, அவற்றைக் கடந்தால்தான் முக்தி பெறலாம், ஏனெனில் பரம்பொருள் உண்மை அவற்றிர்க்கு அப்பாலுள்ளது.

    பரம்பொருள் உண்மைக்கும், தத்துவங்களுக்கும் (யதார்த்த உலகியல் உண்மை) உள்ள சம்பந்தம் என்ன என்பது ஒரு புதிரான கேள்வி. எல்லையில்லாததும் வரையறையற்றதுமான பரம்பொருள் இரண்டற்றது; அதைத்தவிர வேறு எதுவும் இருக்கமுடியாது. அதனால் மற்ற அனைத்தும் அதன் தோற்றத்தின் நிலைகளாகத்தான் இருக்கமுடியும், கடலில் பேரலைகளும், சிற்றலைகளும் இருப்பதுபோல. தத்துவங்கள் எல்லையற்ற உணர்வு-இருப்பிலிருக்கும் பேரலைகள் மற்றும் சிற்றலைகள் போன்றதுதான், அதாவது உணர்வின் படிநிலைகளே. இப்பரந்த பிரபஞ்சம்கூட பெருங்கடல் போன்ற பரம்பொருளில் எழும் பேரலையாகக் கருதப்படுகிறது. அஷ்டவக்கிர கீதையும் இக்கருத்தை இவ்வாறு கூறுகிறது: “எதில் அண்டங்கள் கடலில் அலைகள் போல் பதைபதைத்துத் துடிக்கின்றனவோ அதுவே நீ என்று தெரிந்தும், மோசமான நிலையில் இருக்கும் ஒருவனைப் போல் ஏன் நீ இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்கிறாய்? (3.3).” “அண்டமெனும் அலை எல்லையற்ற பெருங்கடலான என்னில் தானாகவே எழட்டும், அல்லது மறைந்து போகட்டும்; அதனால் நான் அதிகரிப்பதுமில்லை; குறைவதுமில்லை (7.2).” எனவே, ஜீவன் இவ்வுலகைக் காண்பது எப்படிப்பட்டதென்றால் ஒரு நிலை மற்றொன்றை, ஒரு அலை மற்றொன்றைக் காண்பது போன்றது. அதனால்தான், இந்திரியங்களின் மூலம் உணரப்படும்போது பிரம்மமே உலகமாகத் தோன்றுகிறது என்று கூறப்படுகிறது. எனவே, தத்துவங்கள் என்பது பிரம்மத்தின் புறநிலைக் கட்டங்களே (phases of Consciousness) எனலாம்; பிரம்மத்தின் வெவ்வேறு கட்டங்களில் தோற்றமளிக்கும் நிலைகள் (அல்லது சித்-விலாசம்) எனலாம். உணர்வு வெவ்வேறு கட்டங்களில் புறநிலை இயல்பைக் கொண்டதாகத் தோன்றுகிறது. இந்த வெவ்வேறு கட்டத் தோற்றங்கள் (தத்துவங்கள்) கடக்கப்படும்போது, தோற்றங்கள் உண்மையில் (பிரம்மத்தில்) கரைக்கப்படுகின்றன/தீர்க்கப்படுகின்றன. அப்போது, பிரம்மம் பிரம்மமாய் (சித்-சொரூபமாய்) (இருப்பு-உணர்வாய்) இருக்கிறது.

    இத்தத்துவங்களை கடப்பது எவ்வாறு? தத்துவங்கள் உள்ள இவ்விடத்தை விட்டு விலகி அவைகள் இல்லாத இடத்திற்குச் செல்ல வேண்டுமா? இல்லை; ஏனெனில், ஒருவன் எங்கு சென்றாலும், அங்கும் தத்துவங்களின் உள்ளேயே தான் அவன் இருப்பான். மேலும், “போவது” அல்லது “செல்வது” என்றால், அது காலத்திற்கு உட்பட்டதாகிறது, அதாவது தத்துவங்களுக்கு உட்பட்டதாகிறது. எனவே, தத்துவங்களைக் கடப்பது என்றால் முற்றிலும் வேறான ஒன்றையே அது குறிப்பதாகும். அதன் அர்த்தம் தத்துவங்களை தீர்த்தல் (அ) தத்துவங்களை எதார்த்த உலகியல் நிலையிலிருந்து அதன் உண்மை சொரூப (அசல்) நிலைக்கு மேல்நிலைப்படுத்திட வேண்டும். அப்படி என்றால் என்ன? இதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நமது கனவு நிலையை ஆய்வு செய்ய வேண்டும். கனவில், மனதிற்கு, எதோ மர்மமான ஒன்று நேரிடுகிறது. நனவில் நாம் எதைக் காண்கிறோமோ அநேகமாக அவைகளையே கனவிலும் காண்கிறோம் --- கனவிலும் எழுவாய் (காண்பவர்) , காணப்படும் பொருள்கள், அவைகளைப் பிரித்திடும் தூரம், நிலம், நீர், ஆகாயம், இத்யாதிகளைக் காண்கிறோம். விழிப்பு நிலையில் செயல்படும் அந்த ஒரே மனம், கனவுலகில் தன்னையே உணரும் எழுவாயாகவும் (காண்பவனாகவும்) அநுபவிக்கப்படும் (காணப்படும்) பொருள்களாகவும் என இருகூறாக்கிக் கொள்வதுபோல் தோன்றுகிறது. ஆனால், இதில் மனதிற்கு உண்மையில் ஏதாவது ஆகிறதா? இல்லை. மேலும், கனவுலகிலிருந்து வெளிவருவதற்கு, கனவு காணும் மனம் கனவில் இங்குமங்கும் ஓட வேண்டுமா, அல்லது கனவில் அது வேறு ஏதாவது செய்திட வேண்டுமா? எதுவும் இல்லை. எனெனில், கனவில் அது என்ன செய்தாலும், அது அந்தக் கனவில்தான் இருந்து கொண்டிருக்கிறது. அது செய்ய வேண்டியதெல்லாம், அக்கனவிலிருந்து விழித்துக் கொள்வது மட்டுமே; அதாவது, கனவைக்கடந்து தன்னுடைய சுய (முன்பிருந்த விழிப்பு நிலைக்கு) நிலைக்கு வருவது.

    விழிப்பு நிலையில் (நனவில்), கனவு உலகில் காணப்பட்ட அனைத்தும் ஒற்றை விழிப்பு-உணர்வில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அதாவது, கனவின் முழு உள்ளடக்கங்களும் எதிலிருந்து அவைகள் எழுந்தனவோ அந்த நனவு மனதில் கரைகிறது. வேகமாக ஓடும் (நதி) நீர், பாறைகள், விரிந்த ஆகாசம், கனவு காண்பவன், ஆகிய கனவில் காணப்பட்ட அனைத்தும், தத்தம் பண்புகளை {அல்லது தத்துவத்துவத்தை (தத்துவத்-தன்மையை)} இழந்து, விழிப்பில் ஒற்றை நனவு மனமாக/உணர்வாக ஆகிறது. கனவுப் பொருள்கள் நனவில் வேறு பொருளாக ஆகிவிடுவதில்லை; எந்த விழிப்புணர்வு (நனவு) தன்னையே காட்சிப்பொருள்களாகத் தோன்றி கனவாக மாறியதோ, அதுவே காட்சிப்படுத்திக் கொள்வதிலிருந்து விடுபட்டு, விழிப்புணர்வாகவே திரும்பவும் ஆகிவிடுகிறது. எனவே, நனவில், கனவு உலகின் அனைத்துப் பொருள்களும் (தத்துவங்களும்) தத்தம் தத்துவத்தை இழப்பதோடல்லாமல், முன்னர் அவைகள் எதுவாகயிருந்ததோ அதுவாகவே திரும்பவும் ஆகிவிடுகிறது. எப்படி கனவானது கடக்கப்பட்டு நனவுநிலையாக மேம்பாடடைகிறதோ, அப்படியே இந்நனவு நிலையும் கடக்கப்பட்டு மேம்பாடடைய வேண்டும்; உலக நனவு எனும் இந்த நீண்ட கனவுநிலையைக் கடந்து, உலகளாவிய நனவு தரும் இறை-விழிப்புணர்வில் விழித்தெழுந்து மேம்பாடடைய வேண்டும். இந்த இறை-விழிப்புணர்வு நிலையில், இப்பொழுது பொருள்களாகத் (தத்துவங்களாகத்) தோன்றுவதெல்லாம், உலகளாவிய உணர்வின் வெவ்வேறு நிலைகளாகக் காணப்பட்டு, அவ்வாறாக அநுபவிக்கப்படுகிறது. எப்படி கனவு நிலையில், கனவு காண்பவன் என்ற முகமூடி அணிந்து அக்கனவிலேயே உழன்று கொண்டு இருக்கும் வரை, (அக்கனவிலிருந்து விழித்தெழிந்தால் ஒழிய), அக்கனவைக் கடந்திட முடியாதோ; அப்படியே, தத்துவங்களைக் கடந்திட, ஜீவ-உணர்வைத் தியாகம் செய்து உலகளாவிய உணர்விற்கு விழித்தெழுவது ஒன்றே இருக்கும் வழி, அதாவது, ஒரே உண்மையான பரம்பொருளைத் தியானம் செய்வதன்மூலம், வெளிப்போக்கு கொண்டு திரியும் உணர்வை, உள்நோக்கி அதன் ஆதாரத்திற்கு திரும்பச் செய்வதே அதற்கான ஒரே வழியாகும். பரம்பொருள் உண்மை என்பது பாரமார்த்திக ஸத்யம் (எல்லையற்ற அறுதி உண்மை); தத்துவங்களாலான (பொருள்களாலான) உலகம் என்பது வியாவகாரிக ஸத்யம் (எதார்த்த உலகியல் உண்மை); கனவு உலகம் என்பது பிராதிபாசிக ஸத்யம் (உண்மைபோல் தோற்றமளிப்பது).

    நிச்சயமாக, எந்தவிதமான விளக்கமும் இந்த விஷயத்தில் போதுமானதாகாது. ஏனெனில், இது ஒரு பரம இரகசியம். நாம் கனவிற்குள் எப்படி, எப்போது நுழைகிறோம் என்று விளக்க இயலுமா? எதனால், எப்படி கனவுகள் வருகின்றன என்பதற்குப் பலவிதமான விளக்கங்கள் இருக்கின்றன; ஆனால் எப்படி கனவினுள் நுழைகிறோம் என்பதற்கு மட்டும் நம்மால் விளக்கிட முடிவதில்லை. திடீரென்று, நாம் கனவில் உலவுகிறோம்; எனினும், நாம் அநுபவிப்பது கனவு என்பது நமக்குத் தெரிவதில்லை. அனைத்தும் உண்மையானதாகத் தெரிகிறது. அதேபோல், எப்பொழுது எப்படி நாம் அக்கனவிலிருந்து வெளிவருகிறோம் என்பதும் நமக்குத் தெரிவதில்லை. திடீரென்று, விழித்துக் கொள்கிறோம், அப்புறம்தான் நாம் கனவு கண்டுகொண்டிருந்தோம் என்பதே நமக்குத் தெரிகிறது. அதே போன்ற மர்மம் நிறைந்ததுதான் மனித வாழ்க்கையும் --- தத்துவங்களினாலான இப்பிரபஞ்சம் இரண்டற்ற எல்லையில்லாப் பரம்பொருளிடமிருந்து எப்படித் தோன்றியது? நாம் தற்போதுள்ள தத்துவங்களினாலான இந்த (அவல) நிலைக்கு எப்படி வந்தோம்? எப்படி நாம் இந்நிலையைக் கடந்து, முக்திநிலை பெறுவோம்? --- இவையெல்லாம் ஒரு மர்மமே! சிந்தித்துப் பார்க்கும்போது, .ஒரு அளவிற்கு மேல் அனைத்தும் மனிதப் புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகி, மனித புத்தியை பேதலிக்க வைத்து விடுகின்றன. காரண-காரிய தொடர்புகூட, கடைசியில், விளக்கமுடியாத மர்மமாக ஆகிவிடுகிறது. இறைவனது கிருபையினால் பரம்பொருளானது அடையப்படும்போதுதான் அனைத்து மர்மங்களும் தீர்ந்துபோகின்றன; ஆனால், அந்த கிருபையைப் பெறுவதுவே மர்மங்களிலெல்லாம் தலையாய மர்மம். எனவேதான், அருணகிரியார் ஆச்சரியப்பட்டு: “முப்பத்தாறு தத்துவங்களைக் கடந்து, அந்த பெரும்பேறான, மேலான, தெய்வீக நிலையான முக்தியை அடையும் பாக்கியம் எனக்குக் கிடைத்திடுமோ?” என்று பிரார்த்தனை செய்யுமாறு அறிவுரை செய்கிறார். இந்தப் பிரார்த்தனைக்குள்ளேயே அது நிச்சயம் நடந்திடும் என்பது அடங்கியிருக்கிறது, ஏனெனில் அனைத்தையும் அதனதன் சுய-நிலைக்கு மீட்டெடுப்பது கந்தப் பெருமானின் சுபாவம்; எனவேதான், பெருமானின் அந்த சுபாவத்திற்கு இச்செய்யுளின் பிரார்த்தனையானது மிகவும் பொருத்தமான முறையில் --- “சீறா வருசூர் சிதைவித்து இமையோர் கூறா உலகம் குளிர்வித்தவனே.” --- என்று வைக்கப்படுகிறது.

    சொர்க்கலோகம் தேவர்களின் உறைவிடம். தான் செய்த கடும் தவத்தினால் எல்லையில்லா மாபெரும் சக்திகளை சிவனாரிடமிருந்து வரமாகப் பெற்ற அசுரன் சூரபத்மன், ஒருசமயம், சொர்க்கலோகத்தைத் தாக்கி, அதற்கு தீவைத்து, தேவர்களை சிறைப்படுத்தி, அவர்களைப் பலவிதமான அவமதிப்புகளுக்கு ஆளாக்கினான். அவ்வாறு பாதிக்கப்பட்ட தேவர்கள் சிவனாரிடம் சென்று தங்களுக்கு உதவிபுரியுமாறு பிரார்த்திக்க, அவர்களை வழிநடத்திடவும், அசுரன் சூரபத்மனை அழித்திடவும் சிவனார் கந்தப் பெருமானை தந்தருளினார். போர் மூண்டபோது, அவ்வசுரன் தன்னுடைய மாய சக்திகளைப் பிரயோகித்துப் பற்பல வடிவங்களை எடுத்து கந்தப் பெருமானைத் தாக்கினான்; மாயதந்திரங்களின் பிடிக்கெல்லாம் அப்பாலுள்ள எம்பெருமான், மாறிமாறி சூரபத்மன் எடுத்த ஒவ்வொரு வடிவத்தையும் அழித்துக் கொண்டே வந்தார். இறுதியாக, தன்னுடைய தந்திரங்கள் எதற்கும் பயனில்லை என்று கண்ட அவ்வசுரன், தன் சுயரூபத்தில் வந்து சிறிய வயதினரான பெருமானைத் தன் பெரிய உடல்பலத்தால் தாக்கி வீழ்த்திட நினைத்தான். அவ்வாறு அவன் தன் சுய உருக்கொண்டு ஆக்ரோஷத்துடன் பெருமானைத் தாக்கத் துவங்கிட, பெருமான் தன் வேலாயுதத்தை எறிந்து சூரபத்மனைக் கொன்றார். அதன்பின், கந்தப் பெருமான் அனைத்து தேவர்களையும் சிறையிலிருந்து மீட்டு, தேவர்களின் கட்டிடக் கலைஞரான விஸ்வகர்மாவை அழைத்து தேவர்களின் சுவர்க்கலோகத்தை திரும்பவும் நிர்மாணித்திடப் பணித்தார். விஸ்வகர்மாவும் அவர் ஆக்ஞையை ஏற்று, முன்பு இருந்ததைவிடவும் மிக அழகாக சுவர்க்கலோகத்தை உருவாக்கித் தந்தார். கந்தப் பெருமான் இந்திரன் மற்றும் அனைத்துத் தேவர்களுக்கும் அவரவர்களின் பதவியை திரும்பக் கொடுத்தார். இவ்வாறாக, பெருமானானவர் தேவர்களின் வெந்திருந்த நெஞ்சையும், சூரபத்மனால் எரிக்கப்பட்டிருந்த சுவர்க்கலோகத்தையும் ஒருசேர குளிர்வித்ததோடல்லாமல், அவர்களுக்கு உரிய சுவர்க்கத்தைத் திரும்ப அவர்களின் உறைவிடமாக்கினார்.

    ஜீவர்களின் மூலமுதலான உண்மை உறைவிடம் இறைவன்தான். ஜீவர்கள் தங்கள் உண்மை ஸச்சிதானந்த சொரூபத்தை எப்படியோ மறந்து, சம்சாரமெனும் காட்டில் அலைந்து திரிந்து, (36) தத்துவங்களின் நெருப்பால் தகிக்கப்படுகின்றனர். தங்கள் உண்மை சொரூபத்தை மறந்ததும், பரம்பொருள் ஒன்று மட்டுமே இருக்கும்போது அதைப் பலவாகப் (பொருள்களாக/தத்துவங்களாகப்) பார்ப்பதுமே ஜீவர்களின் இத்துன்பத்திற்குக் காரணாமாகிறது. இந்நிலையைக் கடந்து தங்கள் உண்மை நிலையான எல்லையற்ற பேருணர்வாகவே ஆகிட வேண்டும். இத்தகைய உயரிய நிலையை அடைவதற்காகவே, இச்செய்யுளில் பிரார்த்தனை செய்யப்படுகிறது: “ஓ கந்தப் பெருமானே! என்னுடைய உண்மை உறைவிடமான ஸச்சிதானந்த நிலையிலிருந்து அறியாமையெனும் அசுரனால் விரட்டப்பட்ட நான், தத்துவங்களினால் சிறை பிடிக்கப்பட்டு சுட்டு பொசுக்கப்பட்டு வருகிறேன். சூரபத்மனை அழித்து, தேவர்களின் உள்ளங்களையும், சுவர்க்க லோகத்தையும் குளிர்வித்து, அவர்கள் சுவர்க்கத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்ல எவ்வாறு நீங்கள் அருள் புரிந்தீர்களோ, அவ்வாறே என்மீது கிருபைகொண்டு, என்னிடமுள்ள அறியாமையெனும் அசுரனை அழித்து, மூலமுதலான எனது உண்மை நிலையை எனக்குத் திருப்பி அளித்து, எனது நெஞ்சையும் குளிர்வித்து ஸச்சிதானந்தத்தில் திளைத்திட அருள்புரிவாயாக.”

    இச்செய்யுளின் முதல் வரியில் வரும் “ஆறாறு” என்ற வார்த்தைக்கு பலப்பல அர்த்தங்கள் இருப்பதால், இச்செய்யுள் பலவாறாக விளக்கப்படுகிறது. இவ்வார்த்தை ‘ஆறு’, ‘ஆறு’ என்ற இரு சொற்களால் ஆனது; ஆறு என்ற சொல்லிற்கு ஆறு என்ற எண், நதி (ஆறு), பாதை, இரு முறைமை, வழிவகை, மதம், எனவாகப் பல அர்த்தங்கள் உள்ளன. எனவே, ‘ஆறு’ என்ற இரு சொற்களுக்கும் ‘எண்கள்’ எனப் பொருள் கொண்டால், அதன் அர்த்தம் முப்பத்தாறாகிறது (6 X 6), அதாவது 36 தத்துவங்கள் என்று பொருள் கொள்ளலாம், பெரும்பாலும் தமிழ் நூல்களில் இவ்வாறே பொருள் கொள்ளப்படுகிறது. இத்தகைய பொருள் கொண்டு நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம். மற்ற பொருள் விளக்கங்கள்:

    (I) முதல் “ஆறை” ‘எண்’ என்றும், இரண்டாம் “ஆறை” ‘மதம்’ என்றும் பொருள் கொண்டு விளக்கினால், இதன் அர்த்தம் இவ்வாறு அமையும்: “ஆறு மதப் பிரிவுகளைக் (cults) கடந்து, இவற்றிற்கு மேலாயிருக்கும் அந்த உயரிய பரபிரம்ம நிலையை அடையும் பாக்கியத்தை நான் பெறுவேனா?”

    இந்துக்களின் ஆறு மதப்பிரிவுகள்சண்மதம்என்றழைக்கப்படுகிறது. அவையாவன: 1. சைவம், 2. வைஷ்ணவம், 3. சாக்தம், 4. காணாபத்யம், 5. கௌமாரம், 6. சௌரம். இம்மதப் பிரிவுகள் முறையே சிவன், விஷ்ணு, தேவி () சக்தி, கணபதி, முருகன், சூரியன் ஆகிய கடவுள்களை பரமாத்மாவாக கொள்கின்றன.

    பரம்பொருள் என்பது ஒன்றுதான். அது “ஸத்யம், ஞானம், அனந்தம் பிரம்மம்” என்று சொல்லப்படுகிறது. அது ‘ஸத்யம்’ (உண்மை), ‘ஞானம்’ (அறிவெனும் உணர்வு), ‘அனந்தம்’ (எல்லையில்லாதது / என்றும் எங்கும் இருப்பது). அதுவே பிரம்மம். அந்த இறுதியான உண்மைப் பரம்பொருளை (பிரம்மத்தை) நேரிடையாக தியானம்செய்து அடைவது மிகவும் கடினம்; எனவே, அதைச் சுலபமாக அடைவதற்கு, வெவ்வேறு மனிதர்களின் ருசிக்கும் மனநிலைக்கும் பொருந்தும் விதத்தில், அத்வைத ஆச்சாரியரான ஆதிசங்கர பகவத்பாதாள், ‘சண்மதத்தை (இந்துமதத்தின் ஆறு பிரிவுகளை) ஸ்தாபனம் செய்தார். அதன்படி, சிவனார் முதலான ஆறு கடவுள்களும், அதே பரம்பொருளின் கருத்துப்படிவங்கள்; அந்த ஒற்றை பரம்பொருளை அடைவதற்கு “சைவம்” முதலான ஆறு மரபுகள், ஆறு வழிபாட்டு முறைகள். உண்மைப் பரம்பொருளுக்கு மதமோ () வழிபாட்டு மரபோ இல்லை; அது மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது --- மேலே கூறப்பட்டசண்மதங்களுக்கும் (ஆறு மரபுகளுக்கும்), ஏன் இவ்வுலகிலுள்ள அனைத்து மதங்களுக்குமே அப்பாற்பட்டதெனலாம். மதம் அல்லது சமயம் மனிதனுக்குதான், இறைவனுக்கு அல்ல; உண்மைப் பரம்பொருள் எந்த மதத்தையும் சேர்ந்ததல்ல. அது மதங்களைக் கடந்து இருக்கிறது.

    எனவே, அனைத்து மதங்களும் அந்த ஒரே உண்மைப் பரம்பொருளை அடைவதற்கான மாறுபட்ட அணுகுமுறைகளே. மதங்களின் இஷ்ட- தெய்வங்கள், (சிவபெருமான் முதலானவர்கள்) வழிபாட்டுமுறையில் ஒரு முக்கிய பிரயோஜனத்திற்காக உள்ளன. இஷ்ட-தெய்வங்கள் அந்த ஒரு உண்மையின் முகப்பாக (facet) இருப்பதால், அவை கூட்டிணைப்புக் கேந்திரங்களாகச் செயல்பட்டு, அந்த ஒரு உண்மையை நோக்கி சாதகனை வழிநடத்தி, அதில் புகும் நுழைவாயிலாகின்றன. அக்கருத்துப் படிவங்கள் (இஷ்ட-தெய்வங்கள்) அறுதிப்பொருளின் தற்காலிகப் படிவங்கள்; எனவே, இறுதியில் அவைகளும் கடக்கப்பட வேண்டும். இவ்விஷயத்தை மறந்து விடக்கூடாது. சாதகர்கள் இஷ்ட-தெய்வங்களை அவைகள்தான் இறுதியாக அடையப்பட வேண்டிய நிலையென்று கருதி, அதையே கெட்டியாகப் பற்றிக்கொண்டு இருந்துவிடக்கூடாது. ஏனெனில், அவை உருவமும் அருவமும் இல்லாத பிரம்மத்தின் தற்காலிகப் படிவங்கள், அவை கடைசியில் பிரம்மத்தில் ஒடுங்கிவிடும். எப்படி அனைத்து நதிகளும் இறுதியில் ஒரே கடலில் சங்கமித்து தத்தம் பெயர் மற்றும் வடிவத்தை இழந்து விடுகின்றனவோ, அப்படியே எல்லா வடிவங்களும் அவ்வுண்மைப் பரம்பொருளில் ஒன்றாகக் கலந்து பதங்கமாகி விடும். தோத்தாப்புரி குருநாதர், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு காளிதேவியையும் கடந்து செல்லப் பணித்ததை இங்கு நினைவில் கொள்வது உசிதமானது. எனவே, எந்த ஒரு மதத்தை ஒருவன் தழுவியிருந்தாலும் சரி, இறுதியில் உண்மைப் பரம்பொருளை அடைய வேண்டும்; அதுவே மதங்களின் குறிக்கோள், பயன். இஷ்ட-தெய்வங்களை அடைவதே இறுதிக் குறிக்கோளல்ல, பிரம்மத்தை (பரம்பொருளை) விரும்பி, அடைவது மட்டுமே இறுதிக் குறிக்கோளாக ஆகவேண்டுமென்றும், அதை அடைவதில் இஷ்ட-தெய்வங்களின் உபாசனை அவசியமான கட்டங்கள் என்றும் உணர்த்துகிறார் அருட்செல்வர் அருணகிரியார். இதைத்தான் ஆறு மதப் பிரிவுகளைக் (cults) கடந்து, இவற்றிற்கு மேலாயிருக்கும் அந்த உயரிய பரபிரம்ம நிலையை அடையும் பாக்கியத்தை நான் பெறுவேனா?” என்று குறிப்பாக பிரார்த்திக்கக் கூறுகிறார்.

    அருணகிரியார் கந்தப் பெருமானின் அதிதீவிர பக்தராக இருந்த போதிலும், அனைத்து சமய மரபுகளையும் ஒருங்கிணைப்பவராக இருந்தார் என்பதை நாம் காணலாம். அவர் இயற்றிய திருப்புகழ் பாடல்கள் பலவற்றில் அவர் சிவனார், விஷ்ணு பகவான், பராசக்தி, இராமர், மற்றும் அனைத்து கடவுள்களின் மகிமைகளையும் பெருமைகளையும் பற்றி எவ்வளவு நேர்த்தியாகவும், எழுச்சியூட்டும் வகையிலும் பாடியுள்ளார் என்பதை நாம் காணலாம். அருணகிரியார், அத்வைதத்தின் மிகப்பெரிய பக்தனாக விளங்கினார் --- அவர் அத்வைத அநுபவத்தைப் பெற்று அதிலேயே திளைத்திருந்த மகாமுனிவர். எல்லாத் திருப்புகழ்களிலும் அவர் கந்தப் பெருமானையே புகழ்ந்து பாடியுள்ளார்; ஆனால் அவர் கந்தப் பெருமானை இஷ்டதெய்வமாகக் கருதாமல், சாக்ஷாத் பரம்பொருளாகவே கருதினார்; இந்நூலின் பதின்மூன்றாம் செய்யுளிலிருந்தும், “பிறவியலை யாற்றினிற் புகுதாதே” என்று தொடங்கும் (1298) திருப்புகழ் பாடலில் “அறு சமய சாத்திரப் பொருளோன்” என்று கந்தப் பெருமானைக் கூறுவதிலிருந்தும் இவ்விஷயம் தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய மனப்பாங்கையும், இந்த அணுகுமுறையையும் நாமும் நம்முடைய இஷ்டதெய்வங்களிடம் கொள்ள வேண்டுமென்று அருணகிரியார் விரும்புகிறார். ஒருவனின் கடவுளைப் பற்றிய கருத்து எவ்விதமாயிருப்பினும், எந்த மதத்தை அவன் தழுவியிருந்தாலும், அவன் அடையவேண்டிய குறிக்கோள் அனைத்தையும் கடந்து நிற்கும் பரம்பொருளே -- இதுவே அருட்செல்வரின் அறிவுரை,

    (II) முதல் ‘ஆறு’ எண்ணாகவும், இரண்டாவது ‘ஆறு’ ‘சக்கரம்’ என்றும் பொருள் கொள்ளலாம். குண்டலினீ சக்தி செல்லும் பாதையிலுள்ள ஆறு சக்கரங்களென்று பொருள் கொண்டால், கிடைக்கும் அர்த்தம் இவ்வாறாகிறது: “ஆறு சக்கரங்களைக் கடந்து, அவற்றிற்கு மேலாய் (சகஸ்ராரத்தில்) இருக்கும் அந்த உயரிய சிவனாருடன் ஐக்கிய (அநுபூதி) நிலையை அடையும் பாக்கியத்தை நான் பெறுவேனா?” ‘ஆறு’ என்ற சொல்லிற்கு ‘சக்கரம்’ என்று நேரடி அர்த்தம் இல்லைதான்; இருந்தாலும், குண்டலினீ சக்தி நகரும் பாதையின் கட்டங்களாக இருப்பதால், சக்கரமென்பது மறைமுகமாக பெறப்பட்ட அர்த்தமே. இவ்வாறான பிரயோகத்தை தமிழ் இலக்கியங்களில் நாம் காணலாம் --- முனிவர் திருமூலரின் திருமந்திரத்தின் 2419-ஆவது செய்யுளிலும், முனிவர் ராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவிலும் இவ்வாறாக ஆறு என்ற சொல்லை சக்கரம் என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

    ஆறு சக்கரங்களாவன: மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, மற்றும் ஆக்ஞா சக்கரம். சக்திக் கேந்திரங்களாக விளங்கும் சக்கரங்கள் (சக்தி மையங்கள்), சூட்சும உடலில் உள்ளன; அவைகளை ஊனக் கண்களால் கண்டிட இயலாது, மனதை ஒருமுகப்படுத்திய நிலையில் யோகிகள் காண்கின்றனர்; பௌதிக உடலிலுள்ள முதுகெலும்பு மற்றும் பின்னல் போன்ற அமைப்பு கொண்ட நரம்பு மண்டலப் பகுதிகளில், ஆறு சக்கரங்களுக்கு ஒத்திசைவான (பொருந்துகிற) மையங்கள் உள்ளன --- முதுகெலும்பின் அடியில், பிறப்புறுப்பின் மூலத்தில், தொப்புள் பகுதியில் (நாபி ஸ்தானம்), இதயத்தில், தொண்டைக்குழியில், இருபுருவங்களின் நடுப்பகுதியில் (முக்கண் ஸ்தானம்) ஆகிய இடங்களில், இவை முறையே அமைந்திருக்கின்றன. ஒவ்வொருவரின் மூலாதார சக்கரத்தில் குண்டலினீ சக்தி உறங்கிக் கொண்டிருக்கிறது, ஆசனம், பிரணாயாமம், பந்தம், முத்திரை, தியானம் போன்ற யோகப் பயிற்சிகளின்மூலம் அந்தக் குண்டலினீ சக்தியை விழிக்கச்செய்து, மூலாதார சக்கரத்திலிருந்து ஒவ்வொரு சக்கரத்தின் வழியே மேலெழும்பச் செய்து, தலைஉச்சியில் அமைந்துள்ள சகஸ்ரார சக்கரத்தில் உறையும் சிவபெருமானோடு இணையுமாறு செய்யப்படுகிறது. அப்பொழுது அந்த யோகி பூரண ஆனந்தத்தை சதா சர்வகாலமும் அநுபவிக்கிறான்.

    சுவாமி சிவானந்த மஹராஜ், “குண்டலினீ யோகம் ஒரு முறையான சாஸ்திரம்” என்கிறார். அது ஒரு மகத்தான பெரிய அறிவு நூல், அதை இங்கு முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கு அவகாசம் போதாது. எனினும், அதன் முக்கிய சாராம்சங்களை மட்டும் இங்கு காண்போம். அசையாத சக்தி மற்றும் அசையும் சக்தி என்று சக்தி இருவகைப்படும். (Static and dynamic aspects of Energy). அவ்விரண்டையும் ஒருங்கி இணைக்கும் வழிமுறை குண்டலினீ யோகப் பயிற்சி; அதன் மூலம் ஒரு மனிதனுக்கும் அண்டத்திற்குமிடையே ஐக்கியம் அடையப்படுகிறது. பிரபஞ்சத்தின் உற்பத்தியில், உணர்வுப் பிழம்பாகிய பரம்பொருள் தன்னைப் பல படித்தளங்களில் கெட்டிப்படுத்திக் கொண்டே போய், அதுவே இப்பிரபஞ்சம் எனும் ஒரு ஸ்தூலப் பொருளாக உருமாறித் தோன்றுகிறது. மேலும், தனிமனிதர்களின் மலர்ச்சியில், அந்த அண்ட சக்தியானது அவர்களின் உள்ளே அசையாத சக்தியாக மூலாதார சக்கரத்தில் அழுத்தி அமுக்கப்படுகிறது. மனித சரீரத்தின் அமைப்பு வெளிப்பிரபஞ்சத்துடன் ஒவ்வொரு படித்தளத்திலும் உயிருள்ள பிணைப்பு கொண்டிருக்கிறது. மனிதனின் கால்விரல்கள், உள்ளங்கால்கள், கணுக்கால்கள், கீழ்கால் தண்டு, முழங்கால் மூட்டுகள், தொடைகள், மற்றும் இடுப்பு ஆகிய இடுப்புப் பகுதிவரையிலான ஏழு பகுதிகள், முறையே பாதால, மகாதல, ரசாதல, தலாதல, சுதல, விதல, அதல எனப்படும் கீழேழு லோகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. அதேபோல், இடுப்பிற்கு மேல் இருக்கும் மூலாதாரம் முதலான ஆறு சக்கரங்களும், முறையே பூலோகம், புவர் லோகம், சுவர்(க்க) லோகம், மஹர் லோகம், ஜன லோகம், தபோ லோகங்களோடும், மற்றும் சகஸ்ரார சக்கரம் ஸத்ய லோகம் ஆகிய மேலேழு லோகங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. அனைத்து சாதாரண மனிதர்களின் மூலாதார சக்கரத்தில் குண்டலினீ சக்தியானது நிலைபெற்று இருப்பதால், நாம் அனைவரும் ஸ்தூல பிரபஞ்சமான பூலோகத்தைப் பற்றிய உணர்வை மட்டுமே (நனவுலகம்) கொண்டுள்ளோம்.

    ஒரு சக்கரத்தின்மேல் மனதை ஒருமுகப்படுத்தி, அதன்மேல் தியானம் செய்யும்போது, அந்த யோகி அதேசமயத்தில் அச்சக்கரத்துடன் சம்பந்தப்பட்ட லோகத்துடன் தொடர்பு செய்துகொள்கிறான். அந்தப் பயிற்சியின்மூலம் அந்தச் சக்கரத்திலிருந்து குண்டலினீ சக்தி எழுப்பப்படும்போது, அச்சக்கரம், மற்றும் அதன் தொடர்புடைய லோகம் ஆகிய இரண்டும் அவனுடைய முழு ஆதிக்கத்தில் வருகின்றன. ஒவ்வொரு சக்கரமும் அதனுடைய முந்தைய சக்கரத்தைவிட மேலும் சூட்சுமமானது; அதேபோல் லோகங்களும் அமைந்து உள்ளன. எனவே, குண்டலினீ சக்தியானது ஒவ்வொரு சக்கரத்தையும் கடந்து செல்லும்பொழுது, அதன் உணர்வு நிலையும் மேன்மேலும் தூய்மையும் சூட்சுமமுமாகிக் கொண்டேபோகிறது. ஆக கடைசியில், குண்டலினீயானது ஆக்ஞா சக்கரத்தைக் கடந்து சகஸ்ராரத்தை அடையும்போது, அது தனது சுய-நிலையான வெறும் சைதன்ய (தூய உணர்வு) நிலையைத் திரும்பப் பெறுகிறது, அந்நிலையில் யோகி எல்லையற்ற பேரின்பத்தில் திளைக்கிறான்.

    மனித உடலின் அனைத்து பகுதிகளிலும் சக்தியானது பரவியுள்ளது; எனினும், அது சில குறிப்பிட்ட மையங்களை இருப்பிடமாகக் கொள்கிறது, பொதுவாக, அது மனித அமைப்பு முழுமைக்கும் சக்தியை அளிக்கும் மூலாதார சக்கரத்தில் இருக்கிறது. நதியில் நீர் சுழல்வதுபோல, பிராணசக்தியானது இச்சக்கரங்களில் சுழண்டு கொண்டிருக்கிறது; அந்தப் பிராணசக்தியின் சுழற்சி ஒவ்வொரு சக்கரத்திலும் ஒருவிதமான சூட்சும வடிவத்தை எடுக்கிறது. அந்த சூட்சும வடிவம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட இதழ்களையுடைய தாமரை மலர்போல் காட்சியளிக்கிறது. எனவே, ஒவ்வொரு சக்கரமும் வெவ்வேறு எண்ணிக்கையுள்ள இதழ்களைக் கொண்ட தாமரை மலருக்கு ஒப்பிடப்படுகிறது, மேலும் ஒவ்வொரு சக்கரத்திற்கும் அதிஷ்டான தெய்வம், நிறம், வடிவம், பீஜ-அட்சரம், ஆகியவைகளும் தனித்தனியாக உள்ளன. குண்டலினீ ஒரு வலிமையான சக்தியானதால், அது விழிப்படையச் செய்யப்பட்டால், அதை சரியான முறையில் கட்டுப்படுத்தப்படவும் சரியான திசையில் செலுத்தப்படவும் வேண்டும்; இல்லையேல் அது நன்மை செய்வதைவிட அதிகமாக தீமை செய்யக் கூடும். எனவே, குண்டலினீ யோகத்தைப் பயிற்சிசெய்பவன் அதிகமான தார்மீகக் கட்டுப்பாடு கொண்டிருக்க வேண்டும், மேலும் இந்த யோகம் ஒரு நிபுணனின் கண்பார்வையில் பழகப்படவேண்டும். இப்படியாக, ஒருவன் ஆசனம், பிராணாயாமம், பந்தங்கள், மந்திர-ஜபம், தியானம் முதலிய வழிமுறைகளைக் கடைப்பிடித்து, மூலாதார சக்கரத்தில் உறங்கும் குண்டலினீ சக்தியைத் தட்டி எழுப்பி, அதை ஒவ்வொரு சக்கரத்தின் வழியே மேல்நோக்கிக் கொண்டே போய், உச்சந்தலையில் இருக்கும் ஆயிரம் இதழ்கள் கொண்ட சகஸ்ரார சக்கரத்தை அடையச்செய்தால், சக்தி சிவனுடனும், ஜீவாத்மா பரமாத்மாவுடனும், மனிதன் இறைவனுடனும் ஐக்கியமாகும் நிலை ஏற்படுகிறது. அப்பொழுது சாதகன் எல்லையற்ற பேரின்பத்தில் திளைக்கிறான். இதுவே குண்டலினீ யோகத்தின் குறிக்கோளாகும். குண்டலினீ சக்தி ஒவ்வொரு சக்கரத்தைக் கடக்கும்போதும், சாதனுக்கு அச்சக்கரத்தைச் சார்ந்த விதவிதமான சித்திகள் கைவரப் பெருகின்றன. அவன் அவற்றில் சிக்கி, மயங்கி, அவற்றை பிரயோகிக்கும் ஆசைகளில் விழக்கூடும். இந்த ஆபத்திலிருந்து தப்புவது மிகக்கடினம்; ஆகவே மிக மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

    குண்டலினீ யோகத்தையன்றி மற்ற யோகங்களைப் பயில்பவர்களுக்கும்கூட, அவர்கள் அறியாமலேயே, குண்டலினீ சக்தியானது தட்டி எழுப்பப்பட்டு, ஒவ்வொரு சக்கரமாகக் கடக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. அந்த யோகி அவனுடைய பயிற்சியின் வெவ்வேறு கட்டத்திலும் விதவிதான வியக்கத்தக்க இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைப் பெறுகிறான். அச்சமயம் அவன் அவைகளால் பூரணமாக மயக்கப்பட்டு, அச்சக்கரங்களில் எதிலேனும் தேங்கி நின்று விடுக்கூடும். அப்படி ஆகிவிடாமல் ஜாக்கிரதையாக இருந்து, எல்லாச் சக்கரங்களையும் கடந்து இறைவனை அடையவேண்டும். எனவேதான், அவ்வாறு எதுவும் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக, தத்துவங்கள், மதம், மரபு, சக்கரங்கள் ஆகியவைகளைக் கடந்து அதற்கு மேலான திவ்ய நிலையைப் பெறும் பாக்கியத்தைவேண்டி இச்செய்யுளில் பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது. பரம்பொருளை அடைவதே யோகத்தின் குறிக்கோள், அதை ஒருபொழுதும் மறக்கக் கூடாது.

No comments:

Post a Comment