Verse1



செய்யுள் – 1


ஆடும்பரி   வேல்   அணிசேவல்   எனப்
பாடும்   பணியே   பணியாய்   அருள்வாய்
தேடும்   கயமா   முகனைச்   செருவில்
சாடும்   தனியானை   சகோதரனே.


      பொழிப்புரை: “ஓ இறைவா! தேவர்களை தேடிச் சென்று போருக்கிழுத்துத் துன்புறுத்தி வந்த  கஜமுகன் என்ற அசுரனைப் போரில் வென்ற ஒப்பற்ற ஸ்ரீ கணேச பகவானின் இளைய சகோதரனே! ‘ஆடும்மயில், வேல், மற்றும் அழகியசேவல்’ என்று பாடும் பணியையே எனது நிரந்தரமான புனிதப் பணியாகத் தந்தருள்வாயாக.”

விளக்கவுரை

      “ஓம்” எனும் புனித மந்திரத்துடன் மந்திர-சாஸ்திரமான கந்தர் அனுபூதியின் இம்முதற்செய்யுள் தொடங்குகிறது; இச்செய்யுளின் முதற்சொல்லான ‘ஆடும்’ என்ற சொல்லில் ‘ஓம்’ என்கிற ஓங்கார மந்திரத்தின் அட்சரங்களான ‘அ’, ‘உ’, ‘ம’ என்ற மூன்று எழுத்துக்களும் அடங்கியுள்ளன. இப்படியாக, மந்திரங்களிலேயே மிகவும் உயர்ந்ததும் மங்கலத்தைத் தருவதுமான “ஓம்” என்னும் பிரணவத்துடன் இந்நூல் தொடங்குவதே இந்நூலின் சூட்சுமம். இது ஒரு மந்திர-சாஸ்திரம் என்பதையும் குறிக்கிறது. “ஓம் வேலும் மயிலும் துணை” என்ற மகத்தான தமிழ்மறை மந்திரம் “ஆடும்பரி, வேல், அணிசேவல்” என்ற இச்செய்யுளின் முதல் வரியில் மறைந்து இருக்கிறது. அது, ‘வேலும் மயிலும் என்னுடைய ஒரே பாதுகாப்பு/ உறுதுணை” என்ற பொருள்படும். இந்த மந்திரத்தை, (அல்லது வேறு எந்த மந்திரம் ஆனாலும் சரி) இடைவிடாமல் எப்பொழுதும் ஜபம் (Chanting or Repeating) செய்துகொண்டிருக்க அருள்புரியுமாறு வேண்டப்படுகிறது.

      ஆடியவாறு நிற்கும் மயில் ‘ஓம்’- குறிக்கும். வேல் என்றால் ‘பேரறிவு’ (அ) ஆத்மஞானம் (Supreme Knowledge). விடியற்காலையில், சேவல் கூவி சூரியனின் வருகையை உலகிற்கு அறிவிக்கும்; கந்தப் பெருமானின் கொடியில் இருக்கும் தெய்வீகச் சேவல், ஞான-சூரியனின் உதயத்தை (மெய்ஞானத்தை) சுட்டிக்காட்டும். கழுத்தானது நிமிர்ந்து நீண்டு இருக்கும் நிலையில் கூவிக்கொண்டிருக்கும் சேவல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்குமாதலால், ‘அணி (அழகான) சேவல்’ என்கிறார் அருணகிரியார். ‘ஆடும்’ என்று மயிலுக்கும், ‘அணி’ என்று சேவலுக்கும் அடைமொழிகள் தரப்பட்டுள்ளன; ஆனால், வேலுக்கு எவ்வித அடைமொழியும் தரவில்லை! ஏனெனில், வேல் என்பதே ‘மெய்ஞானம்’, மற்றும், அதுவே எவ்வித அடைமொழியும் தேவைப்படாது பரம்பொருள் தத்துவமான இறைவன்.

      வேல் என்ற சொல்லுடன் இன்னொரு சொல் சேர்த்து ‘’கூர்-வேல்”, “வெற்றி-வேல்”, “கதிர்-வேல்” என்று பின்னர் சில செய்யுள்களில் வருகிறதென்றாலும், அவைகள் அடைமொழிகளாக பயன்படுத்தப்படாமல், எந்த பண்பு அந்தக் கட்டத்திற்கு தேவையோ, அப்பண்பே வேலுடன் சேர்க்கப்பட்டிருக்கிறது.

      கஜ’ என்றால் ‘யானை’; ‘முக’ என்றால் முகம். கஜமுகன் என்பவன் யானைத் தலை கொண்ட ஒரு அசுரன். அவன், எந்த அஸ்த்திரங்களாலும் (ஒரு தேவ மந்திரத்துடன் பிரயோகிக்கப்படும் ஆயுதம்), சஸ்த்திரங்களாலும் (அதனதன் சக்தி மட்டும் உடைய ஆயுதம்), தன்னை அழிக்க முடியாத திவ்ய வரம் ஒன்றை சிவபெருமானிடமிருந்து பெற்றிருந்தான். அதனால், தேவலோகம் சென்று தேவர்களை இம்சிப்பதை, தன் வேலையாகக் கொண்டிருந்தான். தேவர்கள் சிவனாரிடம் சென்று, தங்களின் வேதனையை விவரித்துக் கூறி, அந்த அசுரனைக் கொன்று தங்களைக் காத்திட வேண்டினர். சிவன் கட்டளையிட, (அந்த அசுரனைப் போன்றே) யானை முகம் கொண்ட கணேச பகவான், கஜமுகாசுரனுடன் போரிட்டு, தன் தந்தத்தினாலேயே அவனைக் கொன்றார்; இச்செயல் வேறு எவராலும் செய்ய இயலாத செயற்கரிய செயல். ஆகவே, அவர் “ஈடிணையற்ற கணேசா” எனப் போற்றப்படுகிறார்.

      யாருக்காக இந்நூல் இயற்றப்பட்டது (அதிகாரி)?: கந்தர் அனுபூதி ஒரு இறை-அனுபவ ஆய்வு நூல்; தத்துவங்களை வெறுமனே அலசி ஆராய்வதால் எவ்வித பயனும் அடையப்படுவதில்லை என்பதால், தத்துவங்கள் சுட்டும் அனுபவத்தை அடைய விரும்பும் ஒரு சாதகன் கைக்கொள்ள வேண்டிய சாதனைகள், மற்றும் அதனை செயல்படுத்தும் வழிமுறைகளை மையப்படுத்தி இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், இந்நூலின் முதல் செய்யுளே சாதகனின் ஆன்மீக வாழ்க்கையை சீரமைப்பதற்காக, இடைவிடாது இறைவனின் நாமத்தை ஜபம் (Japa) செய்வதையும், மற்றும் அவரின் புகழைப் போற்றிப் பாடுவதையும் (Naama-Smaranam) முக்கிய சாதனைகளாக அறிமுகப்படுத்துகிறது. ‘ஓம் வேலும் மயிலும் துணை’ என்ற மந்திரத்தை உள்ளடக்கி ‘ஆடும் பரி வேல் அணி சேவல்’ என இச்செய்யுள் தொடங்குவதையும், மேலும், அந்த உயரிய மந்திரம், இறைவனின் புகழ் மற்றும் இறை-நாமாவை எப்பொழுதும் பாடிக்கொண்டிருப்பதையே தனது ஒரே பணியாக்கி அருளிட ‘பாடும் பணியே பணியாய் அருள்வாய்’ என்று இந்த சாதகன் வேண்டுவதையும் பார்த்தோம். இவற்றிலிருந்து, பல்வேறு சாதனைகள் புரிவதன் மூலம் இறைவனைத் தேடி, முக்தியைப் பெறவதையே நோக்கமாகக்கொண்டு, அதற்கென்றுத் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட  ஆன்மீக சாதகர்களுக்கு முக்கியமாக உபயோகப்படுவதற்காக இந்த ஆய்வுநூல் இயற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

      இறைவனைத் தேடி அடைந்துவிட வேண்டுமென்ற உயரிய விருப்பம் ஒருவனின் வாழ்வில் எப்பொழுது ஏற்படுகிறது? இது மனித அறிவிற்கு எளிதில் விளங்காத புதிர்! ஒரு பரம ரகசியம்! இறைவனின் அருளால் தான் ஒருவன் அவன் பாதங்களை வணங்க இயலும் என்ற பொருளில் அவன் அருளால் அவன் தாள் வணங்கிஎன்று மாணிக்க வாசகப் பெருமான் கூறியதே இக்கேள்விக்கான பதில். ‘ஒருவனுக்கு, இறைவனுடன் இரண்டறக் கலக்கவேண்டும் என்ற எண்ணம் ஈஸ்வரனுடைய அனுக்கிரகத்தால் மட்டுமே தோன்றுகிறது’  என்கின்றது அவதூதகீதை (“ஈஸ்வர அனுக்ரஹாத் ஏவ பும்சாம் அத்வைத வாசனா).

      எவனொருவன் தன் வாழ்க்கையில் இன்பங்கள், துன்பங்கள், சீர்கேடுகள் ஆகிய அனுபவங்களை வெகுவாக கண்டிருக்கிறானோ; இந்த உலக வாழ்க்கையை இதுவரை வாழ்ந்தது போதும், இதில் சாரம் ஒன்றுமில்லை என்று எப்பொழுது நினைக்கிறனோ; சொத்து சுகங்களை பெற நீண்டகாலம் பெருமுயற்சி செய்த பின், அம்முயற்சிகள் முடிவில் துக்கத்தையே தருகின்றன என்று எப்பொழுது உணர்ந்து விரக்தியடைகிறானோ; அவனே இங்கு (இவ்வுலகில்) அடைவதற்கென்ற தகுதியுடைய குறிக்கோள் ஒன்று இல்லவே இல்லை என்று இறுதியில் உணர்கிறான். இவ்வுலகில் அனைத்துமே அநித்தியமானவை, அழிபவை. ஆனால், அவனுக்கு வேண்டியது, அவன் தேடுவது நீடித்து நிலைத்து இருக்கும், நிரந்தர ஆனந்தத்தைத் தரும் ஒன்று. அது எது என்றோ, எங்கு இருக்கிறது என்றோ, அதை எப்படி அடைவதென்றோ தெரியாமல் அவன் தவிக்கிறான். ஆனால், அதை அடைய அவன் முழுமனதுடன் தேடுகிறான். அந்த ஒன்றை எப்படியாவது விரைவில் அடைந்திட வேண்டுமென, அவன் மனம் மீண்டும் மீண்டும் நினைத்து, ஏங்கித் தவிக்கிறது. அத்தகைய தருணத்தில்தான், இறைவனின் அருட்கடாட்சம் அவன் மேல் விழுந்து, இறைவனால் மீட்கப்படுகிறான். அப்பொழுது மிகவும் மாயமாக அவன் மனம் இறைவன்பால் ஈர்க்கப்படுகிறது. எவ்விதத்தில் அது நடைபெறும் என்று சுட்டிக்காட்ட இயலாது; ஏனெனில், அது நடைபெறுவதற்கான காரணம் பின்வருவனவற்றில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்:
  • வாழ்க்கையில் முக்கியமான தருணம், நெருக்கடி நிலை, பேரிடர் போன்ற ஏதோ ஒன்று நடக்கும்போது, அவன் கைக்கு ஒரு ஆன்மீக நூல் அகஸ்மாத்தாக (திடீரென்று) வந்து சேருவது.
  • ஒரு ஸத்சங்கம் அல்லது ஆன்மீக சொற்பொழிவு நிகழும் இடத்திற்கு (தனக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ) தற்செயலாகப் போக நேரிட்டு அதில் பங்கேற்பது,
  • ஒரு வயோதிகரோ, குழந்தையோ சொன்ன ஓரிரு வார்த்தைகளைக் கேட்பது,
  • அல்லது வேறு ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடப்பது,
      இவைகளில் ஏதோ ஒரு காரணத்தால், ‘நிரந்தர ஆனந்தம் என்பது இறைவனிடம் மட்டுமே இருக்கிறது, அதையடைய வேண்டுமானால் இறைவனை நாடி இருப்பதைத் தவிர வேறொரு வழியும் இல்லை’ என்று அவன் உணர்கிறான். அந்நிலையில், அவனது மனம் மர்மமாக திடீரென்று இறைவனை நொக்கித் திரும்பும். அப்படிப்பட்ட இறை நாட்டம் கொண்டவர்களுக்குத்தான், கந்தர் அனுபூதி எனப்படுகிற இந்நூல் உரித்தாகுகிறதே தவிர, இவ்வுலகை இன்னும் இன்பமளிக்கும் ஒரு சுரபியாகக் கருதி வாழ்பவர்களுக்கல்ல.

      [முக்கியக் குறிப்பு: ‘பாடும் பணியே பணியாய் அருள்வாய்’ என்ற இப்பிரார்த்தனையை இச்செய்யுளில் அருணகிரியார் செய்வது தனக்காகவா? இல்லை, இல்லவே இல்லை என்று அடித்துக் கூறலாம். ஏனென்றால், தான் செய்த தவறான செயல்களுக்காக வருந்தி, தன்னையே மாய்த்துக் கொள்ள கோவில் கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து விழுந்த அருணகிரியை இறைவனே காப்பாற்றி, தன் புகழை விரிவாகப் பாடுமாறு முதல் அடியையும் எடுத்துக் கொடுத்து தடுத்தாட்கொண்டார். அதன்பின்னர், அருணகிரியார் தன் வாழ்க்கை முழுவதையுமே இறைவனைப் பாடிப் போற்றி துதிப்பதிலேயே கழித்து வந்தார். இப்படியாக, அவர் இயற்றிய நூல்கள் பல, முக்கியமாக  பல்லாயிரக்கணக்கில் திருப்புகழ் பாடக்கள். இவையனைத்தையும் இயற்றியபோதே, அவர் இறை அனுபவம் பெற்றிருந்தார் என்பதும், தெய்வீக அன்பு தந்த ஆனந்த பரவசத்தில் ஆழ்ந்திருந்தார் என்பதும் அவரது படைப்புகளிலிருந்தே நமக்கு நன்கு விளங்குகின்றது. ஜீவன்முக்தி நிலை அடைந்து ஞான-ஆனந்தத்தில் திளையும் துறவியாக விளங்கினார். இறைவன் அவர் கனவில் தோன்றி, அவருடைய புகழும் அருளும் நிறைந்த முக்தியைத் தரவல்ல கந்தர் அனுபூதியைப் பாடுமாறு அருளாணையிட்டபடி, அருணகிரியார் அதை இயற்றினார். எனவே, அருணகிரியார் தனக்காகத்தான் இந்த பிரார்த்தனையை இந்நூலின் முதல் செய்யுளில் வைத்தார் என்று கருதுவது சரியாகாது. மற்றவர்கள் அதைப்பாடி, அதன் அறிவுரைகளைப் பின்பற்றி முக்தி அடைய உதவியாய் இருப்பதற்காக, அவர் தன்னை முன்னிலைப்படுத்திப்  பாடியுள்ளார் என்பதுதான் சரி. ஏதோவொரு தெய்வீக சக்தியால் திடீரென்று ஆன்மீகப் பாதையில் செலுத்தப்பட்டு, இறைவனை அடைந்திடும் நோக்கோடு வாழ்க்கையை வாழத் துவங்கியிருக்கும் ஒரு சாதகன் செய்யும் பிரார்த்தனையாகவே அவரால் இது அமைக்கப்பட்டுள்ளதென்று சொல்வது சாலப் பொருந்தும். எனவேதான், செய்யுள்களை (இம்முதல் செய்யுள் உட்பட) (தன்னை முன்னிருத்தி) ஒருமை-தன்மையில் (First Person Singular-ல்) இயற்றியுள்ளார். அதனால், இச்செய்யுள்களை எவர் பாடினாலும், அவை அவர் தனக்காகச் செய்யப்படும்  பிரார்த்தனையாகிவிடுகிறது, அதற்கேற்ப அவரின் உணர்வுகளும் மாறி, அதற்குரிய நற்பலன்களும் கிடைக்கும். எனவே, அருணகிரியார் தன்னை முன்னிருத்திப் பாடியதிலிருந்து, அச்செயுள்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் அவருக்கு என்றும் பிரச்சனைகள், அனுபவங்கள் அவருடையன என்றும் தவறாக நினைக்கக் கூடாது. திரும்பக்கூறின், இந்நூலின் எந்த ஒரு செய்யுளில் செய்யப்படும் பிரார்த்தனையோ, கூறப்பட்டுள்ள பிரச்சனையோ, அனுபவங்களோ அருணகிரியாரைச் சார்ந்தவையல்ல, அதாவது அவை அவருடைய சொந்த வாழ்க்கையையோ அனுபவங்களையோ குறிப்பனவல்ல; அவைகள் ஆன்மீக இலக்கை அடைய முயலும் ஒரு சாதகனின் நிலைமையையும் அனுபவங்களையும் மட்டுமே குறிக்கின்றன. எனவேதான், கந்தர் அனுபூதியின் இவ்விளக்கவுரைக்கு  “உட்பொருள் உணர்த்தி பக்தி-ஞான அருள்வழி காட்டும் கந்தர் அனுபூதி” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. (The title of the Original, in English, is “The Esoteric KANDAR ANUBHUTI”). ஆகவே, இவ்விளக்கவுரையைப் படிக்கும்போது, முதலிலிருந்து கடைசிவரை, இதை நினைவில் இருத்திக் கொள்ளுவோமாக].

No comments:

Post a Comment