செய்யுள் 4



செய்யுள்– 4


வளைபட்ட   கைம்மாதொடு   மக்களெனும்
தளைபட்டழியத்   தகுமோ   தகுமோ
கிளைபட்டெழு   சூருரமும்   கிரியும்
தொளைபட்டுருவத்   தொடு   வேலவனே.

    பொழிப்புரை: “ஓ முருகா! உனக்கெதிராகத் தன் சுற்றம் புடைசூழப் போருக்கு வந்த சூரபத்மனின் மார்பையும் க்ரௌஞ்ச மலையையும் துளைத்து ஊடுருவிப் போகுமாறு வேலைச் செலுத்திய வேலாயுதப் பெருமானே! கையில் வளையல் அணிந்த பெண் (மனைவி) மற்றும் குழந்தைகள் என்னும் குடும்பத்தளையில் கட்டுப்பட்டு சிக்கி நான் அழிகிறேனே. இது (உன் பெருமைக்கு) தகுதியோ? பெருமானே, இது முறையோ?”

விளக்கவுரை

    அந்த சாதகன் ஜபம், பஜனை முதலியவைகளைச் செய்துகொண்டு தனது (ஆன்மீக) சாதனையைத் தொடங்கி விட்டான் (செய்யுள்-1). இச்சாதனையின் மூலம் தான் அடையவேண்டிய இலக்கைப் பற்றிய ஒரு தெளிவான கருத்தையும் கொண்டு விட்டான் (செய்யுள்–2, 3). தனது ஆன்மீகப் பயிற்சியை மேலும் வலிவுடையதாக்கிக்கொள்ள, அச்சாதகன் வேதசாஸ்திர நூல்களை கற்கவும், ஸத் சங்கம் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகளில் பங்கேற்கவும், ஆசிரமங்களுக்குச் சென்று வரவும் ஆரம்பிக்கிறான். இவற்றைச் செய்வதற்கு பெருமளவு நேரம் தேவைப்படுகிறது. ஆனால், இச்சாதனைகளை தொடர்வதில் பலவிதமானத் தடைகளை எதிர்கொள்கிறான். முதன்முதலில் வரும் தடைகள் ஸ்தூல ரூபத்தில் இருக்கின்றன –---- மனைவி, மக்கள் போன்றவர்களால் ஏற்படும் வெளிச் சுற்றுப்புற சூழ்நிலைத் தடைகள்தான் முதலில் எதிர்ப்படுகிறது. வாழ்க்கையில் இதுவரை அவனது மகிழ்ச்சிக்கு ஊற்றுக்கண்ணெனக் கருதப்பட்டு வந்த அவன் குடும்பமே, தற்போது அவனால் ஒரு தளையாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அது அவனது தற்போதைய குறிக்கோளுக்குப் புறம்பாக ஆகிவிட்டது, மேலும் அது அவனுடைய பெரும்பாலான நேரத்தையும் சக்தியையும் வேண்டி நிற்பதால், அது அவனது சாதனையில் குறுக்கிடுகிறது, அவனது சாதனையை பாதிக்கிறது.

    வெளிப்படையாகப் பார்க்கும்போது, குடும்பம் ஒரு பந்தமாகத் தோன்றுகிறது. ஆனால், உண்மையில், அவனது பூர்வ ஜன்ம கர்மங்களே அவ்வாறான சூழ்நிலைமைகளைக் கொணர்ந்து, அவ்வாத்மாவை சம்சார பந்தத்தில், உலக வாழ்க்கையில், ஆழ்த்துகிறது (செய்யுள்–27). அறியாமை காரணமாக, குடும்பம், சொத்து, அந்தஸ்து ஆகியவைகள் சந்தோஷத்தை அளிக்கும் என்று முன்னர் நினைத்தான், அவைகளை பெருமுயற்சி செய்து அடைந்தான். அவைகளும் சிலகாலம் அவனை இன்பத்தில் ஆழ்த்தத்தான் செய்தன. ஆனால், அவைகளை அடைந்து, சிலகாலம் நன்கு அனுபவித்த பிறகு, அவைகளின் வசீகரம் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கி, பின்னர், ஒரு காலகட்டத்தில், அவனால் அவைகளுடன் சந்தோஷமாக வாழவோ, வேண்டாமெனத் தூக்கி எறியவோ முடியாதநிலை வந்தமைகிறது. இத்தகைய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட அச்சாதகன், இருதலைக் கொள்ளி எரும்புபோல, எவ்வாறு பரிதவிக்கிறானென்பதை, இச்செய்யுள் நேர்த்தியாகச் சித்தரிக்கிறது. அவ்வாறாகிவிட்ட தன் நிலைமையை நினைத்து அவன் நொந்து கொள்கிறான். சில சமயங்களில், ஒருக்ஷணநேரத்திற்கு, பந்தமென்று உணரப்படும் தன் குடும்பத்தை அவன் துறக்க விரும்புவான்; ஆனால், அதேசமயம், அவன் ஏற்றுக்கொண்ட குடும்பப்பொறுப்பும், அவனுக்கு இன்னும் அவற்றின்பால் உள்ள கவர்ச்சியும், பற்றும் அவனை அவ்வாறு செய்ய விடுவதில்லை. இவ்வாறு உணரும் நிலைகூட இறைவன் அருளால் மட்டுமே ஒருசில பாக்கியசாலிகளுக்குக் கிடைக்கிறது. அப்பொழுதுதான், இச்செய்யுளில் முறையிடுவதைப்போல் ஒருவனால் வேண்ட முடியும். அந்த நிலையிலுள்ள அச்சாதகன் இறைவனிடம் கதறியழும் குரல் இச்செய்யுளில் தொனிக்கிறது. இவ்வாறாக, இச்செய்யுளில் வைராக்கியம் எனும் விதை விதைக்கப்படுவது தெரியவருகிறது; அச்சாதகனின் மனதில் ஈண்டு விதைக்கப்பட்ட அவ்வைராக்கிய விதையானது முளைத்து, மரமாக வளர்ந்து, சில காலத்திற்குப்பின் அநுபூதி எனும் இனிய பழத்தை அளிப்பதைப் பின்வரும் பகுதிகளில் போகப்போகக் காண்போம்.

    சாதனை எனும் ஆன்மீகப் பயிற்சி, ஆண், பெண் எனும் இரு பாலாருக்கும் சரிசமமாக உரித்தானதே; அது ஜீவாத்மாவின் பரிணாம வளர்ச்சி சம்பந்தப்பட்டதே தவிர, அதன் உடலைப் பற்றியதல்ல. மேலும், ஆத்மாவில் ஆண்-ஆத்மா, மற்றும் பெண்-ஆத்மா என்றெல்லாம் கிடையாது. ஆகையால், மனைவி, கணவனுக்கு பந்தம் என்று சொன்னால், கணவனும் மனைவிக்கு அவ்வாறே பந்தம் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். இந்நூலின் விளக்கவுரையில் எங்கெல்லாம் மனைவி/பெண் என்று வருகிறதோ, அங்கெல்லாம் அது கணவனுக்கும்/ஆணுக்கும் சாலப் பொருந்தும் என நாம் மனதில் கொள்வோமாக.

    ஒரு சாதகனின் (ஆணோ, பெண்ணோ) வாழ்க்கை, உள்ளிருக்கும் தெய்வீகத் தன்மையைப் படிப்படியாக விரிந்து மலரச் செய்வதாகும்; அதில் அவன் எதிர்கொள்ளும் தடைகளும் அவற்றைப் படிப்படியாக வெல்லுவதும் சேர்ந்திருக்கிறது. சாதனையில் ஒரு தடை கடக்கப்பட்டவுடன், அதைவிட மிகவும் வலிவானதும், நுண்ணியதுமான இன்னொரு தடை அவனைத் தாக்கும்; அதை வென்றிட அதிகக் கடுமையான சாதனையும் இறைவனிடம் மேலும் சரணமடையவும் வேண்டியிருக்கும். இம்முயற்சி இறைவனின் கிருபையை அவன்பால் ஈர்க்கும். இப்படியாக, மேலும் மேலும் கடும்முயற்சி, மேலும் மேலும் இறைவனருள் ------ இறுதி இலக்கான மோட்சம் அடையப்படும்வரை இச்சாதனை செயல்முறை தொடரப்படவேண்டும். சாதனை சிறிது கால விஷயமல்ல; அது வாழ்நாள்பயிற்சி. அதனால்தான் “பாடும் பணியே பணியாய் அருள்வாய்” என்று முதல் செய்யுளிலேயே பிரார்த்தனை செய்யப்பட்டது. பிரச்சனைகளைப் படிப்படியாக சமாளித்து, வென்று, அநுபூதி அடைய, இறைவனின் கிருபை இணைந்த சாதகனின் விடாமுயற்சி மிகவும் அவசியம்.

    சிவபெருமானிடமிருந்து பலவித திவ்ய வரங்களை வேண்டிப் பெற்று பெரும் சக்தி அடைந்திருந்த அசுரன் சூரபத்மன், தனது சுற்றம் புடை சூழ கந்தப் பெருமானுடன் கடும்சமர் புரிந்தான். அப்போரில் அவனுக்கு உதவிட வந்திருந்த அனைவரும் அழிக்கப்பட்டபின், அவன் மட்டும் தனித்து நின்றபோது, அவன் பலவித உருவங்களை மாறிமாறி எடுத்து (கந்தப் பெருமானுடன்) போர் புரிந்தான்; ஒருமுறை பல கிளைகளைக் கொண்ட மிகப்பெரிய ‘மா’ மரமாகி கந்தப் பெருமானை எதிர்த்தான். பெருமான் தன் வேலாயுதத்தால் அம்மரத்தை பிளந்து அழித்தார். இவ்வாறு, சுப்ரமணியப் பெருமான் ஒரு விளையாட்டுப் போல, தன் திவ்ய ஆயுதமான வேலால் சூரனைத் துளைத்துக் கொன்றார். இதையே இச்செய்யுளில் “கிளைபட்டு எழுசூர் உரமும் கிரியும் தொளைபட்டு உருவத்தொடு வேலவனே” என்று கூறப்பட்டுள்ளது.

    சூரபத்மனின் தம்பியான தாரகாசுரனின் சேனைத்தலைவர்களில் ஒருவன் க்ரௌஞ்சன். அவன் பல வழித்தடங்களைக் கொண்ட மலையாக உருவெடுத்துக் கொள்வான். வழிப்போக்கர்கள், அதிலும் முக்கியமாக ரிஷிகளும், முனிவர்களும், அவ்வழிகளில் நடந்து மலைக்குள் வந்தவுடன், அசுரனான அக்ரௌஞ்சமலை அனைத்து வழிகளையும் தன்னுள் மூடிக்கொண்டு, அவர்களைக் கொன்றுவிடும். இதுவே க்ரௌஞ்சனின் பொழுதுபோக்காக இருந்தது. ஒரு சமயம், சிவபெருமானின் உத்தரவின்படி அகஸ்திய முனிவர் இமயமலையிலிருந்து தென்திசை நோக்கிப் புறப்பட்டார். க்ரௌஞ்சன் இவரையும் தன் தீய யுக்திக்கு ஆளாக்க முயன்றான். ஆனால், அகஸ்தியர், தன் உள்ளுணர்வின் மூலமாக சரியான நேரத்தில் அதை உணர்ந்து, க்ரௌஞ்சனை பின்வருமாறு சபித்தார்: “பின்னர் ஒருகாலத்தில் கந்தப் பெருமான் எறியப்போகும் வேலினால் நீ பிளக்கப்பட்டு அழியும்வரை மலையாக இருக்கக் கடவாய்’. கந்தப் பெருமான், தேவர்களின் சேனைக்குத் தலைமைதாங்கி சூரபத்மனை அழிப்பதற்காக இமயமலையிலிருந்து தென் திசை நோக்கிச் செல்லும்போது, இந்த (க்ரௌஞ்ச) மலையை எதிர்கொண்டார்; உடனே தன் கூரிய வேலை எறிந்து அம்மலையாக நின்ற க்ரௌஞ்ச அசுரனைக் கொன்றார். இந்த (க்ரௌஞ்ச) மலை, பத்ரி-கேதார்நாத் யாத்திரை மார்க்கத்தில் (உத்தரகாண்டம் மாநிலம்) ருத்திர பிரயாகை என்னும் ஊருக்கு அருகில் உள்ள ‘அகஸ்திய முனி’ என்ற கிராமத்திற்குப் பக்கத்தில் இன்றும் இருக்கிறது. பெரிய மலையாய் நின்ற இவ்வசுரனைக் கொன்ற கந்தக் கடவுளுக்கு இம்மலையின் உச்சியில் ஒரு அழகிய ஆலயமும் அமைந்துள்ளது.

    இச்செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ள மலையானது, சூரபத்மனைத் தொடர்ந்து சென்றும், அவனுக்கு பல வழிகளில் உதவிக் கொண்டிருந்ததும், அவ்வேலால் பிளக்கப்பட்டதுமான ‘ஏழுகிரி’ என்ற மலையாகவும் கூட இருக்கலாம்.

    இங்கு மலை எனப்படுவது கர்மாவையும், சூரபத்மன் என்பது அவித்தையால் போஷிக்கப்படும் அகந்தையையும் குறிப்பிடுகிறது. எவ்வாறு மலையும், அசுரனும் கந்தப் பெருமானின் வேலால் மட்டுமே அழிக்கப்பட இயலுமோ, அவ்வாறே கர்மமும், அவித்தையும் (அறியாமையும்) ஞானத்தால் மட்டுமே அழிக்கப்பட இயலும். எனவே, அச்சாதகன் “இறைவா, நீ அசுரனையும் மலையையும் அழித்தாய். நான் மட்டும் கர்மம் மற்றும் அவித்தை (மனைவி மற்றும் மக்கள்) ஆகிய தளைகளின் பாதிப்புக்கு ஆளாகத்தான் வேண்டுமா?” என்றுக் கதறுகிறான். வெறும் மனித முயற்சியை மட்டும் கொண்டு இந்த சம்சார பந்தத்தை எவராலும் வெட்டிட இயலாது. மனைவி மற்றும் குழந்தைகள் மீதான பாசப் பிணைப்பு மிகவும் உறுதியாக கெட்டிப்பட்டு இருப்பதால், தெய்வ கிருபை தவிர வேறெந்த ஒன்றினாலும் அதனை அறுத்திட இயலாது. இச்செய்யுளில் அருணகிரியார் கையாண்டிருக்கும் சொற்களில் விசேஷ சக்தி பொதிந்துள்ளது. ஒரு தீவிர சாதகன் இப்பாடலை வெறுமனே சிலமுறை திரும்பத்திரும்பப் பாடினாலே கண்ணீர் விட்டு கதறத் தொடங்குவான், மேலும் அது பெருங்கருணை படைத்த கந்தப் பெருமானின் இதயத்தையும் நெகிழச்செய்யும், என்பதில் சிறிதும் ஐயமில்லை.

No comments:

Post a Comment