verse2



செய்யுள் – 2


உல்லாச   நிராகுல   யோக   விதச்
சல்லாப   விநோதனும்   நீ அலையோ
எல்லாமற   என்னை   இழந்த   நலம்
சொல்லாய்   முருகா   சுரபூ   பதியே.



    பொழிப்புரை: “ஓ தேவலோகத்திற்குத் தலைவனான முருகப் பெருமானே! பேரின்பமும், துன்பமற்ற நிலையும், யோகமும் ஆகியவைகளும், மற்றும் நல்லதையே சங்கல்பித்து (எண்ணி), நல்லதையே பேசி, லீலா வினோதங்களைச் செய்பவனும் நீயல்லவோ? நான் அனைத்துப் புறப்பற்றுகளிலிருந்தும் விடுபட்டு, நானெனும் அகந்தையிலிருந்தும் விடுபடும் அந்த அநுபூதி ‘நலத்தை’ நீ எனக்கு உபதேசித்து அருள்வாயாக”.

விளக்கவுரை

    “ஓ முருகப் பெருமானே, நீ ஆறுவிதமான பண்புகளை உடையவன்; பற்றுக்களிலிருந்தும், அகங்காரத்திலிருந்தும் விடுதலை தரும் உயர் ‘நலம்’ (அநுபூதி) பெறுவது பற்றி எனக்கு அறிவுறுத்துவாயாக.” இப்பிரார்த்தனையில் அருணகிரியார் கடவுளின் ஆறு விசேஷ குணங்களை பட்டங்களாக்கி அவருக்கு அணிவித்து மகிழ்ச்சி அடைகிறார். அவையாவன:

    (1) “உல்லாசம்” --- பேரின்பம். இறைவனே மகிழ்ச்சி. அவரே களிப்பு. அவரே ஸச்சிதானந்தம் (ஸத்- சித்- ஆனந்தம்), அதாவது, அவர் எங்கும் வியாபித்து எப்பொழுதும் இருக்கிறார் (ஸத் ); சைதன்ய சொரூபமாக இருக்கிறார் (சித்); விழிப்புணர்வின் பேரானந்தமாக இருக்கிறார் (ஆனந்தம்). அவர் சர்வ-சக்தி, சர்வ-ஞானம் மற்றும் சர்வ-வியாபியாயும் இருப்பதால், அதன் தூய மெய்யுணர்வு காரணமாக அவர் (என்றும் எப்பொழுதும்) பேரின்ப சொரூபமாயிருக்கிறார். அப்பேரின்பம், சுய-ஆனந்த நிலை; அதுவே ஆனந்தம்; பிறபொருள்களிலிருந்து பெறப்படும் இன்பமல்ல. அப்பேரின்ப நிலை அவரைத் தவிர வேறெதிலிருந்தும் பெற இயலாத ஒன்று.

     (2) “நிராகுலன்” --- துக்கங்கள் துன்பங்கள் அற்றவன். நாம் ஒவ்வொருவரும் சில சமயம் மகிழ்ச்சி அடைகிறோம், ஆனந்தக் களிப்படைகிறோம், ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு கலப்படமற்ற (துக்கம் கலக்காத) மகிழ்ச்சியாக இருப்பதில்லை. நாம் ஏதாவது ஒன்றினால் மகிழ்வுற்றுக் கொண்டிருக்கும்போதே, வேறொரு எண்ணம் உள்ளிருந்து கொண்டு வேதனையைத் தருகிறது. மேலும், நமது மகிழ்ச்சியோ குறுகிய காலத்திற்கே இருந்து, வலி மற்றும் துக்கத்திற்கு வழி விட்டு மறைகிறது. ஆனால், இறைவன் அப்படியல்ல. அவரே பேரின்பம். அவருக்கு துக்கம், வலி, துன்பம், மகிழ்ச்சியற்ற நிலை என்பதெல்லாம் கிடையாது --- அவைகளால் அவர் ஒருபொழுதும் பாதிக்கப்படாதவர். இக்கருத்தை வலியுறுத்துவது இரண்டாவது பண்பான “நிராகுலன்” (துக்கமற்றவன்) என்பதாகும்.

     (3) “யோகம்” --- அவரால் எதனால் உல்லாசமாகவும் (மகிழ்ச்சியாகவும்) நிராகுலனாகவும் (துக்கத்திலிருந்து விடுபட்டவராகவும்) இருக்க முடிகிறது? அவர் யோகீஸ்வரனாகவும், எப்பொழுதும் யோகத்தில் (அ) சகஜ சமாதியிலிருக்கும் ஒரு மகாயோகியாக இருப்பதுவே அதற்குக் காரணம். மேலும், ஆன்மீகப் பாதையில் செல்லும் சாதகர்களுக்கு, அவர் யோகத்தை, அதாவது தன்னுடனான ஐக்கியத்தை, வழங்குகிறார்.

     (4) “இதம்” (நலம்) --- இறைவன் பேரின்பமயமாகவும், துக்கமற்றவராகவும், யோகத்தின் ஈஸ்வரனாகவும் இருப்பதால் நமக்கு என்ன பயன்? அவர் இவைகளாக மட்டுமல்லாமல் “இதம்” செய்பவராகவும் இருக்கிறார்; அதாவது, அவர் நம் அனைவரின் “நலம்” அல்லது இதத்தை விரும்பி, நாம் நன்றாக வாழ வேண்டும் என்று சங்கல்பிப்பவராகவும் இருக்கிறார். இல்லையேல், யார் நலமாக, சுகமாம இருக்கமுடியும்?

    (5) “சல்லாபன்” --- அவர் வெறும் நலம் விரும்பியாக மட்டுமில்லாமல், அன்பாகப் பேசுபவராகவும் இருக்கிறார். அவரே “சல்லாபன்” --- அதாவது நமக்கு குருவாக வந்து தேவையான உபதேசத்தையும், அறிவுறுத்தல்களையும் தந்தருள்கிறார். அறியாமையின் காரணமாக, நமக்கு எது நன்மையைத் தரும் என்று கூட நமக்குத் தெரியாது; அதனால், எது நமக்குத் துன்பத்தைத் தருமோ, அதை நல்லது என்று நினைத்து, அதை அளிக்குமாறு இறைவனிடம் பிரார்த்தனைகூடச் செய்கிறோம். ஆனால், அவரோ நமக்கு எது நல்லதோ அதைத் தர சங்கல்பித்து, அதையே பேசி, அதையே தந்தருளுகிறார்.

    (6) “விநோதன்” --- இறைவன் அதியற்புதங்களைப் புரியும் தலைவன்! தனது மாயையால், தனது லீலையாக (திருவிளையாடலாக), தன்னை இப்பெரும் பிரபஞ்சமாகத் தோற்றுவித்துக் கொள்கிறார்; அனைத்து ஜீவர்களும் தங்கள் தங்கள் கர்ம வினைகளை அனுபவித்து கழிப்பதற்கேற்றவாறு இப்புவனங்களைப் (சூழ்நிலைகளைப்) படைத்தருளுகிறார்; பின்னர், அவர்கள் மேல் கருணை கொண்டு அவரே தன் மாயையிலிருந்து அவர்களை விடுவித்து அருள்பாலிக்கிறார். அவரைத் தவிர இவ்வற்புதத்தைச் செய்ய வல்லவர் வேறொருவர் உளரோ! எனவே அரவர் லீலா-விநோதன் என்று அழைக்கப்படுகிறார்.

     இறைவன் பேரின்பம், துக்கங்கள் அற்றவன், யோகத்தின் ஈஸ்வரன். இது இறைவனின் இயற்கையான இயல்பு, அதாவது, அவன் அவனாகவே இருக்கும் நிலை. ஆனால் அவர் இதம், சல்லாபன், விநோதனும் கூட. இவை அவர் நம்முடன் கொள்ளும் தொடர்பு. நம் நலம் விரும்பி, நலத்தை உபதேசித்து, நலம் நல்குபவர் அவர். அவரே இப்பிரஞ்சமாகத் தோன்றி, நம் குருவாக வந்து, நமக்கு உபதேசித்து, வழிகாட்டி, தன்னை நமக்கு வெளிப்படுத்திக் கொண்டு, முடிவில் தன்னுள்ளேயே நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார். இதையெல்லாம் அவர் எவ்வாறு செய்தருளுகிறார் என்பது ஆச்சரியமான விஷயம். இவையெல்லாம் அவர் “லீலை” அல்லது திருவிளையாடல். இவ்வாறாக, பேரின்பமானவரும், துக்கமில்லாதவரும், யோகத்தின் ஈஸ்வரனுமான இறைவன் நம் “நலம்” விரும்பி, அதை நமக்கு உபதேசித்து, தந்தும் அருளுகிறார். இறை-அநுபூதியே அந்த “நலம்”.

    முருகப் பெருமானுக்கு உரித்தான கணக்கற்ற வழிபாட்டுத் தலங்களில், முக்கியமான ஆறு தலங்கள், ‘ஆறுபடை வீடு’ எனப் போற்றப்படுகின்றன:

  1. திருப்பரங்குன்றம் --- மதுரையிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.
  2. திருச்செந்தூர் --- திருநெல்வேலிக்கு கிழக்கே (திருச்சீரலைவாய்) கடற்கரையில் உள்ளது.
  3. பழனி --- (திருவாவினங்குடி) திண்டுக்கல் நகருக்கு மேற்கே உள்ளது.
  4. சுவாமிமலை --- (திருவேரகம்) கும்பகோணம் அருகில் உள்ளது.
  5. திருத்தணி --- அரக்கோணம் அருகில் உள்ளது.
  6. பழமுதிர்சோலை --- மதுரைக்கு அருகில் உள்ளது.

    இறைவனின் ஆறு விசேஷ குணங்களான உல்லாச, நிராகுல, யோக, இத, சல்லாப, வினோத, ஆகியவை முறையே இந்த ஆறு படைவீடுகளையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

    மேலும், இந்த ஆறு படைவீடுகளும் நம் ஒவ்வொருவரின் சூட்சும சரீரத்தில் உள்ள ஆறு அதிஷ்டான சக்கரங்களின் அறிகுறி என்றும் கருதப்படுகிறது – ஆதலால், சண்முகப் பெருமான் இந்த ஆறு சக்கரங்களுக்கும் ஈஸ்வரன் ஆகிறார்.

    “ஓ கடவுளே, ஆறு குணங்களின் ஈஸ்வரனாகிய நீ எனக்கு அந்த ’நலம்’ வழங்குவாயாக.” --- என்று இந்தச் செய்யுளில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. அந்த ‘நலம்’ என்ன? அது இரு-வகையான பாக்கியங்களை அடைவது --- ஒன்று, அனைத்து புறப் பற்றுகளிலிருந்து விடுபடுவது (எல்லாம் அற); மற்றொன்று, நானெனும் அகந்தையை தானெனும் இறைவனில் இழப்பது (என்னை இழந்த நலம்). இதுவே நாம் ஒவ்வொருவரும் விரும்பியடைந்திட வேண்டிய நலமாகும்.

    ‘எல்லாம் அற’ --- அனைத்தும் அற்றுப்போதல் – என்பது அந்நலத்தால் அடையப்படும் முதல் பாக்கியம். இது எவ்வாறு இயலும்? இவ்வுலகில் கோடிக் கணக்கான பொருள்கள் உள்ளன. அவைகள் அனைத்தையும் இல்லாமல் செய்வது எப்படி? இது முடிகிற காரியம் அல்ல. - பொருள்களை இல்லாமல் செய்ய இயலாது. பின்னர், ‘எல்லாம் அற’ என்பதன் பொருள்தான் என்ன? அவைகளிலிருந்து நாம் பின்வாங்குவது என்பதேயாகும் (அதாவது அவை உண்மையல்ல என்று தெரிந்து, அவற்றின் மீதான பற்றுக்களைத் துறப்பது). பின்வாங்குவது எப்படி? வேதாந்த தத்துவத்தில், நேதி-நேதி என்ற கோட்பாட்டின்படி பொருள்களை ஆராய்வதன்மூலம் பொருட்களிலிருந்து பின்வாங்குவது சுலபம். இதன் முழு விவரம் அடுத்த செய்யுளில் கூறப்படுகிறது. அவ்வாறு பின்வாங்கி, மனது உட்பட அனைத்து இந்திரியங்களையும், முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின்னர், அச்சாதகனிடம் எஞ்சி நிற்பது அகந்தை எனப்படும் ‘நான்’ என்ற எண்ணம் மட்டும்தான். அந்த ‘நான்’ அல்லது ‘என்னை’ என்பதும் இழக்கப்படவேண்டும். எங்கே? எப்படி?

    ‘என்னை இழந்த’ --- அந்த நானெனும் (அகந்தை) எண்ணமும் இழக்கப்பட்ட நிலை ‘என்னை இழந்த’ நிலையாகும். ஆனால், அந்த ‘நான்’ என்பதை இழப்பது எப்படி? எங்கே? எங்கும் நிறைந்திருக்கும் கடலின் நீரானது ஒரு இடத்தில் எழுச்சி அடைந்து அலை தோன்றுவது போலவே, பேருணர்வு தத்துவமானது தனியுடலொன்றில் ஜீவனாக வலியுறுத்திக் கொள்ளும்பொழுது, அந்த ஜீவனின் மனதில் நானெனும் அகந்தை தோன்றுகிறது. பின்னர், அவ்வலையின் எழுச்சி அடங்கியவுடன், அலையாக எழுந்த நீரானது, திரும்பவும் கடலிலேயே ஒன்றாகக் கலந்து நீராகின்றதல்லவா! அவ்வாறே நானெனும் தனி உணர்வு, ‘எல்லாம் அற்று’ அமிழும்போது, இறைப்பேருணர்வில் இரண்டறக் கலந்து, தன்னை இழக்கிறது. ‘எல்லாம் அற – என்னை இழ’ என்ற மந்திரம், சாதகனுக்கு புறப்பற்றிலிருந்து விடுபட்டு, இறைவனில் இரண்டறக் கலந்து, அநுபூதி எனும் நலமடையும் ஒரு முழுமையான சாதனை மார்க்கத்தைத் தருகிறது என்கிறார் மெய்ஞானி அருணகிரியார்.

    ‘எல்லாம் அற என்னை இழ’ என்ற நிலையானது அதேபோன்று தோற்றமளிக்கும் எதிர்மறை (Negative) நிலைகளான தூக்கம், மயக்கம், கோமா போன்ற நிலையாக இருக்கக் கூடும் என்று சிலர் தவறாகக் கருதலாம். அது அப்படிப்பட்ட எதிர்மறை நிலையல்ல; நேர்மறையான நிலை (Positive) என்று வற்புறுத்துவதற்காக அதை ‘நலம்’ என்கிறார் அருட்செல்வர். தூக்கம், மயக்கம், போன்ற நிலைகள் ‘நலமான நிலைகளல்ல’. ஏனெனில் அந்நிலைகளிலிருந்து ஒருவன் வெளிவரும்போது, அவைகள் அவனை பரமாத்மாவுடன் ஐக்கியப்படுத்தாமல், முன்பிருந்த பரிதாப நிலைக்கே திரும்பத் தள்ளுகிறது. எனவே, ‘என்னை இழ’ என்ற நிலையென்பது, பரமாத்மாவில் தன்னை இழக்கும் (உயரிய) பரம நிலையே, தூங்குவது போன்ற எதிர்மறை நிலைகளல்ல என்பதை அருணகிரிநாதர் தெளிவுபடுத்தியுள்ளார்.

    இறைவன் மட்டுமே உண்மையான “நலம்”; நாம் நலம் என்று கருதும் உலகப் பொருள்கள் அனைத்தும் நலமற்ற வெறும் சுமையே. எனவே, இறைவனில் தன்னை இழப்பது நலம், உலகினில் தன்னை இழப்பது நலமல்ல; ஏனெனில், உலகமே நாம் அனுபவிக்கும் அனைத்து துக்கங்களுக்கும் துயரங்களுக்கும் காரணம்; இறைவனோ பேரின்பத்தின் பிறப்பிடம், அவன் துக்கமற்றவன், யோகத்தின் ஈஸ்வரன். அதனால் இறைவனில் நானெனும் அகந்தையை இழப்பதுதான் உண்மை நலம்.

    அந்த நலத்தை அடையும் ஒருவன் ஞானியாகிறான்; இச்செய்யுளில் குறிப்பிட்டுள்ளபடி இறைவனுக்கு இயற்கையிலமைந்த ஆறு குணங்களும் ஞானிக்கும் தானே வந்தமைகிறது. ஞானிகளான அவர்கள் எப்பொழுதும் பேரின்பத்தில் திளைத்தும், துக்கம் மற்றும் துன்பங்களிலிருந்து விடுபட்டும், யோகத்தில் ஆழ்ந்தும், உலக நன்மையை மனதில் இருத்தி மக்களுக்கு எது நன்மை தருமோ, அதை உபதேசித்தும் வாழ்கிறார்கள். பகவானின் லீலா விநோதங்களில் பங்கு கொள்பவர்களாய், பகவான் அனைத்து ஜீவராசிகளுக்கும் உதவுவதைப்போல், அவர்களும் பலவழிகளில் மக்களுக்கு உதவி செய்கிறார்கள். இது எதனாலென்றால், ஞானிகள் இவ்வுலகில் இறைவனின் பிரதிநிதிகள்; அவர்களின் மூலம் இறைவன் செயலாற்றுகிறான்.

    சாதனை அல்லது ஆன்மீகப் பயிற்சியின் ஆரம்பம் முதல் செய்யுளில் சொல்லப்பட்டது. அந்த ஆன்மீக சாதகன் நடைமுறை பயிற்சிகளான ஜபம் செய்தல், பரமனின் புகழைப் போற்றி கீர்த்தனையில் ஈடுபடுதல் போன்ற சாதனைகளை செய்யத் தொடங்கிவிட்டான். எனினும் அவ்வாறு பயிற்சி செய்வது எதற்காக, சாதனையின் நோக்கம் யாது, என அச்செய்யுளில் கூறப்படவில்லை; ‘பரமனை அடைவதே’ அதாவது ‘மோட்சம் பெறுவதே’ (இறை-அனுபூதியே) இச்சாதனையின் குறிக்கோள் என இந்த இரண்டாம் செய்யுளில் தெளிவாக்கப் படுகிறது. எனவே, அச்சாதகன் எல்லாம் வல்ல முருகனிடம், ‘எல்லாம் அற’ (புறப்பற்றுக்கள் அனைத்தையும் விடுத்து) – ‘என்னை இழந்த’ நிலை தரும் (அகங்காரத்தை இறைவனிடம் இழப்பதனால் கிடைக்கப்பெறும்) அந்நலத்தை தனக்குத் தந்தருள வேண்டுகிறான். அந்நலத்தையே சிரேயஸ் (அர்த்தம்: நல்லது) என்று கடோபநிஷத் என்ற வேதாந்த நூல் கூறுகிறது. அந்நலம்தான் ஆறு விசேஷ குணங்கள் படைத்த எம்பெருமான் முருகன். ‘இதுதான் குறிக்கோள்’ என்கிற தெளிவு ஒவ்வொரு சாதகனிடமும் முதலிலிருந்தே இருத்தல் அவசியம்; இல்லையேல் பெயர், புகழ், சொத்து, சுகம் போன்ற ஆசைகளால் இழுக்கப்பட்டு சாதகன் பாதை மாறிடும் அபாயம் உண்டு. எனவே, ‘பாடும் பணியை பணியாய் அருள்வாய்’ என்று சாதகன் வேண்டுவது தன் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவோ, அல்லது புகழுடைய ஒரு சங்கீத மேதையாவதற்கோ அல்ல; பரமனை அடைவதற்கே. சாதகனின் இப்பிரார்த்தனை பூரணமாக நிறைவேறுவதை, 43-ம் செய்யுள் விவரிக்கிறது.

    ஒருவிதத்தில், கந்தர் அனுபூதியில் இனி வரும் செய்யுள்கள் அனைத்தும் “எல்லாம் அற, என்னை இழந்த நலம்” என்பதின் விரிவான விளக்கமே எனலாம்.

    செய்யுள்-1ல் (ஸ்)கந்தன், முருகன், குகன் போன்ற எந்த இறைவனின் பெயரும் பயன்படுத்தப் படவில்லை; வெறுமனே, ‘கணேச பகவானின் சகோதரனே’ என்று மட்டும் அழைக்கப்பட்டார். இவ்விரண்டாம் செய்யுளில்தான், முதன் முதலாக இறைவன் பெயர் சொல்லப்படுகிறது; அது ‘முருகன்’. ‘முருகன்’ என்றால் வேதாந்த நூல்களில் “பிரம்மம்” என்று கூறப்படும் “பரம் பொருள்” (Absolute) என்றாகும். எனவே, முன்பே பார்த்தபடி, கந்த புராணத்தை இயற்ற ஷண்முகப் பெருமானால், முதலடி எடுத்துக் கொடுக்கப்பட்டு, பணிக்கப்பட்ட கச்சியப்ப சிவாச்சாரியார் (கி.மு. 7ம் நூற்றாண்டு), கந்தப் பெருமானின் அவதார மகிமையை துல்லியமாகவும், அழகாகவும் இவ்வாறு கூறியுள்ளார்: “அருவமாயும் உருவமாயும் அநாதியாயும் ஒன்றாயும் பலவாயும் பரப்பிரமமாயும் (Supreme Brahman), விளங்கும் ஜோதிப்பிழம்பே ஒரு திருமேனியாக வடிவுகொள்ளக் கருணை வெள்ளம் பொழியாநின்ற ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களுங் கொண்டு ஒப்பற்ற முருகக் கடவுள் உலகம் உய்யும்வண்ணம் திருவவதாரம் செய்தருளினார்.” இவ்வாறு, கச்சியப்பர் முருகனும் பிரம்மனும் ஒன்றென்கிறார். அதாவது, முருகன் என்ற தமிழ் சொல்லும், பிரம்மம் என்ற சமஸ்கிருதச் சொல்லும் ஒன்றே. முருகனே பிரம்மம். பிரும்மமே முருகன். என்ன ஆச்சரியம்! கந்த புராணத்தில், கந்தப் பெருமானின் அவதாரத்தை விவரிக்கும் பொழுது, அந்த அவதாரத்திற்கு ‘கந்தன்’ என்ற பெயரையோ அல்லது வேறு எந்தப் பெயரையோ சூட்டாமல், ‘முருகன்’ என்று பெயர் சூட்டுகிறார். இது பெரும் ஆச்சரியம் தானே. முருகன் என்றால் பிரம்மம் என்பது 13-வது செய்யுளில் உறுதிபடுத்தப்படுவதைக் காணலாம்.

    இச்செய்யுளின் பிரார்த்தனை, பக்தி நெறியில் செல்லும் ஒரு பக்தனின் பார்வைக் கோணத்திலிருந்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த (மூன்றாம்) செய்யுளின் பிரார்த்தனை, ஞான நெறியைச் சார்ந்த வேதாந்தப் பார்வைக் கோணத்திலிருந்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பக்தியும், ஞானமும் ஒருங்கிணைந்து கைகோர்த்துச் செல்வதை கந்தர் அனுபூதி நூல் முழுவதிலும் காணலாம்.

No comments:

Post a Comment