கந்தர் அநுபூதி அறிமுகம்


“கந்தர் அநுபூதி”

ஓர் அறிமுகம்

    அருட்செல்வர் அருணகிரிநாதர் தமிழ்நாட்டின் எண்ணற்ற (நாயன்மார்கள் போன்ற) திருத்தொண்டர்களில் தனிச்சிறப்புடன் திகழ்பவர். அவர் அருளிச்செய்த, இரகசிய உட்கருத்துகள் கொண்ட, “கந்தர் அநுபூதி” ஒரு ஆழ்ந்த மெய்யியல் மற்றும் ஆன்மீக தத்துவ நூல். இதில் 51 செய்யுள்கள் உள்ளன. இது மந்திர-சாஸ்திரம் என்று அனைவராலும் போற்றி மதிக்கப்படுகிறது. இதில் அடங்கியுள்ள உயரிய ஆன்மீக விஷயங்கள் மற்றும் கருத்தாழம் ஆகிய விசேஷங்களால் அருணகிரியாரின் நூல்களிலேயே இது மிகச்சிறந்தது எனக் கருதப்படுகிறது, செய்யுள்களும் மிகமிகச் சிறியவை, ஆனால் கருத்தில் மிகமிக உயரியவை, உன்னதமானவை. “கந்தர் அநுபூதி” நூலும் மூர்த்தியில் சிறிதானலும் கீர்த்தியில் மிகவும் உயர்ந்தது. இதன் தலைப்பு குறிப்பிடுவதைப்போல், இந்நூல் இறை-அநுபூதி (பெறுவதைப்) பற்றியதே. சில கந்தர் அநுபூதி பதிப்புகளில், 100 செய்யுள்கள் இருக்கின்றன, எனினும் பிந்தைய 49 செய்யுள்களும் பின்னர் சேர்க்கப்பட்டவை என்றும், அருணகிரியாரால் இயற்றப்பட்டதல்ல என்றும் அனைவராலும் கருதப்பட்டு பொதுவாக நிராகரிக்கப்படுகிறது.

    சிவபெருமானின் ஆன்மீக (சக்தியிலிருந்து தோன்றிய) மைந்தனின் பலபெயர்களில் ஒன்று “கந்தன்” (சமஸ்கிருதத்தில் “ஸ்கந்தன்”) ஆகும். கந்தப் பெருமானின் மற்ற முக்கியப் பெயர்களாவன: ஷண்முகன், கார்த்திகேயன், குகன், வேலாயுதன், முருகன், ஆறுமுகன், போன்றவைகளாகும். இவர் பகவான் கணேசரின் இளைய சகோதரன். “அநுபூதி” என்பது ஒரு சமஸ்கிருதச் சொல், அப்படியே அதே அர்த்தத்தில் தமிழிலும் கையாளப்படுகிறது. “அநுபூதி” என்றால் நேரடியான அல்லது சொந்த இறை-அநுபவம். அதாவது, ஜீவாத்மா பரமாத்மாவுடன் (ஆன்மீக) ஐக்கியத்தை அடைவது. இதுவே இரண்டற்ற அல்லது அத்வைத ஐக்கியநிலையென்று (வேதாந்த சாஸ்திரங்களில்) குறிப்பிடப்படுகிறது. இதுதான் ஆத்ம-சாக்ஷாத்காரம் (அ) நேரடியான சுய-அநுபவம். எனவே, “கந்தர் அநுபூதி” என்பது கந்தப் பெருமானின் நேரடியான அநுபவம் (அ) கந்தப் பெருமானுடன் தெய்வீக-ஐக்கிய அநுபவம். மேலும், அருணகிரியாருக்கோ, கந்தப் பெருமான் வெறும் இஷ்டதேவதை மட்டுமல்ல; ஆனால் [அவரே பல செய்யுள்களில் (2, 13, 28, மற்றும் 49) வெளிப்படுத்தியுள்ளபடி] கந்தப் பெருமான் எல்லையில்லாப் பரம்பொருளும் (பரபிரம்மமும்) ஆவார். ஆகவே, எளிய சொற்களில் சொல்லுவதானால், “கந்தர் அநுபூதி” என்றால் “இறை-அநுபவம்” (அ) ”இறைவனின் சாக்ஷாத்காரம்” என்றாகும்.

    அருட்செல்வர் அருணகிரியார் பல கவிதை நூல்களை அருளியுள்ளார்; அவற்றில் தலைசிறந்தது ‘கந்தர் அநுபூதி’. இது 51 செய்யுள்களை மட்டுமே கொண்ட மிகச்சிறிய படைப்பாக இருந்தாலும், இது ஆன்மீக ஞானத்தில் மிக உயர்ந்ததாகவும், ஆழமான கருத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது (முன்பே கூறியபடி, மூர்த்தி சிறிதானாலும், இதன் கீர்த்தி மிகப்பெரிது). பரம்பொருளை நாடும் ஆன்மீக சாதகர்களுக்கு இது ஒரு அரிய ஞானப் பொக்கிஷம், மற்றும் இறைவன்பால் அன்பு பாராட்டுபவர்களுக்கு (பக்தர்களுக்கு) இது ஒரு பக்திச் சுரங்கம். இது பக்தி மற்றும் ஞானம் ஆகிய இரண்டும் மர்மமாகக் கலக்கப்பட்ட ஒரு அசாதாரண கவிதைப் படைப்பு. பக்தியும் ஞானமும் ஒன்றையொன்று மிஞ்சுகிறது; இதயத்தைத் தொட்டு தூய உணர்வுகளை தூண்டுகிறது, அதே சமயத்தில், புத்திக்கு அப்பாற்பட்ட ஆழமான சிந்தனைகளை தூண்டுகிறது. இது ஒரு மந்திர-சாஸ்திரம் (அ) மறைபொருள் தத்துவ ஆய்வு நூல் என்றும், முனிவர் திருமூலர் அருளிச்செய்த ‘திருமந்திரம்” எனும் புகழ்வாய்ந்த மந்திர-சாஸ்திர நூலுக்கு இணையானது என்றும் கருதப்படுகிறது. இதிலிருந்து இதன் மகத்துவத்தை நாம் அறியலாம். திருமூல முனிவர் ஒரு வருடகாலம் சமாதியில் ஆழ்ந்திருந்து வெளிப்பட்ட பின் ஒரே ஒரு மந்திரத்தை அளித்துவிட்டு, திரும்பவும் சமாதியில் ஆழ்ந்து விடுவார், இவ்வாறாக 3000 மந்திரங்கள் கொண்ட படைப்பு “திருமந்திரம்”. சைவ சித்தாந்தத்தின் பன்னிரு திருமுறைகளில், “திருமந்திரம்” பத்தாவது திருமுறையாகப் போற்றப்படுகிறது. அதேபோல, “கந்தர் அநுபூதி” கந்தப் பெருமானின் “முருகவேள் பன்னிரு திருமுறை”களில், பத்தாவது திருமுறையாக அவரது பக்தர்களால் போற்றப்படுகிறது. இவ்வாறாக, கந்தர் அநுபூதியின் மகிமை மற்றும் மகத்துவத்தை ஓரளவு தெரிந்துகொள்ள இயலும்; ஆனால் அதன் முழு மகத்துவத்தையும் சக்தியையும் உண்மையிலேயே ஒருவன் உணர வேண்டுமானால், அது அவன் இதயத்தில் அமர்ந்து, அவனது அநுபவமாகவே ஆக வேண்டும்.

    கந்தர் அநுபூதி நூலில் வெளிப்படையாகவும் பூடகமாகவும், பல மந்திரங்கள் உள்ளனவென்று சரியாகத்தான் நம்பப்படுகிறது. பெருமானின் பெயர்களான முருகன், கந்தன், சண்முகன், குகன், வேலவன், ஆறுமுகன் ஆகிய அனைத்துமே தனித் தனி மந்திரங்கள்தான்; கந்தர் அனுபூதியில் இம்மந்திரங்கள் நிறைந்துள்ளன. மேலும், பல செய்யுள்களில் பல மந்திரங்கள் சூத்திர வடிவங்களில் மர்மமாக உள்ளன. உதாரணத்திற்கு, செய்யுள் 1ல் “வேலும் மயிலும் துணை”, செய்யுள் 36ல் “நாதா குமரா நம:”, செய்யுள் 37ல் “(நான்) இறையோன் பரிவாரம்”, செய்யுள் 51ல் “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” --- என்று இருப்பதைக் குறிப்பிடலாம். இம்மந்திரங்களின் விளக்கங்களை அந்தந்த செய்யுளின் விளக்கவுரையில் காணலாம். கந்தர் அநுபூதி ஒரு மந்திர சாஸ்திரம் என்று கருதப்படுவதற்கு இன்னுமொரு காரணமும் உள்ளது. மந்திரம் என்பதற்கு சொற்பொருள் விளக்கம்: “மனனாத் த்ராயதே இதி மந்த்ர:” --- “எதை திரும்பத் திரும்ப ஜபம் செய்வதால் (அ) தியானிப்பதால், ஒருவன் சம்சார சக்கரத்திலிருந்து விடுபடுகிறானோ (காப்பாற்றப்படுகிறானோ), அது ‘மந்திரம்’ எனப்படுகிறது.” உண்மையில், இந்த நூலின் மறைபொருள் மற்றும் இது சுட்டும் கருத்துகளை ஒருவன் ஆழ்ந்து சிந்தித்து தியானித்து வந்தால் போதும், அதுவே அவனை பந்தத்திலிருந்து விடுவித்து முக்தியை அளித்து விடும்.

    கந்தப் பெருமானும் வேலும் ஒன்றே. வேல் அற்புத சக்திகளைக் கொண்ட ஒரு திவ்ய ஆயுதம். அதைக் கொண்டு முருகன் அசுரர்களை வதம் புரிந்தார். அந்த வேல் பூரண ஞான-சொரூபம்; அது உள்ளிருக்கும் அசுரர்களான (அ) எதிரிகளான அவித்யை (அறியாமை), காமம் (ஆசை) மற்றும் கர்மம் (கர்மபலன்) ஆகியவைகளை அழித்தொழித்து, ஜீவர்களை பிறப்பு-இறப்பு பந்தத்திலிருந்து விடுவிக்கிறது. வேல் ஒரு மர்மமான தெய்வீக சக்தி, அருட்செல்வர் அருணகிரியாரும் இதனை மந்திர-வேல் என்று தனது திருப்புகழ் பாட்டு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கந்தர் அநுபூதி நூலிலுள்ள 51 செய்யுள்களில், 25ல் அப்படிப்பட்ட வேலிடம் நேரடியாக பிரார்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. இக்காரணத்தினாலும், இந்நூல் ஒரு மந்திர சாஸ்திரம் என்று கருதப்படுகிறது.

    ஆக, பெருமானின் பெயர்களான மந்திரங்களால் நிரம்பப்பட்டு இருப்பதாலும்; சூத்திர வடிவத்தில் மர்மமாக மந்திரங்களை தன்னகத்தே கொண்டிருப்பதாலும், இம்மந்திரங்களை ஒருவன் உச்சரித்தும், தியானித்தும் வந்தால் அவை அவனை சம்சாரத்திலிருந்து விடுவிப்பதாலும்; அறியாமையை அழிக்கும் தெய்வீக சக்தி படைத்த வேலின்மேல் தியானமும் அந்த வேலிடம் பலதடவை பிரார்த்திப்பதாலும்; இந்த அற்புத மந்திர-சாஸ்திரமான கந்தர் அனுபூதியை ஒருவன் தினசரி பாராயணம் செய்து வந்தால், அவன் எதை எவ்விதத்தில் வேண்டுமென்று நேர்மையாகப் பிரார்த்தனை செய்கிறானோ, அதை அவ்விதத்திலேயே தந்திடும் சக்தி அதனிடமுள்ளது. எனவே, கந்தப் பெருமானின் பக்தர்களுக்கு, “கந்தர் அநுபூதி” தினமும் (பக்திப் பரவசத்துடன்) பாராயணம் செய்யப்படும் ஒரு தெய்வீக நூல். கந்தர் அநுபூதி நூலிலிருந்து ஒரு செய்யுளையோ (அ) செய்யுளின் ஒரு பகுதியை மட்டுமோ உச்சரித்துப் பிரார்த்தனை செய்ததன்மூலம் தாங்கள் பெற்ற அற்புதப் பாதுகாப்புகளை விவரிக்கும் பல பக்தர்களை இன்றும்கூட நாம் காணலாம். அவ்வாறான நிகழ்வுகளில் இரண்டு பின்வருமாறு:

    (1) கந்தர் அநுபூதியை அனுதினமும் பாராயணம் செய்துவந்த பக்தன் ஒருவன் ஒருநாள் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்கு ஒரு காட்டு-வழியில் சென்று கொண்டிருந்தான். வழியில் திடீரென்று ஒரு திருடன் வந்து அவனை மிரட்டினான். அப்போது அவன் தன்னிடமிருந்த ஒரு வெற்றிலையின் காம்பைக் கிள்ளி, அதைத் “தொளைபட்டுருவத் தொடு வேலவனே” என்று சொல்லி திருடனை நோக்கி எறிந்தான் --- [பொருள்: “தனது வேலைப் பாய்ச்சி (அசுரன் சூரபத்மனின் இதயத்தை) தொளைத்து அழித்த ஓ வேலாயுதப் பெருமானே,”] (செய்யுள் 4ன் கடைசி வரி). அந்தோ, என்ன ஆச்சரியம்! அந்த வெற்றிலைக் காம்பே வேலைப்போல் வேலைசெய்து அத்திருடனைத் தாக்கி அந்த இடத்திலேயே கொன்றுவிட்டது.

    (2) சென்னையைச் சேர்ந்த சைவ சித்தாந்த மகாசமாஜம் “கந்தர் அநுபூதி” என்ற ஒரு புத்தகத்தை அனைத்துச் செய்யுள்களின் மூலம், மற்றும் அதனதன் யந்திரம் (அ) சக்ரம், மூல-மந்திரம் ஆகியவைகளுடன் பதிப்பித்து உள்ளது. அந்த சமாஜத்தின் துணை காரியதரிசியான ஸ்ரீ எம். பி. தியாகராஜ முதலியார், B.A., அவர்கள் இப்படைப்பை அளித்தவராவார். கந்தர் அநுபூதி செய்யுள்கள் மற்றும் யந்திரங்களில் சித்தி அடைந்தவரும் மற்றும் யந்திரங்களையும் மூல மந்திரங்களையும் தன் தியானத்தில் பெற்றவருமான ஒரு சன்னியாசியிடமிருந்து, முதலியார் அவர்கள் அவற்றில் உபதேசம் (தீட்சை) பெற்றிருந்தார். அவர் அப்புத்தகத்தில் எழுதியுள்ள ஒரு சுவாரசியமான சம்பவத்தின் சாரம் வருமாறு:

    “அது 1956ம் வருடம். திரு எட்வர்ட் ஜேம்ஸ், என்ற ஒரு அமெரிக்கர் தேவி உபாசனை செய்து வந்தார், அப்பொழுது அதை தொடர்வதில் அவருக்கு சில தடைகள் ஏற்பட்டன. எனவே, அவர் அமெரிக்காவிலிருந்து திருவாளர் முதலியார் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, அதில் தனக்கு ஏற்படும் தடைகளைக் களையும் வழிமுறையை பரிந்துரைக்குமாறு வேண்டியிருந்தார். முதலியார் அவர்கள், அவருக்கு அளித்த பதிலில், இத்தகைய தடைகளைக் களைவதற்கு, முழுமுதற் கடவுளான கணேசப் பெருமானை வழிபடுதல் அவசியம் என்று சொல்லி, கந்தர் அநுபூதியின் முதல் செய்யுளை (ஆடும்பரி வேல்…..), அதன் மூல-மந்திர ஜபம் மற்றும் யந்திர பூஜையுடன் பாராயணம் செய்யுமாறு அவருக்கு பரிந்துரைத்தார். திரு ஜேம்ஸும் அவ்வாறே செய்துவந்தார். சற்றேறக்குறைய மூன்று மாதங்களில், அவர் ஒரு வியக்கத்தக்க அநுபவத்தை அடைந்தார். அதைப்பற்றி அவர் பின்வருமாறு கூறியுள்ளார்: நான் தியானத்தில் ஆழ்ந்திருந்தபொழுது, வெள்ளை ஆடைகளை உடுத்திக்கொண்டு, கமண்டலத்தைக் தன் கையில் பிடித்துக்கொண்டு ஒரு வயதான மனிதர், பல யானைகள் புடைசூழ, எனது அறையில் தோன்றி தன் கமண்டலத்திலிருந்து சிறிது நீரை எடுத்து எனக்கும் என்னுடன் தியானத்தில் ஆழ்ந்திருந்த என் மனைவிக்கும் வாயில் ஊற்றினார். உடனே எல்லாமே ஒரு ஒளிப்பிரகாசமாகி மறைந்தது. அன்றிலிருந்து நான் முழுவதுமாக மாற்றப்பட்டுவிட்டேன், என் தேவி உபாசனையை எவ்விதத் தடைகளுமின்றி செய்து வருகிறேன்.’

    மேல்கூறிய சம்பவங்களிலிருந்து, இடைவிடாமல் முறையாக கந்தர் அநுபூதியை தினசரி பாராயணம் செய்து வந்தால் அடையக்கூடிய பலவிதமான அனுகூலங்களை நம்மால் நன்கு அறிந்திட முடியும். ஒரு செய்யுள் (அ) ஒரு செய்யுளின் ஒரு வரி இவ்வளவு பலன்தர முடியுமென்றால், இந்நூலை முழுமையாக முறையாக ஒருவர் பாராயணம் செய்து வந்தால் அவரால் எதைத்தான் அடைந்திட இயலாது? சுயநலமற்று, எந்தப் பிரதிபலனையும் பெருமானிடமிருந்து எதிர்பார்க்காமல், 51 செய்யுள்களையும் தினமும் ஒருவர் பாராயணம் செய்து வந்தால், அவரது உடல் மற்றும் உளவியல் நோய்கள் குணமாகும்; அவர் அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றப்படுவார்; மேலும், அவருக்கு பெருமானிடம் தூய அன்பு பெருகும் மற்றும் உயரிய (ஆத்ம) ஞானமும் கிடைக்கும். இது எனது அசைக்க முடியாத நம்பிக்கையும் அநுபவமும் ஆகும்.

    எனக்குத் தெரிந்தவரையில், கந்தர் அநுபூதி நூலிற்கு ஆங்கிலத்தில் ஒரு சிலரால் செய்யுள்கள் மட்டும் வெறுமனே மொழிபெயர்க்கப்பட்டு உள்ளனவே தவிர, முழு நூலுக்கு விளக்கவுரையுடன்கூடிய படைப்புகள் எதுவும் இல்லை. ஆனால், தமிழில் பல்வேறு வகையான விளக்கவுரைகள் உள்ளன; அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கமோ அல்லது விருப்பமோ உடையவையாக இருக்கின்றன --- மாணவர்களுக்கான விளக்கவுரைகள், எளிமையாக படிக்கும்பொழுதே பொருள் விளங்க வேண்டுமென்ற நோக்குடன் பிரத்யேகமாக எழுதப்பட்டவை; பொதுமக்களுக்கான விளக்கவுரைகள், தொடர்ச்சியாக பல உபன்யாசங்களில் கூறப்பட்டதை, பின்னர் தொகுத்து வெளியிடப்பட்டவை; அறிஞர்களுக்கான விளக்கவுரைகள், பல்வேறு தமிழ் நூல்களிலிருந்து தொகுக்கப்பட்ட பல மேற்கோள்களுடன் வெளியிடப்பட்டவை; பக்தர்களுக்கான விளக்கவுரைகள், பெருமானின் மகிமை மற்றும் மகத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக அவருடைய தெய்வீக பராக்கிரம லீலைகள், அவரின் அவதாரகாலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் மற்றும் கதைகளுடன் (பக்தர்களின் உள்ளத்தில் இறை- நம்பிக்கையை வளர்த்திடும் நோக்கத்துடன்) எழுதப்பட்டவை; இவ்வாறு பல வகைகளில் உள்ளன. பல விளக்கவுரைகள் சைவ சித்தாந்த தத்துவங்கள், மற்றும் வேதாந்த தத்துவங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டு உள்ளன. ஆனால் சாதகர்களுக்கும் மெய்ப்பொருளை நாடுகின்றவர்களுக்கும் அவர்களின் சாதனையில் உதவியாக இருக்க, அவர்களின் காட்சிக் கோணத்திலிருந்து செய்யுள்களை விளக்கிப் பொருள் கூறுவதே என்னுடைய முயற்சியின் முக்கிய நோக்கம்; வெறுமனே ஆய்வு அல்லது இலக்கியப் புலமை ஆர்வத்தில் இது எழுதப்படவில்லை. ஆகையால், செய்யுள்களில் வரும் பொருட் செறிவுள்ள, கூர்மையான சொற்றொடர்கள், வார்த்தைகளின் பின்புலத்தில் மறைந்திருக்கும் பகுத்தறிவுக்கேற்ற காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கான பெரு முயற்சி செய்யப்பட்டுள்ளது; சாதகர்களின் மனதில் அவர்களுக்கு அவசியமான திடமான நம்பிக்கையை உண்டாக்கும் நோக்கத்துடன், இது மிகுந்த பகுத்தாய்வுடன் செய்யப்பட்டுள்ளது; இந்த திடமான நம்பிக்கை, சாதகர்கள் தங்கள் சாதனையில் பிறழாமல் இருந்து இறைவனை அடையும்வரை அதைத் தொடர்ந்து செய்வதில் ஒரு மிகப்பெரிய சொத்து என உறுதியாகக் கூறலாம்.

    என்னைப் பொருத்தவரை, “கந்தர் அநுபூதி” முழுமையாக ஆன்மீகத் தன்மை கொண்ட ஒரு நூல்; எனவே மக்களை மகிழ்விப்பதற்காக எந்தவிதமான தரக்குறைவான மற்றும் விசித்திரப்பாணியில் அமையும் பொருள்விளக்கங்கள் இதற்குப் பொருந்தாது என்று இங்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது ஒரு புனித நூல், எனவே இது புனிதமான முறையில் மரியாதை மற்றும் பக்தி பாவத்துடன் அணுகப்பட (நடத்தப்பட) வேண்டும். இத்தகைய ஓர் அரியபடைப்பை உலகிற்குக் கொடுத்த முனிவர் அருணகிரியாரின் மனம் மற்றும் அவரது நோக்கத்தை புரிந்து கொள்ள நாம் முயற்சி எடுப்பது பொருத்தமானதாகத்தான் இருக்கும்; எனவே, புலன்கள் மற்றும் உலகியல் சம்பந்தமான உணர்ச்சி பூர்வ கருத்துக்களைத் தவிர்த்து, தெய்வீகமான முறையில் செய்யுள்களை விளக்குவதுதான் உசிதம். ஆகவே, செய்யுள்களின் பொருள், கருத்து மற்றும் விளக்கத்தை ஒரு ஆன்மீக சாதகரின் பார்வைக் கோணத்தில் தருவதற்குத்தான் நான் முயற்சி செய்திருக்கிறேன். இம்முயற்சி, “கந்தர் அநுபூதி” என்ற தலைப்பிற்கு தகுந்ததாகவும் மற்றும் அருணகிரியார் தான் பெற்ற பேரின்பத்தை மற்றவர்களும் பெற்றிட வேண்டும் என்று விரும்பியதை நிறைவேற்றும் வகையிலும் இருக்கும். ஆகவே, பாண்டித்தியம், அறிவாற்றல், இலக்கியச் சிறப்பு, இலக்கணச் சுத்தம் ஆகிய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் இந்த நூலில் தரப்படவில்லை. ஆனால், ஆன்மீக சாதகர்களின் நடைமுறைப் பயன்பாட்டுக்கு இந்த நூல் மிகவும் உபயோகமாயிருக்கும். அவர்கள் கீழான இயல்பை தினசரி எதிர்த்துப் போராடத் தேவையான புரிந்துணர்வையும் பலத்தையும் தருவது, படிப்படியாக அவற்றை கடந்துசெல்ல உதவுவது, இறுதியில் அவர்கள் வாழ்க்கையின் இலக்கான இறை-அநுபவத்தை அடைய உதவுவது ஆகிய ஆன்மீக விஷயங்களுக்குத்தான் இந்த நூலின் விளக்கவுரையில் அதிக முக்கியத்துவம் மற்றும் கவனம் தரப்பட்டுள்ளது. எனவே, இதிலுள்ள இலக்கிய, இலக்கணக் குறைபாடுகளைப் பொருட் படுத்தாமல், விஷயத்தில் கவனத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரேஒரு சாதகன் அவன் தன் இலக்கை நோக்கி பயணிப்பதற்கு இப்படைப்பானது ஒரு சிறிதளவேனும் உதவி செய்தால்கூட, அதுவே எனக்கு மகத்தான திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரும்.

    கந்தப் பெருமானின் கிருபை நம்முடைய ஆன்மீகப் பாதையில் ஒளிதந்து, நமது முயற்சிகள் வெற்றி பெறுமாறு செய்யட்டும் என்று பெருமானிடம் நான் முழுமனதுடன் பிரார்த்திக்கிறேன்.


N.V. கார்த்திகேயன்

No comments:

Post a Comment