கந்தர் அநுபூதி ஆராய்ச்சி


உட்பொருள் உணர்த்தி
பக்தி-ஞான அருள்வழி காட்டும்
கந்தர் அநுபூதி
*********

இந்த ஆராய்ச்சி ஏன்? எதற்காக?

    “கந்தர் அநுபூதி” நூல், அருட்செல்வர் அருணகிரிநாதரின் நூல்களில் தலைசிறந்ததாக, அதாவது ‘முகட்டில் பதித்த ரத்தினம்’ போன்றதாகக் கருதப்படுகிறது. இது 51 செய்யுள்களைக் கொண்ட மிகச் சிறிய நூலாக இருப்பினும், பொருளிலும் உட்கருத்துக்களிலும் மிகவும் ஆழமானது. இதை ஒருவன் தினசரி பாராயணம் செய்து வந்தால், அது அவனது ஆத்ம-உணர்வை மேலெழுப்பி உயரிய விழிப்புணர்வு நிலைக்கு கொண்டு செல்லும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதை தினசரி தவறாமல் முறைப்படி பாராயணம் செய்துவந்ததால் பெருமகிழ்ச்சியும் நற்பயன்களும் அடைந்துள்ளனர். கற்றறிந்த பண்டிதர்கள் இதிலுள்ள ஞானத்தின் ஆழத்தையும் மற்றும் ஆன்மீக அனுபவங்களையும் கண்டு ஆச்சரியமடைகின்றனர். மணற்கேணியை தோண்டத் தோண்ட அதில் குபுகுபுவென்று நீர் பொங்கி நிரம்புவதைப்போல, இதை ஒருவன் தொடர்ச்சியாகப் பலகாலம் முறையாகப் பாராயணம் செய்தும், கற்றும் வந்தால், இதனுடைய உட்பொருள்கள் மேன்மேலும் தாமாகவே வெளிப்படுகின்றன. எனவே, கந்தர் அநுபூதி நூலுக்கு பக்தர்களான எழுத்தாளர்களாலும் அறிவுமுதிர்ந்த ஆராய்ச்சியாளர்களாலும் உரைகள் எழுதப்பட்டுள்ளன. ஏனெனில், அவர்கள் ஒவ்வொருவரும் இது விஷயமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தங்களிடம் அரிய ஞானம் இருப்பதாக நினைத்தார்கள். ஆனால், எனது இம்முயற்சி, கந்தர் அநுபூதியில் உள்ள மறைபொருளையும் ரகசியமான உபதேசங்களையும் ஆராய்ந்து, இறை-அனுபூதியை அடைய அவை காட்டும் பக்தி-ஞான அருள் வழியைக் அறிவதுதான்.

    அருட்செல்வர் அருணகிரியாரின் ஆசியை வேண்டி தாயுமானவ சுவாமிகள் பின்வருமாறு பிரார்த்தித்துள்ளார்:

    “கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி சொன்ன
    எந்தை அருள் நாடி இருக்கும் நாள் என்னாளோ?”

{“கந்தப் பெருமானின் அநுபூதியை நேரடியாகப் பெற்று, (பின்னர்) ‘கந்தர் அநுபூதி’ நூலை இயற்றி அருளிய என் ஆன்மீக தந்தையின் (அருட்செல்வர் அருணகிரியாரின்) அருளை நாடிப் பெற்றிருக்கும் நாள் எப்பொழுது வருமோ?”}

    அருட்செல்வர் அருணகிரியார் இயற்றி அருளிய நூல்களில் அவர் புகழ்பெறக் காரணமாக இருப்பது திருப்புகழ்தான். இது நாம் அனைவரும் அறிந்ததுதான். அப்படி இருக்கும்போது, தாயுமானவ சுவாமிகள் அருணகிரியாரின் அருள் வேண்டிப் பிரார்த்திக்கும்பொழுது, அருணகிரியாரின் மற்ற நூல்களும் மகத்தானவையாக இருப்பினும், அவற்றைப் பற்றி எதுவும் பேசாமல், அருணகிரியாரைப் போற்றிப் புகழ கந்தர் அநுபூதி நூலை மட்டும் ஏன் அவர் தேர்ந்தெடுத்தார்? அதற்கு மகத்தான காரணங்கள் அவரிடம் இருந்திருக்க வேண்டும்; மேலும், கந்தர் அனுபூதியில் மிக மிக அசாதாரணமான, உள்ளார்ந்த விஷயங்கள் இருப்பதாக அவர் கருதியிருக்க வேண்டும். அது என்னவாக இருக்கக்கூடும்? அதையறிய ஆழ்ந்து சிந்தனை செய்ய வேண்டும்.

    தாயுமானவ சுவாமிகள் மேற்கூறியவாறு பொருட்செறிவுடன் போற்றிப் புகழ்ந்து உரைப்பதிலிருந்து நாம் சில முக்கியமான அர்த்தமுள்ள கருத்துக்களை உறுதி செய்யலாம்:

    (1) சில விரிவுரையாளர்கள் கந்தர் அநுபூதி நூல் அருணகிரியார் வெவ்வேறு சமயங்களில் அவரின் அவ்வப்போதைய மனப்போக்கிற்குத் தகுந்தவாறு பாடியது --- சமயம் ஆன்மீகரீதியில் மனம் உயர்நிலையில் இருந்தபோது, சாதனை செய்யும் சமயத்தில் மனம் கலங்கியிருந்தபோது, பலவீனங்களையும் தடைகளையும் கடந்திட பெருமானின் அருள் வேண்டிப் பிரார்த்தித்தபோது, என்று பலவகை மனப்போக்கிற்கும் சூழ்நிலைக்கும் தக்கவாறு தனித்தனியாக இயற்றப்பட்ட செய்யுள்களின் தொகுப்பு என்கின்றனர். இத்தகைய நோக்கு சரியானதாகத் தோன்றவில்லை, ஏனெனில் அருணகிரியார் இறை-அநுபவத்தை முழுமையாகப் பெற்றபின்னர்தான் கந்தர் அனுபூதியை அருளிச்செய்தார்.

    (2) இன்னொரு பார்வை மிகவும் வேடிக்கையானது; இதன்படி அருணகிரி-கிளி தேவலோகத்திற்குச் சென்று பாரிஜாத மலரை கொண்டுவந்து அரசனின் கண் பார்வையை மீட்டெடுத்தபின், திருவண்ணாமலை அருகே ஓர் அரச மரத்தில் அமர்ந்து, தனது அலகால் ஒவ்வொரு செய்யுளாக ஒவ்வொரு அரச இலையில் எழுதி கீழே போட்டது என்றும் அவை ஒன்றாகத் திரட்டப்பட்டதே கந்தர் அநுபூதி நூல் என்றும் அதனால்தான் செய்யுள்களுக்குள் தொடர்பு இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இத்தகைய கருத்து பொது அறிவிற்குக்கூட பொருத்தமானதாகப் படவில்லை; ஏனெனில், ஒரு கிளியால் செய்யுள்களை எழத முடியுமென்றால், செய்யுள்களின் எண்களையும் அத்துடன் எழுதியிருக்கலாமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை? அது செய்யுள்கள் இயற்றியதை நாம் நம்பும்போது, அதுதான் எண்களையும் எழுதியதென்று நம்ப, தாராளமனம் கொள்ளக்கூடாதா? மற்றும் சிலர், கிளி திருத்தணிகைக்குப் பறந்து சென்று முருகப்பெருமானின் கையில் அமர்ந்து கொண்டு, கந்தர் அநுபூதி நூலைப் பாடியதாகக் கூட சொல்கிறார்கள்.

    இவ்விரு கருத்துகளும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல, ஏனெனில் அவை தாயுமானவ சுவாமிகள் சொன்னதற்கு மாறாக உள்ளன --- அவர் ‘கந்தர் அநுபூதி’ “சொன்ன எந்தாய் என்றுதான் சொன்னாரே தவிர, “சொன்ன என்கிளி என்று சொல்லவில்லை.

    ‘கந்தர் அநுபூதி சொன்ன எந்தாய்’’ என்று தாயுமானவர் சொல்வதிலிருந்து, கந்தர் அநுபூதி நூலை அருணகிரியார் ஒரு கிளியாய் இருந்து அருளினார் என்று கருதுவதை அவர் ஏற்றுக்கொள்வதாகத் தோன்றவில்லை.

    (3) கந்தர் அநுபூதி செய்யுள்களை அருணகிரியார் பல்வேறு சமயங்களில் இயற்றினார் என்றும், அதை ஒரு நூலாக தொகுத்தது அருணகிரியாரல்ல என்றும், வேறு யாரோ அதை தொகுத்தனர் என்றும், இதற்கு மறுசீரமைப்புத் தேவை என்றும் சிலர் கூறுகின்றனர். இத்தகைய கருத்து அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது, ஏனெனில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக அது மாற்றப்படாமல் நமக்கு வந்து சேர்ந்துள்ளது, மேலும் அது அருணகிரியார் இயற்றியது என்று தாயுமானவர் போன்ற மகாமுனிவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது, மேலும் எண்ணற்ற பக்தர்கள் இதை தினசரி முறையாகப் பாராயணம் செய்து பல நல்ல பலன்களை அடைந்துள்ளனர். அருட்செல்வராலேயே அருளப்பட்ட இந்நூலின் செய்யுள்களின் வரிசைக்கிரமம் திருப்திகரமில்லை என்றால், அதை ஒரு சாதாரண மனிதன் மறுசீரமைப்பு செய்தால் அது எப்படி திருப்திகரமாய் இருக்கக்கூடும்? மேலும், அதை மறுசீரமைப்பு செய்வதில் ஒரு அபாயம் உள்ளது. அவ்வபாயம் என்னவெனில் ஒருவர் ஒருவிதத்தில் மறுசீரமைப்பு செய்தால், அது மற்றவர்க்கு திருப்தி இல்லாமற்போய், அவர் இன்னொரு வகையில் மறுசீரமைப்பு செய்யக்கூடும். இவ்வாறாக பலர் செய்திடக்கூடும். இதன் விளைவு என்னவாகும்? கந்தர் அநுபூதி நூலிற்குப் பலவகையான பதிப்புகள் வந்து, ஒவ்வொருவரும் தனது பதிப்பே உண்மையானது என்று வாதாட, அது பெரும் குழப்பத்திற்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. எனவே, மாமுனிவர் அருணகிரிநாதருக்கும், அவர் தந்த தெய்வீக வெகுமதியான கந்தர் அநுபூதிக்கும், செய்யுள்களின் வரிசைக் கிரமம் மறுசீரமைக்கப்பட வேண்டுமென்று நினைப்பதைவிட, பெரிய தீங்கும் அவமதிப்பும் வேறெதுவும் இருக்கமுடியாது.

    இந்நூலிற்கு மறுசீரமைப்புத் தேவை என்று யாராவது கருதினால், அவர் தான் அருணகிரியாரைவிட அறிவிலும் தகுதியிலும் சிறந்தவர் என்று தன்னை பறைசாற்றிக் கொள்கிறார் என்று பொருள். அவ்வாறெனில், அவர் தானே புதிதாக ஒரு ‘அநுபூதி’ நூலை இயற்றி விடலாமே! எதற்காக அவர் அறிவாற்றலால் அல்லாமல் இறைவன் அருளால் படைக்கப்பட்ட ஒரு புனித நூலில் தலையிட வேண்டும்?

    இதேபோல், இந்நூலைப்பற்றி வேறு சில கருத்துகளும் உள்ளன, நாம் அதைப்பற்றியெல்லாம் பேசப்போவதில்லை. இவ்வாறு விதவிதமான கருத்துகள் சொல்லப்படுவதற்கு காரணம் ஒன்றேஒன்றுதான், அதாவது, செய்யுள்களில் ஒரு நேர்மையான தொடர்பு அல்லது கோர்வை (அதாவது ஒரு செய்யுளுக்கும் மற்றொரு செய்யுளுக்கும் உள்ள கருத்துத் தொடர்பு) வரிசைமுறையை அவர்களால் காண இயலாமைதான் காரணம். அதனால்தான், இந்நூல் பல்வேறு செய்யுள்களின் தொகுப்பு என்றும், அருட்செல்வரால் தரப்பட்ட ஒரு முழுமையான படைப்போ அல்லது ஒரு தத்துவ நூலோ அல்ல என்றும் கருதுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், இச்செய்யுள்களிலுள்ள தொடர்பை நம்மால் அறிந்துகொள்ள இயலவில்லை என்பதை ஒத்துக்கொள்வதும் ஒரு தொடர்பை (எவ்வளவு அதிருப்திகரமாய் இருக்குமாயினும்) கண்டுபிடிக்க முயல்வதும்தான் நற்புத்திக்கு உசிதமாய் இருக்கும். இதற்கு மாறாக தெய்வீக அருட்கொடையான இந்நூலில் தலையிடுவது முறையல்ல என்பது என்னுடைய கருத்து.

    தாயுமானவ சுவாமிகள் காலத்திலேயே இம்மாதிரியான கருத்துக்கள் பரவி இருக்கலாம். அவர் ஒரு ஞானியானதால், அவைகளை மறுக்காமல் அல்லது அவைகளில் உண்மை இல்லையென்று நேரடியாகக் கூறாமல், உண்மையை மட்டும் தனது புகழுரையில் கூறியுள்ளார், அது தானாகவே மற்ற கருத்துகளை நிராகரித்து விடுகிறது.

    “கந்தர் அநுபூதி” ஒரு முறையான தத்துவநூல்தான், சிதறிக்கிடந்த செய்யுள்களின் கலவை அல்ல, என்பது திருப்புகழ் பாடல்கள் சிலவற்றிலிருந்தும் தெரிய வருகிறது.

    (4) அருட்செல்வர் அவர்கள் தன் திருப்புகழ் பாடல் 1211ல் (“ஆசைகூர் பத்தனேன்…”) சொல்லியபடி, கந்தப் பெருமானுக்கு ஒரு பாமாலை சூட்டிட நெடுநாளாக பக்திமிக்க ஆசை கொண்டிருந்தார். கந்தர் அநுபூதி நூலை இயற்றி அவருடைய அவ்விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டார் எனச் சில ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அந்த திருப்புகழ் பாடலின் முதல் பகுதி இவ்வாறு உள்ளது: “நான் உன்மீது ஆசைமிக்க பக்தியுள்ளவன், --- உனக்கு ஓர் மாலை அணிவிக்கும் ஆசை எனக்கு உள்ளது. (எத்தகைய மாலை?) என்னுடைய ‘மனம்’ (எண்ணங்கள்) என்பதையே தாமரை மலராகக் கொண்டு, அதன் நடுவே அன்பு என்கின்ற நாரைக்கொண்டு, நாவிலே அழகாகவே கட்டி, ஞானம் எனும் நறுமணம் வீசும், --- அந்த மாலை ஒளியுடன் விளங்கவும், மாசில்லா புனிதர்களின் புத்தி களிப்படையவும், --- ஒரு மாத்ருகா புஷ்ப மாலையை உந்தன் பவளம் போன்ற செங்கமலப் பாதங்களில் சமர்ப்பிக்கும் பாக்கியம் என்று எனக்குக் கிடைக்குமோ!”.

    “மாத்ருகா புஷ்ப மாலை” என்பது சமஸ்கிருத மொழியின் 51 எழுத்துக்களைக் (அவிலிருந்து க்ஷவரை எழுத்துக்கள்) கொண்டு இயற்றப்பட்ட பாடல்களினாலான ஒரு படைப்பு. இதுவே ‘அக்ஷர மாலை’ என்றும் அழைக்கப்படுகிறது; அதாவது எழுத்துக்களாலான (பா)மாலை. ‘மாத்ருகா புஷ்ப மாலை’ என்பதன் அர்த்தம், “(எண்ணிக்கை 51க்கு இணையாக) 51 பாடல்களைக்கொண்ட ஒரு நூல்’ என்றும் சொல்லப்படுகிறது. கந்தர் அநுபூதி நூலும் 51 செய்யுள்களைக் கொண்டிருக்கிறது என்பதால், அது ‘மாத்ருகா புஷ்ப மாலை’ என்றாகிறது.

    இத்திருப்புகழ் பாடலின் முக்கிய கருத்துக்களாவன: இது (கந்தர் அநுபூதி) மனக்கமலமெனும் மலர்களாலான பாமாலை; இம்மாலையானது கந்தப் பெருமானின் பாதகமலங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மனம், ஜீவாத்மாவின் மற்றொரு பெயர்; பெருமானின் பாதகமலங்கள், பரமபதம் (அ) மோட்சத்தைக் குறிக்கிறது. எனவே மனக்கமல மாலையை இறைவனின் பாதகமலங்களில் சமர்ப்பிப்பது என்றால் ஜீவாத்மாவை பரம்பொருளான பிரம்மத்தில் அர்ப்பணம் செய்வது என்று அர்த்தம், அதாவது, ஆத்ம- சாக்ஷாத்காரம் அடைவது அல்லது இறைஅநுபவம் அடைவது என்று பொருள்.

    இத்தகைய கருத்து திருப்திகரமானதாகவும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகவும் தோன்றுகிறது, ஏனெனில் கந்தர் அநுபூதி நூல் 51 பாக்களைக் கொண்டது, மேலும் அருணகிரியார் அவர்களே இதை “செஞ்சொற் புனைமாலை --- அதாவது ‘அழகிய தமிழ்ச் சொற்களால் புனையப்பட்ட மாலை’ --- என்று காப்புச் செய்யுளில் குறிப்பிடுகிறார். அநேகமாக, இச்சொற்றொடரின் மூலம் அருணகிரியார் திருப்புகழ் பாடலில் (1211) அவர் கூறிய ‘மாத்ருகா புஷ்ப மாலை’ என்ற சொற்றொடரைத்தான் சுட்டிக் காட்டுகிறார் என்று எண்ணத்தோன்றுகிறது. “செஞ்சொற் புனைமாலை” என்ற சொற்றொடரில் உள்ள “மாலை” என்ற சொல் தனிச் சிறப்பு வாய்ந்தது, அதாவது இந்நூலானது வெறும் உதிரி மலர்களின் (செய்யுள்களின்) சேர்க்கையல்ல; ஆனால், உண்மையில் இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் இயற்றப்பட்ட முழுமையான நூல், அதாவது ஒரு தத்துவ நூல் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

    (5) திருத்துருத்தி என்ற ஊரில் அருணகிரியார் அருளிய “மலைக் கனத்தென மார்பினிலே” என்ற திருப்புகழ் பாடலை (85௦) நோக்குமிடத்து, கந்தர் அநுபூதி நூல் பல செய்யுள்களின் தொகுப்பல்ல, ஆனால் பெருமானின் பிரத்யேக அருளாணைப்படி அவரால் தரப்பட்ட ஒரு ஆய்வுநூல் என்பது தெளிவாகிறது. பொதியமலை என்ற ஊரில், அருணகிரியார் பெருமானிடம் வேல் மற்றும் மயிலின் முத்திரை (சின்னங்)களை தனது உடலில் பதித்திடுமாறு பிரார்த்திக்கிறார் (“வெடித்த வார்குழல்” --- திருப்புகழ்: 413). ஏற்கனவே (4ல்) கூறியபடி, அவர் “மாத்ருகா புஷ்ப மாலை”-யை பெருமானுக்குச் சூட்ட விரும்பினார் (“ஆசைகூர் பத்தனேன்” --- திருப்புகழ்: 1211). பெருமான் இவ்விரு பிரார்த்தனைகளையும் திருத்துருத்தியில் நிறைவேற்றித் தருகிறார்: அருணகிரியாரை (கந்தர்) அநுபூதியை பாடப் பணித்து, வேல், மயில் சின்னங்களை அவர் தோளின்மீது பதித்து அருளினார். திருத்துருத்தியில், அருணகிரியார் ஒரு கனவுக்காட்சி கண்டார்; அதைப் பற்றி “மலைக் கனத்தென மார்பினிலே” என்ற திருப்புகழ் பாடலின் (85௦) ஒரு பத்தியில் இவ்வாறு கூறுகிறார்:

    அடைக் கலப்பொரு ளாமென நாயெனை
    அழைத்து முத்திய தாமநு பூதியெ
    னருட்டி ருப்புக ழோதுக வேல்மயி லருள்வோனே.

    “”அடைக்கலம் (சரணம்) கொடுக்கப்பட்டவன் எவ்விதம் காப்பாற்றப் படுவானோ, அவ்விதம் நாயனைய அடியேனை அன்புடன் அருகில் அழைத்து, (எனது இரு தோள்களிலும் எனைக் காக்கும் கவசமாக) வேற்பொறி மயிற்பொறி இட்டு, “எனது அருளும் எனது தெய்விக புகழும் (திரு+புகழ்) நிறைந்த முத்தியாகிய (அல்லது முத்தியைத் தரவல்ல) கந்தர் அநுபூதியை ஓதுக” எனத் திருவாய் மலர்ந்தருளியவனே!””

(குறிப்பு: முத்தியைத் தரவல்லது கந்தர் அநுபூதி. எனவே அருணகிரிநாத பெருமான் கந்தர் அநுபூதியையே முத்தி என்று கூறுகின்றார்.)

    அக்கனவுக் காட்சியிலிருந்து எழுந்தவுடன், அருணகிரியார் தனது இரு தோள்களிலும் வேல் மற்றும் மயிலின் சின்னங்கள் பொறிக்கப் பட்டிருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தார். அவரிடம் ஆனந்தம் பெருக்கெடுத்து கரைபுரண்டோடியது; உத்வேகம் பீரிட்டுக் கிளம்பியது, உடனே அவர் பெருமான் இட்ட கட்டளையை நிறைவேற்றும்விதமாக “கந்தர் அநுபூதி” நூலை அநேகமாக அங்கேயே அப்பொழுதே இயற்றினார்போலும். வேல் மயில் சின்னங்கள் பொறிக்கப்பட்டதால், அதற்கு நன்றி பாராட்டும்விதமாக, கந்தர் அநுபூதியின் முதற் செய்யுளை ஆடும் பரி வேல்”, (ஆடும் மயில் மற்றும் வேல்) என்றே தொடங்கினார்; மேலும், 51 செய்யுள்களுடைய இந்நூலில், வேல் 25 செய்யுள்களிலும், மயில் 8 செய்யுள்களிலும் குறிப்பிடப்பட்டும், பிரார்த்திக்கப்பட்டும் இருப்பதைக் காணலாம். அதேபோல, அருள் (கிருபை) எனும் சொல் காப்புச் செய்யுளில் தொடங்கி, முதல் செய்யுள், மற்றும் நூல் முழுவதிலும் ஆங்காங்கு பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது; விசேஷமாக அநுபூதி செய்யுளான 43லும், கடைசி செய்யுளிலும் (51) குறிப்பிடப்பட்டு போற்றப்பட்டுள்ளதைக் காணலாம்.

    இப்பொழுது நாம் தாயுமானவரின் பாராட்டிற்கு திரும்பவும் சென்று, அதிலிருந்து மேலே தொடர்வோம். கந்தர் அநுபூதி அல்லது இறை- அநுபவத்தை அடைந்த பின்னரே, அருணகிரியார் “கந்தர் அநுபூதி” நூலை அருளினாரென்று தாயுமானவர் சொல்கிறார். எனவே, இந்நூலிலுள்ள 51 செய்யுள்கள் ஒவ்வொன்றும் அருணகிரியார் பெற்ற வெவ்வேறு இறை- அநுபவங்களைப் பற்றி விவரிப்பதாக இருந்தால், நாம் அதை அப்படியான இறை-அநுபூதிப் பாடல்களின் தொகுப்பு என்று சொல்லலாம். ஆனால், அது அப்படி இல்லை. ஒரு சில செய்யுள்களே இறை-அநுபவங்களைப் பற்றி விவரிக்கின்றன; மற்ற பல செய்யுள்கள் இறை-அநுபவத்திற்கு யாதொரு சம்பந்தமும் இல்லாமல் வினோதமானதாக உள்ளன. இறை-அநுபூதி பெற்றபின்னர் இயற்றப்பட்ட இந்நூல் ஏன் வினோதமான தன்மையுள்ள செய்யுள்களைக் கொண்டுள்ளன? அருணகிரியார் ஏன் சில செய்யுள்களில் பாலியல் மற்றும் மரண பயம் போன்ற விஷயங்களில் உதவியற்று இருப்பதுபோல் தெரிவித்து தவித்து, பெருமூச்சுவிட்டு நெட்டுயிர்த்து, அழுது, புலம்புவதாகச் சொல்கிறார்? உதாரணங்கள்: “வளைபட்ட கைம்மாதொடு மக்களெனும், தளைபட்டழியத் தகுமோ தகுமோ” -- “கையில் வளையல் அணிந்த பெண் (மனைவி) மற்றும் குழந்தைகள் என்னும் குடும்பத்தில் கட்டுண்டு சிக்கி நான் அழிகிறேனே, இது (உன் பெருமைக்கு) தகுமோ? பெருமானே, இது முறையோ?” (செய்யுள்-4); “மகமாயை களைந்திட வல்லபிரான், முகமாறு மொழிந்தும் ஒழிந்திலனே; அகமாடை மடந்தையர் என்றயரும், ஜகமாயையுள் நின்று தயங்குவதே.” -- “ஷண்முகப் பெருமான் மகாமாயையே அழிக்கக் கூடிய திறமை கொண்டவர். ‘ஷண்முகா’, ‘ஷண்முகா’ (‘ஆறுமுகா’, ‘ஆறுமுகா’) என்று நான் அவர் பெயரைப் பலமுறை ஜபித்துக் கொண்டிருந்தாலும், மனதை மயக்கும் வீடு (மண்ணாசை), சொத்து (பொன்னாசை), மனைவி (பெண்ணாசை) ஆகிய உலகமாயையில் சிக்கிக் கொண்டு, அவைகளை இன்னும் விடுவதற்கு முடியவில்லையே” (செய்யுள்-5); “மட்டூர்குழல் மங்கையர் மையல்வலைப் பட்டூசல்படும் பரிசென்று ஒழிவேன்” ---- “பெருமானே! தேன் சொறியும் வாசனைப் பூக்களை தன் கூந்தலில் சூடும் மங்கையரின் மையல் வலையில் அகப்பட்டு, என் மனம் அலைபாய்ந்து ஊசலாடிக்கொண்டிருக்கும் இந்நிலையிலிருந்து நான் என்றுதான் விடுபடுவேன்?” (செய்யுள்-9); “அடியைக் குறியாது அறியாமையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ” --- “அறியாமையின் தாக்குதலால் தங்கள் திருவடிகளைச் சிந்திக்க இயலாமல் நான் முற்றிலும் அழிந்திடத்தான் வேண்டுமோ! இது நியாயமோ, ஓ பெருமானே, இது நீதியோ?” (செய்யுள்-23); “கூர்வேல்விழி மங்கையர் கொங்கையிலே சேர்வேன் அருள்சேரவும் எண்ணுமதோ” --- “கூரிய வேல் போன்ற பார்வையை உடைய மங்கையர் கொங்கைகளில் சேர்ந்து தழுவி வாழ்ந்தவனாகிய எனக்கு, உனது கிருபையைத் தந்தருள நினைக்க மாட்டாயா?” (செய்யுள்-24); இவ்வாறாக மேலும் பல செய்யுள்களில் கூறுகிறார்: (செய்யுள்கள்: 10, 16, 25, 27, 31, 33, 34, 35, 39 மற்றும் 50).

    இச்செய்யுள்களில், இரண்டைப்பற்றி மட்டும் நாம் விரிவாகக் காண்போம். “வளைபட்ட கைம்மாதொடு மக்களெனும், தளைபட்டழியத் தகுமோ தகுமோ” -- “கையில் வளையல் அணிந்த பெண் (மனைவி) மற்றும் குழந்தைகள் என்னும் குடும்பத்தில் கட்டுண்டு சிக்கி நான் அழிகிறேனே, இது (உன் பெருமைக்கு) தகுமோ? பெருமானே, இது முறையோ?” (செய்யுள்-4); “சிந்தாகுல இல்லொடு செல்வமெனும் விந்தாடவி என்று விடப்பெறுவேன்” ---- “மனதிற்குத் துயரங்களைத் தருகின்ற, அடர்ந்து-பரந்திருக்கும் விந்தியமலைக் காடுகளைப் போன்றிருக்கும் குடும்பம் மற்றும் செல்வத்தை விட்டு நான் எப்போது விடுதலை பெறுவேன்?” (செய்யுள்-33). இவ்வாறாக அருணகிரியார் இச்செய்யுள்களில் பெருமானிடம் குறைபட்டுக்கொண்டு அழுகிறார், ஆனால் இந்நூலிற்கு முன்னரே இயற்றப்பட்டதாகக் கருதப்படும் அவரது ‘கந்தர் அலங்காரம்’ என்ற நூலிலோ, பாலியல் இச்சையெனும் கடலை தான் நிரந்தரமாகக் கடந்து விட்டதாகவும், மரண பயத்தையும் வென்று விட்டதாகவும் உறுதியுடன் பிரகடனப்படுத்துகிறார். மேலும், கந்தர் அநுபூதி நூலை இயற்றிய சமயத்தில் அவர் இல்லறவாசியல்ல, வீடுவாசலற்ற ஒரு துறவியாக இருந்தார். இந்த இரு விஷயங்களைக் கருத்தில் கொண்டு இப்புலம்பல்களை ஆராய்ந்தால், இவை அவரது சொந்த வாழ்க்கை நிலையையோ, அநுபவங்களையோ நிச்சயமாகக் குறிப்பிடுபவையல்ல; குறிப்பிடவும் முடியாதென்று நமக்குத் தெளிவாக விளங்கும். மேலும், தாயுமானவ சுவாமிகள் அருணகிரியார் மற்றும் கந்தர் அநுபூதி பற்றி சொன்னவைகள் தவறு என்றும் நாம் நினைக்க இயலாது. பின்னர் இச்செய்யுள்களை எப்படி எடுத்துக் கொள்வது? இல்வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான அறிவுரையை அவர் இச்செய்யுள்களின் மூலம் தந்துள்ளார் என்று எடுத்துக்கொள்ளலாமா? அல்லது, கிரகஸ்த ஆசிரம வாழ்க்கையை நிந்தனை செய்வதாகக் கொள்ளலாமா? இல்லை; அப்படியெல்லாம் கருதிட இயலாது. ஏனெனில், இல்வாழ்க்கையில் யாதொரு தவறுமில்லை; கிரகஸ்த வாழ்க்கை ஒரு தார்மீகமான நேர்மையான வழி; உயரிய வாழ்க்கைக்கான ஒரு பாதுகாப்பான பாதை, மற்றும் இது மற்ற மூன்று ஆசிரமவாசிகளுக்கும் ஆதரவு தருகிறது. (‘அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்கிறது திருக்குறள்). மேலும், இல்வாழ்க்கையில் இருக்கும் கோடிக் கணக்கானவர்களில் எவ்வளவுபேர் உண்மையில் இத்தகைய அறிவுரையை வரவேற்று ஆதரிப்பார்கள்? அல்லது, மனைவி, குழந்தைகள் மற்றும் செல்வம் ஆகியவைகள் பந்தம் என்று உண்மையாகக் கருதி, அவைகளைத் துறந்திட எவ்வளவுபேர் உண்மையில் விரும்பி முன்வருவார்கள்? முந்தையப் பிறப்பிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆன்மீக சம்ஸ்காரங்கள் எந்த அரிய சில கிரகஸ்தர்களில் கொஞ்சம் வலுவாக உள்ளதோ, அச்சிலரே இவ்வாறு செயல்பட முன்வருவர். அதை விசிறி, கொழுந்துவிட்டு எரியும் பெருந்தீபோல் ஆக்குவது இந்த செய்யுள்களின் நோக்கமென்று தோன்றுகிறது. செய்யுள்கள் தன்மையில் இருப்பது (First person singular) இதற்கு மிகவும் உதவியாய் இருக்கிறது. மேலும், எவரிடம் ஆன்மீக சம்ஸ்காரம் பலவீனமாக இருக்கிறதோ, அதை இந்நூல் தூண்டிவிட்டு வலுவடையச் செய்யும்; அது இல்லாதவர்கள், ஆனால் அதற்குத் தயாராக இருப்பவர்களின் கைகளில் இந்நூல் எப்படியோ சென்று அதைத் தூண்டிவிடும். உலக இன்பங்களில் ஆழ்ந்து அதிலேயே மூழ்கி திருப்தி கண்டு வாழ்கிறவர்களைத் தவிர, மற்றவர்களின் கைகளில் எப்படியோ சென்றடையும். (செய்யுள்-17 பார்க்கவும்).

    இந்நூலின் மற்றவிதமான சில செய்யுள்களைப் பற்றிப் பார்ப்போம்! “அடியைக் குறியாது அறியாமையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ” --- “அறியாமையின் தாக்குதலால் தங்கள் திருவடிகளைச் சிந்திக்க இயலாமல் நான் முற்றிலும் அழிந்திடத்தான் வேண்டுமோ! இது நியாயமோ, ஓ பெருமானே, இது நீதியோ?” (செய்யுள்-23); “மதிகெட்டு அறவாடி மயங்கி அறக் கதிகெட்டு அவமே கெடவோ கடவேன்” --- “என் அறிவு குலைந்து, (மன) வேதனை அடைந்து, மதி மயங்கி, தர்மத்தின்படி வாழ்ந்தால் கிடைத்திடும் அந்த நற்கதியாகிய அநுபூதியை இழந்து, நான் வீணாகக் கெட்டு அழிந்து போவேனோ? (செய்யுள்-50). போன்றவை. இச்செய்யுள்கள் ஒருபொழுதும் அருணகிரியாரைக் குறிக்க முடியாது. ஏனெனில், அவர் ஆயிரக் கணக்கில் திருப்புகழ் பாடல்கள், கந்தர் அலங்காரம் போன்ற நூல்களை இயற்றியவர். கந்தர் அநுபூதியை இயற்றுவதற்கு முன்னரே, அவர் இறை-ஆனந்தத்தில் திளைத்திருந்தவர். அத்தகையவரிடம் அறியாமை எப்படி இருக்க முடியும்?

    மிகவும் ஆழ்ந்து, பாரபட்சமற்ற முறையில் இவற்றைப்பற்றி சிந்திக்கும்போது, மேற்கூறிய செய்யுள்கள் மற்றும் சில செய்யுள்களில் சித்தரிக்கப்படும் நிலைமைகள் நிச்சயமாக அருணகிரியாரைப் பற்றியவை அல்ல என்றும்; இறைவனை அடைய தீவிர இச்சை, எந்த அரிய சில சாதகர்களுடைய மனதில் எழுந்துள்ளதோ, அவர்கள் அப்பாதையில் முன்னேறிட அவர்களுக்கு உற்சாகமூட்டி, சரியாக வழிகாட்டிட மேற்கண்ட பாடல்கள்மூலம் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியத்திற்குத் தள்ளப்படுகிறோம். எனவே, முக்கியமாக இந்நூலானது அத்தகைய நிலைமையிலுள்ள சாதகர்களுக்குச் சரியான வழியைக் காட்டிடுவதற்காகவே அவரால் படைக்கப்பட்டது என்றே சொல்லலாம்; அதாவது, ---- ஒரு ஆன்மீக சாதகனின் சாதனையின் தொடக்கத்திலிருந்து துவங்கி, அவன் அப்பாதையில் எதிர்கொள்ளப்படும் கஷ்டங்கள் மற்றும் இடையூறுகள், அவற்றை சமாளித்து வெல்லும் வழிகள், அவன் அப்பாதையில் திகைத்து நின்றுவிடாமல் இருக்கவும், அவன் கடந்து செல்ல நேரிடும் பல்வேறு துயரமளிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் அநுபவங்களை குரு/இறைவனின் அறிவுரை மற்றும் கிருபையால் வெற்றிகொள்வது, உச்சகட்டமாக மகத்தான இறை-அநுபவத்தை (அடைவது) உணர்வது, இறைவனில் தன்னிலை இழந்த ஞானியாக (ஜீவன்முக்தராக) முதிர்ச்சி பெறுவது, ஒரு நடமாடும் தெய்வமாக உலகில் அனைவருக்கும் ஆனந்தத்தை வாரி வழங்கி வாழ்வது, மனித வர்க்கத்தின் நலன்களை மட்டுமே விரும்புவது என்பது வரையில் சாதகர்களுக்கு வழிகாட்டவேண்டி படைக்கப்பட்டது.

    மேற்குறிப்பிடப்பட்ட நோக்கத்தை திறம்பட செயல்படுத்திடும் பொருட்டு, செய்யுள்கள் தன்மையில் (தன்னை முன் நிறுத்தி) பாடப்பட்டுள்ளன. இதன் மூலம், ஒருவன் இவற்றைப் பாடும்போது (அ) பாராயணம் செய்யும்போது, இவை அவன் இதயத்தைத் தொட்டு, அவனிடம் தேவையான உணர்வை தட்டி எழுப்பும். இது இந்நூலின் நோக்கம் என்னவென்பதை மறைமுகமாகக் சுட்டுகிறது; அதாவது, அருணகிரியார் எதை தன் சுய அநுபவத்தில் (இறை அனுபவம்) உணர்ந்து மகிழ்ந்திருந்தாரோ, அந்த நிறை ஆனந்த (இறை) அநுபவத்தை அடைந்திடும் வழியைச் சாதகர்களுக்குக் காட்டுவதற்காகவே அவரால் இந்நூல் படைக்கப்பட்டது, ஆக இது இறையனுபூதி/ஆத்மானுபூதி பற்றிய ஒரு ஆய்வுநூல் அல்லது ஒரு தத்துவ நூலாகும்.

    ஆய்வுநூல் அல்லது தத்துவநூல் என்றால், ஒரு விஷயத்தை முறையாகக் கையாளும், விவரமாக ஆராயும் நூல் என்று அர்த்தம். எனவே, “கந்தர் அநுபூதி” ஆய்வுநூலில் ஆன்மிக சாதனையை ஒருவன் தொடங்குவதிலிருந்து ஆரம்பித்து, அவன் அதில் படிப்படியாக முன்னேறி, சாதனையின் குறிக்கோளான அனுபூதியை அடைவதுவரை, ஒரு செய்யுளுக்கும் அடுத்ததற்கும் இடையே கருத்துத் தொடர்ப்பு இழைபோல் இருக்கவேண்டியது மிகவும் அவசியம். ஆனால், இந்நூல் செய்யுள்களை மேலோட்டமாகப் பார்த்தால் யாதொரு கருத்துத் தொடர்ச்சியையும் காணமுடிவதில்லை; எனவே, அத்தொடர்ச்சியானது வெளிப்படையாகத் தெரியவில்லையென்றால், அது நிச்சயம் இரகசியமாக மறைக்கப்பட்டு (மறை-பொருளாக) இருக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கை. ஆகையால், ஒரு சாதகன், சாதனையின் முதல் கட்டத்திலிருந்து தொடங்கி, இறுதி இலக்கான இறை-அநுபவத்தை அடையும்வரை, அவனுக்கு வழிகாட்ட, செய்யுள்களில் வெளிப்படையாக சொல்லப்பட்ட அறிவுரைகளைத் தவிர, அவற்றில் உபதேசங்கள் இரகசியமாக (மறைபொருளாக --- உட்கருத்தாக) அமைந்து இருக்கவேண்டும் என்று நாம் திடமாக நம்பலாம்.

    இப்பொழுது: (1) “கந்தர் அநுபூதி” நூலின் பெயரும், அதன் செய்யுள்களின் வரிசைக் கிரமமும் அருணகிரியாலேயே செய்யப்பட்டன என்றும், இந்த ஆய்வுநூலை அவர் கொடுத்ததன் நோக்கம் சாதகர்கள் இறைவனை அடைவதற்கு வழிகாட்டியாய் இருப்பதற்காகத்தான் என்றும்; (2) ‘கந்தர் அநுபூதி’ என்ற தலைப்பிற்கு முழு நியாயம் செய்திட வேண்டுமானால்; (3) இறை-அநுபவத்தை அடைந்த பின்னரே அருணகிரியாரால் ‘கந்தர் அநுபூதி’ நூல் இயற்றப்பட்டது என்று அந்நூலுக்கு தாயுமானவ சுவாமிகள் கொடுத்த பாராட்டுதலுக்கு நாம் மரியாதை செலுத்துவோமாகில்; (4) இந்நூலை பாமாலை (செஞ்சொற் புனை மாலை) என்றும், முக்தியைத் தரவல்லது என்றும் கருதுவோமாகில் --- இவை அனைத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது --- (இதை ‘மாத்ருகா புஷ்ப மாலை’ என்று ஒப்புக்கொள்ளப்பட்டாலும் ஒப்புக்கொள்ளப்பட வில்லை என்றாலும்), இந்நூலில் ஒரு உட்பொருள் மகத்துவம் இருக்கவேண்டும் என்று நாம் திடமாக நம்புவது மிகப்போருத்தமே, நியாயமுமே. ஏனெனில், வெறுமனே இறைவனை போற்றிப்புகழும் செய்யுள்கள் (அ) செய்யுள்களின் தொகுப்பை ஓதுவதால் மட்டுமே ஒருவர் இறை-அநுபவம் அடைந்திட உதவி செய்யமுடியாது; காரணம், அது அவ்வளவு சுலபத்தில் அடையக்கூடிய அனுபவம் அல்ல. அது படிப்படியாக முன்னேறி, கொஞ்சம்கொஞ்சமாக மலர்ச்சி அடையும் அனுபவமாகும். இடைவிடாத அப்பியாசத்தின் (பயிற்சியின்) மூலம்தான் அநுபூதியை அடைய முடியும்; ஆழ்ந்த புரிதலுடன் முறையாக செய்யப்படும் பயிற்சியே அப்பரிபூரண நிலையை அடைய வழிகோலுகிறது. இதனாலேயே கந்தர் அநுபூதி நூல் மற்ற அனைத்து நூல்களிலிருந்தும் வேறுபட்டு உள்ளது ---- மற்றவர்களின் நூல்களிலிருந்து மட்டுமல்ல, அருட்செல்வர் அருணகிரியாரின் மற்ற நூல்களிலிருந்தும்கூட வேறுபட்டு தனிச்சிறப்புடன் திகழ்ந்து வருகின்றது. திருப்புகழ் பாடல்கள், கந்தர் அலங்காரம், போன்ற அவருடைய படைப்புகள் பாடுவதற்கு, பாராயணம் செய்வதற்கு, பஜனை செய்வதற்கு, உபயோகப்படலாம், அவைகள் இறை-ஸ்துதி (அ) இறைவனைத் துதிக்கும் பாடல்கள். அவைகளில் ஆன்மிக அறிவுரைகள் கூட ஆங்காங்கே இருக்கலாம், ஆனால் ‘கந்தர் அநுபூதி’ அப்படிப்பட்டதல்ல; ஏனெனில், வெறுமனே ஓதுவது மட்டும் ஒருவனை அநுபூதி (அ) இறை-அநுபவத்தை அடையச்செய்ய முடியுமென்று எதிர்பார்க்க முடியாது. அநுபூதியை அடைவதற்குத் தேவை, ஒரு முறையான, புரிதலுடன் செய்யப்படும் ஆன்மீகப் பயிற்சி --- அதுதான் இவ்வரிய கந்தர் அநுபூதி நூலில் தரப்பட்டுத் துல்லியமாக விளக்கப்பட்டுள்ளது. “கந்தர் அநுபூதி” என்ற தலைப்பை (1) “இறை-அநுபவம்” என்றும், (2) “இறை-அநுபவம் பெற அழைத்துச் செல்லும் பயிற்சி” என்றும் நாம் கூறினால், அது தவறானதாக இருக்காது என்று நான் நினைக்கிறேன்.

    “கந்தர் அநுபூதி” நூலை ஆழ்ந்து நோக்கும்போது, எல்லாச் செய்யுள்களும் ஒரேமாதிரியாக இல்லையென்பதையும், ஒரே வகையைச் சேர்ந்தவையல்ல என்பதையும் நாம் காண்கிறோம்; அதாவது எல்லாச் செய்யுள்களும் பிரார்த்தனை வடிவத்திலோ (அ) உதவியைக் கோரும் வேண்டுகோள் வடிவத்திலோ (அ) ஆன்மீக அநுபவங்களின் வெளிப்பாடுகளாகவோ (அ) அறிவுரைகளாகவோ (அ) எச்சரிக்கைகளாகவோ இல்லை. சில செய்யுள்கள் உணர்ச்சிகளைத் தொட்டு ஊக்குவிக்கின்றன; சில செய்யுள்கள் கழிவிரக்கம், கவலை மற்றும் பிரார்த்தனைகளை வெளிப்படுத்துகின்றன; சில தனக்கு அருளப்பட்ட பிரத்யேக ஆசீர்வாதத்திற்கு நன்றி தெரிவிப்பதாக உள்ளன; சில சாதகர்கள் பின்பற்றுவதற்காக தெளிவான அறிவுரைகளைத் தருகின்றன; சில உயரிய ஆன்மீக அநுபவங்களை அடைவதற்கான ஞானத்தையும் இரகசிய உத்திகளையும் தந்தருளுகின்றன; இது மட்டுமல்ல, இப்படியான பலதரப்பட்ட செய்யுள்கள் விசித்திரமான முறையில் இங்குமங்கும் தூவப்பட்டுள்ளன. இவ்வாறாக இருப்பது, இந்நூல் இறைவனை அடைவதற்கான ஒரு ஆய்வுநூலாக இருக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டி வலியுறுத்துகிறது. ஏனெனில் ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டு முயன்றுவருகிறவர்கள் தங்கள் பாதையில் விதவிதமான மனநிலைகளையும், அனுபவங்களையும் கடந்து செல்லவேண்டியதாய் இருக்கும், ஆகையால் இத்தகைய நூலில், அத்தனைவித கூறுபாடுகளும் அவசியம் தேவையாகிறது. (இதனால்தான் செய்யுள்களின் வரிசைக் கிரமத்தை மறுசீராய்வு செய்வது உசிதமல்ல என்று முன்னர் கூறினோம், ஏனெனில் அவ்வாறு செய்தால், அது இப்படைப்பின் நோக்கத்தையே குலைத்துவிடும்.) இந்நூலில் செய்யுள்களின் வரிசைக் கிரமமானது கணக்கிடப்பட்டு மிக நேர்த்தியாக இப்படைப்பின் நோக்கத்திற்கு ஏற்றவாறு, அருணகிரியாரால் விசேஷ நோக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. (ஆனால், பார்ப்பதற்கு தாறுமாறாக இருப்பதுபோல் மேற்போக்காகத் தெரிவதால், இது ஒரு முழுமையாகக் கொடுக்கப்பட்ட நூலல்ல; பலவகையான செய்யுள்களின் தொகுப்பு என்று சிலரால் கருதப்படுகிறது). ஒவ்வொரு செய்யுளின் உட்கருத்து அல்லது விஷயம், அக்குறிப்பிட்ட செய்யுளில் அச்சாதகன் எந்நிலையில் இருக்கிறானோ, அந்நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கும். அதாவது ஆன்மீகத் தேடலுக்குத் தேவையான அறிவுறுத்தலை அல்லது வழிகாட்டுதலை வழங்குகிறதாகவோ, அல்லது அவனது அப்போதைய மனநிலையை, அநுபவங்களை வெளிப்படுத்துவதாகவோ, அல்லது அவன் அப்போது எதிர்கொள்ளும் தடைகளை வெற்றிகொள்ள இறைவனின் கிருபையை வேண்டி பிரார்த்திப்பதாகவோ, அல்லது இது போன்று ஏதோ ஒன்றாகவோ இருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும், குறிப்பிட்ட செய்யுள் மூலம், அச்சாதகனின் உணர்ச்சி நிலைக்கு ஏற்ற வெளிப்பாட்டை வெளிக்கொணருமாறு (நூலில் செய்யுள்களின் வரிசை கிரமமானது) வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதகன் ஒருவன், தனது ஆன்மீக சாதனையில் தொடர்ந்து ஈடுபட்டு, இச்செய்யுள்களை தினசரி பாராயணம் செய்து வரும் பொழுது, வெவ்வேறு செய்யுள்களைப் பாடும்போது, வெவ்வேறு சமயங்களில் பின்வருமாறு உணருவான்: “ஓ, அருணகிரியார் எனக்காகவே இச்செய்யுளைத் தந்துள்ளார்”, (அ) “இந்தச் செய்யுள் துல்லியமாக என் பரிதாபமான நிலையை சித்தரிக்கிறது”, (அ) “எனது தியான-அநுபவத்திற்கு இந்த செய்யுள் சரியாகப் பொருந்துகிறது”, மற்றும் இவை போன்றவை.

    உண்மையில் பார்த்தால், கந்தர் அநுபூதி நூல், ஒரு சாதகன் தனது ஆன்மிக சாதனையில் எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறான் (அ) முன்னேறியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள உதவும் ஒரு ஆன்மீக பாரமானி எனலாம்; எச்செய்யுளை ஓதும்போது, அவனது இதயமானது வெகுவாக அதில் ஐக்கியமாகி லயிக்கிறதோ, அதை வைத்து அவன் இப்பொழுது (ஆன்மீக பயிற்சியில்) எந்நிலையில் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

    அருணகிரியார் தனது திருப்புகழ் பாடல்களிலும் தன்னுடைய மற்ற நூல்களிலும், ஆன்மீகம் மற்றும் சமய விஷயங்களைப்பற்றி பொதுவாக எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் சொல்லியுள்ளார். திருப்புகழையும் மற்ற நூல்களையும் முறையாக ஓதிவரும் ஒருவனுக்கு உலக விவகாரங்களில் ஒருவிதமான வெறுப்பு ஏற்பட்டு, இறைவனை அடையவேண்டுமென்ற அவா அவனிடம் உதிக்கலாம். மேலும் இறைவனை அடைவதற்குரிய சாதனைகளையும் செய்ய அவன் விரும்புவான்; ஆனால், அதற்கு என்ன செய்வது, எங்கிருந்து தொடங்குவது, என்பது தெரியாமல் ஒரு தவிப்பில் இருப்பான். எனவே, அத்தகைய நிலையிலுள்ள ஆன்மீக சாதகர்களுக்கு உதவிடும் வகையிலும், இறை-அநுபவத்தை அடைவதற்கான வழிமுறைகளை விளக்கமாக ஆராயவும் ஒரு நூலைப் படைத்திடுமாறு அருணகிரியாரைத் திருத்துருத்தியில் கந்தப் பெருமான் தூண்டிப் பணித்ததின் விளைவாகவே “கந்தர் அநுபூதி” அவரால் படைக்கப்பட்டது என்று தோன்றுகிறது.

    இப்படியாக, அருணகிரியாரின் ஒவ்வொரு படைப்பும் அதற்கே உரிய நோக்கம், விசேஷத்துவம் மற்றும் அழகுடன் விளங்கினாலும், அவருடைய அனைத்து படைப்புகளிலும் கந்தர் அநுபூதி மணிமகுடமாகத் திகழ்கிறது என்று நாம் கருதலாம். அருணகிரியார் தந்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்து “அருணகிரி வேதம்” என்று கருதுவோமாகில், அதில் “கந்தர் அநுபூதி” நூல் “அநுபூதி-உபநிஷத்” ஆகும். அது ஒரு மந்திர சாஸ்திரம்; அவருடைய நூல்கள் வரிசையில் கடைசியில் அமைந்துள்ள ஞானப் பகுதியாகும். உபநிஷத்துக்கள் தகுதி பெற்ற மாணாக்கர்களுக்குத் தரப்படும் ரகசிய உபதேசங்கள்; ஏனெனில், பக்குவமடையாத மனங்களால் உபநிஷத மந்திரங்களைப் புரிந்து கொள்ள முடியாது. கந்தர் அநுபூதி செய்யுள்கள் உபநிஷத மந்திரங்களைப் போன்றவைதான். அவை உபநிஷத மந்திரங்கள்போல சுருக்கமாக, பொருட்செறிவு மிக்கதாக, ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடவும், பல பயனுள்ள அநுபவங்களை அடையவும் தேவையான பல இரகசிய குறிப்புகளைத் தருபவையாகவும் உள்ளன. உண்மையில் கந்தர் அனுபூதியில் எல்லா மகாவாக்கியங்களும் இருக்கின்றன. இதை செய்யுள்களின் விளக்கவுரைகளில் நாம் பின்னர் விரிவாகக் காண்போம். இந்த ஆய்வு (மறை)நூலானது உபநிஷத்தின் நோக்கங்களை மிகவும் அருமையாக நிறைவேற்றுகிறது என்று எவ்விதத் தயக்கமுமின்றி நம்மால் கூற இயலும். உண்மையில், இது ஒரு ‘மந்திர- சாஸ்திரம்’தான். எனவேதான், அருட்செல்வர் அருணகிரியாரை போற்றிப் புகழ தாயுமானவ சுவாமிகள் ‘கந்தர் அநுபூதி’ நூலை பிரத்யேகமாகத் தேர்ந்தெடுத்துள்ளார் போலும்!

    அடுத்ததாக எழும் கேள்வி: (இந்நூலில்) அறிவுரைகள் ஏன் மறைபொருளாக (இரகசியமாக) மறைத்து வைக்கப்பட வேண்டும்? அருட்செல்வர் அவைகளை வெளிப்படையாகவே ஏன் செய்யுள்களில் சொல்லவில்லை? அப்படிச்செய்வது ஒரு பொதுவான பழக்கம்; அதற்குக் காரணமும் உண்டு. பொதுவாக, ஆன்மீக உண்மைகள் இரகசியமாகவே (மந்திரங்களில் மறைத்து) வைக்கப்படுகின்றன, ஏனெனில் பக்குவமடையாத, தகுதிபெற்றிராத மனதையுடைய சாதகர்களுக்கு இவை அளிக்கப்பட்டால், இவை தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, தவறான விளக்கங்கள் செய்யப்பட்டு, திரித்துக் கூறப்படக்கூடும். அதனால் இவை எப்பொழுதுமே மறைத்து வைக்கப்படுகின்றன; பெருமுயற்சியின் மூலம்தான் அவைகளை அடைய முடியும், அதற்காகச் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு நூலும் எவருக்கும், எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக் கூடுமாகையால், அதன் பொருள்கள் யாரும் சுலபமாக அறியமுடியாத முறையில் மறைபொருளாக வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், செய்யுள்களை பிரார்த்தனை வடிவத்திலும், தற்சார்பு உடையதாகவும் (தன்மையில்) கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஒரு பக்தன் (அ) சாதகன், ஆரம்ப காலத்தில் மனப்பக்குவம் இல்லாத நிலையில் இருந்தபோதிலும், இந்நூலை சுவாத்யாயம் செய்து (சுயமாகப் பயின்று) வரும்போது (அ) பாராயணம் செய்துகொண்டே வரும்போது, பாடல்கள் தன்மையில் இருப்பதாலும், அதன் சொற்கள் சக்தி வாய்ந்ததாகவும் குறிப்பிட்ட நோக்கத்துடன் அமைக்கப்பட்டதாகவும் இருப்பதால், இவை அவன் மனதை படிப்படியாக உயர்த்தி, அருட்செல்வர் பாடல்களை எந்த உணர்ச்சியுடன் பாடினாரோ அல்லது எந்த உணர்வை ஊட்டும் நோக்கத்துடன் பாடினாரோ, அந்த உணர்ச்சியை, உணர்வை ஊட்டுகின்றன. இதனால் நாம் இந்நூலை ஓதும் பொழுது, அருட்செல்வரே நம்மூலம் ஓதுவது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது. நாம் அவருடைய மனநிலையோடு இணைந்துவிடுகிறோம், அதனால் தேவையான மனப்பக்குவமும் உணர்வும் நமக்குள் அவசியம் ஏற்பட்டுவிடும். இவ்வாறாக, செய்யுள்களில் இரகசியமாகப் புதைந்துள்ள உட்பொருள்கள் காலப்போக்கில் நமக்குள்ளிருந்து தெளிவாகப் புரியுமாறு தெரிவிக்கப்படுகின்றன. இக்கருத்துக்கள் செய்யுள்களில் வெளிப்படையாக சொல்லக் கூடியவையல்ல; அவ்வாறு சொல்லப்பட்டாலும், அது நமக்கு தெளிவாக விளங்காது; அந்த விளக்கம் தாமாகவே நமக்குள்ளிருந்து “வெளிப்படவேண்டும்.” அப்படி வெளிப்படும்போது அதை பாதுகாக்கவேண்டும். மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வம் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது; அதேபோல், ஞானத்தை அதற்கும் மேலான கவனத்துடன் பாதுகாக்கவேண்டும்.

    இப்பொழுது, எளிதில் அறிய முடியாதவாறு செய்யுள்களில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டுள்ள உட்பொருளைப் பற்றி ஒரு சில வார்த்தைகள். இந்நூலில் சில இடங்களில், சில செய்யுள்களில் கருத்துத் தொடர்ச்சி வெளிப்படையானதாகவும் மற்றும் கிட்டத்தட்ட மேற்பரப்பிலேயே இருப்பதையும் காணலாம், உதாரணத்திற்கு, செய்யுள்கள் 12, 13; செய்யுள்கள் 28, 29; செய்யுள்கள் 33, 34, 35; செய்யுள்கள் 42, 43; 44; செய்யுள்கள் 39 மற்றும் 43க்கும் இடையில்; செய்யுள்கள் 2 மற்றும் 43க்கும் இடையில்; போன்றவைகளைக் கூறலாம். இச்செய்யுள்களில் வெளிப்படையாகவே காணப்பட்ட கருத்துத் தொடர்சிகளால்தான், மற்ற செய்யுள்களுக்கு இடையேயும்கூட இவ்வாறான கருத்துத் தொடர்ச்சி நிச்சயமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. அதாவது, அக்கருத்துத் தொடர்ச்சி நூல் முழுவதிலும் இருக்கவேண்டும்; அது வெளிப்படையாகத் தெரியவில்லையென்றாலும், நிச்சயம் அது இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கவேண்டும். சிலவற்றில் மேலோட்டமாகவே அது தெளிவாக உள்ளது; சிலவற்றில் அது செய்யுளின் ஒரு வரி அல்லது சொற்றொடரில் இலைமறை கனிபோல் உள்ளடங்கி இருக்கிறது; சிலவற்றில் ஒரு சொல்லில் அது உட்கிடையாகத் தொக்கி இருக்கிறது; மற்றும் சிலவற்றிலோ, அது மிகவும் ஆழமாக முழு செய்யுளின் அடிப்படை மெய்க்கருத்தாக இரகசியமாக புதைந்திருக்கிறது, செய்யுள்களைத் தொடர்ந்து திரும்பத் திரும்ப பலமுறை பாராயணம் செய்யும்போது, காலப்போக்கில் உட்பொருள் வெளிப்படுகிறது, தெளிவாக அறிந்துகொள்கிறோம். இக்காரணங்களினால்தான், பெருமானிடம் அன்பு கொண்டு, அவரிடம் சரணாகதி செய்து, தினசரி முறையாக முழு கந்தர் அநுபூதியையும் பாராயணம் செய்வது (சுவாத்யாயம் செய்வது) அவசியம் ஆகிறது; அவ்வாறாகச் செய்து வந்தால், எந்த நூலிலும், ---- இந்த நூல் உட்பட, இதுவரை வெளியிடப்பட்ட உண்மைகளைவிட அதிகமான உண்மைகள் சாதகனின் இதயத்தில் தாமாகவே வெளிப்படுத்தப்படும். இந்த முயற்சி கந்தர் அநுபூதி நூலுக்கு மட்டுமின்றி, இதைப்போன்ற மற்ற நூல்களுக்கும் உபயோகமாய் இருக்கும்.

    முன்பே விளக்கியபடி, இந்த நூலில் செய்யுள்களின் பொருள்விளக்கங்கள் ஒரு சாதகனின் நிலையிலிருந்து தரப்படுகிறது, அருணகிரியார் அவ்வாறாகவே இருந்துகொண்டு கந்தர் அநுபூதி பாடல்களைப் பாடியுள்ளார். ஏற்கனவே சொன்ன இதைத் திரும்பவும் இங்கு வலியுறுத்தவேண்டி இருக்கிறது; ஏனெனில், செய்யுள்கள் தன்மையில் இருப்பதால், இதில் விவரிக்கப்படுபவை, அருணகிரியாரின் சொந்த வாழ்க்கையையும் சொந்த அநுபவங்களையும் குறிக்கின்றன என்று அடிக்கடி தவறாக எண்ணும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்நூலைப் படிக்கும்பொழுது, இதில் கூறப்பட்டவை, அருட்செல்வரின் சொந்த வாழ்க்கை அல்லது அநுபவங்களைக் குறிப்பிடவில்லை என்பதை நாம் மறக்காமல் நினைவில் வைத்துக்கொண்டு, குழப்பம் அடையாமல் இருக்க வேண்டும். ஏனெனில், எந்த ஒருவருடைய அநுபவங்களோ, அறிவுரைகளோ, அவரைப்போல் ஆவதற்கு மற்றவர்களுக்கு உதவ முடியாது, ஒருவேளை அவை மற்றவர்களுக்கு குறிப்பால் உணர்த்தவோ (அ) ஊக்குவிக்கவோ வேண்டுமானால் பயன்படலாம்; மேலும், இரண்டு நபர்களின் அநுபவங்கள் ஒருபொழுதும் முற்றிலும் ஒரேமாதிரியாக இருக்க முடியாது; ஏனெனில், இரண்டு நபர்களின் கர்மங்கள் முற்றிலும் ஒரேமாதிரியாக இருக்க முடியாது, எனவே, சுவாமி சிவானந்த மகராஜ், “ஒவ்வொருவரும் தனக்கு அசைக்கமுடியாத திட நம்பிக்கையூட்டும் தன்னுடைய சொந்த அனுபவங்களைப் பெறவேண்டும்.” என்று கூறியிருக்கிறார்கள். அதனால்தான் மனித சரித்திரத்தில் இதுவரை இரண்டாம் ஸ்ரீராமரோ, ஸ்ரீகிருஷ்ணரோ, ஏசுநாதரோ, (அ) புத்தரோ இல்லை; அதேபோல், இரண்டாவது வசிஸ்டரோ, வியாசரோ, வால்மீகியோ, (அ) துளசிதாசரோ இல்லை; அதேபோல், இரண்டாவது சங்கரரோ, ராமானுஜரோ, கபீர்தாசரோ, (அ) மீராபாயோ இல்லை; அதேபோல், இரண்டாவது துக்காராமோ, ஞானதேவரோ, நாயன்மார்களோ, ஆழ்வார்களோ, (அ) அருணகிரியாரோ இல்லை; அதேபோல், இரண்டாவது ராமகிருஷ்ணரோ, அரவிந்தரோ, ரமண மகரிஷியோ, (அ) சுவாமி சிவானந்தரோ இல்லை; இன்னும் சொன்னால் இந்தப் பெயர்ப்பட்டியல் தொடரும். -- இந்த அனைத்து மகான்களுக்கும் நேரடி சிஷ்யர்கள், அவர்களாலேயே பயிற்றுவிக்கப்பட்டவர்கள், பின்பற்றுபவர்கள் பலர் இருந்தாலும், அவர்களது உபதேசங்கள் இப்பொழுதுகூட பலரால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், அவர்களைபோல் இரண்டாவதாக எவரும் உருவாகவில்லை, உருவாகவும் முடியாது. அப்படி நிகழ்ந்திருந்தால், இவ்வுலகம் பலகாலத்திற்கு முன்னரே சொர்க்கலோகமாக ஆகியிருக்கும்; நரகம் காலியாகவே இருந்திருக்கும். ஆக, எந்த இரு நபர்களின் அநுபவங்களும் ஒருபொழுதும் முற்றிலும் ஒத்துப்போகாது; ஒருவரின் அனுபவம் மற்றொருவருக்கு ஒரு சிறிதளவுக்குமேல் உதவவும் முடியாது, பார்க்கப்போனால், நமது சொந்த அநுபவங்களே நமக்குப் பெருமளவில் உதவியாய் இருப்பதில்லை! பல தடவை நாம் தவறுகளை, தகாத காரியங்களைச் செய்து, அதனால் துன்பமும் அடைந்து வருகிறோம், இனிமேல் மறுபடியும் தவறு செய்திடாமல் இருக்க கவனமாக இருப்போமென்று தீர்மானிக்கிறோம். ஆனால், சிறிது காலத்திற்குள்ளேயே, உதவியற்றவராய், அதே தவறுகளை திரும்பத்திரும்பச் செய்கிறோம்! எனவேதான், அர்ஜுனன் பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் பின்வருமாறு கேட்கிறான்: “ஓ பகவானே! மனிதனுக்கு இச்சையில்லாத போதும் அவனை வலியக் கொண்டு புகுத்தி பாவம் செய்யத் தூண்டுவது எது?” (அதகேந ப்ரயுக்தோsயம் பாபம் சரதி பூருஷ:I அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித:) --- (பகவத் கீதை : 3-36). அனைத்தும் ஒரு மர்மம்போல் தோன்றுகிறது! மகான்களின் வாழ்க்கை, மனிதர்களுக்கு மகத்தான ஊக்கம் அளித்து சரியான வழிகாட்டுதலையும் அளிக்கிறது; நாம் அவர்களைப் பின்பற்ற முயற்சியும் செய்கிறோம், எனினும் நம்மால் அவர்களைப்போல் உருவாக முடிவதில்லை. மனித முயற்சி தேவையானதுதான்; இருப்பினும், இறை-கிருபை மட்டும்தான் வெற்றியைத் தந்திடும் என்றுத் தோன்றுகிறது. ஆகவேதான், “எங்கு யோகேஸ்வர: கிருஷ்ணரும் (இறை-கிருபையும்), வில் ஏந்திய அர்ஜுனனும் (மனித முயற்சியும்) சேர்ந்துள்ளதோ, அங்கு வளமும் வெற்றியும் மகிழ்ச்சியும் கொள்கையில் உறுதியும் நிலைபெறும்; இஃது என் மதம்” (யத்ர யோகேஸ்வர: கிருஷ்ணோ யத்ர பார்தோ தநுர்தர:I தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மமII) என்று பகவத் கீதை (18-78) உபதேசத்தின் நிறைவில் ஸஞ்ஜயர் கூறியிருக்கிறார்.

    இந்த உன்னதமான இரகசிய உட்பொருள் விளக்கம், பல ஆண்டுகளாக நான் செய்துவரும் தினசரி பாராயண நேரங்களில் எனக்கு வெளிப்படுத்தப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. எனது இப்படைப்பை பகவான் குகப்பெருமான் தமது இதயங்களில் அமர்ந்திருக்கும் பேறுபெற்ற கற்றறிந்த பெருமக்களும், ஞானிகளும், அனுபவம்பெற்ற அன்பர்களும் ஆய்வு செய்து, இதன் தகுதியறிந்து ஏற்றுக்கொள்ள பணிவுடன் சமர்ப்பிக்கின்றேன். இந்நூலில் இரகசியமாக மறைந்துள்ள தத்துவத்தை வெளிக்கொணர்வதற்கான இம்முயற்சி ஒரு ஆரம்ப முயற்சியே; இதை மேலும் செம்மைப் படுத்தவேண்டிய அவசியம் இருக்கக்கூடுமென்று நான் முழுமையாக உணர்கிறேன்.

    கந்தப் பெருமான் நம்மை ஆசீர்வதித்து, நாம் அவருடன் ஐக்கியமாகிட நமக்கு வழிகாட்டி அருள்புரியட்டும் என்பதே என் பிரார்த்தனை.

    
N.V. கார்த்திகேயன்

No comments:

Post a Comment