செய்யுள் 48



செய்யுள் – 48


அறிவொன்று   அறநின்று   அறிவார்   அறிவில்
பிறிவொன்று   அறநின்ற   பிரான்   அலையோ
செறிவொன்று   அறவந்து   இருளே   சிதைய
வெறிவென்றவரோடு உறும்   வேலவனே.

    பொழிப்புரை: அனைத்துப் புலனறிவுகளின் செயல்பாடுகளிலிருந்து விடுபட்டு, அறிபவர்களின் அறிவில் (தூய புத்தியில்/உள்ளுணர்வில்), ஒரு சிறிதுகூடப் பிரியாமல் இருக்கும் பிரான் அன்றோ நீ? (இந்தப் பயிற்சி தொடர்ந்துத் தீவிரமாக்கச் செய்யப்படும்போது) (விக்ஷேபத்தினால் விளையும்) உலக () வெளித் தொடர்புகள் அனைத்தும் அறவே அற்றுபோய், (ஆவரணத்தால் விளையும்) இருளும் அகற்றப்பட்டு, மதிமயக்கத்தை (அறியாமையை) வெற்றி கொண்டவரோடு (ஞானியர்களின் உள்ளத்தில்) என்றென்றும் நிரந்தரமாக உறையும் வேலாயுதப் பெருமானே!

விளக்கவுரை

    கடோபநிஷத்தின் பல மந்திரங்களில் விளக்கப்பட்ட விஷயமான யோக மார்க்க அநுஷ்டானத்தில் புதைந்துள்ள இரகசியங்கள் மற்றும் ஆத்மானுபூதி பற்றியும் நமக்கு மிகவும் நன்கு விளங்கும் விதத்தில் அருட்செல்வர் அருணகிரியார் இந்த ஒரு செய்யுளிலேயே கற்பித்து விடுகிறார். அதனால் இது மிகவும் அரிதான ஒரு செய்யுள். செய்யுள் 42ல் கூறப்பட்ட விஷயத்தின் விரிவாக்கமாகவும் இச்செய்யுள் அமைந்திருக்கிறது.

    இறைவன், எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள். அவர் எங்குமிருக்கிறார் --- தூரத்திலும் அருகிலும், வெளியிலும் உள்ளேயும், மேலேயும் கீழேயும் எங்கும் அவர் இருக்கிறார். எனவே, அவர் எப்பொழுதும் நமக்கு உள்ளேயும் இருக்கிறார். நமக்குள்ளிருக்கும் சாராம்சமே (நமது உண்மை வடிவமே) அவர்தான். அவரே நம் ஆத்மா, உண்மையான “நான்”. இவ்வாறாக இருந்த போதிலும், நாம் அவரை அறிவதில்லை, உணர்வதில்லை, அனுபவிப்பதில்லை என்பது ஒரு முரண்பாடான, நகைப்புக்குரிய விஷயம். ஏன் இந்த நிலை? இறைவனைப்பற்றியோ, நம்மை (ஆத்மாவை)ப் பற்றியோ நமக்குப் போதிய ஞானம் இல்லாமையே இதற்குக் காரணம். இது நம்முடைய ஞான-இந்திரியங்களின் சேஷ்டையின் விளைவு. எனவேதான், நாம் அவரை வெளியில் இருக்கும் ஒரு பொருளாகத் தேடிக் கொண்டிருக்கிறோம். இதுதான் நாம் செய்யும் அடிப்படையான தவறு. அதனால், நம்முள்ளேயே இருக்கும் இருப்பாக, உண்மையான நானாக, அறிபவனாக, உணர்வாக அவரை நாம் தேட வேண்டுமென்கிறார் அருணகிரியார். அவ்வாறு செய்வது எப்படி? முதலில், நாம் புலன்சார்ந்த உணர்தல் மற்றும் புலன்கள் தரும் அறிவு ஆகியவைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும். ஆனால், இப்போது நாம் இந்தப் புலன்களுக்கு அடிமையாகி இருக்கிறோம், புலன்களைக்கொண்டு எது அறியப்படுகிறதோ அது மட்டுமே நமக்கு உண்மை, இறைவனும்கூட இந்த புலன்சார் உணர்தலுக்கு உட்பட வேண்டும். இந்த புலன்சார் அறிவு வேட்டை (புலன்கள் மற்றும் மனதின் வெளிச்செல்லும் இயல்பு) முதலில் நிறுத்தப்பட வேண்டும். புலன்களும் மனதும் வெளிச்செல்லும் போக்கைத் துறந்து, எல்லாவிதமான புலன் உணர்தல்களும் நிறுத்தப்பட்டு, மனது உள்நோக்கிச் சென்று, அசைவற்றதாக ஆக வேண்டும். ஒரு புலன்கூட, (ஆறாவது புலனான) மனது உட்பட, செயல்படக்கூடாது. அதனால்தான், அருணகிரியார், அறிவு ஒன்று அற நின்றுஎன்று சொல்கிறார்: அதாவது, ஒரு புலன் கூட (மனது உட்பட) செயல்படாமலிருக்கும் நிலையில் உறுதியாகத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு சரியாக நிலைபெறுவதுதான் பிரத்தியாகாரம் எனப்படும் (புலன்களை முழுவதுமாக திரும்பப் பெறுதல்), இந்நிலையை அடைவதற்கு யமம், நியமம் ஆகிய முந்தைய நிலைகளைச் சரியாக அநுசரித்து அவற்றில் முழுநிறைவு பெற்றிருக்க வேண்டும்.

    இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்த பின்னரே, நாம் “அறிய” வேண்டும். ஆனால், இதை நாம் ஒருபொழுதும் செய்வதில்லை. புலன்களை கட்டுப்படுத்தாமல், யமம் மற்றும் நியமம் அநுஷ்டானம் செய்யாமல், புலன்கள் மற்றும் மனதின் வெளிச்செல்லும் போக்கை சிறிதுகூட தடைப்படுத்தாமல் அவைகளைப் போனவழியில் போகவிட்டு, இறைவனை அடைவதற்காக அவர்மேல் மனத்தை நிலைநிறுத்தவும் தியானம் செய்யவும் முயல்கிறோம். இந்த முயற்சியில் எப்படி வெற்றி அடைந்திட இயலும்? எனவே, ஒவ்வொரு புலன்-உணர்தலிலிருந்தும் விடுபட வேண்டும்;அறிவு ஒன்று அறவே நின்றுஎன்கிறார் அருணகிரியார். ஆனால், இதை ஒருவன் செய்திட முயலும்போது, மனம் ஒரு (தீய) விளையாட்டை () குறும்பைச் செய்திடும். மனதின் இயற்கை இயல்பு என்னவெனில் அது ஒன்று சுறுசுறுப்பாக இயங்கும் அல்லது தூங்கப் போய்விடும். நாம் மனதின் வெளிச்செல்லும் போக்கை (ரஜஸ்) கட்டுப்படுத்தி தியானிக்க முயன்றால், அது உடனே தூங்கப் போய்விடும் அல்லது ஜடத்துவம் (தமஸ்) ஆகிவிடும். இப்படி ஆவதை எப்படியாவது தவிர்த்தல் அவசியம். உணர்வு நிலையில் வைத்திருப்பது அத்தியாவசியம் என்பதை அறிவார்’ (அறிகின்றவன்) என்ற சொல் உணர்த்துகிறது. இங்கு அறிவார்’ (அறிகின்றவன்) என்று சொல்கிறபோது, அனைத்துப் புலனறிவுகளும் நிறுத்தப்பட்ட பின்னர், அறிதல் என்று அர்த்தம். எனவே, ‘அறிவதில்’ இது ஒரு புதுமையான முறை -- மனது மற்றும் புலன்கள் ஆகிய வலைகளிலிருந்து விடுபட்ட பின், புத்தியே புத்தியால் நேரடியாக அறிகிறது. புலன்கள் செயல்பாடு அற்றுப்போய், மனதும் அமைதியாய் இருக்கும்போது, புத்தி தெளிவடைகிறது (சலனமற்று இருக்கிறது). அப்பொழுது, அந்த சலனமற்ற புத்தியில் கூடஸ்த ஆத்மாவின் பிரதிபலிப்பான சிதாபாஸம் எனப்படும் ஜீவ-உணர்வும் எந்தவிதமான தொந்தரவும் இல்லாது முற்றிலும் அசையாத நிலைபெறுகிறது, அதாவது சுய மையமாகிறது () தன்னுணர்வு அடைகிறது. இந்த சுயமையமான சிதாபாஸம் இங்கு அறிவு (‘அறிவில்’) என்று குறிப்பிடப்படுகிறது. அது குறிப்பது புத்தியை அல்ல, அறிவுத்திறத்தையே (not the intellect. but the Intelligence). அவ்வாறு நிலைபேறு பெற்ற சிதாபாஸம் கூடஸ்தனிலிருந்து வேறுபடாதபடி ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கிறது. எனவே, ஜீவ-உணர்வு (சிதாபாஸம்) முதலில் வெளிநோக்கிச் செல்வதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் (“அறிவொன்று அற நின்று”); அது உணர்வை இழக்காது காக்கப்பட வேண்டும், தூங்க விடாமல் தடுக்கப்பட வேண்டும், அதாவது உணர்வுடன் இருக்கவேண்டும் (“அறிவார்”); அந்த வெளிநோக்கற்று விழிப்புணர்வும் கொண்டிருக்கும் சிதாபாஸத்தில் (“அறிவில்”), உண்மை பரம்பொருளெனும் இறைவன் எந்தவித பிரிவும் இல்லாமல் இணைந்து இருக்கிறான் (“பிறிவொன்று அற நின்ற பிரான்”).

    “பிறிவொன்று அற நின்ற பிரான்” என்றால் என்ன? ஆத்மா எனப்படும் கூடஸ்த சைதன்யம் என்றும் மாறாத உண்மை. அதுவே எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சாட்சி சைதன்யம்’. புத்தியில் அதன் பிரதிபலிப்பு, ஜீவ-உணர்வு (சிதாபாஸம்) எனப்படுகிறது. புலன்-உணர்வுகளிலிலிருந்து விடுபட்டு, மனம் அமைதி பெற்று, புத்தி சலனமற்று இருக்கும்போது, அதில் பிரதிபலிக்கும் சிதாபாஸமும் அசையாது நிலைபெறுகிறது; ஆகையால், எப்பொழுதும் சாட்சி சைதன்யமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் கூடஸ்த ஆத்மாவுடன் (இறைவனுடன் அல்லது பிரானுடன்) இணைந்து இருக்கிறது. பிரதிபலிப்பும் அதன் மூலமும் ஒன்றாக இருத்தல். இதுவே “பிறிவொன்று அற நின்ற பிரான்”. ஒரு உதாரணம் கொண்டு இதை மேலும் தெளிவாக நாம் புரிந்து கொள்ளலாம்.

    சூரியன் ஒளிர்கிறது. அதன் கிரணங்கள் வீட்டுக்கூரையின் ஒரு துவாரத்தின்மூலம் வந்து, சுத்தமான முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது விழும்போது, அதிலிருந்து பிரதிபலிக்கும் கிரணங்கள் வெளிப்படுகின்றன. அச்சூரியனை கூடஸ்தனாகவும், அப்பிரதிபலிப்பை சிதாபாஸமாகவும் கற்பனை செய்வோம். கண்ணாடி, புத்தியைப் போல், பிரதிபலிக்கும் சக்தி கொண்ட ஒரு ஊடகம். கண்ணாடியில் எந்த இடத்தில் சூரிய கிரணங்கள் விழுந்து, அங்கிருந்து பிரதிபலிப்பு கிளம்புகிறதோ, அவ்விடத்தில் அவ்விரண்டும் (கிரணங்களும், அதன் பிரதிபலிப்பும்) பிறிவொன்றுமில்லாத நிலையில் இருக்கின்றன. கண்ணாடியின்மேல் அவ்விரண்டும் ஒன்றாயிருக்குமிடத்தில், அது கண்ணாடியின்மேல் விழும் சூரியனுடைய கிரணமா அல்லது கண்ணாடியிலிருந்து வெளிக்கிளம்பும் பிரதிபலிப்பு-கிரணமா என்று நம்மால் பிரித்து அறிந்திட இயலாது. நாம் அதை எதுவென்று --- (அதாவது சூரியனுடைய கிரணம் என்று அல்லது பிரதிபலிப்பு-கிரணம் என்று) சொன்னாலும், அது சரியாகத்தான் இருக்கும். அவ்விடத்தில், இரண்டையும் தனித்தனியாகப் பிரித்து அறிந்திட இயலாது. கூடஸ்தரும், சிதாபாஸனும், அப்படிப்பட்ட ஓர் நிலையில்தான், தியானத்தின் உச்ச கட்டங்களில் இருக்கின்றன --- பிரத்தியாகாரத்தில், புலன்களின்மூலம் வெளிச்செல்லும் சிதாபாஸம் பின்னிழுக்கப்பட்டு, தாரணத்தில் அது மனதில் ஒருமுகப்படுத்தப்பட்டு, சிதாபாஸமானது தனது ஆரம்ப இடத்திற்கு (அதாவது, எங்கிருந்து பிரதிபலிப்பு வெளிச்செல்லக் கிளம்பியதோ அந்த புத்திக்கே) திரும்பும் போது, அது வேறு எதன்மேலும் இல்லாமல் கூடஸ்தரின் (இறைவனின்) மேலேயே பிரகாசிக்கிறது. அந்த மேலாம் தியான நிலையில், அவ்விரண்டும், கண்ணாடியில் நிகழ்வதைப்போல, ஒரேயிடத்தில் இணைபிரியாமல் இருக்கின்றன. அந்நிலையில் நான்எனும் உணர்வு, கூடஸ்தம் () சிதாபாஸம் ஆகிய இரண்டில் எதை வேண்டுமானலும் குறிக்கும், அதாவது அது எதுவாகத் தன்னை உணர்கிறதோ அதுவாக இருக்கும். சூரியனின் கிரணங்கள் கண்ணாடியில் பிரதிபலிப்பதற்கும், கூடஸ்தன் புத்தியில் பிரதிபலிப்பதற்கும் இடையே நாம் கவனிக்க வேண்டிய ஒரு சூட்சுமமான ஆனால் மிகவும் முக்கியமான வித்தியாசம் ஒன்று இருக்கிறது. முந்தைய உதாரணத்தில், அசல் (சூரியன்) மற்றும் பிரதிபலிக்கும் ஊடகம் (பிரதிபலிக்கும் கண்ணாடி, அதனால் பிரதிபலிப்பு) ஆகிய இரண்டிற்கும் இடையே வெகுதூர இடைவெளி உள்ளது; ஏனெனில், சூரியன் ஒரு வரையறைக்குட்பட்ட வஸ்து. ஆனால் பிந்தையதிலோ, கூடஸ்தனாகிய பரம்பொருள் எங்குமுள்ளதால் (சர்வ-வியாபி), சிதாபாஸன் எப்பொழுதும் கூடஸ்தருடன் ஒன்றாகவே இருக்கிறது, எனவே, சிதாபாஸத்தின் வெளிச்செல்லும் போக்கானது முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்படும்போது, அது தனது பிரதிபலிக்கும் மூலஸ்தானத்திற்குத் திரும்பி, இயற்கையாகவே அங்கு கூடஸ்தரோடு பிரிக்க முடியாத வகையில் இணைந்திருக்கிறது.

    இத்தகைய ஒரு நிலையை நாம் ஆழ்ந்து தூங்கும்பொழுது தினந்தோறும் அநுபவிக்கிறோம். ஆனால், அப்பொழுது நமக்கு உணர்வு இருப்பதில்லை; இதுதான் தூக்கத்திற்கும் தியானத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம். வெளிப்போக்கில்லாத உணர்வு, தன்னுணர்வு இல்லாமலிருப்பது தூக்கம்; வெளிப்போக்கில்லாத உணர்வு, தன்னுணர்வுடன் இருப்பது தியானம். (The non-objectified awareness bereft of self-consciouness is sleep; The non-objectified awareness coupled with self-consciouness is Dhyana or meditation.) இவ்விரண்டிலும், கூடஸ்தனும் சிதாபாஸனும் பிரிவின்றித்தான் இருக்கின்றன; ஆனால், தற்காலிகமாக. எனவே, இது யோகத்தின் மகத்தான உச்ச நிலையான ஆத்மானுபூதி அன்று, ஏனெனில் ஜீவத்துவத்தின் காரணமான அறியாமை இன்னும் அழிபடாமல் இருக்கிறது. அறியாமை அழிபடும் உயரிய யோகநிலை சமாதி நிலையாகும். எனவே, அருணகிரியார் இச்செய்யுளை முடிக்காமல் மேலும் தொடர்ந்து சொல்கிறார். அதில் அவர் கூறுவது என்னவெனில், மேலே அடையப்பட்ட பிரிதலில்லா (யோக) நிலை தற்காலிகமானது, அதில் நிரந்தரமாக நிலைபெறும்வரை அது தொடரப்பட வேண்டும். அப்பொழுதுதான், ஜீவத்துவத்தின் காரணமான அறியாமை அழிக்கப்படும், (பிரதிபலிப்பான) சிதாபாஸன் இல்லாமற்போய், கூடஸ்தனாகிய இறைவன் மட்டும் ஒளிர்வான், அதாவது சமாதி (தூய உணர்வு) கைகூடும்.

    இப்பொழுது, மீண்டும் முக்கிய விஷயத்திற்கு வருவோம். தியானத்தின் உயரிய/உச்சகட்ட நிலையில், ஜீவாத்மாவெனப்படும் சிதாபாசமானது பரமாத்மாவெனப்படும் கூடஸ்தனுடன் ஒரு சிறிதும் பிரியாத இணைந்த நிலையில் இருக்கிறது. இந்த நிலை சுலபத்தில் அடையப்படுவது அல்ல, கடுமையான முயற்சி மற்றும் லாவகத்தால் இது அடையப்படும்போதுகூட, ஆரம்ப காலகட்டங்களில் ஒரு சில க்ஷணநேரத்திற்கு மேல் இது நிலைத்திருப்பதில்லை. மின்னல்கீற்றுப்போல், இந்த நிலை வந்தவுடனேயே போய்விடுகிறது. அதனால்தான், கடோபநிஷத் பின்வருமாறு கூறுகிறது: “அப்பொழுது (அதாவது, இந்த நிலை அடையும்போது) ஒருவன் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்; ஏனெனில் யோகம் அடையப்படுகிறது, இழந்தும்போகிறது.” எனவே, இந்த சில க்ஷணநேரம் நீடிக்கும்நிலை நிரந்தரமான நிலையாக அமையவேண்டும். அதற்காக அந்தப் பயிற்சியை மிக்க முயற்சியுடனும் விழிப்புடனும் திரும்பத்திரும்பச் செய்துகொண்டு இருந்தால், அந்த மின்வெட்டொளி தருணங்கள் சீக்கிரம் சீக்கிரம் வரும், மேலும் அவைகள் நிலைத்திருக்கும் நேரமும் நீடித்துக்கொண்டே போகும். இத்தகைய முயற்சியானது ஒரு சிறிதும் தளர்ந்துவிடாமல் மேன்மேலும் தொடரப்படும்பொழுது, அந்த “சிறிதும் பிரியாத இணைந்த” க்ஷணநேரநிலை, நிரந்தரமாகி, சமாதி நிலையாக அமையும். இப்படியாகச் செய்யும்போது என்னவெல்லாம் நிகழும் என்பது இச்செய்யுளின் இரண்டாவது பாகத்தில் (3-4 வது வரிகளில்) வரைபடம்போல் சித்தரிக்கப்படுகிறது, மேலே கூறப்பட்டதெல்லாம் அதில் மறைந்திருப்பது / பொதிந்திருப்பது காணப்படும்.. விக்ஷேபம் முடிவடைகிறது; ஆவரணம் அழிகின்றது; மகாமயக்கமான அவித்யா {அறியாமை --- ‘வெறி’} அற்றுப்போகிறது; இத்தகைய பெரும்பாக்கியம் பெற்ற ஆத்மாவோடு இறைவன் (வேலவன்) இணைந்து என்றென்றும் நிலைத்திருக்கிறான்.

    அருணகிரியார், ‘வெறி’ என்ற சொல்லை “அறியாமை” என்ற பொருளில் உபயோகிக்கிறார். ‘வெறி’ என்ற சொல்லுக்கு மயக்கம், கலக்கம், பைத்தியம், பேதைமை, அறியாமை என்று பல பொருள்கள் உண்டு. மேலும், ‘வெறி’ அல்லது ‘அறியாமை’ என்றால் என்னவென்றும் அவர் தெளிவாக்குகிறார். அறியாமைக்கு இரு வண்ணங்கள் (சக்திகள்) --- ஆவரணம் மற்றும் விக்ஷேபம் என இரு சக்திகள் --- உண்டு. ஆவரணம் என்றால் மறைக்கும் சக்தி; விக்ஷேபம் என்றால் (மறைத்ததை) மற்றொன்றாகத் தோன்றச்செய்யும் சக்தி; ஆவரணமென்பது திரை போன்ற இருள் கொண்டு உண்மையை (பரம்பொருளை, ஆத்மாவை) மறைக்கும் சக்தி. விக்ஷேபமென்பது மனதையும் புத்தியையும் சுண்டிவிடுவதன் மூலம் ஒரு உண்மையைப் பலவாக உணரச்செய்து, வெளி உலகத்துடன் தொடர்பு ஏற்படுத்துகிறது.

    ரஜோ குணம் அல்லது ஆசைகளினால் அலைக்கழிக்கப்படும் மனம், ஐம்புலன்களில் ஏதாவது ஒன்றுடன் அல்லது பலவற்றுடன் சேர்ந்து வெளியுலகப் பொருள்களுடன் தொடர்பு கொள்கிறது. இவ்வாறு சலனப்பட்ட மனோநிலை விக்ஷேபம் எனப்படுகிறது. பிரத்தியாகாரத்தில் ஸ்திரம்பெற்ற மனம் செய்யும் தியானத்தில், இத்தகைய புலன்சார் செயல்கள் முழுமையாக அற்றுப் போகின்றன. ஒரு புலன்கூட செயல்படுவதில்லை. ஆதலால், வெளியுலகத்துடன் எந்த ஒரு தொடர்பும் இருப்பதில்லை. எனவே, “அனைத்து தொடர்புகளும் அறவே நின்றுவிடுகிறது என்று அருணகிரியார் சொல்கிறார். (அறிவு ஒன்று அற நின்றதால், செறிவு ஒன்று அற வந்தது). அனைத்துத் தொடர்புகளும் அற்றுப்போவதே விக்ஷேபத்திலிருந்து விடுதலை (விக்ஷேப நிவர்த்தி), அதனால் ரஜஸ் முழுவதும் நிர்மூலமாகிறது. இப்படியாக, ரஜஸின் அழிவு ஏற்படுவது, தமஸாலான ஆவரண இருள்-திரை விலகுவதற்கு அவசியமான முன் நிபந்தனை.

    விக்ஷேபம் வெற்றி கொள்ளப்பட்டு, புலன்களும் மனதும் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்படும்போது, புலன்களின் செயல்களின் மூலம் விரயமாகும் சக்தி சேமிக்கப்படுகிறது; அதனால், மனம் மிகவும் சக்திவாய்ந்ததாகிறது. இவ்வாறு அசாதாரண சக்திவாய்ந்த ஒருமித்த மனதுடன் செய்யப்படும் தியானத்தில், அந்த மனம் செயல் அற்ற இருள் நிலையில் (தமஸில் அதாவது, தூக்கத்தில்) ஆழ்ந்திடாமல், விழிப்புணர்வு நிலையிலேயே இருந்தால், திரைபோன்று (இறைவனை/ஆத்மாவை) மறைக்கும் ஆவரண இருள் காலக்கிரமத்தில் அழிக்கப்படுகிறது. இவ்வாறாக, தியானத்தின் மிகஉச்ச நிலையான தற்காலிக “பிறிவொன்று அறநின்ற” நிலையில் இருப்பதை, திரும்பத்திரும்ப பயிற்சி செய்வதன்மூலம், அந்த நிலை நிரந்தரமாகிறது. அப்பொழுது உலகத்துடனான அனைத்து தொடர்புகளும் (ரஜஸ் அல்லது விக்ஷேபம்) அற்றுப்போகின்றன, மேலும், தமஸ் அல்லது ஆவரண இருள் அழிக்கபடுகிறது. அதன் பின்னர் நடப்பதுதான் என்ன? அறியாமையின் இரு சக்திகளான ஆவரணமும், விக்ஷேபமும் அழிபடும்போது, அறியாமையும் அழிந்து போகின்றது. மலின-ஸத்வமான (ரஜஸ் மற்றும் தமஸுடன் சேர்ந்த ஸத்வம்) ஜீவன், விக்ஷேபம் (ரஜஸ்) அற்றுப்போனதாலும் ஆவரணம் (தமஸ்) அழிந்துபோனதாலும், (கூடஸ்த ஆத்மாவை) பிரதிபலிக்கும் புத்தியானது சாத்வீகமாகிறது (முழுதும் ஸத்வமாகிறது), அதில் கூடஸ்த ஆத்மா (அல்லது சாட்சி சைதன்யம்) எவ்விதத் தடையுமின்றி சலனமற்று ஒளிர்கிறது. இச்செய்யுளில், அருணகிரியார் கூடஸ்தனை வேலவன்என்றழைக்கிறார். இதுவே முன்னர் பல செய்யுள்களில் குறிப்பிடப்பட்ட வேல்-உணர்வு, ஞான-வேல் தத்துவமாகும். கந்தப் பெருமானின் பல திவ்யமான பெயர்களில், அருணகிரியார் வேலவன் என்ற பெயரை தேர்ந்தெடுத்து இங்கு குறிப்பிடுவது எதற்கெனில் இவ்வாறு அறியாமை அழிக்கப்பட்டவர்களோடு இறைவன் எப்பொழுதும் “ஞானம்”, அறிவு” () உணர்வுஎன்பதாக உறைகிறார் என்பதை சுட்டிக்காட்டுவதற்கே. அத்தகைய அருட்பேறு பெற்ற, வாழ்க்கையின் குறிக்கோளான முக்தியை அடைந்த, புண்ணிய ஆத்மாக்களே ஜீவன்முக்தர்கள், ஞானிகள், அருட்செல்வர்கள், முனிவர்கள், சித்த புருஷர்கள், இறை-மனிதர்கள் என்றெல்லாம் போற்றப்படுகிறார்கள்.

    கடோபநிஷத்தின் கடைசியில், ஆறாம் வல்லியின் 10, 11, 14 மற்றும் 15 ஆகிய நான்கு மந்திரங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் சாராம்சத்தை இந்த ஒரே செய்யுளிலேயே அருணகிரியார் திறமையாகவும் துல்லியமாகவும் வெளிப்படுத்துகிறார். இது மிகவும் வியக்கத்தக்கது. இச்செய்யுளின் முதல் பாதி கடோபநிஷத்தின் 10ம் மந்திரத்தின் கருத்தைப் போன்றது எனலாம். அம்மந்திரம்: ---பஞ்ச (ஐந்து) ஞான இந்திரியங்களும் மனதுடன் இணைந்து நிற்கும்போது, புத்தியும் செயல்படாமல் அடங்கி அமைதியாய் இருக்கும் நிலையை, உயரிய நிலையென்பர்.” ஆனால், இது தியானத்தில் எட்டப்பட்ட மிக உயரிய நிலையாகத் தோன்றுகிறதே தவிர, சாதனையின் முடிவான முக்தி அடையப்பட்டதாக இல்லை. ஏனெனில் இதில் எட்டப்படும் யோக நிலையானது (சிறிதும் பிறியாத இணைந்த நிலை -- “பிறிவொன்று அறநின்ற” நிலை) தற்காலிகமானது; ஏனெனில், ஒருவன் விழிப்புடன் இல்லாவிட்டால் அது இழக்கவும் படுகிறது. எனவேதான், 11ம் மந்திரம் ஒரு எச்சரிக்கை விடுகிறது: “புலன்களின்மேல் பூரண அடக்கம் இருப்பதையே யோகம் எனச் சொல்கின்றனர்; அக்கட்டத்தில், ஒருவன் மிக்க விழிப்புடன் இருத்தல் அவசியம், ஏனெனில் இந்த (பிறியாத இணைந்த தற்காலிக) யோகநிலை வந்துபோகும் (அடையப்படும் மற்றும் இழக்கப்படும்) தன்மை கொண்டது.” இவ்வாறாக, மிகுந்த அக்கறையுடன், இந்த யோக விழிப்புணர்வானது (இணைப்பு) பேணப்பட்டு, திரும்பத்திரும்ப நிகழச் செய்து, அதிலேயே அமைந்திருக்குமாறு செய்யப்பட்டால், காலப்போக்கில் இதய முடிச்சுகள் அறுக்கப்பட்டு, குறிக்கோளானது அடையப்படுகிறது, என்பது மந்திரங்கள் 14 மற்றும் 15 மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. “எப்போது ஒருவனின் இதயத்தில் குடிகொண்டுள்ள அனைத்து ஆசைகளும் அற்றுப் போகின்றனவோ, அப்போதே மரணத்திற்குட்பட்ட அவன் மரணமற்றவன் ஆகிறான், அவன் இங்கேயே பிரம்மத்தை அடைகிறான்.” “இவ்வுலகிலேயே, எப்போது அவனுடைய இதய முடிச்சுக்கள் அறுபட்டு விடுகின்றனவோ, அப்போதே மரணத்திற்குட்பட்ட அவன் மரணமற்றவன் ஆகிறான், இதுவரையே அறிவுரை.” இதய முடிச்சுகளான அறியாமை (அவித்யா), ஆசை (காம), செயல்கள் (கர்ம) ஆகியவை அழிபடுவதை குறிக்கும் இம்மந்திரங்களின் கருத்து அருணகிரியாரால் இச்செய்யுளின் இரண்டாவது பகுதியில் (கடைசி இரு வரிகளில்) சரியாக நுட்பமாக (சிறிதும் பிழை இல்லாமல்) சொல்லப்படுகிறது --- அறியாமை என்பது வெளிப்படையாகவும், ஆசை மற்றும் செயல் ஆகியவை மறைமுகமாகவும் முறையே ஆவரணம் மற்றும் விக்ஷேபம் என்று அவரால் குறிப்பிடப்படுகிறது. 11ம் மந்திரத்தில் கொடுக்கப்படும் எச்சரிக்கை: “இப்பயிற்சி விடாது விழிப்புடன் தொடரப்பட வேண்டும்,” என்பது, இச்செய்யுளின் இரண்டாவது பகுதியில் மிகவும் அழகாக மறைபொருளாய் அருணகிரியாரால் நேர்த்தியுடன் புனைந்து கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.

No comments:

Post a Comment