செய்யுள் 3செய்யுள் – 3


வானோ   புனல்பார் கனல்   மாருதமோ
ஞானோ   தயமோ   நவில்நான்   மறையோ
யானோ   மனமோ   எனையாண்ட   இடம் 
தானோ   பொருளாவது   ஷண்முகனே.

    பொழிப்புரை: “ஓ ஷண்முகப் பெருமானே! உண்மை அல்லது மெய்ப்பொருள் எது? நிலமா, நீரா, நெருப்பா, காற்றா, ஆகாயமா? (அதாவது பஞ்ச பூதங்களா? அதில் ஏதாவதொன்றா?); அல்லது புலன்சார் அறிவு உதிக்கும் நிலையா? (அல்லது அப்புலன் விஷயங்களிலிருந்து தோன்றும் உலகியல் அறிவா?); அல்லது ஓதப்படும் (மெய்யறிவின் ஆதாரமான) நான்கு வேதங்கள்தானோ?; அல்லது மனமோ?; அல்லது “நான்” எனப்படும் அகந்தையோ?; அல்லது அந்த அகந்தை (ஆட்கொள்ளப்பட்டு) கரைந்து அமிழ்கிற “இடம்”ஆகிய “தான்”ஓ? (அதாவது, நானெனப்படும் அகந்தை எதில் ஒடுங்குமோ, அந்த “அது”-வோ?)”.
விளக்கவுரை

    சாதகன் சென்ற (2வது) செய்யுளில் தன் வாழ்வின் குறிக்கோளாகிய ‘எல்லாம் அற என்னை இழந்த நலம்’ தந்தருளுமாறு இறைவனை வேண்டினான். அது ஒரு பக்தனின் நோக்கிலிருந்து செய்யப்பட்டது. அதுவே இங்கு வேதாந்தப் பார்வையிலிருந்து விளக்கப்படுகிறது. நித்திய மெய்ப்பொருள் தத்துவத்தை தன் பகுத்தறிவின் துணைகொண்டு எவ்வாறு தீர்க்கமாக விசாரணை செய்வது, மற்றும் முடிவில் அதை எங்கு எப்படி அடைவது என்பதற்கான செயல்முறையை இம்மூன்றாம் செய்யுள் சுட்டிக் காட்டுகிறது. இது, வேதாந்த தத்துவத்தின் நேதி-நேதி (இது அல்ல, இது அல்ல) என்ற கோட்பாட்டைப்போன்றது. இச்செயல்முறையில், உலகில் இருப்பவைகளையெல்லாம் ஒவ்வொன்றாக ஆராய்ந்து, அவற்றை ‘இது இல்லை’, ‘இது இல்லை’ என்றுத் தள்ளியபிறகு, கடைசியில் எது மிஞ்சுகின்றதோ, அதை மெய்ப்பொருளாக அறிவது. அந்த மெய்ப்பொருள் (மெய்யுணர்வு) என்பது பஞ்ச பூதங்களும் அல்ல, புலன்சார் அறிவும் அல்ல, வேதங்களும் அல்ல, மனதும் அல்ல, ‘நான்’ எனப்படும் அகந்தையும் அல்ல (எல்லாம் அற). பின் எதுதானென்றால், ‘அகந்தை’ எனும் தனித்தன்மை (Individuality), எதில் அமிழ்ந்து, கரைந்து, ஐக்கியமாகின்றதோ --- என்னை இழந்த ‘இடம்’ எதுவோ --- “அது”தான் “தான்” எனப்படும் மெய்ப்பொருள்’. அந்த மெய்ப்பொருளானது நம் ஒவ்வொருவரின் இதயத்தில் என்றும் எப்பொழுதும் “தான்” எனும் ஆத்ம தத்துவமாக ஒளிர்கிறது; அகந்தை கைதுறந்து விடப்பட்டால் அல்லது அத்தத்துவத்தில் கரைந்துவிட்டால், அதை ‘தன்னில் தானாகவே’ உணரலாம்.

    இது ஒரு மிகவும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் செய்யுள்! எது உண்மைப் பொருள்? நம் கண்ணெதிரே இருக்கும் எண்ணற்ற பொருள்களை உடைய இந்த ஸ்தூல உலகமே நமக்கு உடனடியாகத் தெரியும் யதார்த்தமான உண்மை. ஆனால், இப்பொருள்கள் அனைத்தும் பஞ்ச மகாபூதங்கள் எனப்படும் மண், நீர், நெருப்பு, காற்று, மற்றும் ஆகாயம் எனும் ஐந்து பெரிய தனிமங்கள் மாறிமாறி, வெவ்வேறு விகிதங்களில் ஒன்றுக்கொன்று இணைந்து பலவிதமாக சேர்ந்ததினால் உருவாகியவை. இத்தனிமங்கள் உண்மைப் பொருளா? இல்லை. ஏனெனில், ஒருபொழுதும் மாறாமலும், மற்றும் என்றுமிருப்பது (முக்காலத்திலும் இருப்பது) எதுவோ, அதுதான் மெய்ப்பொருள். ஆனால், இவ்வுலகப் பொருள்களும், தனிமங்களும் எப்பொழுதும் மாறிக்கொண்டும், தோன்றி மறைந்து கொண்டும் இருப்பவை. அவை உண்மைப்பொருள் ஆகா. அடுத்ததாக, ஐம்பொறிகள் எனப்படும் ஞான-இந்திரியங்களால் ஏற்படும் பார்த்தல், கேட்டல், தொட்டு உணர்தல், ருசித்தல், நுகர்தல் ஆகிய அறிவு அந்த உண்மைப்பொருளா? இல்லை. ஏனெனில், அவ்வுணர்வுகள் தரும் இந்திரியங்களே மாறும் தன்மை படைத்தவை. அடுத்ததாக, அறிவுக் களஞ்சியமாக மதிக்கப்பட்டு, தொன்றுதொட்டுக் கற்பிக்கப்பட்டும், கற்கப்பட்டும் வருகின்ற நான்கு வேதங்கள்தான் அந்த உண்மைப்பொருளா? இல்லை. காரணம், அந்த வேதங்கள் (உபநிஷதங்கள்) அந்த உண்மைப்பொருள் தத்துவத்தை தியானிக்கும் முறை அல்லது உத்திகளைத்தான் தருகின்றதே தவிர, அவைகளே உண்மைப்பொருளல்ல. அதனால்தான் வேதங்கள்கூட அம்மெய்ப்பொருளை அடைய முடியாமல் திரும்புகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அடுத்ததாக, இந்திரியங்கள் தரும் தகவல்களுக்கேற்ப செயல்படும் மனம் தானோ அந்த உண்மைப்பொருள்? அதுவும் இல்லை. இறைவன் (உண்மைப்பொருள்) மனோதீதன் (செய்யுள்-26). அடுத்ததாக, எங்கும், எல்லாவற்றிலும் தன்னை வலியுறுத்திக் கொள்ளும் அந்த நானெனும் அகந்தையோ அந்த உண்மைப்பொருள்? அதுவும் இல்லை. இவைகளில் எந்த ஒன்றும் அந்த உண்மைப்பொருளாக இருக்க முடியாது. ஏனென்றால், இவையனைத்தும் எப்பொழுதும் மாறிக்கொண்டேயிருக்கும் ஸத் துவம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் சேர்க்கையால் வெவ்வேறு விதமாக மாறிக்கொண்டே இருப்பதையே தன்னியல்பாகக் கொண்டிருக்கும் (Change alone is the changeless law of nature) பிரகிருதி தத்துவத்திலிருந்து தோன்றியவை. ஆனால், இவ்வாறு விசாரணை செய்து அறியும் தத்துவம் ஒன்று இருக்கவேண்டும். மேலும் அது நிரந்தரமானதாக, அதாவது தன்னில் எவ்வித மாறுதல்களையும் அடையாததாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்றவைகளில் ஏற்படும் மாறுதல்களை அது காணமுடியும். எந்த தத்துவம், தான் தன்னில் எவ்வித மாறுதல்களையும் அடையாமல், இவ்வாறு விசாரணை செய்கிறதோ அந்த விசாரிக்கும் தத்துவம், விழிப்புணர்வு (Consciousness) (அ) பேரறிவு (Intelligence) எனப்படும்; அது தூய புத்தி / அகந்தையில் உண்மைப்பொருளின் (ஆத்மாவின்) பிரதிபலிப்பு. அது ஒருபொழுதும் உண்மையற்றதாக ஆகமுடியாது. புத்தி, அகந்தை, மனம், இந்திரியங்கள் ஆகிய ஊடகங்களின் மூலமாக அந்த பிரதிபலிப்பான நானெனும் அகந்தையாக செயல்படும்போது, அது அவைகளுடன் ஒன்றாகி, அவைகளின் தன்மைகளுக்கு ஆளாகிறது, அதாவது அவைகளால் கட்டுப்படுத்தப் படுகிறது.. ஆனால், மேற்கூறியவாறு விசாரணை செய்வதன்மூலம் தன்னை உலகப் பொருள்களின் மீதான நாட்டத்திலிருந்து முதலில் பொறிகளுக்குள் உள்வாங்கி (திரும்பி), பின்னர் பொறிகளிலிருந்து மனதுக்கும், மனதிலிருந்து புத்தி, மற்றும் அதிலிருந்து அகந்தைக்கும் படிப்படியாக பின்வாங்கிக் கொண்டு ஆன்மசாதனை செய்யும் பொழுது, முன்னர் அவைகளால் ஏற்பட்ட கட்டுப்பாடுகளிலிருந்து படிப்படியாக விடுபட்டு, இறுதியில் தன் இதயத்தில் உறையும் ஆதாரமான ஆத்மாவில் தன்னை முழுவதுமாக இழக்கிறது; ஆத்மாவில் ஆட்கொள்ளப்படுகிறது. அந்த ஆத்மா, “எனை ஆண்ட இடம்”ஆகிய “தான்”; அதுவே “பொருள்” ----- உண்மைப் பொருள், பரம்பொருள் தத்துவம்; அதுவே ஷண்முகப் பெருமான்.

    உண்மைப்பொருள் எது என்று அறியும் முயற்சியில் அகந்தை தோல்வியையே அடைகிறது. ஏனெனில், உண்மைப்பொருள் ‘அறியப்படும்’ ஒன்று அல்ல, ஆனால் “அனுபவமாக” உணரப்படுவது. எப்பொழுது? நானெனும் அகந்தை அற்றுப் போகும்போது, மெய்ப்பொருள் தன்னைத்தானே “அனுபவமாக” வெளிப்படுத்திக் கொள்கிறது. அகந்தை, உண்மைப்பொருளை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்வரை, அதை உணர முடியாது. ஆனால் அகந்தை இந்த தவறைத்தான் செய்கிறது. வெளியுலகப் பொருள்களில், ஐம்பொறிகளின் மூலம், மனம் மற்றும் புத்தியால் உண்மைப்பொருளைத் தேடும்போது, இந்த முயற்சிகளில் அது தோல்வியடைகிறது. பின்னர், இவை உபயோகமற்றவை என்று அறிந்து, இவற்றிலிருந்து படிப்படியாக பின்வாங்கும்போது, அகந்தையும் படிப்படியாக சூட்சுமமாகிக்கொண்டே வருகிறது. இருந்தாலும், அது செயல்படுவதையும் நானெனும் உணர்வையும் மட்டும் இழப்பதில்லை. ஆனால், அது கடைசியில் தன் ஆதாரமும் இருப்பிடமானதுமான இதய குகையை அடையும்போது, அங்கு மிளிரும் ஆத்மாவில், (தானெனும் மெய்ப்பொருள் உணர்வில்) தன்னை இழந்துவிடுகிறது, மறைந்துபோகிறது. அப்பொழுது அவ்வகந்தையான நானெனப்படும் தனித்தன்மை முற்றிலுமாகக் கரைந்து அழிந்து போய்விடுகிறது – “என்னை இழந்த நலம்” அடையப் படுகிறது. இதற்கு ஒரு உதாரணம். ஒரு உப்பினால் செய்யப்பட்ட பொம்மை கடற்கரையில் நின்றவாறே அக்கடலின் விஸ்தீரணம், மற்றும் ஆழம் எவ்வளவு என்றறிய கண்ணுக்கு எட்டியவரை கடலைப் பார்த்துக்கொண்டே இருந்தால், அதை அறியமுடியாது. ஆனால், அப்பொம்மை (தான் உற்பத்தியான) அக்கடலினுள் இறங்கி உள்ளே செல்லச்செல்ல, அது கொஞ்சம்கொஞ்சமாகக் கரைந்துகொண்டேபோய், கடைசியில் கடலாகவே ஆகி, தன்னையே கடலாக ‘அறி’ந்து’ கொள்ளும்.

    (ஒவ்வொரு ஜீவ) “உடலின் மையத்தில் பாவக்கறைகளற்ற பரிசுத்தமான சிறிய இதய தாமரை உள்ளது. அது பரமாத்மாவின் உறைவிடம், அதற்குமுள்ளே ஆனந்தமயமான ஆகாசவெளி ஒளிர்கிறது. அதை தியானம் செய்தல் வேண்டும்” என்று மகாநாராயண உபநிஷத் உபதேசிக்கிறது.

    நானெனப்படும் அகந்தையழிவதே மெய்ப்பொருள் அநுபவம். (கோவில் கர்ப்பகிரகத்தின் முன்னாலுள்ள திரை விலக்கப்படும்பொழுது, திரைக்கு பின்னாலுள்ள இறைவனின் தரிசனம் நமக்குக் கிடைப்பதுபோல) இவ்வாறு மெய்ப்பொருளாகத் தன்னை அறிவதே மெய்யறிவு. அறிபவனை அறிவது அறிவு (ஞானம்).

    இதயத்தையும் புத்தியையும், பிரார்த்திக்கும் மனநிலையையும் நுண் விசாரணை செய்யும் இயல்பையும், பக்தியையும் ஞானத்தையும் மிக லாவகமாகக் கலந்த சாதனைமுறையை மிகவும் பயனைத்தரும் விதமாக கந்தர் அனுபூதி முழுவதிலுமே அருணகிரியார் கையாண்டுள்ளார். இது கூர்ந்து நோக்கவேண்டிய ஒரு மிகவும் சுவாரஸ்யமான விஷயம். ஒரு பறவை மேலே மேலே சென்று பறப்பதற்கு அதன் இரு சிறகுகளும் உறுதுணையாக அமைகிறது. அவ்வாறே இவ்விரண்டு சாதனை யுக்திகளான பக்தியும் ஞானமும், பேரின்பம் தரும் இறை-அனுபவத்தை அச்சாதகன் அடைய துணை செய்கின்றன. இவ்வாறு, அச்சாதகன் பக்தனாக முந்தையச் செய்யுளில் செய்த பிரார்த்தனையானது, இச்செய்யுளில் ஆத்ம விசாரணையாக தொடரப்பட்டு, இப்படியாகப் பின்வரும் செய்யுள்களில் மேன்மேலும் வலுவூட்டப்பட்டு, இலக்கை அடைவதுவரை தொடரப்படுகிறது.

    இந்த ஆன்மிக ஆய்வில், புறப்பொருள்களிலிருந்து (குடும்பம் முதலானவை – செய்யுள்-4) பின்வாங்கி உள்நோக்கிப் பயணிக்கத் தொடங்கும் அச்சாதகன் முதலில் தனக்கு வந்து, தன்னை உடலாகக் கருதுகிறான். பின்னர், அவன் உடலல்ல, ஆனால் உண்மையில் ஆத்மா என்று அறிவுறுத்தப்படுகிறான் (செய்யுள்–8). இவ்வாறு ஸ்தூல உடலிலிருந்து துவங்கி, சூட்சும உடல், காரண உடல் என்று மேன்மேலும் உள்நோக்கிச் செல்லும் பயணம், அவை அனைத்தையும் தாண்டி கடவுள், பிரம்மம், மற்றும் ஆத்மாவெனப்படும் மெய்ப்பொருளை (Self or Atman) அவன் உணரும்வரை தொடர்வதைக் காணலாம் (செய்யுள்-42, 43, 44). “தான்”, “அது” இவையிரண்டும் பரம்பொருளைக் குறிப்பனவே என்பது செய்யுள் 3, 13, 28, 49 etc., இவைகளிலிருந்து புலப்படும்.

No comments:

Post a Comment