செய்யுள் 9செய்யுள் – 9


மட்டூர்குழல்   மங்கையர்   மையல்வலைப்
பட்டூசல்படும்   பரிசென்று   ஒழிவேன்
தட்டூறவேல்   சயிலத்து   எறியும்
நிட்டூர   நிராகுல   நிர்ப்பயனே.

    
     பொழிப்புரை: “க்ரௌஞ்ச பர்வதத்தை துளைத்துச் செல்லுமாறு தன் வேலை எய்திய கடுமையானவரும், துன்பமற்றவரும், பயமற்றவருமான வேலாயுதப் பெருமானே! தேன் சொறியும் வாசனைப் பூக்களைச் சூடும் மங்கையரின் மோக வலையில் அகப்பட்டு, ஊஞ்சல்போல் என் மனம் ஊசலாடி தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையிலிருந்து நான் என்றுதான் விடுபடுவேன்?”.

விளக்கவுரை

    குருவால் (சென்ற செய்யுளில்) தரப்பட்ட அறிவுரைகளின் தாக்கம் சிறிது காலத்திற்குப் பின் பலவீனமடைகிறது. அப்பொழுது, அவனிடம் பழிவாங்க இத்தனை நாட்களாகக் காத்துக்கொண்டிருந்த, சாதகனின் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் ஆசைகள் எனும் பழைய சம்ஸ்காரங்கள் உடனே வெளிப்பட்டு அவனை தொந்தரவு செய்யத் தொடங்குகின்றன. இனிய சுகந்தத்தை வெளிஉமிழும் பூக்களை கூந்தலில் சூடிய மாதர்களை நினைத்த / கண்ட மாத்திரத்தில் அவன் மனம் சிதறி அலைபாயத் தொடங்குகிறது. மோக வலைப்பட்டு, மனம் கடிகார ‘பெண்டுலம்’ போல் பெண்கள் அழகின் ஈர்ப்பு மற்றும் கடவுளின் மேதக்க அழகு ஆகிய இரண்டிற்குமிடையே ஊசலாடுகிறது.

    சென்ற செய்யுளில் குரு செய்த அறிவுறுத்தல், தான் உடல் அல்ல என்றப் புரிதலை சாதகனின் புத்தியில் ஏற்படுத்தியிருந்தாலும், அவன் புலனின்பப் பொருள்களின் மீதான வசீகரங்களிலிருந்து, குறிப்பாக மகத்தொந்தரவு செய்யும் பெண்களின் மீதான மோகத்திலிருந்து, விடுபடவில்லை. அவன் தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, இறைதியானத்தில் ஈடுபட முயலத்தான் செய்கிறான். ஆனால், அவன் மனமோ அவன் இலட்சியத்திற்கும் கண்ணெதிரேயுள்ள பொருள்களுக்கும் இடையே, --- கடவுளின் சக்திக்கும், ஏங்கவைக்கும் புலன்விஷயங்களுக்கும் இடையே; தன் அறிவார்ந்த புரிதலுக்கும், தினசரி வாழ்க்கை நடைமுறையில் ஏற்படும் சலனங்களுக்கும் இடையே --- அகப்பட்டுப் படாதபாடுபடுகிறது. இம்மாதிரியான இக்கட்டான சமய சந்தர்ப்பங்களை, அனேகமாக ஒவ்வொரு உண்மையான சாதகனும் எப்பொழுதாவது அவசியம் (ஒருமுறையோ, பலமுறையோ) எதிர்கொண்டுதான் இருப்பான். எனவே, அச்சாதகன் கடவுளிடம் சரண் புகுந்து, இவ்வாறு கேட்கிறான் : ‘ஓ ஈஸ்வரா, எப்பொழுது நான் இத்தகைய இக்கட்டுகளிலிருந்து விடுபடுவேன்?’

    மனம் இவ்வாறு ஊசலாடித் தவிக்கும் நிலை ஒவ்வொரு சாதகனும் அனுபவிக்கும் ஒன்றுதான். அவன் தன் மனதை நிலைநிறுத்த ஒரு இலக்கு வைத்திருக்கிறான்; அதாவது, ஒரு இஷ்ட தேவதையை இலக்காகத் தெரிந்தெடுத்து, அதன் வடிவத்தை தியானம் செய்ய விழைகிறான். ஆனால், அவனுக்கு இன்பத்தை ஈட்டும் விஷயங்கள், அவனை அவ்வாறு செய்ய விடுவதில்லை; அவைகள் அவன் மனதை வசீகரித்து, அவனது கவனத்தை இலக்கிலிருந்து வலுக்கட்டாயமாக திருப்பி, தம்வசம் ஈர்த்துக் கொள்கின்றன. அவன் எவ்வளவுதான் கடினமாக முயற்சித்து, தன் மனதை அவைகளிலிருந்து மீட்டு, தன் இலக்கான கடவுளின் மேல் பொருத்தினாலும், அடுத்த ஒருசில மணித்துளிகளிலேயே, மனம் திரும்பவும் அச்சிற்றின்ப விஷயப் பொருள்கள் வசமாகி விடுவதை அறிகிறான். தன் இலக்கான இதயத்திலிருக்கும் ஆத்மா/இறைவன் (உள்ளுணர்வு) மற்றும் வெளியிலிருக்கும் இன்பம்தரும் பொருள்கள் ஆகிய இவ்விரண்டிற்கும் இடையேயும்; எண்ணத்தை தன் இலக்கின்மேல் ஒருமைப்படுத்தும் முயற்சி மற்றும் எண்ணத்தை தன்வசம் ஈர்க்கும் உலகப் பொருள்கள் ஆகிய இவ்விரண்டிற்கும் இடையேயும்; மனம் ஊசலாடிக் கொண்டிருப்பது சாதகனுக்கு மிக்க சிரமத்தைத் தருகிறது, இது அவனுக்கு ஒரு பெரிய சோதனையும்கூட. இத்தகைய வருத்தத்தைத்தரும் மன ஊசலாட்டங்கள் கடவுளின் கிருபை ஒன்றினாலன்றி வேறு எவ்விதத்திலும் ஓயாது. எனவே, அக்கிருபையை வேண்டி அச்சாதகன் இச்செய்யுளில் பிரார்த்தனை செய்கிறான்.

    மோக வசப்பட்ட அன்பு ஒரு வலைக்கு இங்கு ஒப்பிடப்படுகிறது; ஏனெனில், எப்படி க்ரௌஞ்ச பர்வதத்தின் உள்ளே செல்லும் பாதைகளில் சென்று மாட்டிக்கொண்டவர்கள் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்தனரோ, அப்படியே ஒரு வலைக்குள் அகப்பட்டுக் கொண்ட எவராலும் அவ்வளவு எளிதில் தன்னைத் தானே விடுவித்துக் கொள்ள இயலாது. அதேபோல், எப்படி கந்தனின் வேல் மட்டுமே அப்பர்வதத்தை துளைத்துத் தூள்தூளாக்கியதோ, அப்படியே கடவுளின் கிருபையால் மட்டுமே ஒருவன் தன்னை மோக வலையிலிருந்து விடுவித்துக் கொள்ள இயலும். அதனால்தான், அச்சாதகன் தன் பிரார்த்தனையை இவ்வாறு வைக்கிறான்: “பெருமானே, தாங்கள் தானே வேலாயுதத்தை க்ரௌஞ்ச பர்வதத்தின் மீதுப் பாய்ச்சினீர்கள், அதுபோல் தாங்களே என் மீது தங்கள் கருணையை ஏன் பாய்ச்சக்கூடாது?” ஒவ்வொரு பாடலிலும், அருணகிரியார் கந்தக் கடவுளை அப்பாடலின் கருத்திற்கேற்ற அடைமொழியிட்டு அழைப்பது இந்நூலின் சிறப்பு. எனவே, இச்செய்யுளில் ஷண்முகக் கடவுளை வேலாயுதத்தைப் பாய்ச்சி க்ரௌஞ்ச பர்வதத்தை தூளாக்கிய (மறக் கருணை கொண்ட) நிட்டூரனே (“வேல் சயிலத்து தட்டூடற எறியும் நிட்டூர”) என்கிறார், க்ரௌஞ்சனெனும் அசுரனை ‘பெருமான் பிறிதொரு காலத்தில் வந்து கொல்லும் வரை, பர்வதமாக இருக்கக் கடவாய்’ என்று அகஸ்திய முனிவர் சபித்ததை 4-ம் செய்யுளில் விரிவாகப் பார்த்தோம், அதற்கேற்ப அசுரனுக்கெதிராக தயவுதாட்சன்யமின்றி கொடும் கோபத்துடன் போரிடும் நிட்(ஷ்)டூரன் என்று அடைமொழி தருகிறார்.

    பெருமான் “நிட்டூரன்” ---- கடுமையானவன், கொடும்கோபி, மறக்கருணை. அவர் யுத்தத்தில் எதிரிகளை வதம் செய்வதில் மட்டுமல்ல, தன் பக்தர்களின் உள்ளெதிரிகளான ஆசை, பேராசை, கோபம், அகந்தை போன்ற அசுர குணங்களைத் தன் கிருபையை பொழிவதன் மூலம் வதம் செய்வதிலும் நிட்டூரனே.

    பெருமான் “துன்பமற்றவர்” ---- அவர் அனைத்திலும் எல்லையற்றவர், எனவே எந்த வகையான துன்பங்களும் அவரை பாதிப்பதில்லை. ஆகையால் அவர் எப்போதும் ஆனந்தத்தில் மூழ்கியிருப்பவர். அவர் பேரின்பம் – ஆனந்தமயம். மேலும் அவர் தன் பக்தர்களை துன்பமற்றவர்களாகச் செய்கிறார்.

    பெருமான் “பயமற்றவர்”. அதிபயங்கர சூரபத்மன், மற்றும் எண்ணற்ற அசுரர்களுடன் சமர் புரிவது அவருக்கு ஒரு விளையாட்டுப் போன்றது. தன் பக்தர்களுக்கு பயமற்ற நிலையாகிய முக்தியை அளிப்பவராகவும் இருக்கிறார்.

    அச்சாதகன் கடவுளின் பிரத்யேகமான கருணையை தந்தருள ‘ஓ நிட்டூரனே, என்னைக் காத்தருள்வாய்’ என்று வேண்டுகிறான்; ஏனெனில் இந்த மதிமயக்கம் எனும் மாயையை, --- தந்திரமாக சிக்க வைக்கும் பெண்களின்மேலுள்ள காமமயக்கத்தை --- வெறும் மனித முயற்சியால் மட்டும் கடக்க முடியாது. நயமான கண்டிப்போ, புத்திமதியோ இங்கு பயனளிக்காது. பின் எதுதான் பயனளிக்கும் என்றால், ஒருவனை இந்தக் கொடும் பிணியிலிருந்து விடுவிக்க கடவுள் நிட்டூரனாகி (மறக்கருணை) கடுமையான முறைகளை உபயோகிக்க வேண்டியிருக்கும்.

    இச்செய்யுள் பெண்களுக்கு எதிரானது அல்ல, அவர்களைக் கண்டிப்பதும் அல்ல; ஆண்களின் வலுவின்மையையும் மட்டுமீறிய ஆசையினால் காமமயக்கத்தில் கட்டுண்டு அவர்கள்படும் துன்பத்தையும் எடுத்துக் காட்டுகிறது. மேலும் எப்படி ஆண்கள் பெண்களின்மேலுள்ள காமமயக்கத்தால் துன்பப்படுகிறார்களோ, அதைப்போல பெண்களும் ஆண்களின்மேலுள்ள காமமயக்கத்தால் துன்பப்படக்கூடும். இருபாலரும் இத்துன்பத்திலிருந்து விடுபட இறைவனின் அருளை நாடவேண்டும்.

No comments:

Post a Comment