செய்யுள் 40



செய்யுள்40


வினை   ஓடவிடும்   கதிர்வேல்   மறவேன்
மனையோடு   தியங்கி   மயங்கிடவோ
சுனையோடு   அருவித்   துறையோடு பசும்
தினையோடு   இதணோடு   திரிந்தவனே.


    பொழிப்புரை: ஓ கந்தப் பெருமானே! நீரூற்று, அருவித்துறைகள், பசுமையான தினைப்புனம், காவல் பரண் (இதண்) ஆகிய இடங்களிலெல்லாம் (வள்ளி தேவியைத் தேடித்) திரிந்தவரே! கர்மங்களை ஓடச்செய்யும் (போக்கிடும்) ஒளிரும் வேலாயுதத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். (எனவே) (இந்தப் பிரபஞ்சமெனும்) மனையில் சிக்கிக் கலங்கி, மயங்கிடுவேனோ? (இல்லை, அப்படி ஆகமாட்டேன்.)
    
விளக்கவுரை
    
    “வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்”: மாயையிலிருந்து பிரிபடாத மூன்று ஏடணைகளிலிருந்து விடுதலையடைந்திட பெருமானிடம் பிரார்த்தனை (செய்யுள்-39ல்) செய்த பின்னர், சன்னியாசியாகிவிட்ட அச்சாதகன் தன் குரு உபதேசித்தவாறு, ‘ஒளிரும் வேல்-மேல் (அதாவது ஆத்மா’, () ‘தூய உணர்வு) இடைவிடாது தியானம்செய்ய மேற்கொள்கிறான், அதாவதுஅஹம் பிரம்ம அஸ்மிஎன்ற மகாவாக்கியத்தின்மீது தியானம் செய்ய ஆரம்பிக்கிறான் (செய்யுள்-37). ஆத்ம ஞானத்தால் மட்டுமே கர்மங்களை அழித்திட இயலும் ஞானாக்னி சர்வ கர்மாணி பஸ்மசாத் குருதேஎன்று ஸ்ரீமத் பகவத் கீதை: 4.37ல் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். இதையே அருணகிரியார் மிக அழகாகவும் பொருத்தமாகவும், வினை ஓடவிடும் கதிர்வேல்என்று சொல்கிறார், ‘ஒளிர்விடும் கதிர்வேல்’ என்றால் ஞானவேல். அது கர்மங்களை துரத்தித் துரத்தி அழித்துவிடும். ஏனென்றால், அச்சாதகன் செய்த தீய கர்மங்களே (‘தாழ்வானவை செய்தன’ --- செய்யுள்-31) அவனை சற்றேகுறைய சமாதி அநுபவித்திலிருந்த (செய்யுள்-28) இந்த எதார்த்த உலக மாயை அநுபவங்களுக்குத் திரும்ப இழுத்து வந்தன (செய்யுள்-29). எனவே, அக்கொடிய கர்மங்களை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு, அவன் ‘வினை ஓடவிடும்’ ஞானவேலை ‘மறவேன்’ என்று இடைவிடாமல் தியானிக்கத் துவங்குகிறான். ‘மறவேன்என்று கூறுவதில், நான் இறைவனை அடையும்வரை இடைவிடாது கதிர்வேலை (ஆத்மாவின் மேல்) தியானம் செய்வேன்என்ற அவனுடைய தீர்மானம் மறைந்திருக்கிறது, பகவான் புத்தர் செய்தது போல இந்த சாதகன் செயல்படுகிறான்.

    வேல் என்பது தூய உணர்வு எனப்படும் பரம்பொருளைச் சுட்டுகிறது. ‘ஷண்முகப் பெருமானும், அவர் வழிபாடும்’ (Lord Shanmukha and His Worship) என்ற தனது நூலில் சுவாமி சிவானந்தர் பின்வருமாறு கூறுகிறார்: “சாதகன் தன் தியானத்தில் முன்னேற முன்னேற, அவன் உபயோகித்து வந்த அனைத்து உபகரணங்களையும் படிப்படியாக விட்டுவிட்டு, வேல் மீது மட்டும் மனதை நிலைநிறுத்தவேண்டும். இந்த வேல், சுப்ரமணியப் பெருமானின் உண்மை சொரூபமாகும். இது விழிப்புணர்வைக் குறிக்கும், (அதாவது இது சைதன்யம்.) மற்றவைகளெல்லாம் மறைந்தபின், இது (சைதன்யம்) மட்டுமே பிரகாசித்து நிற்கிறது. எவனொருவன் இந்த வேலை விழிப்புணர்வாக (சைதன்யமாக) தியானிக்கிறானோ, அவன் ஸச்சிதானந்த சொரூபமாகிய பரம்பொருளை நிச்சயம் அடைகிறான்.”

    ‘மனையோடு தியங்கி மயங்கிடவோ’ ---நான் இந்தப் பிரபஞ்சமெனும் மனையில் சிக்கிக் கலங்கி, மயங்கி வாழலாமா? கேள்விபோல் அமைக்கப்பட்டுள்ள இவ்வாசகத்தில், அதன் விடையான இல்லைஎன்பது தொக்கி நிற்கிறது. இம்மாதிரி உபயோகம் வழக்கமான ஒன்றே. தான் ஆன்ம விடுதலையைப் பெற்றிடும் வரை அஹம் பிரம்ம அஸ்மிஎன்ற மந்திரத்தின் மீதான தியானத்தை விடாமல் தொடர்ந்து செய்வதை மேற்கொண்டுவிட்டபடியால், எப்படியும் மாயையைக் கடந்துவிடுவேன் என்று அச்சாதகன் நிச்சயமாக நம்பிகிறான்.

    மனைஎன்றால் வீடு, அதாவது வாழும் இடம். மக்கள் வீடுகளில் வாழ்கிறார்கள். வீட்டில் பல பகுதிகளுண்டு. வீட்டின் (மனையின்) முன் பகுதியில் முகப்பு மண்டபம், அதன்பின் வரவேற்பு அறை, படுக்கை அறை, சமையல் அறை, சாப்பாட்டு அறை, குளியல் மற்றும் கழிப்பறை, மொட்டை மாடி, அடித்தளம்/ நிலவறை, கொல்லைப் பக்கம், கிணறு, மரஞ்செடிகொடிகளுடன் கூடிய தோட்டம் ஆகிய பற்பல பகுதிகள் உண்டு --- இவையெல்லாம் மதில் சுவருக்குள். அதில் வசிப்பவன் அவ்வீட்டினுள் தன் தேவைக்கேற்ப அந்தந்தப் பகுதிக்குச் சென்று வருவான். அவன் அவ்வீட்டின் எப்பகுதியிலிருந்தாலும், அந்த வீட்டில், ‘மனையில்’ தான் இருக்கிறான். இது அவன் உடலைப் பொருத்தவரை. ஆனால், அவனது ஜீவாத்மாவைப் பொருத்தவரை, வீடு (மனை) என்பது, முன்செய்யுளில் சொல்லியபடி, மாவேழ் சனனமான 84 இலட்சம் யோனிகளடங்கிய இப்பரந்த மாயப் பிரபஞ்சத்தின் ஈரேழு லோகங்களாகும். ஜீவனானவன் அவனவனின் கர்மத்திற்கேற்ப ஏதோவொரு லோகத்தில் ஏதோவொரு உயிரினமாக பிறக்கக்கூடும். ஜீவன் எவ்வுலகில் பிறந்தாலும், இம்மாயையின் எல்லைக்குள், அதாவது அதன் ‘மனை’க்குள்தான் இருக்கிறான். மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட இப்பிரபஞ்சம் முழுவதுமே ஜீவாத்மாக்களுக்கு மனை. இதனைக் கடந்தால்தான், ஜீவாத்மா இறைவனை அடைய முடியும். வேலை (ஆத்மாவை) தியானிப்பதன் மூலம் இது அடையப்படுகிறது. சன்னியாசியான அச்சாதகன் வேலின்மேல் மேற்கொண்ட தீவிரமான இடைவிடாத தியானம், சம்சாரமெனும் மாய விளையாட்டு தன்னை மயக்கிட முடியாதென்று அவனுக்கு உறுதியான நம்பிக்கை கொடுக்கிறது. அவன் தனது கர்மங்கள் அனைத்தையும் (ஞானத்தால்) எரித்து, ஆத்ம விடுதலை அடைந்து, சம்சார பந்தத்தை அறுத்து நிரந்தரமாக முக்தி பெறுவேனென்று உறுதியாக உணர்கிறான். பின்னர், அவனுக்கு இப்பிரபஞ்ச வாழ்க்கை ஒரு விளையாட்டு அல்லது கனவுபோல ஆகிவிடும், எப்படி தினைப் புனம், மற்றும் இதர இடங்களில், வள்ளிதேவியைத் தேடுவது முருகப் பெருமானுக்கு ஒரு லீலை அல்லது தெய்வீக விளையாட்டாக இருந்ததோ அப்படியே.

    இந்தச் செய்யுள் வேலாயுதத்தின் உண்மை சிறப்பையும் மகிமையையும் எடுத்துக்காட்டுவதில் ஒப்பற்றதாக அமைந்துள்ளது. பொதுவாக அனைவராலும் போற்றப்படுவதுபோல், வேலானது அசுரர்களை வதம் புரிந்த முருகப் பெருமானின் தெய்வீக ஆயுதமட்டுமன்றி, தியானத்தினால் அடையப்படும் உயரிய இலக்கான எல்லையில்லாப் பரம்பொருளுமாகும். இந்த செய்யுளுக்கு முந்தைய செய்யுளில், மூன்றுவித ஏடணைகளிலிருந்தும் விடுதலை பெற சாதகன் ஏங்குவதைப் பற்றி அறிந்தோம். அவ்வாறு விடுதலை பெறுவதற்காக வேலை தியானிக்க வேண்டுமென்பது இச்செய்யுளில் வலியுறுத்தப்படுகிறது. வேல் என்பது என்ன? அவ்வேலின் சக்தி எத்தகையது? எப்படி சூரியன் தன் இயல்புக்கேற்ப பிரகாசிப்பதன்மூலம் எவ்வித முயற்சியுமின்றி இருளைப் போக்குகின்றதோ, அப்படியே வேலும் தன் இயல்பினாலேயே கர்மங்களைத் துரத்தி / அழித்து விடுகின்றது. மிகப்பொருத்தமாக ஒளிர்விடும் சுடரான வேல் இச்செய்யுளில் கதிர்வேல்என குறிப்பிடப்படுகின்றது;கதிர்வேல் என்பது ஞானவேல்.

    “வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்’: --- “நான் கர்மங்களைப் (கர்ம இருளைப்) போக்கிடும் அந்த ஒளிரும் வேலாயுதத்தை ஒருபொழுதும் மறவேன்.” வேல், தூய உணர்வின் சின்னம், அதாவது ஆத்மா அல்லது பிரம்மத்தின் சின்னம். வேலாயுதத்தை மறக்காமல் இடைவிடாது தியானம் செய்வதென்பது, ஆத்ம விழிப்புணர்வில் தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்வதாகும். அந்த ஆத்ம விழிப்புணர்வு இயற்கையாகவே கர்மங்களை நீக்கிவிடும், (சூரியன் இருளை நீக்குவதுபோல). ஆசைகளே கர்மங்களுக்குக் (நல்லவைகளோ அல்லாதவைகளோ) காரணம். ஆசைகளால் உந்தப்பட்டு மனிதன் கர்மங்களைச் செய்கிறான். ஒருவன் ஏன் கர்மங்களில் ஈடுபடுகிறான்? ஆசைகளே ஒருவனை கர்மங்களை செய்யத் தூண்டுகிறது. அவனிடம் இல்லாத, அவன் அடையாத ஒன்றை அடைந்திடும் பொருட்டு, அவனைக் கர்மங்களில் ஈடுபடுத்துகிறது. ஆனால், ஆசைகள் ஏன் ஏற்படுகின்றன? ஒருவனுக்கு பொருள்களின் உண்மைத் தன்மை (அழியும் தன்மை) பற்றிய அறிவு இல்லாததும், மேலும் தனது உண்மை (ஆனந்த) சொரூபத்தின் ஞானம் இல்லாததும், அவன் மனதில் ஆசைகள் ஏற்படக் காரணமாகின்றன. தன்னை உடல் மற்றும் மனதாகக் கருதி, பொருள்களைச் சேகரிக்க முயற்சித்து, அவற்றை அநுபவித்து மகிழ்ச்சி பெற முயல்வது --- ஆகிய அனைத்தும், தன் உண்மை இயல்பான ஆனந்த-சொரூபமான ஆத்மாவைப் பற்றிய ஞானம் இல்லாமையால்தான். நான் உடல் அல்ல, மனமுமல்ல, நான் உண்மையில் ஆத்மா; அந்த ஆத்மா அழிவற்றது, நித்தியமானது, ஆனந்தமயமானது, அமைதியானது, ஞானம் மற்றும் எல்லையற்ற சக்தி உடையது. இந்த உண்மைகளை மறந்துவிடாமல், அவற்றில் மனதை நிலைத்திருக்கச் செய்தால் அறியாமை நீங்கிவிடும்.

    இந்த ஆத்மா என்பதே வேல், அது ஞான வேல், சூரியன் இருளை அகற்றி விடுவதுபோல, அறியாமையை அழிக்கும் வேல். இப்படியாக, வேலெனப்படும் ஆத்ம விழிப்புணர்வில் அறியாமையானது அழிக்கப்படும் போது, ஆசைகள் அற்றுப்போகின்றன; அவற்றுடன் கர்மங்களும் விலகிவிடுகின்றன. இருளைப்போல அறியாமை என்பது ஒரு உண்மையான பொருளோ, விஷயமோ அல்ல; எப்படி இருள் என்பது வெளிச்சம் இல்லாத நிலையோ, அதேபோல் அறியாமை ஞானமற்ற நிலையாகும். வெளிச்சம் வரும்போது, இருள் தானே மறைகிறது; அதை அகற்றுவதற்கு ஒரு முயற்சியும் செய்யவேண்டியதில்லை. அதுபோலவே, ஞானம் உதயமாகும்போது, ஆத்ம விழிப்புணர்வு நிரந்தரமாக நிலைத்திருக்கும்போது, அறியாமை தானே மறைந்து போகிறது. அறியாமை-ஆசை-கர்மம் (அவித்யா-காம-கர்ம) என்ற சங்கிலி இதய-கிரந்தி அல்லது இதய முடிச்சு என்று அழைக்கப்படுகிறது. இதுவே ஜீவாத்மாவை இந்த சம்சாரம் அல்லது பிரபஞ்சத்தில் பந்தப்படுத்துகிறது. எனவே, இந்த கர்ம-சங்கிலியை உடைப்பதற்கு வேல் அல்லது ஞானம் அல்லது ஆத்ம-தத்துவத்தை மறவாதிருப்பதுவே ஒரே வழி; அதாவது, வேல், ஆத்மா, அல்லது நமது உண்மை சொரூபத்தின் விழிப்புணர்வில் இடைவிடாது இருப்பதுவே ஒரே வழி. அப்படிச்செய்யும்போது, ஜீவாத்மா அல்லது நம்முடைய விழிப்புணர்வு, மனம் மற்றும் புலன்களுடனான அதன் தொடர்பிலிருந்து அறுபடுகிறது; அதனால் மனமும் புலன்களும் செயல்படாமற்போய்விடுகின்றன, எப்படி ஓடிக்கொண்டிருக்கும் பெரிய இயந்திரம் மின்சாரம் நிறுத்தப்பட்டவுடன் செயலற்றுப்போகிறதோ அவ்விதமே அவைகளும் செயலிழக்கின்றன. ‘வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்’ என்பது ‘அஹம் பிரம்ம அஸ்மி’ (“நான் பிரம்மம்”) என்ற மந்திரத்தின் மீதான தியானத்தை விடாது செய்வதென்று பொருள். ஜீவாத்மா தன்னுடைய சுய-சொரூபமான பிரம்மத்தை தியானித்து, அதிலேயே நிலைத்திருக்கும்போது, கர்மங்கள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. எனவேதான், அச்சாதகன்,நான் கர்மங்களை துரத்திடும் அந்த ஒளிர்விடும் கதிர்வேலை ஒரு பொழுதும் மறவேன். ஆகவே, சம்சார பந்தத்திற்கு நான் இனிமேல் ஆட்படமாட்டேன்.” என்று கூறுகிறான். வேலாயுதத்தை இடைவிடாது தியானிப்பது (அதாவது, ஆத்ம விழிப்புணர்வில் எப்பொழுதும் வேரூன்றியிருப்பது, திளைத்திருப்பது), ஒருவனை கர்மத் தளைகளிலிருந்து விடுவித்து சம்சாரத்தின் விளைவுகளிலிருந்து விடுதலை செய்கிறது. இங்கு, தியானம் அதன் உச்ச கட்டத்தையும் இறுதி நிலையையும் அடைகிறது; இங்கு பரம்பொருள் அல்லது ஸச்சிதானந்தத்தின்மேல், சுத்த சைதன்யமாக --- ‘வேல்’-ஆக தியானம்செய்யப்படுகிறது.

    இப்படியாக, ஒருவன் ஆத்ம விழிப்புணர்விலேயே நிலைத்திருக்க தியானம் செய்யும்பொழுது, அதாவது வேலைப்பற்றியே எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்கும்பொழுது, இந்த பிரபஞ்ச வாழ்க்கைக்கு என்ன ஆகிறது? உலகம் அப்படியேதானிருக்கும், ஆனால் முன்பிருந்ததுபோல் (அவனுக்கு) இருக்காது. அப்படிப்பட்டவனுக்கு இந்த உலகம் இருப்பதுபோலத் தோன்றலாம், அவனும் வாழ்க்கையின் ஊடுருவல்களுக்கு உட்பட்டிருப்பதுபோலத் (பிறருக்குத்) தோன்றலாம். ஆனால், அவனுக்கோ, இவையனைத்துமே ஒரு வெறும் கேலி, விளையாட்டுதான். இப்பொழுது எதுவும் அவனைப் பாதிப்பதில்லை. அவன் முன்போலவே தனது தினசரி வாழ்க்கையை நடத்தினாலும், அவன் மனம் அவற்றிலில்லை; எந்த வேலின்மேல் (ஆத்மாவின்மேல்) இடைவிடாது தியானம் செய்கிறானோ அதன் உணர்வில் நிலைத்திருக்க அவன் மனம் முழுமையாக ஈடுபட்டிருப்பதால், மயக்கம் அடைவது மற்றும் கிளர்ச்சியடைவது போன்ற எவ்வித பாதிப்பிற்கும் ஆளாகாமல் அவன் தினசரிச் செயல்களை செய்து வருவான். இது ஒரு விசித்திரமான விழிப்புணர்வு. இந்த விசித்திரமான அனுபவத்தை, கந்தப் பெருமான் தினைப்புனம் மற்றும் பல இடங்களில் வள்ளியைத் தேடித் திரிந்தார் என்று சொல்வதன்மூலம், எவ்வளவு நேர்த்தியாக இச்செய்யுளில் சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்க்கலாம்!

    வள்ளி தேவியானவள் தினைப்புனத்தின் நடுவில் அமைக்கப்பட்ட காவல் பரணில் இருந்துகொண்டு தானியங்களைக் கொத்தித் தின்பதற்காக வரும் பறவைகளை விரட்டிக் கொண்டிருப்பாள். சில சமயம், பக்கத்திலிருக்கும் மலைச்சுனைக்கு நீர் அருந்துவதற்காகவோ அல்லது அருவிக்கு குளிப்பதற்காகவோ அவள் செல்வது வழக்கம். இவை அனைத்தையும் பகல் பொழுதில் செய்து விட்டு, சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்னர் பக்கத்து ஊரிலிருந்த தன் வீட்டிற்குத் திரும்பி விடுவாள். கந்தப் பெருமானுக்கு இவை அனைத்தும் நன்றாகத் தெரியும். இருந்தாலும், அவள் வீட்டிற்குச் சென்ற பிறகு, வேண்டுமென்றே இவ்விடங்களுக்கெல்லாம் சென்று அவளைத் தேடி அலைவார். தெரிந்திருந்தும் ஏன் பெருமான் இவ்வாறு செய்தார்? இதில் அவருக்கு ஒரு மகிழ்ச்சி, இது அவரது லீலை, கருணையின் செயல்! மேலும், அவளைச் சந்திக்க முடியவில்லையே என்று அவர் மனம் முறிவுற்று வருந்தமாட்டார்; ஏனெனில், அங்கெல்லாம் செல்வதற்கு முன்பே அவள் அவ்விடங்களில் இருக்கமாட்டாள் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும், அவளைத் தேடுவதில் அவருக்கு ஒரு மகிழ்ச்சி. வெளிச்செயலில், முருகன் வள்ளியைத்தேடிச் சென்றது, மற்ற காதலர்கள் தங்கள் காதலிகளைத் தேடி அலைவதுபோலவே இருந்தாலும், அவருடைய உள்ளத்தின் பாவனை முற்றிலும் வேறானது. இந்த பாவனையே அவருடைய செயலை மற்றவர்களுடைய செயலிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இதைப் போலவே, ஆத்ம-தியானித்தில் எங்கும் வியாபித்திருக்கும் இறைவனில் தன் மனதை நிலைநிறுத்த முயற்சிக்கும் ஒருவன், மற்றவர்கள்போல எல்லாக் காரியங்களையும் செய்வான், சம்சாரத்தில் கட்டுண்டு அதில் துன்பப்படுவதுபோல் காணப்படுவான், ஆனால் இவையனைத்தும் அவனுக்கு அர்த்தமற்றதே. ஆத்மா ஒன்றே உண்மைப் பொருள், உலகம் சாரமற்றதென்று அவனுக்குத் தெரியும். எனவே எதுவும் அவனை பாதிப்பதில்லை, எப்படி முருகன் ஏமாற்றம் அடையவில்லையோ அப்படியே அவனும் ஏமாற்றம் அடைவதில்லை.

    இச்செய்யுளில், அச்சாதகன் இடைவிடாது தியானம் செய்வதின் மூலம் தான் பிரம்மத்தில்/ ஆத்மாவில் நிலைபெற்று இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றானே தவிர, அதில் முழுவதுமாக நிலைபெறவில்லை. இதுவும்கூட, நான் எப்படியும் மாயையைக் கடந்து விடுவேனென்ற நம்பிக்கையை அவனுக்குக் கொடுக்கிறது; எனவே, அவன் மகிழ்ந்து, வினைகளை ஓடச்செய்யும் வேலை/ஆத்மாவை கணப்பொழுதும் மறக்காமல், அதன் தியானத்தில் இடைவிடாமல் முழுமூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நான் (இந்தப் பிரபஞ்சமெனும்) மனையில் சிக்கிக் கலங்கி, மயங்கிடுவேனோ? நிச்சயமாக மயங்க மாட்டேன், பிரபஞ்சம் என்னை இனி ஒருபொழுதும் பாதிக்காது.” என்று கூறுகிறான்.

No comments:

Post a Comment