செய்யுள் 7



செய்யுள் – 7


கெடுவாய்   மனனே   கதிகேள்   கரவாது
இடுவாய்   வடிவேல்   இறைதாள்   நினைவாய்
சுடுவாய்     நெடுவேதனை   தூள்படவே
விடுவாய்   விடுவாய்   வினையாவையுமே.

    பொழிப்புரை: “ஓ மனமே, (உண்மை தன்மையில்லாததும், விரைந்தழியும் இயல்பும் கொண்ட இந்த உலக விஷயங்களை உண்மையென்றுக் கருதியதால்), நீ மிகவும் கெட்டொழிகின்றாய். இப்பொழுது, இதிலிருந்து மீட்சி பெற்று முக்தியை அடையும் வழியைக் கூறுகிறேன், உன்னிப்பாகக் கேட்பாயாக: ஒளித்து வைக்காமல் அன்புடன் தானம் செய்வாயாக; கூறிய வேலை ஏந்திய முருகப் பெருமானின் தாமரைப் பாதங்களை தியானித்திருப்பாயாக. (இவ்வாறு நீ செய்தால், கண்டிப்பாக) யுகாந்திரங்களாக உன்னை தொடர்ந்து துன்புறுத்திவரும் இப்பிறப்பு-இறப்பு துயரத்தை பொடிப்பொடியாக்கி எரித்திடுவாய்; மேலும், (புண்ய-பாபம் எனப்படும்) அனைத்துக் கர்மங்களிலிருந்தும் வெகு சீக்கிரத்தில் விடுபடுவாய்.”

விளக்கவுரை

    தன்னுடைய ஆன்மீக ஆர்வம் நிலைத்திருக்கவும், மற்றும் மேலும் அதை வலுப்படுத்திக் கொள்ளவும், அச்சாதகன் உயரிய (வேத) சாஸ்திரங்களை முறையாகக் கற்றல், ஸத்சங்கங்களில் பங்கேற்றல், மகான்களுடன் தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளுதல் போன்ற பல சாதனைகளை செய்து வருகிறான். ஆறாம் செய்யுளில் அவன் செய்த பிரார்த்தனையானது வெகு தீவிரமானதாகவும், உளமார்ந்ததாகவும் இருந்ததால், பெருமானிடமிருந்து அதற்கான மறுமொழியும் எதிர்பாராத முறையில் உடனே வந்தமைகிறது. பெருமான் எப்பொழுதும் தன் உருவத்தில் நேரடியாக உதவ வருவதில்லை; வள்ளி தேவிக்காக அவர் வந்த பொழுதுகூட முதலில் வேறு ஒரு உருவில் வந்ததுபோல, புத்தகம், வயதான மனிதர், ஆன்மீக வகுப்பு, ஸத்சங்கம், அல்லது உபதேசம் பெறுவதெற்கென்று அவன் சென்று பார்க்கும் மகான்கள், ஆகிய பல வழிகளில் ஏதோ ஒன்றின் மூலம் சாதகனுக்குத் தேவையான உபதேசத்தை அருளுவார்..

    அவனுக்குக் கிடைக்கும் உபதேசம்:

    (1) உன்னிடமிருக்கும் செல்வத்தை வறியவர்க்கு வழங்குவாயாக. (இவ்வாறு தானம் செய்தால் இருவித பயன்கள் ஏற்படும்: 1. மற்றவர்களின் துன்பநிலை கண்டு மனம் நெகிழ்வதால் கல்லாகியிருக்கும் உன் (அச்சாதகனின்) நெஞ்சு உருகி மென்மையாகும், 2. செல்வத்தின் மீதான பற்று – ‘வித்தேசணா’ எனப்படும் ஏடணை -- அறவே நீக்கப்படும்).

    (2) பெருமானின் பாதங்களை தியானிப்பாயாக. (தானம் செய்து மென்மையாக்கப்பட்ட நெஞ்சில், அத்தியானம் பெருமானின் தாமரைப் பாதங்களை, சேற்றில் செந்தாமரை மலர்வதுபோல, மலரச் செய்யும்).

    இவ்விரு உபதேசங்களும் அந்த சாதகனால் கடைபிடிக்கப்படும்பொழுது, கந்தப் பெருமானின் கிருபையை அவன் பெறுகிறான்.

    இச்செய்யுளில் ‘நினைவாய்’ என்ற சொல் விசேஷமான அர்த்தத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளது. முன்னர் (5-ம் செய்யுளில்), அச்சாதகன் வெறுமனே மனதில் பதியாமல், உதட்டளவில் இறைநாமாவை (மந்திரங்களை) உச்சரித்துவந்தான். எனவே அங்கு ‘மொழிந்து’ என்ற சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது, அதாவது இயந்திர கதியில் உள்ளம் தொடாமல் தன் உதடுகள் மட்டும் இறைநாமாவை உச்சரித்தன, மொழிந்தன. ஆனால், இச்செய்யுளில் சொல்லியபடி, இனிமேல் தொடர்ந்து தானதர்மங்கள் செய்வதால் நெஞ்சம் உருகி பக்குவப்படுகிறது; அத்துடன், அப்பக்குவப்பட்ட மனதினால் பெருமான் பாதங்களை ‘நினைப்பதால்’ (தியானம் செய்வதால்), அது அனைத்து கர்மபலன்களும் விரைவில் அழிபட ஏதுவாகிறது. அவைகளின் பலனாய் முடிவில்லா பிறப்பிறப்பு சுழற்சிக்கும் ஒரு முடிவு எட்டப்படுவது திண்ணம். எனவே, முதல்படியாக, பெருமானின் கிருபையானது குருவின் உபதேசமாக அவனுக்குக் கிடைக்கிறது. (அடுத்த செய்யுளில்.)

    ஒருவனின் சம்சார பந்தத்திற்கும், மோட்சத்திற்கும் மனம் தான் காரணம். எனவே, மனதுக்கு முறையான கல்வி புகட்டுவது அவசியம். அதனால்தான், இச்செய்யுளில் மனதுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. அறியாமையின் விளைவான மனம், நிலையில்லாத உலகப் பொருள்களை உண்மையானவை என்று எண்ணி, எப்பொழுதும் அவைகளையே நினைத்து, அவைகளின் பின்சென்று, அவைகளில் தன்னை சிக்கவைத்துக் கொண்டு, கடைசியில் வெகு மோசமான துன்பத்தில் ஆழ்கிறது. இதுதான் சம்சார பந்தத்தை ஏற்படுத்தும் விஷய-சிந்தனை‘ (உலகப் பொருள்கள் பற்றிய சிந்தனை) என்றழைக்கப்படுகிறது. உலகப் பொருள்களை சிந்திப்பதால் ஏற்படும் பேரழிவு பற்றி ஸ்ரீமத் பகவத்கீதை நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது. “ஓர் பொருளைப்பற்றி நினைப்பதால் அதன்மீது பிடிப்பு (பற்று) உண்டாகிறது, அப்பற்றிலிருந்து ஆசையும், ஆசையிலிருந்து கோபமும், கோபத்திலிருந்து மதிமயக்கமும், மதிமயக்கத்திலிருந்து ஞாபக மறதியும், ஞாபக மறதியிலிருந்து விவேகத்தின் அழிவும், கடைசியில் விவேகத்தின் அழிவினால், தானே அழிந்து போகிறான்.” (கீதை : 2: 62,63). இத்தகைய பேரழிவு ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால், அதன் மூலகாரணம் முளையிலேயே கிள்ளியெறியப்படவேண்டும். மனதை உலகப் பொருள்களின் நினைவில் மூழ்கிடாமல் தடுத்திட வேண்டும். ஆதலால்தான், தன்னிடத்திலிருக்கும் செல்வத்தை (பொருள்களை) தானம் செய்திட மனதிற்கு ஆலோசனை கூறப்படுகிறது. ஆனால், தானம் எவ்வாறு செய்யப்பட வேண்டும்? கொடுக்க மனசில்லாமல், எரிச்சலுடனோ, வெறுப்புடனோ (கடோ உபநிஷதத்தில் நசிகேதனின் தந்தை செய்ததுபோல்) தானம் கொடுக்கக் கூடாது இறைவன் மீது மிக்க பக்தியுடன் அவரையே நினைத்தவண்ணம், தானமாகக் கொடுக்கப்படும் பொருளைப் பற்றி சிந்தித்து கொண்டிருக்காமல், தானம் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்தல் பகவத்-சிந்தனை, ஆத்ம-சிந்தனை, பிரம்ம-சிந்தனை எனப்படுகிறது; இது விஷய-சிந்தனை என்று முன்னர் கூறப்பட்ட பிணிக்கான மாற்றுமருந்து. எதையாவது தானமாகக் கொடுக்கும்போது, தானமாக தரப்படும் பொருளைப் பற்றிய சிந்தனை அறவேயின்றி, இறைசிந்தனையுடன் தரப்பட வேண்டும். அவ்வாறு செய்வதெப்படி?

    தானத்தைக் கொடுப்பவர், தானமாக கொடுக்கப்படும் பொருள், தானத்தைப் பெறுபவர், தானம் கொடுக்கும் செயல் அனைத்தும் இறைவனே என்ற எண்ணத்துடன் தானம் செய்யவேண்டும்; ஏனெனில், அனைத்தும் இறைவனே, அனைத்தும் அவருக்கே சொந்தமானது. எப்படி தானத்தை பெறுபவர் இறைவனின் படைப்போ, அதேபோல் தானத்தைக் கொடுப்பவர், தானமாக கொடுக்கப்படுகிற பொருள் ஆகிய இரண்டும்கூட அவருடைய படைப்பே. அனைத்தும் உலகளாவி தோன்றியிருக்கும் இறைவனின் அங்கங்களேயாகும். இவ்வாறு தியானித்து, அதிலேயே நிலைத்திருப்பது பிரம்மகர்மசமாதி நிலையாகும்; இந்நிலையை பகவத் கீதை (4: 24) இவ்வாறு விளக்குகின்றது: “அர்ப்பணம் செய்தல் பிரம்மம்; நெய் முதலிய ஹவிஸும் பிரம்மம்; பிரம்மமாகிய அக்னியில் பிரம்மத்தால் அர்ப்பணம் கொடுக்கப்படுகிறது. இப்படியாக, கர்மத்தில் பிரம்மத்தை எப்பொழுதும் காண்பவனால், அப்பிரம்மமே அடையப்படுகிறது.” இந்த ஞானாமாகிய அக்னியே முடிவற்ற பிறப்பிறப்பு தரும் சம்சார சுழற்சியை எரித்து சாம்பலாக்குகிறது. இருக்கும் அனைத்தும் இறைவனாகிய பிரம்மம் என காணப்படும்பொழுது, ஜீவத்வம் என்ற ஒன்று தனித்தன்மையுடன் இருக்கும் வாய்ப்பு எங்கிருந்து வரும்? அகண்ட பரந்த கடலைப் போன்றது பிரம்மம் அல்லது இறைவன்; எப்படி அலைகளுக்குக் கடலை விடுத்து தனித்த இருப்பு இல்லையோ; அப்படியே கொடுப்பவரும், கொடுக்கப்படுவதும், பெறுபவரும் பிரம்மம் என்ற இருப்பிலிருந்து தனித்து இருப்பதில்லை.

    நாம் தற்போது அனுபவித்து வரும் துன்பங்களுக்கும், ஜன்ம ஜன்மாந்திரமாக நம்மை தொடர்ந்திடும் முடிவில்லா சம்சார சங்கிலிக்கும், கர்மங்களே காரணம்; அத்தொடர் சங்கிலியின் ஒரு வளையமே இந்த ஜன்மம் என்று அருணகிரியார் கூறுகிறார். இப்பிறவிப்பிணியைப் போக்கும் அருமருந்தாக தானம், மற்றும் இறைதியானம் ஆகிய இரண்டையும் அவர் கொடுக்கிறார், ------ கர்மங்களைக் களைந்திட தானம், பிறப்பிறப்பை இல்லாமல் செய்திட தியானம். ‘தானம் பெரும்பாவங்களை சமாதி கட்டுகிறது’ என்கிறார் இயேசு கிறிஸ்து. ‘யக்ஞம், தான தர்மம், தவம் ஆகிய மூன்றும் ஞானிகளுக்கு மேலும் புனிதம் தரும்’ என்கிறார் கிருஷ்ண பகவான் (பகவத் கீதை18: 5).

    ஆசைகளும், பேராசைகளுமே, நாம் பாவம் செய்வதற்கான காரணங்கள்; இவைகள் நெஞ்சத்தை (சுயநலமாக்கி) சுருங்கச் செய்கிறது. இப்பிணிகளுக்கு தானம் ஒரு மிகச்சிறந்த மாற்று மருந்து. தானம் சுருங்கிய நெஞ்சத்தை பரந்துவிரியச் செய்து, பிறரின் துன்பங்களை கண்டு இரக்கம் கொள்ளச் செய்து, அவர்கள்பால் அன்பும் பொழிந்திடச் செய்யும். தானம் செய்யச் செய்ய மனிதனின் சுயநலம் குறைந்து, பரந்த மனப்பான்மை வளர்கிறது. மற்றவர்கள் படும் கஷ்டத்தை அவனால் உணரமுடிகிறது. எனவே, தானம் செய்யும் செயலானது, (சாதகனின்) நெஞ்சத்தை கசிந்துருக வைத்து, மென்மையானதாகவும் ஆக்கிவிடுகிறது. அதனால், சென்ற செய்யுளில் அவன் வேண்டிக்கொண்டவாறு, இறைவனின் தாமரைப் பாதம் அவன் நெஞ்சினில் மலர்ந்திட தேவையான தகுதியை தந்து விடுகிறது. சுருங்கக்கூறின், தானம் நெஞ்சை தூய்மையாக்கி, பக்குவப்படுத்துகிறது; அத்துடன் இறைவனை மட்டுமே நினைத்து தானமானது செய்யப்படும்பொழுது, அது அப்பக்குவமடைந்த நெஞ்சினில் இறைவனின் பாதங்கள் பதித்திடத் தேவையான தகுதியையும் தருகிறது. தானமும், இறைதியானமும் இவ்வாறு ஒருங்கி இணைக்கப்படும்பொழுது, முக்தி அடையப்படுகிறது.

    தானம் எனப்படும் சொல் பரந்த அர்த்தத்தில் இங்கு உபயோகிக்கப்படுகிறது. ஒருவன் தனது சொத்தை அல்லது அதில் ஒரு பங்கை தருவது மட்டும்தான் தானதர்மம் என்று கொள்ளலாகாது. ஒருவன் தன் சிந்தனையிலும், உணர்ச்சியிலும், எண்ணங்களிலும், மனப்பாங்கிலும் ஆகிய அனைத்திலும் உதாரத்தன்மை உடையவனாக இருக்கக் கூடும், இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்களுடன் அநாவசியமாக சண்டைசச்சரவு இல்லாமல், ஒத்துவாழ முடியும். அவ்வாறு இருப்பதே சிறப்பு. ஒருவன் தன் சொத்து, கல்வி, திறமை, ஞானம் போன்ற எத்தனையோ விஷயங்களை தானமாகக் கொடுக்கலாம். ஆனால், ஞான-தானமே தானம் அனைத்திலும் சிறந்ததாக எண்ணப்படுகிறது. எதனாலெனின், மற்ற எல்லாவகை தானங்களின் பலன் நீண்டகாலம் நிலைத்திருப்பதில்லை; ஞானதானம் மட்டுமே நிரந்தரமான நன்மையை நல்குகிறது.

    தியாகமின்றி தானதர்மமில்லை. அனைத்து தானதர்மத்திலும் தன் இன்பத் தியாகம் அடக்கம். தன்னுடைய சொந்த இன்பத்தை தியாகம் செய்யாமல் தானதர்மம் செய்யமுடியாது. அது உடல், உணர்ச்சி, அகந்தை ஆகியவைகளின் இன்பத்தை சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடும். இப்படித் தியாகமில்லாத தானம், தானமாகாது; அது வெறும் ஆரவாரமாகும். பல்வேறு வகையான தானங்களை (தியாகங்களை) சாதகன் செய்வது, தன் இறுதிக் குறிக்கோளை அடைய உதவும் பயிற்சியே. இவ்வாறு அவன் செய்து பழகிவருவது, கடைசியில் தன்னுணர்வையே (Individuality) பேருணர்வில் (Universality) தியானத்தின் மூலம் தன் இறுதித் தியாகமாக அளித்திடுவதற்கே ஆகும். இப்படியாக, தனது என்று சொல்வதற்கு ஒன்று கூட மிச்சம் வைக்காமல் அனைத்தையும் --- பணம், திறமை, அகந்தை, கடைசியில் தன்னையே பரமனுக்கு --- சமர்ப்பணம் செய்து விடவேண்டும். எதையும் மிச்சம் வைத்துக்கொள்ளாமல் கொடுத்துவிட வேண்டும். எதுவும் மீதம் இருக்கக் கூடாது. தன்னுணர்வு கூட அறவே இல்லாமல் போக வேண்டும். அதனால்தான் இச்செய்யுள் ‘இடுவாய்’ (தானம் கொடுப்பாயாக) என்று மட்டும் உபதேசிக்காமல், ‘கரவாது இடுவாய்’ (எதையும் ஒதுக்கி/ ஒளித்து வைக்காமல், அனைத்தையும் தானம் கொடுப்பாயாக) என்று உபதேசிக்கிறது. மீதியில்லாமல் எல்லாவற்றையும் கொடுப்பதுவே தானம். இப்படியாக, தன்னிடமிருக்கும் அனைத்தும் தானம் செய்யப்பட்டு, அத்துடன் இறைவனின்மேல் தியானம் செய்வதன்மூலம் தன்னுணர்வு எனப்படும் தன்னையே வியாபித்திருக்கும் பேருணர்வு எனப்படும் பரமனில் அர்ப்பணிக்கப் படும்போது, கர்ம தளையானது அறுபட்டு, சம்சார பந்தம் ஒரு முடிவிற்கு வருகின்றது. தானமும், தியானமும் கர்ம பந்தங்களை அறுத்து, பிறவிப் பெருங்கடலையும் கடக்கச்செய்யும் கருவிகள். தானம் வெளிப்படையான (பொருள்களின்) தியாகம், தியானம் அந்தரங்க (ஆன்மீக) தியாகம்; புறத் தியாகம் தானம்; அகத் தியாகம் தியானம். தானம் தியானத்திற்கு வழிவகுத்து, அதற்கான ஆயத்தத்தையும் செய்கிறது.

    செய்யுள்–2ல் சொல்லப்பட்ட ‘எல்லாமற என்னை இழந்த நலம்’ என்ற நிலையை அடைவதற்கு உபயோகமான செயல்முறை பயிற்சி இந்தச் செய்யுளின் உபதேசம். அங்கு அது (சாதகன்) பெருமானிடம் செய்யப்பட்ட பிரார்த்தனை, இங்கு இது (சாதகனின்) மனதிற்கு அளிக்கப்படும் உபதேசம்; அங்கு அடையவேண்டிய குறிக்கோள், இங்கு அதற்கான வழி. எவ்வளவு அழகாக உண்மைகளை அருளாளர் அருணகிரியார் தந்தருளுகிறார் பார்த்தீர்களா!

No comments:

Post a Comment