செய்யுள் 50




செய்யுள் – 50


மதிகெட்டு     அறவாடி     மயங்கி     அறக்
கதிகெட்டு   அவமே     கெடவோ     கடவேன்
நதிபுத்திர     ஞான     சுகாதிப     அத்
திதிபுத்திரர்     வீறடு     சேவகனே.

    பொழிப்புரை: கங்காநதியின் புத்திரனே! ஞான-பேரின்பத்தின் தலைவனே! அத்திதிபுத்திரர்களாகிய அசுரர்களின் வலிமையை அழித்த வெற்றி வீரனே! என் அறிவு குலைந்து, (மன) வேதனை அடைந்து, மதி மயங்கி, தர்மத்தின்படி வாழ்ந்தால் கிடைத்திடும் அந்த நற்கதியாகிய அநுபூதியை இழந்து, நான் வீணாகக் கெட்டு அழிந்து போவேனோ?” (இல்லை; அவ்வாறு கெடமாட்டேன். காத்தருள்வாயாக.)

விளக்கவுரை

    இந்த தத்துவ நூல் “கந்தர் அநுபூதி” அடுத்த செய்யுளோடு கம்பீரமாக நிறைவடைகிறது, அச்செய்யுள் இறை-உணர்விலேயே சதாசர்வ காலமும் நிலைபெற்றிருக்கும் ஒரு ஜீவன்முக்தரின் உயரிய நிலையை மிக அருமையாக விளக்குகிறது. அதற்கு முன்னதாக, இறைவனை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டு, நேர்மையாக முயன்றுவரும் ஒரு சாதகன், ஒருபொழுதும் மனக்குழப்பம் போன்றவைகளில் தன்னை இழக்க மாட்டான் என்ற ஒரு கம்பீரமான உறுதியை அருணகிரியார் அனைவருக்கும் தருகிறார். இதற்கான முகாந்தரத்தை அவர் முந்தைய செய்யுளில் உருவாக்கி, உத்தரவாதமும் இவ்வாறு தந்தார்: “நினைவார் கின்னம் களையும் க்ருபைசூழ் சுடர்” --- “உன்னை நினைப்பவர்களின் துக்கங்களை அழித்திடும் கருணை சூழ்ந்த பிரகாசச் சுடரே!” இங்கு, ”நதிபுத்திர ஞான சுகாதிப அத்திதிபுத்திரர் வீறடு சேவகனே” என்று சொல்கிறார். “முருகப் பெருமான் நதிபுத்திரன்; சிவனாரின் கருணையே முருகனாக கங்கையில் உதித்ததால் (செய்யுள்-33), கிருபை-மழை பொழிவது முருகனின் சுபாவம்; அவர் ஞானம் மற்றும் ஆனந்தத்தின் இறைவன்; அசுரர்களை (தீய குணங்களை) அழிப்பவர்; பராக்கிரசாலி (பாதுகாப்பவன்).” இத்தகைய பெருமானிடம் சரண்புகும் ஒரு பக்தன் அல்லது உண்மையாகப் பரம்பொருளைத் தேடும் சாதகன் எப்படி கெட்டுப்போவான், எப்படி தன் இலக்கை இழப்பான்? கருணைப்பிழம்பான அவரால் அவன் நிச்சயமாக பாதுகாக்கப்பட்டு, கவனித்துக் கொள்ளப்படுவான். இத்தகைய உத்தரவாதம் இச்செய்யுளில் தொனிக்கிறது. எவ்வாறு? மற்ற சில செய்யுள்களைப்போல் இச்செய்யுள் தன்மையில் (First Person) இருப்பதால், நாம் இதை திரும்பத் திரும்ப பாடிக்கொண்டே வரும்போது, “யாம் இருக்க பயம் ஏன்” (‘நான் இருக்கும்போது, நீ எதற்கு பயப்படுகிறாய்’) என்று கேட்பதுபோல அவரிடமிருந்து நமது இதயம் ஆறுதல் பெறுவதை நாம் உண்மையாகவே உணர்வோம். வாழ்க கந்தப் பெருமான்! வாழ்க அருணகிரிநாதர்! 

    முக்தியடைந்த மகான்கள் இங்குமங்கும் சுதந்திரமாக சுற்றிக்கொண்டே ஆன்மீக வேட்கை கொண்ட சாதகர்களுக்கு அவரவர்களின் தேவைக்குத் தகுந்த மாதிரி ஆன்மீக உண(ர்)வை பரிமாறும் பணிசெய்வார்களென்று பார்த்தோம் (செய்யுள்-44). இவ்வாறானவை 45லிருந்து 50வரையிலான செய்யுள்கள்; இவற்றில் திட்டவட்டமான, முக்கியமான அறிவுரைகள் தரப்பட்டுள்ளன. ஆனால், இச்செய்யுளில், அருணகிரியார் ஒரு பொதுவான அறிவுரையையும், எந்த யோக மார்க்கத்திலும் செல்லும் சாதகனுக்கு பயன்தரும் உறுதியையும் அவர் தருகிறார். ஏனெனில், ஒரு சாதகன் எந்த யோக மார்க்கத்தில் சென்றாலும், அவன் என்றைக்காவது ஒருநாள், எந்த காரணத்திற்காவது இத்தகைய ஒரு நிலைமையை சந்திப்பது நிச்சயம்,

    இந்நூலின் முந்தையச் செய்யுள்கள் எல்லாவற்றிலும், ஆன்மீக வாழ்க்கை மற்றும் சாதனை சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் பற்றி அருட்செல்வர் விவரமாக எடுத்துரைத்திருக்கிறார். தன்னுடைய இப்புனித நூலை நிறைவுசெய்யும் கடைசிச் செய்யுளில் (அடுத்த செய்யுள்) சகஜ சமாதி அவஸ்தையைப் பற்றி (ஜீவன்முக்தனின் இயல்பான தூய உணர்வு நிலைபற்றி) மிகவும் அழகாக, உன்னதமாக விவரிக்கப்போகிறார். அதற்குமுன், அருணகிரியார் இச்செய்யுளில் ஒவ்வொரு சாதகனும் தன் ஆன்மீக வளர்ச்சியில் ஏதோ ஒரு சமயத்தில் கட்டாயமாக சந்திக்க வேண்டியிருக்கும் ஒரு விசித்திரமான நிலைமையைச் சொல்லி, அத்தகைய சந்தர்ப்பம் வராமலிருப்பதற்கும், அல்லது அது வரும்போது, அதை வெல்லுவதற்கு ஒரு சக்திவாய்ந்த வழிமுறையை பரிந்துரைக்கிறார். இத்தகைய நிலைமையைப் பற்றி இங்கு (கடைசி செய்யுளுக்கு முந்தையதில்) குறிப்பிடுவதால், சாதனையின் இறுதிக் கட்டத்தில்தான் இதுமாதிரி நிலைமை (சோதனை) வருமென்று கருதக் கூடாது. ஆன்மீக சாதனையின் எந்த நிலையிலும், இல்லை ஒவ்வொரு நிலையிலும், இந்த இடையூறு வருகிறதென்பது அப்பாதையில் நடப்பவர்களுக்கு நன்கு தெரிந்ததுதான். எனவே, அருணகிரியார் இதைப்பற்றி இந்நூலில் ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் இதனை விவரிக்காமல், ஒவ்வொரு சாதகனுக்கும் பொதுவாக உதவிடவும் மற்றும் ஒரு உறுதியைத் தருவதற்காகவும் இங்கு இதை அமைத்திருக்கிறார். “கந்தர் அனுபூதியை” தினந்தோறும் பாராயணம் செய்தும், தியானம் நாம-ஜபம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடும் சாதகர்களுக்கு இச்செய்யுள் மிகவும் உபயோகமானது.

    ஒரு சாதகன் என்னதான் ஆழமாகக் (ஆன்மீகக் கல்வியைக்) கற்றிருந்தாலும், நெடுங்காலமாக ஆன்மீகப் பயிற்சி செய்து வந்திருந்தாலும், மேலும் ஆன்மீகப் பாதையில் வெகுதூரம் முன்னேறியிருந்தாலும், அவன் புரிதலில் குழப்பம் ஏற்பட்டு, அவன் புத்தி தடுமாறி, விவேகசக்தியை இழந்துவிடும் சந்தர்ப்பங்கள் வரத்தான் செய்கின்றன. ஏன் இவ்வாறு நிகழ்கிறதென்று நாம் ஆச்சரியப்படலாம். ஆனால் இவ்வாறு ஏற்படுவது சகஜம்தான்; பல்வேறு காரணங்கள் இந்த நிலைமையைக் கொண்டுவரக் கூடும். அவைகளில் முக்கியமான சிலவற்றை இப்பொழுது நாம் காணலாம்.

    பல வருட காலம் ஆன்மீக சாதனைகளை அப்யசித்து வந்தபின்னரும், வெவ்வேறு விதமான சந்தேகங்கள் சாதகர்களைத் தாக்க ஆரம்பிக்கின்றன. “பலவருடகாலமாக நான் சாதனை செய்து வருகிறேன்; ஆனால் நான் கணிசமாக எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை! நான் உண்மையில் முன்னேறிக் கொண்டிருக்கிறேனா, அல்லது பொய்யான திருப்திகள் அடைந்து என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றேனா?” “நான் மேற்கொண்டிருக்கும் சாதனை எனக்குப் பொருத்தமானதுதானா; அல்லது, எனது பயிற்சியில் ஏதாவது குற்றம் குறைகள் உள்ளதோ?” “நான் ஒரு சரியான குருவைத் தேர்ந்தெடுத்து உள்ளேனா? நான் என்னுடைய குறிக்கோளை அடைய அவரால் வழிகாட்ட இயலுமா? அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறதா?” ஒரு சாதகனின் ஆன்மீக வாழ்வில் இம்மாதிரியான நெருக்கடியான தருணங்கள் வருவது அசாதாரணம் அல்ல, வரத்தான் செய்யும். மேலும், ஒரு சாதகன் பற்பல ஆசிரியர்களின் பல்வேறு சாதனைகளைப் புகட்டும் புத்தகங்களைப் படித்ததினாலோ, (அ) சுயநலமிக்க போதகர்கள் தரும் பல்வேறு போதனைகளை (அறிவுரைகளை – lectures) கேட்டதினாலோ, (அ) அவர்களுக்குள் மறைந்திருக்கும் ஆசைகள் அவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளுவதற்காகத் தூண்டப்படுவதால், தன்னை அறியாமலேயே அவன் பல்வேறு உசிதமில்லாத சாதனைகளை மேற்கொள்ளுவதினாலோ, அவன் மனதில் குழப்பம் ஏற்பட்டு, என்ன செய்வதென்று அறியாமல் பரிதவிக்கின்றான்.

    மேலும், அச்சாதகன் புரிந்து கொள்ள முடியாதத் தடைகளை எதிர்ப்பட நேரும்போது, (அ) கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும்போது, (அ) சாதகமற்ற சூழ்நிலையில் இருக்கநேரிடும்போது (அ) நோயாலோ, மாயையின் மருட்சியாலோ தாக்கப்படும்போது, அவன் அறிவாற்றல் குழப்பமடைகிறது; தனக்கு என்னதான் நடக்கிறதென்று அவனால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில்தான், தன்னுடைய சாதனைப் பயிற்சிகளின் செயல்திறன் மீதான நம்பிக்கை, அவனது குருவின் தகுதி, ஆன்மீகப் பாதையில் செல்வதற்கான தனது சுய தகுதி, ஆகியவைகள் பற்றிய சந்தேகங்கள் எழுந்து முரட்டுத்தனமாக அவனை ஆட்டுவிக்கின்றன. அத்தருணத்தில், அவன் விவேகத்தை இழப்பதென்பது சாத்தியம்தானே.

    ஆக, சாதகன் குழம்பமடைவதற்கான காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அதன் விளைவு மட்டும் ஒன்றுதான் --- அறிவாற்றலில் குழப்பம் (மதிகெடுதல்). இச்செய்யுளைத் தொடங்கும் “மதிகெட்டு” என்று அச்சொல்லில் புத்தியைக் குழம்பச்செய்யும் மேலே கூறப்பட்ட பல்வேறு காரணங்களையும் அருணகிரியார் சுட்டுகிறாரென்று சொல்லலாம்.

    இனி, ஒரு சாதகனின் புத்தியின் விவேக சக்தி குழம்பமடைவதால் என்ன நடக்கிறது? அதைத்தொடரும் எல்லா தீயவைகளும் வெளிப்பட்டு அவனைத் தாக்குகின்றன. புத்திதான் ஒருவனின் மிகஉயரிய ஆற்றல்; அது குழப்பமடையும்போது, மனமானது பலவீனப்பட்டு சோர்வடைகிறது. அது சரியாக சிந்திக்கும் சக்தியையும் இழக்கிறது. குழம்பிய புத்தி மற்றும் மயங்கிய மனம், பகுத்தறியும் சக்தியை இழந்து விடுவதால், அவர்கள் தவறானவைகளை சரியானவைகளென்றும், இந்திரிய-சுகத்தை ஆன்மீக ஆனந்தமென்றும் தவறாக நினைத்து, அவர்களின் உண்மை நலத்திற்குப் பாதகமானவைகளை அநுசரித்து, தாங்கள் கடப்பிடிக்கும் தவறான செயல்களை நியாயமற்ற வாதங்களைக் கொண்டு நியாயப்படுத்தி, அவர்களின் இலக்கான மெய்யனுபூதியை மறந்து, வழி இழக்கின்றனர். வாழ்க்கையை வீணாக்குகின்றனர். இதன் விளைவு என்ன? மனக்குழப்பத்தில் அவர்கள் தங்களை இழந்து, முடிவில் அழிந்து போகின்றனர். இவ்வாறு நடைபெறுவதற்கான காரணம், மேற்கூறிய பற்பல காரணங்களால் உண்டாகும் மனக்குழப்பம்தான்,

    இத்தகைய இக்கட்டான சமயங்களில், சாதகன் தனக்குள்ளிலிருந்து ஒரு அசாதாரண பலத்தைப்பெறுவதே அவனது உடனடியான தேவை. அந்த ஒன்றே அவன் துவண்டு போய், அழிந்து விடாமல் இருக்க அவனைப் பாதுகாக்கும். அதற்காகவும், அவன் இதன் வசப்பட்டு பலிகடாவாக ஆகிவிடாமல் பாதுகாக்கவுமே அருணகிரியார் இச்செய்யுளை அளித்துள்ளார். இது அச்சாதகனுக்குத் தேவையான மனவலிமையையும் ஊக்கத்தையும் தந்து, இந்தக் கடுமையான சவால்களை சாமர்த்தியமாக சமாளிக்க வைக்கும்.

    அந்த உள்சக்தி யாது? அச்சக்தி சாதகனின் சொந்தமான புத்தி சக்தியோ மற்ற சக்தியோ அல்ல; அது முற்றிலும் வேறான இடத்திலிருந்து வருகிறது. அவன் பக்திசெய்யும், தியானம்செய்யும் கந்தப் பெருமானின் ஸ்வபாவமான கருணையைப்பொழியும் தன்மையிலிருந்து வருகிறது. கந்தப் பெருமானிடம் எவன் உண்மையான பக்தி கொண்டிருக்கிறானோ, அவனை புத்தி குழப்பம் ஆகியவை எப்படி பாதிக்கமுடியும்? முடியவே முடியாதென்று அருணகிரியார் உறுதி கூறுகிறார். ஏனெனில், அது பெருமானின் இயற்கை இயல்புக்கு மாறானதாகும். அவர் நதி புத்திரன் (கங்கையின் புதல்வர்), சிவனாரின் கிருபையால் உதித்தவர்; அவரே எல்லையற்ற ஞானம்-ஆனந்தம் (ஞானசுகம்); அவரே அசுரர்களின் பலத்தை அழித்தவர். அவரே சர்வசக்தி கொண்ட பாதுகாவலர் (திதிபுத்திரர் வீறடு சேவகன்).

    கந்தப் பெருமான் நதி-புத்திரன்; அவரது அவதாரம் கங்கை நதியில் நிகழ்ந்தது. அவரே ஞான-ஆனந்தத்தின் ஈஸ்வரன் --- ஞானசுக இறைவன். திதி புத்திரர்களான அசுரர்களின் சக்திகளை அழித்தவர் --- திதி என்ற அசுர மங்கைக்கும் கஷ்யப முனிவருக்கும் பிறந்தவர்கள் அசுரன் சூரபத்மன் மற்றும் அவன் சகோதரர்கள். எத்தகைய மகோன்னதமான கருத்து இது! ஞான-சுக ஈஸ்வரனான அவர் திதி புத்திரர்களை அழிக்க நதி புத்திரனாக உதித்தவர்.

    கங்கை நதி இமய மலையின் உயர்ந்த சிகரத்திலிருந்து பிரவாகமெடுத்து கீழே ஓடுகிறது; கங்கை நதி என்றும் வற்றாத பிரவாகம் உடையது. அதேபோலவே, கந்தப் பெருமானின் கிருபையும் அவர் பக்தர்களின்மீது பிரவாகம்போல் இயற்கையாகவும், இடைவிடாமலும் பாய்கிறது, மேலும், எப்படி நதி-புத்திரன் கொடூர திதி-புத்திரர்களை அழித்தாரோ, அப்படியே புத்தி குழப்பத்தை பின்தொடரும் தீயவைகளை பெருமானின் கிருபையானது அழித்தொழித்து விடுகிறது. தேவர்களின் பக்தி-சிரத்தையுடன் கூடிய பிரார்த்தனைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, ஞான-சுகத்தையே தன் இயல்பாகக் கொண்ட முருகப் பெருமான் கங்கை-புத்திரராக அவதரித்து, திதி-புத்திரர்களை அழித்து, தேவர்களுக்கு சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைக் கொடுத்தார். அவ்வாறே, ஸச்சித்தானந்த (ஞான-சுகம்) சொரூபமான பெருமான் (ஆத்மா), சாதகனின் உள்ளத்திலேயே திருவருளாக வெளிப்படுத்திக்கொண்டு, அவனுடைய அனைத்துத் துன்பங்களையும் நீக்கி, வலிமை மற்றும் மகிழ்ச்சியை அவனுக்கு அளிக்கிறார். எனவே, ஒருவனுடைய பக்தியின், தியானத்தின் இலக்கு, ஞான-சுக கந்தப் பெருமானாக இருக்கும்பொழுது, மனக்குழப்பம் போன்ற இடர்கள் அவனில் எப்படி எழ இயலும்? அப்படி ஒரு வேளை அவை எழுந்தாலும், அந்த ஞான- சுக சொரூபரான கந்தப் பெருமானின் திருஅருளானது உடனே தோன்றி அவற்றை அழித்துவிடும். சாதகனின் சுய-சொரூபம் ஆனந்த உணர்வாகவே (ஆத்மாவாக) இருக்கும்பொழுது, எப்படி மனக் குழப்பம் (மனச் சோர்வு) அவனிடம் தலை காட்ட இயலும்? வெளிச்சமிருக்குமிடத்தில் இருட்டு தலை காட்ட இயலுமோ? ஒருவன் தன் உண்மை சொரூபமான ஆத்மா, இறைவன் தன் உள்ளத்தில் உறைகிறார் என்கின்ற விழிப்புணர்வுடன் இருக்கும்வரை, அவன் மனம் மற்றும் புத்தியில் வந்துபோகும் குறும்புத்தன சேஷ்டைகளால் துன்புறுத்தப்படமாட்டான்.

    இவ்வாறாக. அருணகிரியார் கந்தப் பெருமானை பெரும் சக்தி படைத்த அடைமொழிகளால் விளிப்பதன் மூலம், சாதர்களிடம் மனக் குழப்பம் போன்ற சாத்தியக் கூறுகள் எழுவதை விலக்கிவிடுகிறார். மேலும், அத்தகைய நிலைகள் அவர்களை ஒருபொழுதும் பாதிக்காது என்ற உறுதியையும் சுட்டிக்காட்டுகிறார். இந்த செய்யுள் சுட்டும் இவ்வுட்கருத்துகளின் மீது ஒரு சாதகன் ஆழமான சிந்தனை செய்தால், அதுவே எவ்வித தடைகளையும் எதிர்த்து வென்றிடத் தேவையான மகத்தான மனவலிமையையும் தைரியத்தையும் அவனுக்குத் தந்துவிடும். இக்கட்டான தருணங்களில் “சஞ்சீவினி” போன்றது இச்செய்யுள்.

    “விவேகம் இழந்து, மனக்குழப்பத்தில் ஆழ்ந்து, மதி மயங்கி, முக்தியும் பறிக்கப்பட்டு, நான் நசிந்து போகத்தான் வேண்டுமா? இப்படியொரு நிலைமை எனக்கு வாய்த்துத்தான் ஆக வேண்டுமா என்ன? இல்லை, இவ்வாறு ஒரு பொழுதும் நடக்க முடியாது. ஏனெனில், பெருமானே, உன் பால் நான் பெரும் பக்தி கொண்டுள்ளேன், மேலும் உன்னை அடைவதே என் தியானத்தின் குறிக்கோள், நீயோ கிருபை பொழியும் நதி-புத்திரன், ஞானம் மற்றும் பரமானந்தத்தின் அதிபதி, திதி-புத்திரர்களின் சக்தியை அழித்து அவர்களை வெற்றி கொண்டவர்.” இவ்வாறாக, எவனது இலக்கு தெளிவாகவும் நிச்சயமாகவும் உள்ளதோ, அந்த உண்மையான சாதகன் மனக்குழப்பம் போன்றவைகளால் ஒரு பொழுதும் பாதிக்கப்படமாட்டான் என்ற உறுதியை அருணகிரியார் அவனுக்குத் தருகிறார். “கந்தப் பெருமானின் திருஅருள் உன்னுடன் என்றைக்கும் உள்ளது, அது உன்னைக் கைவிடாது, நீ இறையனுபூதியான இலக்கை மறவாது இருக்கும்வரை, இறைவனின் கருணையானது உன்னை எப்பொழுதும் பாதுகாக்கும், நீ ஒரு பொழுதும் அழியமாட்டாய்.” ஓ சாதகர்களே! முழு நம்பிக்கையுடன் இருங்கள்.

    இச்செய்யுளை இன்னொரு விதத்திலும் புரிந்துகொள்ளலாம். விவேகத்தை இழந்து, மனம் குழம்பிப்போய், மதி மயக்கம் அடைந்து, இவைகளின் தாக்குதல்களால், இறைவனை அடைவதாகிய “அநுபூதி”யை இழந்து விடாமலிருக்க ஒரு சாதகன் தன்னைக் காப்பாற்றுமாறு பெருமானிடம் வைக்கும் முறையீடாகவும் கொள்ளலாம். “நான் இப்படியாக அழிந்து போய்விடுவது என் தலைவிதியா என்ன? ஓ பெருமானே! இது மாதிரி எதுவும் ஆகாதிருக்கட்டும். என்னைக் காப்பாற்றுவாயாக” என்று ஒரு ஆதரவற்ற பக்தன் (சாதகன்) முறையிடுகிறான் என்று கொள்ளலாம்.

    அருணகிரியார் இச்செய்யுளை மிகமிக சக்தி வாய்ந்த சொற்கள் கொண்டு அமைத்துள்ளதால், ஒருவன் உண்மையாக இதைப் பாடம்செய்தாலே போதும் (அதாவது பாராயணம் செய்தாலே போதும்), அவன் கண்களிலிருந்து நீர் மல்கி அவன் உள்ளம் உருகிடும்; அதுவே எப்பொழுதும் இறைவனிடமிருந்து பொங்கி வழியும் கிருபையை அவன் உள்ளத்தில் ஈர்க்கும். சாதகர்கள் மனக் குழப்பம் கொண்டு, என்ன செய்வது என்றறியாது திகைத்திருக்கும் தருணங்களில், இச்செய்யுள் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும், மேலும், இதை தினசரி பிரார்த்தனையாக மேற்கொண்டு ஒருவன் பாராயணம் செய்து வந்தாலே போதும், இதுவே இக்கட்டான தருணங்களிலிருந்து அவனை நிச்சயமாகப் பாதுகாக்கும்.

    இச்செய்யுள், கடைசி செய்யுளுக்கு முந்தையதாக இருப்பதன்மூலம் இது இந்நூலின் ‘பலஸ்ருதி’ போலத் தோன்றவைக்கிறது, --- இந்நூலை பக்தியுடன் தொடர்ந்து தினசரி பாராயணம் செய்து வரும் ஒருவன் அடைந்திடும் நன்மை, பயன் (அ) பலன் யாது என்பதைக்கூறும் செய்யுள், ---- அதாவது, “கந்தர் அநுபூதி” நூலை தினமும் முறையாக ஓதி (அ) பாராயணம் செய்து, அதன் அறிவுரைகளின்படி நடந்திட உண்மையாக முயற்சிப்பவர்கள், அனைத்தையும் தூய்மைப் படுத்தும், ஞான-சுக இறைவனின் கிருபையைக் கண்டிப்பாகப் பெறுவார்கள்; அக்கிருபையானது அவர்கள் மனதிலுள்ள குழப்பங்கள், மயக்கங்கள், மற்றும் இலக்கை (அநுபூதியை) அடைவதில் வரும் பல்வேறு தடையூறுகளையும் துடைத்தெறிந்துவிடும் என்ற உறுதியை இச்செய்யுள் பலனாக வழங்குகிறது.

No comments:

Post a Comment