முகவுரை


முகவுரை

    எல்லாம் வல்ல இறைவன் கந்தப் பெருமான், சத்குரு சுவாமி சிவானந்த மகராஜ் மற்றும் அருட்செல்வர் அருணகிரிநாதர் ஆகிய மூவருக்கும் முதற்கண் எனது அனேக கோடி நமஸ்காரங்கள், ஆராதனைகள் மற்றும் வணக்கங்கள். இவர்கள் எப்பொழுதும் எனக்களித்து வரும் ஊக்கத்திற்காக, எனது மிகச் சிறிய காணிக்கையான இந்த ஆய்வு நூலை, அன்பு மற்றும் நன்றியுணர்வுடன்கூடிய சேவையாக அவர்களின் பாதார விந்தங்களில் சமர்ப்பிக்கிறேன். இவர்கள் என்னுள்ளிருந்து அவ்வாறு ஊக்குவித்து வழிகாட்டி இருக்காவிட்டால், இந்த ஆய்வை என்னால் செய்திருந்திருக்கவே இயலாதென்பது மட்டும் திண்ணம். அனைத்துப் புகழும் அவர்களுக்குரியதே! இப்பிறப்பிலேயே நாம் வாழ்க்கையின் குறிக்கோளான முக்தி அடைந்திட, இவர்கள் ஆசிகள் வழிகாட்டட்டும் என்பதே எனது பிரார்த்தனை.

    சிவானந்த ஆசிரமத்தின் பஜனை மண்டபத்தில் அமைந்துள்ள சிறிய கோயிலில் ஆத்ம (தற்)சிந்தனை நிலையில் எழுந்தருளியிருக்கிறார் கந்தப் பெருமான். யாத்திரிகர்களும் பக்தர்களும், ஆன்மீக வாழ்வைத் தேடுபவர்களும், விரும்பி நாடுபவர்களும், கவிஞர்களும் தத்துவவாதிகளும், அருட்செல்வர்களும் ஞானிகளும், இந்தியர்களும் வெளிநாட்டவர்களும் ஆகிய பலதரப்பட்டவர்களும் சுவாமி சிவானந்த மகராஜின் புனித ஆசிரமத்திற்கு, பற்பல காரணங்களுக்காக வந்த வண்ணம் உள்ளனர் --- வெறுமனே தரிசனம் செய்வதற்கு, பூஜ்ய ஸ்தாபகரை போற்றி வணங்குவதற்கு, ஆத்ம ஆறுதல் பெறுவதற்கு, மனச் சாந்திக்கு, யோகத்தையும் வேதாந்தத்தையும் கற்பதற்கு, இந்திய கலாசாரம் மற்றும் மதத்தைப் பற்றி கற்றுக்கொள்ள என பற்பல காரணங்களுக்காக, வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு அங்கு வந்தவர்கள் பஜனை மண்டபத்தை அடைந்து கந்தப் பெருமானின் விக்கிரஹத்தைக் கண்டவுடன், இந்தக் கடவுள் யார் என்றறிவதில் பேரார்வம் கொள்கின்றனர்.

    அருட்செல்வர் அருணகிரிநாதர் தனது திருப்புகழ்ப் பாடல் ஒன்றின் ஒரு வரியில், கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று என்று கூறுகிறார் --- அதாவது, (ஆறுமுகப் பெருமானின் ஆறு முகங்களில்) ஒரு முகமானது அவரது புகழை பாடும் பக்தர்களின் கர்மவினைகளை அழித்தொழிக்கிறது. இதிலிருந்துதான், கந்தப் பெருமானின் மகிமையைப் பற்றி நான் எழுத வேண்டும் என்ற எண்ணமே எனது மனதில் தோன்றியது. ‘தி டிவைன் லைஃப்’ (“The Divine Life”) என்ற பெயரில் ஒரு ஆங்கில மாதாந்திர இதழை ‘தி டிவைன் லைஃப் சொசைடி’ (சிவானந்த ஆசிரமம், ரிஷிகேஷ்) வெளியிடுகிறது. இவ்விதழில் கந்தப் பெருமானைப்பற்றி கட்டுரைகளை தொடராக எழுதுவதுதான் என்னுடைய நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்கான சிறந்த வழி என்று நான் நினைத்தேன். ஆனால், எழுதுவதற்குவேண்டிய விஷயத்தை எங்கிருந்து எடுத்துக் கொள்வது?

    அருணகிரியார் அருளிச் செய்த “கந்தர் அனுபூதி”, 51 செய்யுள்கள் கொண்ட ஒரு தத்துவ நூல். அதன் செய்யுள்களின் பொருள் என்னவென்று முழுதும் அறிந்து கொள்ளாமலேயே, நான் சில வருடங்களாக அதை நித்திய பாராயணம் செய்து வருகிறேன். அச்செய்யுள்களில் மறைந்திருக்கும் சக்தியின் மகிமையை என்னவென்று சொல்வது! நன்றாகப் பொருள் தெரியாமல் பாராயணம் செய்தும்கூட, அது எனது உள்ளத்திற்கு வேண்டிய ஆறுதலை எப்பொழுதும் தந்தது, தந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு அதை நித்தியமும் பாராயணம் செய்து வந்தபோது, அச்செய்யுள்களில் வெளிப்படையாகத் தெரியும் அர்த்தத்தைத் தவிர, மிகவும் ஆழ்ந்த ஆன்மீக உட்கருத்து நிறைந்து இருப்பதை சிறிதுசிறிதாக உணர்ந்தேன்.

    அந்த ஆண்டுகளில் (1960 மற்றும் 1970களில்), ஆசிரமத்தில் ஸ்ரீ சுவாமி கிருஷ்ணானந்தாஜி அவர்கள் ஸ்ரீமத் பகவத் கீதை, உபநிஷத்துகள் போன்ற வேதாந்த நூல்களை மிகவும் தெளிவாகவும், பகுத்தறிவிற்கு முற்றிலும் உகந்த முறையிலும், உன்னதமான ஆழ்ந்த ஆய்வுடனும் விளக்கி சொற்பொழிவுகள் ஆற்றிவந்தார். அவற்றைக் கேட்கும் கிடைத்தற்கரிய பாக்கியம், எனக்கும் மற்ற ஆசிரம சாதகர்கள், சன்னியாசிகள், ஆசிரமத்திற்கு வந்துபோகிறவர்கள் ஆகிய அனைவருக்கும் கிடைத்திருந்தது. அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்கக்கேட்க, நான் தினமும் பாராயணம் செய்யும் “கந்தர் அநுபூதி”யில் சுவாமிஜி அவர்கள் மிகவும் நேர்த்தியாக விளக்கும் பகவத்கீதை, உபநிஷத்துகள் போன்ற வேதாந்த நூல்களிலுள்ள தத்துவங்கள் பொதிந்துள்ளன என்பது எனக்கு தெளிவாகப் புரிந்தது. எனவே, கந்தப் பெருமானின் புகழையும் மகிமையையும் நான் பாடிமகிழ்வதற்கு மிகவும் சுலபமான மற்றும் உன்னதமான வழி, அருட்செல்வர் அருளிய கந்தர் அநுபூதி நூலுக்கு ஓர் விளக்கவுரை எழுதுவதுதான் என்று எண்ணினேன்; ஏனெனில், கந்தர் அநுபூதிச் செய்யுள்களில் மறைமுகமாகக் கூறப்பட்டுள்ள உபநிஷத்துகள் மற்றும் வேதாந்த நூல்களின் அறிவுரைகளை அதில் நன்கு வெளிக்கொண்டுவர இயலும்; அதே தருணத்தில், அநேக செய்யுள்களில் கூறப்பட்டுள்ள முருகனின் பல்வேறு அம்சங்கள் மற்றும் அவரது வெற்றிச்செயல்களை ஆதாரமாகக் கொண்டு அவரின் அவதாரம், லீலைகள், மகிமைகள், ஆகியவைகள் பற்றி நன்கு விளக்கமாக விவரிக்க இயலும். இவ்வாறு, கந்தர் அநுபூதி விளக்கவுரைக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் சொசைட்டியின் மாத இதழில் எழுத முடிவு செய்தேன்.

    ஆனால், தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ள வேதாந்த நூல்களில் எனக்கு போதிய ஞானமில்லை. மேலும், கட்டுரை எழுதுவதில் இது எனது முதல் முயற்சி. எனவே, இந்தப் பணியைத் தொடங்குவதில் சிறிது தயங்கினேன். எனவே, தொடர்கட்டுரையை மாதப் பத்திரிகையில் எழுதத் துவங்குவதற்கு முன்னால், கந்தர் அனுபூதியின் 51 செய்யுள்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்; மேலும் ஒவ்வொரு செய்யுளுக்கும் சுருக்கமான உரையும் எழுதி, ஒரு முழு கையெழுத்துப் பிரதியைத் தயார் செய்தேன். அப்பிரதியை எடுத்துக் கொண்டு, ஸ்ரீ சுவாமி கிருஷ்ணானந்தாஜி மகராஜிடம் சென்றேன். அவர் சொற்பொழிவுகளில் தந்த வேதாந்த அறிவுரைகளைத்தான் இச்செய்யுள்களை விளக்கி உரைப்பதில் நான் உபயோகித்து இருந்தேன். சங்கத்தின் முக்கிய செயலாளரும், மாத இதழின் ஆசிரியருமான ஸ்ரீ சுவாமி கிருஷ்ணானந்தாஜியிடம் எனது விளக்கவுரை பிரதியை அளித்து, அதைப் படித்துப் பார்த்து, உரிய திருத்தங்களையும் செய்திடுமாறு பிரார்த்தித்தேன். ஓய்வின்றி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த அவர் உடனே எனது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு, தனது பணிகளுக்கு நடுவே இதையும் படித்து, தேவையான திருத்தங்களையும் மிகவும் கவனமாகவும் பொறுமையாகவும் செய்து தந்தார். இதற்காகவும், மற்றும் இவ்விஷயமாக மேன்மேலும் விளக்கங்கள் தரவும் மற்றும் வழிகாட்டிடவும் அவரை எப்பொழுது அணுகினாலும் உடனே அதற்கும் செவிசாய்த்து என்னை அன்புடன் ஊக்குவித்த சுவாமிஜி கிருஷ்ணானந்த மகராஜுக்கு நான் பட்டுள்ள நன்றிக்கடன் கடலினும் பெரியது. இவ்வாறாக, “God Experience” (இறை-அநுபவம்) என்ற தலைப்பில் இத்தொடர் கட்டுரையின் முதல் கட்டுரை சங்கத்தின் “தி டிவைன் லைஃப்” (The Divine Life) ஆங்கில மாதஇதழில், 1969 மார்ச் மாதம் வெளியாகியது. 1971 செப்டம்பரில் இக்கட்டுரைத் தொடர் நிறைவு பெற்றது. பின்னர், இத்தொடர் ‘தி டிவைன் லைஃப் சொசைடி’-யால் (The Divine Life Soceity) ஒரு புத்தகமாகவே “கந்தர் அநுபூதி” (Kandar Anubuthi) என்ற தலைப்பில் (ஆங்கிலத்தில்) 1972இல் வெளியிடப்பட்டது. “கந்தர் அநுபூதி” புத்தகமானது முதன் முதலில் சங்கத்தின் ஆசியுடன் பிறந்த எளிய முறை இதுதான். ஆனால், தெய்வீக சங்கல்பமும் இறைவனின் நோக்கமும், நான் எந்த நோக்கத்துடன் இந்நூலை எழுத ஆரம்பித்தேனோ, அதிலிருந்து மிகவும் வேறுபட்டு இருப்பதாகத் தோன்றுகிறது.

    அருட்செல்வர் அருணகிரியாரின் ‘கந்தர் அநுபூதி’ நூல் பண்டிதர்களாலும் பக்தர்களாலும் மிகவும் உயரியதாக மதிப்பிடப்படுகிறது; ஏனெனில், ஒவ்வொரு செய்யுளும் கருத்தாழம் மிக்கதாகவும், மனிதர்களின் பல்வேறு அடுக்குகளைத் (different layers of one’s personality) தொடுவதாகவும் உள்ளன. ஆனால், இச்செய்யுள்களுக்குள் ஒன்றுக்கொன்று தொடர்போ சம்பந்தமோ இருப்பதாகத் காணப்படாததால், இந்நூல் அருட்செல்வரால் ஒரே சமயத்தில் இயற்றப்படவில்லை என்றும், இச்செய்யுள்களை தனித்தனியே பல்வேறு கால கட்டங்களில் அவர் இயற்றியுள்ளார் என்றும், இவைகளுக்குள் எவ்வித மையக் கருத்தும் இல்லை என்றும், இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் எழுதப்பட்ட தத்துவ நூல் அல்ல என்றும் பெரும்பாலோரால் கருதப்படுகிறது. ஆகவே, இத்தொடரை இதழுக்காக எழுதும்பொழுது, நானும் அவர்களைப் போலவே எண்ணி, ஒவ்வொரு செய்யுளையும் தனித்தனியாகக் கருதி, அதற்கேற்ப விளக்கவுரைகளையும் எழுதியிருந்தேன்.

    இருப்பினும், செய்யுள்களின் விரிவான விளக்கம் ஒவ்வொரு இதழிலும் பிரசுரமாகி வரும்பொழுது, சில செய்யுள்களுக்கு இடையில் மேற்போக்காக கருத்துகளின் இணைப்பு இருப்பது எனக்குத் தெரிந்தது, குறிப்பாக நோக்கின், செய்யுள்கள் 12 மற்றும் 13; 28 மற்றும் 29; 33, 34 மற்றும் 35; 42, 43 மற்றும் 44; 39 மற்றும் 43-க்கும்; 2 மற்றும் 43 இவற்றுக்கு இடையேயுள்ள தொடர்ப்பை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். இதனால், இதிலிருந்து, நூலின் முதலிலிருந்து கடைசிவரை எல்லா செய்யுள்களுக்கிடையேயும் இவ்வாறான கருத்துத் தொடர்ப்பு, வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், தங்க இழைபோல் நிச்சயமாக ஊடுருவி இருக்கவேண்டும் என்று என்னைத் தீவிரமாக எண்ணச் செய்தது. “கந்தர் அநுபூதி” (இறை-அநுபூதி) என்ற இந்நூலின் பெயர் குறிப்பாகத் தெரியப்படுத்துவதுபோல், அருணகிரியார் இதைக் கொடுப்பதின் நோக்கம், சாதகர்கள் இறை-அனுபவத்தை அடைய இது உதவ வேண்டுமென்பதே. அதனால் இச்செய்யுள்களுக்கிடையில், சாதகர்கள் தங்கள் இலக்கை அடைந்திட வழிகாட்டும், ஒரு தொடர்புள்ள உட்கருத்து கட்டாயம் இருந்துதான் தீரும் என்ற எண்ணம் என்னுள் வலுப்பெற்றது, அவ்வாறான தொடர்பு வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், வேத மந்திரங்களில் மறைமுகமாக இருப்பதுபோல், கண்டிப்பாகச் செய்யுள்களில் புதைந்திருக்க வேண்டும். இம்மாதிரியான எண்ணம் எனக்குள் மிகவும் வலுப்பெற்றுக் கொண்டிருந்தாலும், அப்படிப்பட்ட ஒரு திட்டவட்டமான தொடர்ப்பைக் காண முடியவில்லை. இருப்பினும், இவ்வரிய நூலின் பின்புலத்தில் ஒரு மகத்தான நோக்கம் கண்டிப்பாக இருந்துதான் ஆகவேண்டும் என்ற ஓர் எண்ணம் எனது ஆழ்மனதில் வேலை செய்துகொண்டே இருந்தது. செய்யுளுக்குச் செய்யுள் சங்கிலித் தொடராக உட்கருத்து இருந்துதான் தீரும் என்ற அந்த திடமான நம்பிக்கை அழிக்க முடியாததாக இருந்து வந்தது, அதனால், நான் தினசரி அன்றாடக் காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும்போதுகூட அது சூட்சுமமாக மனதில் செயல்பட்டுக் கொண்டே இருந்தது. ஆசிரமத்தின் பின்புறத்திலுள்ள இமயமலையின் காட்டு வழிகளில் மாலை வேளையில் தினசரி நான் தனியனாக உலாவப்போவது வழக்கம், அப்பொழுது இவ்வெண்ணம் மேலெழும்பிவந்து இதைப்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை; அப்பொழுது, செய்யுள்களில் புதைத்துள்ள இரகசியமான தத்துவப்பொருள் என் மனதில் மின்வெட்டொளிபோல் மிளிரும், ஆனால் பனிபடர்ந்ததுபோல் மிகவும் மங்கலாகத்தான் இருக்கும். எனவே, பின்னர் அத்தொடர் கட்டுரைகள், புத்தகமாக 1972ல் “கந்தர் அனுபூதி” என்ற தலைப்பில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டபோது அதில், மற்ற நூலாசிரியர்களைப் போலவே, நானும் ஒவ்வொரு செய்யுளையும் தனித் தனியாக பாவித்துத்தான் விளக்கியிருந்தேன்; ஆனாலும், ஒவ்வொரு செய்யுளின் விளக்கவுரையின் முடிவிலும் அச்செய்யுளில் புதைந்துள்ள முன்/பின் செய்யுள்களுடனுள்ள தொடர் கருத்தை (தத்துவப்பொருளை), சாதகர்களுக்கு உதவியாய் இருக்குமென்று கருதி, [ ] அடைப்புக்குறிக்குள் தந்திருந்தேன். ஏனெனில், செய்யுள்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற தனித்தனியானவை என்று அதற்குமேல் என்னால் கருத இயலவில்லை, --- “கந்தர் அநுபூதி”, இறை-அநுபூதி அடைய சாதகர்களுக்கு வழிகாட்டும் ஒரு தத்துவ நூல் என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை.*[1] எனவே, அப்புத்தகத்தின் முகவுரையில் நான் இவ்வாறாக குறிப்பிட்டிருந்தேன்: “இந்நூலில் பூடகமாகவும் மறைபொருளாகவும் சொல்லப்பட்டுள்ள தத்துவங்களை எடுத்தியம்பி, இது ஒரு தத்துவ நூல் (treatise) என்பதை எடுத்துக்காட்ட, பின்னர் ஒருநாள் இன்னொரு புத்தகம் எழுத வேண்டுமென்று நினைத்ததுண்டு. அதில் ஒவ்வொரு செய்யுளிலும் சங்கிலித் தொடராக ஓடும் அந்த வேதாந்த சாரத்தை வெளிக்கொணர்ந்து விளக்கி சாதகர்களுக்கு மிகவும் பயன்படும் ஒரு புத்தகமாக அமைத்திட நினைத்தேன் --- (ஓர் சாதகன் தன் சாதனையைத் தொடங்குவதற்குத் தேவையான வழிகாட்டுதலிலிருந்து ஆரம்பித்து, அச்சாதனையை அவன் மேற்கொள்ளும்போது அவன் அவ்வப்போது எதிர்கொள்ளும் தடைகளை சமாளிப்பதற்கும் உதவி புரிந்து, அவன் இறுதியாக இறை-அநுபூதியை பெற்றிடும் வரையில் வழிகாட்டும் ஓர் நூல்).” “கந்தர் அநுபூதி” நூலின் மீதான எனது நம்பிக்கை இவ்வாறாக அசைக்க முடியாததாக இருந்ததால்தான், இந்த “உட்பொருள் உணர்த்தி பக்தி-ஞான அருள்வழி காட்டும் கந்தர் அநுபூதி” (‘The Esoteric KANDAR ANUBHUTI’) என்ற தலைப்பில் இப்புத்தகமாக வெளிவருகிறது. குருதேவ் சிவானந்த மகராஜ் மற்றும் கந்தப் பெருமானின் கிருபைதான், இப்பணிக்கு தொடக்கத்திலிருந்து வழிகாட்டி ஊக்கமளித்தது. இந்த தெய்வீக சங்கல்பம் நிறைவேறும்வரை அவர்கள் என்னை ஒரு க்ஷண நேரம்கூட திருப்தியுடன் ஓய்வெடுக்க விடவில்லை.

    செய்யுள்களில் புதைந்துள்ள உட்கருத்தைப் புரிந்துகொள்ள முயலும் பொழுது, நாம் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்வது நல்லது; அதாவது, அருட்செல்வர் அருணகிரியார் தன்னை ஒரு சாதகனாகக் கருதிக் கொண்டு கந்தர் அனுபூதியை இயற்றியுள்ளார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, நாம் இச்செய்யுள்களை பாராயணம் செய்யும் சமயத்தில், இவை அருணகிரியாரின் சொந்த வாழ்க்கையையோ அல்லது அவரது அனுபவங்களையோ குறிப்பிடுவனவல்ல என்பதை நன்றாக மனதில் கொள்ளவேண்டும்; ஆன்மீகப் பாதையில் செல்லும் ஒரு சாதகன் பாடுவதாக (அல்லது தன்னையே அந்தச் சாதகனாக) பாவித்துக் கொண்டு பாடவேண்டும். இவ்வாறு செய்து வந்தால், இதில் புதைந்துள்ள மறைபொருளை உணர ஏதுவாகும்; அவை தாமே உள்ளிருந்து வெளிப்படும்.

    இந்த எனது புதிய முயற்சியானது ஒரு சாதகனுக்கேனும் அவனது ஆன்மீக இலக்கை அடையும் பயணத்தில் ஒரு சிறிதளவேனும் உதவியாய் இருக்குமாயின், அதுவே என் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம் (வெகுமதி) ஆகும். இந்த விளக்கவுரையை எழுதுவதில் நான் ஈடுபட்டிருக்கும்போது, பல உயரிய ஆன்மீக உண்மைகளும் இரகசியங்களும் எனக்கு வெளிப்பட்டன; எனவே, நிச்சயமாக, இதை எழுதியதன் மூலம் பெருமளவில் பயனடைந்தவன் நான்தான் என்பதில் ஐயமில்லை.

    ஒவ்வொரு செய்யுளும் பின்வரும் முறையில் விளக்கப்பட்டுள்ளது:

    அ) முதலில், அருட்செல்வர் அருளிய செய்யுள். (வாசிப்பதற்கு எளிதாகவும், வாசிக்கும் பொழுதே பொருளைப் புரிந்து கொள்ள பயன்படுமாறும் அளவிலும் சொற்கள் பிரித்து அமைக்கப்பட்டுள்ளன.)

    ஆ) இரண்டாவதாக, செய்யுளின் பொழிப்புரை (முழுமையான பொருள் புரிவதற்காக சில சொற்கள் அடைப்புக்குள் தரப்பட்டுள்ளன,)

    இ) மூன்றாவதாக, செய்யுளிற்கான விரிவான விளக்கவுரை. {செய்யுள்களுக்கிடையில் உள்ள இரகசிய உட்கருத்துத் தொடர்பை விளக்கமாக வெளிப்படுத்தும் விதத்தில் (வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட) ஒரு விவேகமான அணுகுமுறையில் செய்யுள்களுக்கு விளக்கம் அளிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.}

    செய்யுள்களில் கந்தப் பெருமானின் பெயர்கள், மகிமைகள் மற்றும் லீலைகள் ஆகியவைகளின் குறிப்புகள் வரும்போது, ஸ்கந்த புராணத்திலிருந்து அதற்கேற்ப நிகழ்வுகள், கதைகள் மற்றும் குறிப்புகள் ஆகியவைகள் தொகுக்கப்பட்டு இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

    ‘தி டிவைன் லைஃப் சொசைடி’ பதிப்பித்த எனது ‘Kandar Anubuthi’ (ஆங்கில) புத்தகத்திலிருந்து தேவையான பகுதிகளை, எனது புதிய புத்தகமான “The Esoteric Kandar Anubuthi” யில் உபயோகித்துக் கொள்வதற்கு இசைவும் அநுமதியும் தந்த சொசைடிக்கு நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    “The Esoteric Kandar Anubhuti” என்ற எனது ஆங்கிலப் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்துத் தரும் (இந்த மொழி பெயர்ப்பு) ஓர் பிரம்ம பிரயத்தனமான பணியை, ஆன்மீகச் சேவையாக மேற்கொண்டு, மிகவும் சுலபமாக படிக்கக்கூடியதொரு சரளநடையில் அதனை (இந்த மொழி பெயர்ப்பை) அமைத்துத் தந்த முனைவர் திரு கி. பாலச்சந்திரன் [M. A. (Economics), Ph. D (Management)] அவர்களுக்கு எவ்வார்த்தைகளைக் கூறி என் இதயபூர்வமான நன்றியை தெரிவிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. மிகப்பெரிய இப்பணியை நிறைவாகச் செய்து தருவதற்கு அவர் எடுத்துக்கொண்ட மிகக் குறுகிய கால அவகாசமான ஒரு வருடத்திற்குள், வேறு யாராலும் இதனைச் செய்திருக்க இயலாதென்பது என் நிச்சயமான அபிப்பிராயம். நேபாளம், ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவின் பலபகுதிகளுக்குப் புனித யாத்திரைகள் மேற்கொள்ளுதல், தனது மற்ற பணிகள் இவற்றுக்கிடையில், இந்த மொழிபெயர்ப்புப் பணியை ஒரு வருடத்திற்குள் செய்வதென்பது அவருக்கு சாத்தியமாயிருந்தது என்றால், தான் எடுத்துக்கொண்ட பணியை எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்ற அவரது அர்ப்பணிப்பு பாவனை மற்றும் உறுதிப்பாடுதான் அதற்குக் காரணமாயிருந்திருக்க வேண்டும். கந்தப் பெருமானின் கிருபைதான் அவர்மூலம் இவ்வாறு செயல்பட்டிருக்கிறது என்பது சர்வ நிச்சயம். இதெல்லாம் பெருமான் மற்றும் அவர் பக்தர்களின் மகிமையே. பெருமானின் கிருபை அவரது வாழ்க்கையை எல்லாவிதத்திலும் செறிவூட்டி, இப்பிறவியிலேயே இறை-அனுபூதியை அவருக்கு அருளிட வேண்டி இறைஞ்சுகிறேன்.

    முனைவர் பாலச்சந்திரன் அவர்கள் இத்தமிழாக்கப்பணியை ஏற்பதற்கு மூல காரணமாயிருந்த பூஜ்யஸ்ரீ ஸ்வாமி கிருஷ்ணாத்மாநந்த சரஸ்வதி, ஆசார்யா, சின்மயா மிஷன், ஓசூர், தமிழ்நாடு, அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை சமர்ப்பித்திட நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். அவர் தனது ஆசியை எனக்கு வழங்கி அருளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    கந்தப் பெருமானின் கிருபை நம்முடைய ஆன்மீகப் பாதையில் ஒளிதந்து, வழிகாட்டி, நமது முயற்சிகளை வெற்றி பெறச்செய்து, அருளிட வேண்டும் என்று நான் முழுமனதுடன் பிரார்த்திக்கிறேன்.


சிவானந்தா ஆசிரமம், ரிஷிகேஷ்
11வது ஜூன், 2019.
N.V. கார்த்திகேயன்*[1] {பின்னர் இப்புத்தகத்தின் இரண்டாவது பதிப்பு 1990லும், மூன்றாவது பதிப்பு 2005லும் வெளி வந்தது, மேலும் இப்புத்தகம் இரு அன்னிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு -- இத்தாலி மொழியில் 1999லும், ஜெர்மன் மொழியில் 2009லும் -- புத்தகங்களாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்பதை இத்தருணத்தில் தாழ்மையுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்}.
            

No comments:

Post a Comment