செய்யுள் 8செய்யுள் – 8


அமரும்பதி   கேள்   அகமாம்   எனுமிப்
பிமரங்கெட   மெய்ப்பொருள்   பேசியவா
குமரன்   கிரிராச   குமாரி   மகன்
சமரபொரு   தானவ   நாசகனே.

    
    பொழிப்புரை: “ஓ குமரப் பெருமானே! ஓ (இமயமலையின் அரசனான) இமவானின் புதல்வியின் (பார்வதியின்) மைந்தனே! தங்களை எதிர்த்துப் போரிட்ட அசுரர்களை நாசம் செய்தவனே!. ஓ பெருமானே, (ஆத்மாவின்) உறைவிடமான இவ்வுடலை ‘நான்’ என்றும், என் உறவினரை ‘எனது’ என்றும், எண்ணும் என் மதிமயக்கம் நீங்கும்படி தாங்கள் எனக்கு மெய்ப்பொருளைப் பற்றி விளக்கிப் பேசியதை என்னென்று சொல்லுவேன்!”

விளக்கவுரை

தன்னிடமிருப்பதை தானமாகக் கொடுக்கும் செயல் சாதகனின் மனதை விரிவு படுத்தி, அவனை சுயநலமற்றவனாக ஆக்கியது. கடவுளுடைய பாத கமலங்களை தியானம் செய்வதின்மூலம் கடவுளின் மீது அவனுக்கு இருக்கும் அன்பு மேலும் வலுப்படுகிறது. அதே சமயம், அவனது குடும்பத்தின் மேல் அவன் வைத்திருக்கும் பாசப்பற்றை வலுவிழக்கச் செய்கிறது. இவ்வாறாக சிறிது காலத்திற்கு, அச்சாதகன் தானம் (தொண்டு) செய்ததும் ஆழ்ந்து (கடவுளை) தியானம் செய்து வந்ததும் (செய்யுள்-7), கடவுளின் கிருபையைப் பெறுவதற்கு அவனைத் தகுதி உடையவனாக ஆக்கியது. “கடவுளின் கிருபை குருவடிவாக வருகிறது”, என்கிறார் சுவாமி சிவானந்தர் (அவருடைய “குரு தத்துவம்” என்ற புத்தகத்தில்). அதன்படி, அக்கிருபையானது ஒரு மகானாக (குருவடிவாக) வந்து, அவனுக்குத் தேவையான அறிவுரைகளை அவர் வழங்குகிறார். ஒன்று, அவனே ஒரு மகானிடம் சென்று அறிவுரைகளை வேண்டிப் பெறலாம்; அல்லது தற்செயலாக சந்திக்க நேர்ந்த எதோ ஒரு மகான் அவனுக்கு அறிவுரைகளை வழங்கி அருளலாம். அது எப்படியாக இருந்தாலும், அது நடந்ததற்குக் காரணம் கடவுளின் கிருபைதான்; ஆனால் இது அவனுக்கு இப்பொழுது தெரியாது. (பின்னர் செய்யுள்கள் 13 & 17 இதைத் தெளிவு செய்வதைக் காணலாம்). அந்த மகான் அச்சாதகனுக்கு உண்மைத் தத்துவத்தைப்பற்றி விளக்கிக் கூறுகிறார்:

    “இந்த சரீரம் அழியக்கூடியது, ஆனால் அது ஆனந்த-ஸ்வரூபமான ஆத்மாவின் உறைவிடம். நீ இந்த சரீரமல்ல. உண்மையில் ‘நீ’ (பிரம்மம் எனும்) ஆத்மாவே. உன்னுடைய குடும்பம், சொத்து, மற்றுமனைத்தும் உன்னுடையதல்ல; நீ வந்தபோது அவற்றை கொண்டுவரவில்லை, போகும்போது எடுத்துக்கொண்டு போக முடியாது. எனவே இப்பொழுதும் அவை உன்னுடையதல்ல. அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டது; அனைத்தும் அவனுடையது. உன்னுடையதென்று நினைப்பது பிரமை (மதிமயக்கம்). உன் பூர்வஜன்ம கர்மவினையின் பயனாக உனக்கு அவை சிறிது காலத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அவற்றின்மேல் பற்று வைத்தால், நீ துன்பப்படுவாய், துக்கப்படுவாய். பற்றற்றவனே சுகமாய் இருப்பான். ஆகவே, நீ பற்றற்று சுகமாய் இரு.”

    தான் இந்த உடல் என்றும், குடும்பம், சொத்து சுகங்கள் அனைத்தும் ‘தன்னுடையது’ என்றும் அச்சாதகன் இதுகாறும் தவறாகக் கொண்டிருந்த மதிமயக்கத்தை, மேற்கூறிய அறிவுரை (தற்காலிகமாக) அவனை விட்டு விலகச்செய்கிறது. ஆனால், இந்த அறிவுரை அவனது அறியாமையை முற்றிலும் அழித்துவிட்டதென்று கொள்ளக்கூடாது; இந்த அறிவுரை அவனுக்கு ‘தான் உண்மையில் ஆத்மாவே, இந்த உடல் அல்ல’ என்ற புதிய அறிவார்ந்த புரிதலை மேலெழுந்தவாறாக மட்டும் ஏற்படுத்துகிறது. இதுதான் அந்த மகானால் (குருவால்) கொடுக்கப்பட்ட முதன்முதல் அறிவுரை; வாய்மொழியாக செய்யப்பட்ட இந்த அறிவுரை ---- ‘பேசுதல்’ என்ற வெளிச்செயலின் மூலமாக தரப்பட்ட ஒன்று. எனவேதான், செய்யுளில் “பேசியவா” என்று சொல்கிறார் அருணகிரியார்.

    கடவுளின் கிருபைதான் (குருவடிவாய்) அந்த மகானாய் வந்தது, அவனுக்கு அறிவுரையும் கொடுத்தது என்று அச்சாதகனுக்கு இன்னும் தெரியாது. அந்த மகான் அவனுடைய குரு என்றும் அவனுக்கு இப்போது தெரியாது. இது பின்னர்தான் தெரிய வருகிறது (13-ம் செய்யுள்).

    குருவின் உபதேசமானது அச்சாதகனது மனதைத் தட்டி எழுப்பி விழிப்புறச் செய்தது. அதனால் மனஎழுச்சிபெற்று, மதிமயக்கத்திலிருந்து தான் விடுபட்டுவிட்டதுபோல் நினைக்கிறான். அதற்குக் காரணம் குருவின் பலமான ஆன்மீக சான்னித்தியம், மற்றும் அவர் செய்த உபதேசத்தின் சக்தியுமே ஆகும். இவ்விரண்டும், தான் விடுதலையடைந்ததாக தற்காலிகமாக அவனை நினைக்க வைத்துவிடுகிறது. ஆனால், வெகுசீக்கிரமே அவன் திரும்பவும் பழைய (மதிமயக்க) நிலைக்கே சென்று விடுகிறான்; எனினும், அவன் தற்போது பெற்ற அறிவுரை அவன் மனதில் நன்றாகப் பதிந்திருக்கிறது; அந்த மதிமயக்கத்திலிருந்து நிரந்தரமாக விடுதலையடைந்து, நிரந்தர ஞானம் பெற வேண்டுமெனில், அவன் மேலும் தொடர்ந்து தீவிர சாதனைகள் செய்ய வேண்டும். அர்ஜுனன் வாழ்வில் நடந்ததாக மகாபாரதம் கூறுவதை வைத்து நாம் இதை புரிந்து கொள்ளலாம் – குருக்ஷேத்ர யுத்தகளத்தில் பகவான் யோகேஸ்வர கிருஷ்ணரே முழுமையான ஆத்ம ஞானத்தை அர்ஜுனனுக்கு புகட்டியது (கீதை வாயிலாக புகட்டப்பட்ட அந்த ஆத்மஞானமானது அனைத்து சாஸ்திரங்களின் சாரம்; இதை திரட்டி அளித்ததோ சாக்ஷாத் பகவான்), அதை அவரிடமிருந்து அர்ஜுனனும் மிக்க சிரத்தையுடன் பெற்றுக்கொண்டது, தன் மதிமயக்கம் முழுதும் தீர்ந்தது என்று அப்பொழுது சொன்னது, ஆகியவைகளை நாம் மகாபாரதம் மூலம் அறிவோம். ஆனால் அந்த யுத்தம் முடிந்தபின், அவன் திரும்பவும் அதே பழைய அர்ஜுனனாகிவிட்டதாக அதே மகாபாரதம் இயம்புவதையும் அறிவோம். ஏன் அவனுக்கு இவ்வாறாக ஆனதென்றால், அவன் பெற்ற விஸ்வரூப தரிசனமும், ஆத்ம ஞானமும் அவனால் சாதனை செய்து பெறப்படவில்லை; அவனை ஊக்குவிப்பதற்காக தன் யோகசக்தியைப் பிரயோகித்து பகவானால் அவனுக்குத் தற்காலிகமாக அவை “கொடுக்கப்பட்டது”; எனவேதான் அவன் பழையநிலைக்குத் திரும்பினான்.

    குருவின் முதல் உபதேசமானது எப்படிப்பட்டதென்றால், அடர்ந்து படர்ந்த பாசியால் முழுவதுமாக மூடப்பட்டதனால் உள்ளிருக்கும் நீர் வெளித்தெரியாதிருக்கும் ஒரு குளத்தில் வீசப்பட்ட பெரிய கல்லின் எடை ஏற்படுத்தும் அதிர்வினால் பாசி சிறிது நேரம் விலகி, குளத்தில் நீர் இருப்பதை வெளிப்படுத்திய பின்னர், மறுபடி பாசி ஒன்று சேர்வதைப் போன்றது. இதனால் என்ன ஆதாயம் என்று கேட்டால், நீரற்றது என்று நினைக்கப்பட்ட அந்த குளத்தில் நீர் இருப்பது தெரிய வந்ததுதான். அப்படியே, குருவின் உபதேசம், தான் உண்மையில் ஆத்மாதான் என்றும், இதுகாறும் தானென்று நினைத்துக் கொண்டிருந்த அவ்வுடல் தானல்ல என்றும் அச்சாதகனை, தற்காலிகமாகமாவது, நன்றாக உணரச்செய்கிறது. இது அடுத்த செய்யுளில் தெரியும்.

    இந்த முதல் தொடர்பில், குரு அச்சாதகனுக்கு ஹிதோபதேசம் எனப்படும் இதமாக பேசியவாறு அறிவுரை செய்கிறார். அதன் மூலம் குழப்பத்தால் பாதிக்கப்பட்ட மனநிலையிலிருந்த அவனுக்கு பெரிய ஆறுதலளிக்கிறார். ஆனால், இங்கு குருவானவர் ஆத்மாவைப் பற்றி “பேசுகிறார்.” அவ்வளவுதான். “உபதேசம்” என்று சொல்லிக்கொள்கிற வகையில் (தீக்ஷை) எதையும் உண்மையில் இப்பொழுது அவர் அளிக்கவில்லை; சாதகனை நன்கு தயார் செய்த பின்னரே “உபதேசம்” (தீக்ஷை) அருளுகிறார் (செய்யுள்–20). அதனால்தான், இப்பாடலிலும், 11-வது பாடலிலும் மெய்ப்பொருள் பேசியவா என்ற சொற்களை பிரயோகித்து; 20-வது செய்யுளில் உபதேசம் உணர்த்தியவா என்ற சொல்லை உபயோகிக்கிறார் அருணகிரியார்.

    ‘குமரன்’ என்ற சொல்லிற்கு ‘என்றும் குமரன், எப்பொழுதும் இளைஞன், மாற்றம் என்ற ஒன்றை அறியாதவன் – மாற்றமடையாதவன் – அதாவது பரம்பொருள்’ என்பது அர்த்தம். குமரன் என்றால் தீமையை அழிப்பவன் என்றும் பொருளாகும். ஜீவத்வத்திற்குக் காரணமான அறியாமையே தீமைகளில் மிக மிகக் கொடியது. இந்த அறியாமையினால் ஒருவன் தன்னைத் தன் உடலாகக் கருதுகிறான். மேலும், தன் மனைவி, மக்கள், வீடு ஆகியவைகளை நிலையானது, தனக்குப் பிரியமானவை மற்றும் தன்னுடையது என்றும் கருதுகிறான். குமரப் பெருமான் (குருவாக வந்து) ஆத்மா எனும் மெய்ப்பொருள் தத்துவத்தைப்பற்றி பேசுவதன் மூலம் இந்த மயக்கத்திற்குக் காரணமான அறியாமையை விலக்குகிறார்.

    காப்புச் செய்யுளில் சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பிழம்புகள் மூலமாக கந்தப் பெருமானின் அவதாரம் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக நிகழ்ந்தது என்று பார்த்தோம். பின்னர், பொய்கைக்கு பார்வதி தேவி சிவபெருமானுடன் வந்து அந்த ஆறு குழந்தைகளையும் வாரி அணைக்க, ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும் கொண்ட ஒரு உடலாக இணைந்த ஆறுமுகக் பெருமான் (‘ஷண்முகன்’) உருவெடுத்தார். அவர் இப்செய்யுளில் ‘இமவானின் புதல்வி பார்வதி தேவியின் மைந்தனே’ என்று அழைக்கப்படுகிறார்..

    பிறிதொரு காலத்தில், கந்தப் பெருமான் அசுரர்களுடன் சமர் புரிந்து, சூரபத்மனையும் அவனது சகாக்களையும் அழித்தார். அவரே சாதகர்களின் உள்ளெதிரிகளான அறியாமை, ஆசை, பேராசை ஆகிய அசுர குணங்களோடும் சமரிட்டு அழித்தொழிக்கிறார். அதனால், கந்தப் பெருமான் (உள்ளும் புறமும் இருக்கிற) அசுரர்களை அழிப்பவன் என்று கொண்டாடப்படுகிறார்.

    அருணகிரியார் இச்செய்யுளின் இரண்டாவது பாதியில் இக்கடவுளின் மூன்று வெவ்வேறு அம்சங்களை வைத்து பிரார்த்திப்பது மிகப்பெரிய ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது:

  1. குமரன்: (அழிவில்லாமல் என்றும் இருக்கும் நித்திய-அம்சம் – அதாவது முக்காலத்திலும் இருக்கும் பரம்பொருள்);
  2. பார்வதி மைந்தன்: (அவதார-அம்சம், --- அதாவது எங்கும் பரவி இருக்கும் சைதன்ய-ஸ்வரூபமான பரம்பொருள், உலக நன்மையின் பொருட்டு, உடல் தாங்கி அவதாரமாகத் தோன்றுவது);
  3. அசுரர்களை வதம் செய்தவன்: (குரு-அம்சம் – சாதகனின் அறியாமை முதலான அசுர குணங்களை உபதேசத்தினால் அழித்தல்).
    இவ்வாறாக, நித்திய மெய்ப்பொருள் தத்துவமானது அவதாரமாகத் தோன்றுகிறது, மேலும் சாதகனின் குருவாகவும் வருகிறது; என்றாலும், அது அந்த மெய்ப்பொருள் தத்துவமான பிரம்மமாகவே இருக்கிறது --- இந்த மகத்தான உண்மையை அருணகிரியார் வெளிப்படுத்துகிறார். ஆனால், இந்த உண்மை இச்செய்யுளில் மறைபொருளாக (மறைமுகமாக) இருக்கிறது; செய்யுள்-13இல் வெளிப்படையாக, தெளிவாக சொல்லப்படுகிறது.

    இப்படியாக, பரம்பொருளும் குருவுமான குமரப் பெருமான் கொடுத்த அறிவுரை அச்சாதகனுடைய மதிமயக்கத்தை (தற்காலிகமாக) நீக்கியது. அறியாமையினால், உடலை நானெனப்படும் ஆத்மாவாகவும், ஆத்மாவை உடலாகவும் தவறாக நினைத்து, அதன் காரணமாக, நெருங்கிய தொடர்பிலுள்ளவர்களை தன்னுடையவர்கள் என்று சொந்தம் பாராட்டுகிறான். ஆனால், உடல் ஒரு ஜடப்பொருள்; ஏனென்றால், அதில் உணர்வு இல்லை. அதால் தன்னையும் அறிந்து கொள்ள இயலாது; மற்ற பொருள்களையும் அறிய இயலாது. அந்த ஜடவுடலில் தற்காலிகமாக உறையும் ஆத்மா அதற்கு உயிரூட்டுவதால் அது உணர்வு உடையதாகத் தோன்றுகிறது. எனவே, உடல் ஆத்மா அல்ல; ஆத்மா உறையும் உறைவிடம் மட்டுமே. எனினும், இன்னதென்று விவரித்துக் கூறிட இயலாத அறியாமையின் காரணமாக, ஆத்மா தன்னை உடலாகவே கருதுகிறது. இத்தவறான கருத்து ‘பிரமை’ என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லப்படுகிறது; கவிதை நெறிக்கு ஏற்ப, இந்த பிரமையையே ‘பிமரம்’ என்று இச்செய்யுளில் திரித்து அழைக்கப்படுகிறது. குருவின் மெய்ப்பொருள் பற்றிய அறிவுரை, பிமரம் கெட – அதாவது, அறியாமை விலக, -- உதவுகிறது.

    தானம், மற்றும் தியானம் ஆகிய சாதனைகளால் மனது ஓரளவுக்கு சுத்தமாகும் பொழுது, பெருமான் தானே ஒரு குருவாக எழுந்தருளுகிறார். குரு என்பவர் மனித ரூபம் தாங்கி வரும் பெருமானே. எனவே, குரு மற்றும் அவதார புருஷர்களை (வெறும்) சாதாரண மனிதர்கள் என்று கருதக்கூடாது; ஆனால், பொதுவாக சாதகர்கள் இத்தவறுதலை செய்கின்றனர். அப்படி செய்யக் கூடாது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத்பகவத் கீதையில் (9:11-ல்) கூறுவதை இங்கு நினைவில் கொள்வோம்: “நான் ஒரு மானிட உருவம் எடுக்கும்போது, என்னுடைய பர சொரூபத்தையும், நான் உயிர்களுக்கு எல்லாம் ஈசனாயிருப்பதையும் அறியாத மூடர்கள், என்னை ஒரு சாதாரண மனிதன் என்றெண்ணி அவமதிக்கின்றனர்”. ஆன்மிகப் பாதையில் அடிஎடுத்து வைத்துள்ள ஒரு புதுசாதகனால் மெய்ப்பொருள் தத்துவத்தை உடனேயே முழுவதுமாக புரிந்து கொண்டுவிட இயலாது. உணர்தல், வணங்குதல், சேவை செய்தல், பழகுதல், தியானித்தல் ஆகியவைகளைச் செய்ய ஏதுவான ஏதோவொரு வடிவம் இருந்தால்தான், சாதனையின் ஆரம்ப காலகட்டங்களில், மனதால் அவைகளில் ஈடுபாடு கொள்ள இயலும். ஆகையால்தான், பெருமான் குருவாய் வருகிறார்; எனவே குருவும் அவ்வாறே கருதப்பட வேண்டும். பரமாத்மா ஒரு அவதாரத்தை எடுத்து, சாதகனுக்கு கடவுளை அடையும் வழியைக்காட்டிட மனித உருவில் குருவாக வருகிறார். நம்மை அவர் நிலைக்கு (இறைநிலை) எடுத்துச்செல்லுவதற்கு பெருமான் நம்முடைய (மனித) நிலைக்கு கீழிறங்கி வருகிறார். இதுவே “அவதாரம்” என்று அழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment