செய்யுள் 20



செய்யுள் – 20


அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண விக்ரம வேளிமையோர்
புரிதாரக நாக புரந்தரனே.

    
    பொழிப்புரை: "ஓ பெருமானே! (இந்த சம்சாரமெனும் கடலை கடப்பதற்கான) பெரிய கப்பல் போன்றவரே! பராக்கிரமத்தை உடையவரே! அனைவராலும் விரும்பப்படுபவரே! தேவர்கள் விருப்பத்துடன் தியானிக்கும் பிரணவப் பொருளே (ஓங்கார மந்திரமே)! தேவலோகத்தைத் தாங்கிக் காப்பாற்றுபவரே! அடைவதற்கு மிகவும் அரிதாகிய மெய்ப்பொருளை அடியேன் (அதை அடைவதற்கு) உரிதாகும்படி எனக்கு நீவிர் உபதேசம் உணர்த்தியருளியது (உள்ளுணர்வாக தீக்ஷை கொடுத்தது) வியக்கத்தக்கதே!”

விளக்கவுரை

    அச்சாதகன் ஆத்ம-தியானம் செய்யத் தொடங்கினான் (செய்யுள்-18). அப்பொழுது அறியாமை வெளிப்பட்டு அவனை தாக்குமென்று அறிந்த அவன் அதற்கு அடிபணிந்து போய்விடாமல் அதிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள, குருவிடம் சரண் அடைந்து அவரிடமிருந்து தீக்ஷை பெற விரும்பி, தீக்ஷை கொடுக்குமாறு (“உபதேசம் உணர்த்த”) வேண்டினான் (செய்யுள்-19). இப்படியாகச் சரணடைந்த சாதகனுடைய பரிதாப நிலையையும் அவனுடைய ஊக்கமுள்ள நேர்மையையும் கண்ட குரு, அவனுக்குப் பொருத்தமானதும் தேவையானதுமான தீக்ஷை கொடுத்தார். (“உபதேசம் உணர்த்தினார்”)

    தீக்ஷை தருவதன் மூலம், குருவானவர் தனது ஆத்ம-சக்தியை சாதகனுக்குப் பாயச்செய்கிறார் (Transmits Spiritual Energy - உணர்த்துதல்) ---- “உபதேசம் உணர்த்தினார்”; சாதகனும் சக்தி ஒன்று தன்னுள் பாய்ந்ததை உணர்ந்தான் (உணர்தல்), அனுபவித்தான். அதனால்தான், முந்தைய செய்யுள்கள் 8 & 11-இல் ‘மெய்பொருள் பேசியவா’ (அதாவது உண்மை தத்துவத்தைப் பற்றிய அறிவுரை தான் சாதகனுக்குச் சொன்னார்), என்று சொன்ன அருணகிரியார் இச்செய்யுளில் ‘உபதேசம் உணர்த்தியவா’ என்கிறார். “மெய்பொருள் பேசுதல்” (அறிவுரை கூறுதல்) மற்றும் “உபதேசம் உணர்த்துதல்” (தீக்ஷை கொடுத்தல்) -- இவ்விரண்டிற்குமிடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

    (குறிப்பு: ஆத்மானுபூதி அடைந்த மகாபுருஷ குருவிடமிருந்து ஆத்ம-சக்தியை பாயப்பெற்ற ஒருவனுக்கே “தீக்ஷை” என்றால் என்ன என்று தெரியும்; ஏனெனில் அவன் அதை உணர்ந்திருக்கிறான், அனுபவித்திருக்கிறான். அதனால்தான், “அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால், எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே” என்று செய்யுள்-3௦இல் சொல்லப்படுகிறது. அதை அனுபவிக்காதவர்கள் அதைப்பற்றிப் பேசலாம், எழுதலாம், படிக்கலாம்; அவ்வளவுதான்; சர்க்கரையை வாயில் போட்டு ருசித்தவனுக்கே “இனிப்பு” என்றால் என்ன என்று தெரியும்; மற்றவர்கள் அதைப்பற்றி எழுதலாம், படிக்கலாம்; அவ்வளவுதான்.)

    அப்படி தீக்ஷை (ஆத்ம-சக்தியைத்) தந்தருளியதன்மூலம், குருவானவர் சாதகனில் உள்ளார்ந்த உருமாற்றத்தை (Inner Transformation) ஏற்படுத்துகிறார். பின்னர், ஆத்ம தத்துவத்தை சரியான முறையில் தியானிக்கும் நுட்பத்தை அவனுக்கு உபதேசிக்கிறார்; இதன்மூலம் சாதகன் தேவையான ஆத்மபலம், அவித்யை தரப்போகும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியும் என்ற உறுதியான நம்பிக்கை, குறிக்கோளை அடைவதற்கான தகுதி, ஆகிய அனைத்தையும் ஒருசேரப் பெற்றான். அதனால்தான் அவன் உணர்ச்சிபொங்க இவ்வாறு வியக்கிறான்: “தனக்கு உணர்த்திய இந்த உபதேசமே, அடைவதற்கு மிக அரிதான பரம்பொருளை அடைந்திடத் தேவையான தகுதியையும் ஆற்றலையும் தந்தருளி விட்டதே. என்னே ஆச்சரியம்!” ---- “அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியவா!” ஆத்மாவை நன்கறிந்து உணர்ந்திருக்கும் (ஆத்ம-ஞானமுடைய) குருமார்கள், யோகிகள், ஆன்மீகத்தில் முதுநிலை எய்தியவர்கள் ஆகியவர்களாலேயே இவ்வாறு செய்திட இயலும்.

    சாதகன் இவ்வாறு பெற்ற உபதேசத்தினால், அவனது அறியாமை அழிந்து விட்டதென்றோ அல்லது அவன் ஆத்ம-ஞானம் அடைந்து விட்டான் என்றோ கருதிவிடக் கூடாது; உண்மையில் நடந்ததென்னவெனில், அவன் ஆத்மாவை (இறைவனை) அடைவதற்கு வேண்டிய தகுதியை மட்டுமே பெற்றான் என்பதே (அவனை உரிதாகும்படிச் செய்தது). இந்த உபதேசத்தின் மூலம் அவன் பெற்ற ஆத்ம-பலத்தைக் கொண்டு, அவித்யையை அழித்திட அவன் ஆழ்ந்து ஆத்ம-தியானம் செய்திட வேண்டும், அதற்காக அவன் மிகவும் கடுமையாக உழைத்துத்தான் ஆகவேண்டும். இதைப் பின்வரும் செய்யுள்களில் காண்போம்.

    “அரிதாகிய மெய்ப்பொருள்” -- பரம்பொருளை அடைவது அரிதென்று ஏன் கூறப்படுகிறது? பரம்பொருள் தத்துவம் எங்கும் எதிலும் உள்ளது; அது சர்வ வியாபி, அதுவே அனைத்தின் ஆதாரமும், சாரமும். இப்படியாயிருந்தும், அதை அடைவது அரிதாக உள்ளது. ஏனெனில், சுபாவமாக வெளிநோக்குப் பார்வை கொண்ட மனதும் இந்திரியங்களும், கால-இட வரையறைக்குட்பட்ட இவ்வுலகப் பொருள்களில், அப்பரம்பொருளையும் ஒன்றாக (உருவம் தாங்கிய பொருளாக) நினைத்துத் தேடுகின்றன. பரம்பொருளாகிய இறைவன் எங்குமிருக்கிறார்; ஆனால், கால-இட வரையறைக்குட்பட்ட ஒரு பொருளாக அல்ல. அவரே ஸச்சிதானந்தம், எங்கும் நிறைந்த இருப்பு, ஆத்மா, அனைத்தையும் அறியும் சைதன்யம்; ஆனால், காணப்படும் பொருளாக அல்ல. எனவே, எவ்வளவுதான் நாம் வெளிஉலகில் நாம-ரூபங்களில் அவரைத் தேடினாலும், அது பயன்படாது. (அவரிடமிருந்து விலகித்தான் சென்று கொண்டிருப்போம்). அவரை அடைய வேண்டுமெனில், நமது மனதை உள்நோக்கச் செய்து, அவரை நம்முள்ளேயே, நமது நிஜ-ஸ்வரூபமாக, சைதன்யமாக (சித்) உணரவேண்டும்: தவம் செய்தல், நற்குணங்களை வளர்த்தல், இந்திரியங்கள் மற்றும் மனதிலிருந்து உள்வாங்குதல், இறைவனிடம் ஆசை கொள்தல், ஆன்மீகத் தியானத்தில் ஈடுபடுதல் ஆகிய சாதனைகளை விடாமல் செய்வதன் மூலம் இதனை அடைய வேண்டும். இறைவனே தேடுபவனுடைய சாரமும், ஆதாரமுமாக இருக்கும் ஆத்மா. அவனே உண்மையான தேடுபவன். அவன் ஒருவனே அறிபவனும் கூட. அதாவது, தேடி, அறிய விரும்பும் சைதன்யம் (Consciousness) அவனே. அறிபவன் அவனாக இருக்கும் பொழுது, அவனை அறிவது வேறு யார்? அவன் எப்பொழுதும் அறிபவனாகத்தான் இருப்பான், ஒருபொழுதும் அறியப்படும் பொருளாக ஆகமாட்டான். அதனால்தான், “ஆத்மாவை ஆத்மாவில் நிலைநிறுத்துதல்” யோக-சமாதி எனப்படுகிறது. எனவே, மெய்ப்பொருள் எனப்படும் உண்மை தத்துவத்தை அடைதலென்பது கடினம் என்று கூறப்பட்டது. பரம்பொருளாகிய உண்மை தத்துவத்தை ஆத்மாவாக தியானிப்பது ஒன்றே அவ்வுண்மையை உணர்ந்திடும் (அடைந்திடும்) வழி, அத்தகைய தியானம் செய்யும் நுட்பத்தைத்தான் குரு சாதகனுக்கு உணர்-உபதேசமாக (தீக்ஷை) அருளினார். அந்த உபதேசம், சாதகனுக்கு அத்தத்துவத்தை தியானித்து அடைந்திடும் தகுதியை தந்தருளியது. இதனால், சாதகனின் மனம் வெளிநோக்குப் பார்வை எனும் சுபாவத்திலிருந்து விடுபட்டு, உட்புறமாகத் திரும்பப்படுகிறது (அந்தர்முகம் ஆகிறது). இதன்மூலம், தன்னுள்ளேயிருக்கும் சூட்சும மற்றும் காரண சரீரங்களில் என்ன இருக்கிறது/நடக்கிறது என்பதைக்கூட அவன் காண இயலும்.

    இச்செய்யுளின் இரண்டாவது பகுதியில் தரப்பட்டிருக்கும் கந்தப் பெருமானைப்பற்றிய விவரணைகள் பலவிதமாக விளக்கப்படுகின்றன, அதைப்பற்றியெல்லாம் இங்கு நாம் ஆராயப் போவதில்லை. மற்ற செய்யுள்களில் அவை விளக்கப்பட்டுள்ளன. இவ்விவரணைகள் இறைவனின் எல்லையற்ற பெருமை, சக்தி, மகிமை, ஆகியவைகளைக் கூறுகின்றனவென்று அறிந்தாலே போதும்.

No comments:

Post a Comment